இமயமும் குமரியும்
கி. வா. ஜகந்நாதன்

கம்பரைப் பற்றிய பழமொழிகள்

ஒரு நாட்டின் இலக்கிய வரலாற்றில் பழமொழிக்குத் தனியிடம் உண்டு. தமிழிலோ தொல்காப்பியரே ‘முது சொல்’ என அதைக் கூறி, அதைத் தனியே ஓர் இலக்கிய வகையாக்கினார். ஜனங்களின் உள்ளத்தே காலப் போக்கிலே உண்டாகும் நிகழ்ச்சிகள் ஊறி ஊறிப் பழ மொழிகள் பிறக்கின்றன. அவற்றில் சரித்திரம் இருக்கும்; கவிதை நயம் உண்டு: கலைத் திறம் உண்டு: சிறந்த வேதாந்த உண்மைகளையும் காணலாம்.

தமிழர் பழமொழிகளைத் தனியே போற்றி வந்ததோடு தமிழ்ப் பாடல்களிலும் பதித்து அழகு செய்தனர். சங்க காலத்து நூல் வரிசையாகிய பதினெண் கீழ்க்கணக்கில் ‘பழமொழி’ என்றே ஒரு நூல் இருக்கின்றது. அதில் நானூறு பழமொழிகள் நானூறு வெண்பாக்களில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. பிற்காலத்திலும் ‘தண்டலையார் சதகம்’ என்ற நூலில் செய்யுள் தோறும் பழமொழியைக் காணலாம். அதற்குப் பழமொழி விளக்கம் என்று ஒரு பெயரும் உண்டு. கோவிந்த சதகம், இரத்தின சபாபதி மாலை முதலிய சிறு நூல்களில் பழமொழிகள் பல அமைந்துள்ளன.

பழமொழிகள் உயிருள்ள இலக்கியம்: தமிழ் நாட்டார் அனைவரது மனத்திலும் பட்டு ஊன்றிய செய்தி பழ மொழியாகப் பரிணமிக்கிறது.

கம்பர் தமிழ்நாட்டுப் பெரும்புலவர். அவருடைய புகழ் தமிழ் நாட்டிற் பரவி நிலைத்துவிட்டது. அவரைப் பற்றிய செய்திகள் சில பழமொழியாயின.

இலக்கண நூலுரைகளிற் கம்பரைப் பற்றிய ஒரு பழைய வாக்கியம் உதாரணமாகக் காணப்படுகின்றது. “கல்வியிற் பெரியன் கம்பன்” என்பது அது. ‘கம்பர் பல நூல்களைப் படித்தவர், கல்விக்கு உரையாணியாக இருந்தவர்’ என்ற ஞாபகம் தமிழர்களுக்கு இருந்து வந்தது என்பதை அப்பழமொழியால் உணரலாம். பழைய தமிழ் நூல்களை நன்றாகக் கற்று அறிந்ததோடு, வால்மீகி ராமாயணத்தையும் வேறு ராமாயணங்களையும் கேட்டு அறிந்தவர் அவர்.

“மும்மைத் தமிழுணர்ந்த முதியோரும் மற்றுளோரும், முரலாற்றுங் கடற்பாரிற் கம்பசூத் திரமுது சொல் மொழிவர்” என்பது ஒரு பாட்டு. இதில் ‘கம்ப சூத்திரம் என்னும் முதுசொல்லை முதியோரும் மற்றோரும் கூறுவர்’ என்ற செய்தி காணப்படுகின்றது. சூத்திரமென்பது சில எழுத்துக்களால் பல்வகைப் பொருள்களைச் செறித்து நுட்பமாகக் கண்ணாடியைப் போல் காட்டவல்லதென்று இலக்கண நூல் கூறும். கம்பரும் தமது விரிந்த மனோபாவத்தைச் சுருங்கிய உருவத்திலே அமைப்பவர். ஆயுந்தொறுந்தொறும் அப்பொருள் விரிந்து கொண்டே போகும்.

“கம்ப சித்திரம்” என்பது ஒரு பழைய வழக்கு. கண்ணினாற் காணும் பொருளை ஓவியப் புலவன் தீட்டுவதுபோலக் கருத்தினாற் காணும் பொருளைக் காவியப் புலவன் தீட்டுகிறான். தனது ராமாயணப் பெருங் காவியத்திலே கம்பன் அமைத்துள்ள உயிரோவியங் களுக்குக் கணக்கு வழக்கே இல்லை.

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பது ஒரு பழமொழி. மனிதனுக்கும் மரத்திற்கும் எவ்வளவோ வித்தியாசம். இலக்கணம் மனிதனை ஆற்றிவுடையவ னென்றும், மரத்தை ஓரறிவுடையதென்றும் கணக்குச் சொல்கிறது. அந்த மரங்கூடத் தன் ஓரறிவையும் பசுமையையும் இழந்துவிட்டால் வெறுங் கட்டையாகி விடுகிறது. அதிலே ஜீவன் இல்லை; வளர்ச்சியில்லை. அந்தக் கட்டைக்குக்கூடக் கவியின் அம்சம் வந்துவிடுகிறதாம்! இரும்பிலே மின்சாரம் பாய்ந்தது போலக் கட்டையிலே கவித்துவம் பாய்கிறதாம். பழமொழியின் வார்த்தைகளுக்கு அப்படி யப்படியே பொருள் கொள்வது அபாயம். கம்பர் இருந்த இட முழுவதும் கவிதையாகிய மின்சாரம் பாய்ந்திருக்கும் என்பதே கருத்து. அவர் வீட்டு வேலைக்காரி கூடப் பாடியிருக்கிறாள்.

‘கம்பர் போன வழி’ என்பது ஓர் அழகிய பழமொழி. அதற்கு இரண்டு வகையாகப் பொருள் சொல்வார்கள். கம்பர் கவிச்சக்கரவர்த்தி. அவர் வகுத்த நெறி தமிழர்களுக்குச் சிறந்த சட்டம். இலக்கணத்துக்கு அவர் கட்டுப்பட்டவர் அல்லர். அவர் செல்லும் மார்க்கமே இலக்கணமாகிவிடும். ‘கம்பர் போன வழி’ என்ற இப் பழமொழி அவரது தனித் தலைமையைக் காட்டுகின்றது.

மற்றொரு வகையாக இப்பழமொழிக்குப் பொருள் கூறுவதுண்டு. அந்தக் காலத்தில் கம்பர் எங்கே சென்றாலும் அவரோடு நூற்றுக்கணக்கான மனிதர்கள் கூடியிருப்பார்களாம், அவருடைய தரிசனத்திற்காகவும், அவர் பேச்சைக் கேட்பதற்காகவும் எவ்வளவோ பேர் ஆவலாக வந்து கூடுவார்கள். ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு அவர் செல்லும் போது ஒரு பெரிய கூட்டம் அவரைத் தொடருமாம். அந்தக் காலத்தில் அழகிய பாதைகள் இல்லை. அந்தக் கூட்டம் செல்லும் போது வழியிலுள்ள விளை நிலங்களில் விளைந்த பயிர்களை மிதித்துக் கொண்டு செல்ல நேரும். அதனால் அந்த நிலங்களை உடையவர்களுக்குச் சிறிது நஷ்டம் உண்டாகும். வழக்கப்படி அவர்கள் நிலத்திற்குரிய வரியை வாங்கும் அதிகாரிகள் கம்பர் போன வழியில் இருந்த நிலங்களில் உண்டான நஷ்டத்தை அறிந்து அதற்குரிய வரியின் பங்கைக் கழித்து விடுவார்களாம்; கணக்கில் ‘கம்பர் போன வழி கண்டு கழித்தது’ என்று எழுதி விடுவார்களாம். தமிழ் நாட்டாருக்குக் கம்பரிடத்தில் இருந்த பித்து இதனால் வெளியாகிறது.

‘தமிழுக்குக் கதி இருவர்’ என்று சிலர் கூறுவர். தமிழ்ப் பாஷையின் பெருமைக்கு முக்கிய காரணமானவர்கள் இருவரென்பது அவர்களுடைய கருத்து. அவ்விருவர் யார்? கம்பர், திருவள்ளுவர் என்னும் இருவருடைய பெயர்களின் முதலெழுத்தும் சேர்த்தால் கதி என அமையும். தமிழுக்குக் கதியாக நிற்பவர் கம்பரும் திருவள்ளுவரும் என்ற பொருள் குறிப்பாக அதில் அமைந்திருக்கிறது. பாரதியாரும்,

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை
உண்மைவெறும் புகழ்ச்சி யில்லை

என்று தாம் கூறும் மூன்று புலவர்களில் முதல் இரண்டு இடத்தை இவர்களுக்குத்தானே கொடுக்கிறார்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !