இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

அகத்தியரும் யாழும்

வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு எழுந்தருளிய அகத்திய முனிவர் பொதியமலையை இருப்பிடமாக்கிக் கொண்டு பல மாணாக்கர்களோடு தவமும் தமிழும் வளர்த்து வந்தார். தமிழ் மொழியின் நயங்களெல்லாம் நன்குணர்ந்த அம்முனிவர் தமிழை வளர்க்க எவ்வெத் துறையில் முயற்சி செய்யலாம் என்று ஆராய்ந்தார். குமரித்துறைக்குத் தெற்கே பல காவதங்கள் தமிழ் நாடு விரிந்திருந்தது. குமரியாறு, குமரிமலை, பஃறுளியாறு முதலிய பல பிரதேசங்கள் அங்கே இருந்தன. பிற்காலத் தில் அந்த நிலப்பரப்பைக் கடல் கொண்டது.

அந்தத் தென்னிலத்தில் மதுரை என்ற மாநகரம் இருந்தது. அங்கேதான் முதல் தமிழ்ச் சங்கமாகிய தலைச் சங்கம் விளங்கியது. மதுரையை இராசதானியாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தம்முடைய தலைநகரில் தமிழ்ச் சங்கத்தை நிறுவிப் பல புலவர்களை வருவித்துத் தமிழாராய்ச்சி செய்தும், நூல் இயற்றியும் பொழுது போக்கி இன்புறச் செய்தார்கள். புலவர்கள் பலர் மலிவதற்கும் தமிழ்த் துறையில் பாண்டியர்களுக்கு ஊக்கம் உண்டாவதற்கும் அகத்திய முனிவர் முக்கிய காரணமாக இருந்தார். அவர் தாம் எழுந்தருளியிருந்த பொதிய மலையிலேயே ஒரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்தார். அவரிடம் பாடம் கேட்கப் பல மாணாக்கர்கள் கூடினர். அப்போது முனிவர் தமிழில் ஓர் இலக்கண நூலை இயற்றவேண்டும் என்ற விருப்பத்தைப் புலவர்களும், மாணாக்கர்களும் தெரிவித்துக் கொண்டார்கள். அருள் நிரம்பிய தமிழ் முனிவர் அவ்வாறே மிக விரிவாக ஓர் இலக்கண நூலை இயற்றியருளினார். ‘அகத்தியம்’ என்ற பெயரோடு அது வழங்கலாயிற்று.

தமிழ் இயல், இசை, நாடகம் என்று மூன்று வகைப படும். இலக்கண இலக்கியங்கள் சேர்ந்த தமிழ் நூல் தொகுதி இயலாகும்; சங்கீதமே இசை: பேச்சினாலும் அபிநயத்தினாலும் உள்ளக் கருத்தைக் காட்டுவது நாடகம். இந்த மூன்று தமிழுக்கும் உரிய இலக்கணங்களை அகத்தியர் தம்முடைய இலக்கண நூலாகிய அகத்தியத்தில் விரிவாக அமைத்தார். அவரிடம் தனித்தனியே முத்தமிழில் ஒவ்வொன்றைப் பாடங் கேட்க மாணாக்கர் களும் உண்டு.

இசையிலும் அகத்தியர் வல்லவராக இருந்தமையால் இசையிலக்கணத்தையும், நாடக இலக்கணத்தையும் அமைக்கும் திறமை அவருக்கு இருந்தது. அவர் யாழ் வாசித்தலில் வல்லவர். இசைக் கருவிகளில் யாழ் சிறப் புடையது. பலவகையான கமகங்களைப் புலப்படுத்துவது. நாடகத்திற்கும் அக்கருவி இன்றியமையாதது. அகத்தியர் யாழில் வல்லவராக இருந்தமையால் இசை நாடகக் கலை களில் தொடர்பும் பயிற்சியும் உடையவரானார். அவை பற்றிய இலக்கணம் இயற்றும் பேராற்றல் அவரிடம் இருந்தது.

‘அகத்தியர் சிவபக்தர் : தவம் நிரம்பியவர்’ என்றெல்லாம் நூல்கள் பாராட்டுகின்றன. வடமொழியிலும் தமிழிலும் அகத்தியருடைய பெருமைகளை எடுத்துரைக்கும் நூல்களுக்குக் கணக்கில்லை. வடமொழி நூற்செய்திகள் சில தமிழ் நூல்களில் இல்லை: தமிழ் நூல்களிற் கண்ட சில செய்திகள் வடமொழி நூல்களில் இல்லை.

அகத்தியர் யாழ் வாசித்தலில் வல்லவர் என்ற செய்தி வடமொழி நூல்களில் காண்பதற்கு அரிதென்று தெரியவருகிறது. தமிழ் நூல்களில் இச்செய்தி வந்துள்ள இடங்கள் பல. இவற்றைக் கவனிப்போம்.

அகத்தியர் தென்னாட்டுக்கு எழுந்தருளிய காலத்தில் அந்நாட்டின் தென்பகுதி ராவணனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருந்ததாம். அகத்தியர் அவ்வரக்கன் ஆணைக்குள் அடங்கிய நிலத்தில் வாழ விரும்பவில்லை. அவனைத் தென்னாட்டினின்றும் ஓட்டிவிட வேண்டுமென்று திருவுள்ளத்தில் எண்ணினார். வாட்போரோ, விற்போரோ செய்து அவனை வெல்வதென்பது நடவாத காரியம். ராவணனும் வீணை வாசிப்பதில் வல்லவன். தன்னுடைய வீணைக் கானத்தினால் சிவபெருமானுடைய மனத்தையே உருக்கினவன். ஆகவே, அவனை அந்த யாழினாலே வெல்ல வேண்டுமென்று தீர்மானித்தார் அகத்தியர்.

முனிவருக்கும் அரக்கனுக்கும் இசைப்போர் மூண் டது. “நமக்கு நடுநின்று நியாயம் வழங்குபவர் யார்?? என்று கேட்டான் ராவணன்.

“இந்தப் பொதிய மலையே நம் திறமைக்குச் சான்று பகரும்” என்றார் முனிவர்.

“எப்படி?”

“நாம் யாழ் வாசிக்கும்பொழுது இந்த மலை உருகி நம் திறமையைப் புலப்படுத்தும். இதோ நான் யாழ் வாசித்து இதை உருகச்செய்கிறேன்” என்று யாழை மீட்டினார். மெல்ல மெல்ல மலை உருகலாயிற்று. முனிவர் தம் கலசத்தை அதன்கண் வைத்து யாழ் வாசித்தலை நிறுத்தினார். சிறிது நேரத்தில் உருகிய மலை மீண்டும் இறுகி விட்டது. அகத்தியருடைய கலசம் எடுக்க முடியாமல் மலையில் பதிந்துவிட்டது,

“இப்போது நீ யாழ் வாசி; என் கலசத்தை எடுத்துக் கொள்கிறேன்” என்றார் முனிவர், ராவணன் வாசித்தான்; முழுத் திறமையையும் காட்டினான். ஆனால் மலை சிறிதும் நெகிழ்ந்ததாகத் தெரியவில்லை. கடைசியில் அகத்தியரே மீண்டும் யாழை வாசித்துப் பொதிய மலையை உருகச் செய்து தம் கலசத்தை எடுத்துக் கொண்டார்.

இசைவாதம் ஆரம்பித்த போதே, யார் தோல்வி அடைகிறாரோ அவர் அந்த நாட்டை விட்டுப் போக வேண்டுமென்ற நிபந்தனையோடு தொடங்கினார்கள்.

அதன்படியே ராவணன் தென்னாட்டை விட்டு இலங்கைக்குப் போய்விட்டான்.

இந்த வரலாறு சில சிறு மாறுபாடுகளுடன் வழங்குவதும் உண்டு. ராவணனை இசைப்போரில் அகத்தியர் வென்றார் என்ற உண்மை எல்லா வரலாறுகளுக்கும் பொதுவானது. இந்தச் செய்தியைத் தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் தெரிவிக்கின்றார்:

“தேவரெல்லாங் கூடி ‘யாம் சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்கு உரியர் என்று அவரை வேண்டிக்கொள்ள, அவருந் தென்றிசைக்கட் போதுகின்றவர்…காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின் கண் இருந்து இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து இராக் கதரை ஆண்டு இயங்காமை விலக்கி”-(சிறப்.)

பொதியமலை இசைக்கு உருகின இச்செய்தியைச் சோணசைல மாலையில் சிவப்பிரகாசர் பின்வருமாறு சொல்கிறார்:

இனியபைந் தமிழின் பொதியமால் வரைபோல்
இசைக்குரு காது இம மலையின்
தனயை இன் தீஞ்சொற் குருகுறுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.

சேரமான் பெருமாள் நாயனார் ஆதியுலா என்ற நூலை இயற்றியிருக்கிறார். திருக்கைலாய ஞான உலா என்றும் அதனை வழங்குவர். சிவபெருமான் திருவீதியில் பவனி வந்தபோது ஏழு பருவ மகளிர் அவரைக் கண்டு காமுற்ற தாகச் செய்த பிரபந்தம் அது. சிவபெருமான் திருவுலா வந்தபோது அப்பெருமானுக்கு அருகில் பல வகையான இசைக்கருவிகளைப் பலர் வாசிக்கின்றனர். அகத்தியர் யாழ் வாசிக்கிறார்.

“மன்னும் அகத்தியன் யாழ் வாசிப்பு” என்று சேரமான் பெருமாள் நாயனார் கூறுகிறார்.

கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்ற ஒட்டக் கூத்தர் ‘தக்கயாகப்பரணி’ என்ற நூல் ஒன்றை இயற்றி யிருக்கிறார். தக்கன் செய்த யாகத்தை வீரபத்திரக் கடவுள் அழித்த வரலாற்றை விரிவாக அந்நூலில் வருணித்திருக்கிறார். அதில் ஒரு காட்சி வருமாறு.

தக்கயாகத்தை அழிக்கும்பொருட்டு வீரபத்திரர் தம் பூதகணங்களுடன் புறப்பட்டார். போகும் பொழுதே வழியிலுள்ள மலைகளையும் கடல்களையும் அழித்து ஆரவாரித்துக்கொண்டு அந்தப் பூதப் படைகள் சென்றன. அவற்றுள் குட்டையான சிறிய பூதம் ஒன்று சிகரங்கள் நீட்டிக் கொண்டிருக்கும் சப்தகுலாசலங்களையும் எடுத்துப்பாதாள லோகத்தில் வீசி எறிந்ததாம். அகத்தியர் தம் திருக்கையினால் விந்தமலை ஒன்றைத்தான் அடக்கினார். இந்தப் பூதமோ ஏழுமலைகளைக் குமைத்தது. பாட்டுப் பின்வருமாறு:

குமிழ்க்குங் குவட்டேழு
குன்றும் பிலத்தே
குளிப்பக் குறும்பூதம்
ஒன்றே குமைத்துத்
தமிழ்க்குன்றின் வாழும்
சடாதாரி பேர்யாழ்
தழங்கும் திருக்கைத்
தருக்கைத் தவிர்த்தே.

[குமிழ்க்கும் – புடைத்துத் தோன்றும். குவடு-சிகரம், பிலம் – பாதாளம், குளிப்பு – மறைய. குமைத்து-அழித்து. தமிழ்க்குன்று – பொதியாலை. சடாதாரி – சடையையுடைய அகத்திய முனிவர். தழங்கும் ஒலிக்கும். தருக்கு -கர்வம்.]

இங்கே அகத்தியர் கையை, “சடாதாரி பேர் யாழ் தழங்கும் திருக்கை” என்று ஒட்டக்கூத்தர் சொல்கிறார். “சடாதாரியாகிய அகத்திய முனிவரது ‘பெரிய யாழை இசைக்கும் அழகிய கை’ என்பது பொருள். அகத்தியர் யாழில் வல்லவர் என்பதை இச்செய்யுள் புலப்படுத்து கின்றதன்றோ? இங்கே உரையாசிரியர் வேடிக்கையாக, ‘இதனாற் பயன் யாழ் வாசிக்க வல்லது அத்தனையே அகத்தியன் கை என்க’ என்று எழுதுகிறார்.

இவ்வாறு இலக்கியங்களால் தெரியவரும் இச்செய்தியைச் சிற்பக்கலையும் வலியுறுத்துகின்றது. சிதம்பரத்தில் உள்ள சிற்ப உரு ஒன்று அகத்திய முனிவரது திருவுருவமென்று சொல்லும்படி இருக்கிறது. ‘குறு முனிவர்’ என்பது அகத்தியர் பெயர். அந்த உருவத்தைப் பார்த்தால் குறளான வடிவத்தை உடையவர் என்பதற்குரிய குறிப்புக்களைக் காணலாம். தம் கைகளில் யாழை ஏந்திக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத் திருவுருவம் யாழ் வல்ல குறுமுனியாகிய அகத்தியர் திருவுருவமென்றே தோன்றுகிறது.

அகத்தியர் மூன்று தமிழுக்கும் இலக்கணம் வகுப்பதற்கு ஏற்றவர் என்பதற்கு அவர் கையில் உள்ள யாழும் ஓர் அறிகுறியாகத் திகழ்கின்றது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !