

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்
முன்னுரை
திருவள்ளுவர் ஆண்டு 1964 வைகாசித்திங்கள் 29ஆம் நாள் திருநெல்வேலி மாநகரிற்கூடிய சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டின் புலவர் பேரவையில் யாம் அவைத் தலைவராய் நின்று நிகழ்த்திய சொற்பொழிவையே பின்னர் மிக விரித்தெழுதி முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் இந் நூலாக வெளியிடலானேம். இடையிடையே வெளியூர் களிற் கூடும் அவைகளை நடத்துதற்குப் போய் வந்தமையாலுஞ், செந்தமிழ் மொழியிலுஞ் சைவ சித்தாந்தத்திலும் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொருள்களை இவ்வுலக மெங்கணு முள்ள அறிஞர்கள் தெரிந்து நலம் பெறல்வேண்டி அவையிற்றை யாம் ஆங்கில மொழியில் எழுதி இரண்டு திங்கட்கு ஒரு கால் ஒரு வெளியீடாகச் சென்ற ஒன்றரையாண்டுகளாக வெளியிட்டு வருதலாலும், இவற்றிடையே எம்முடைய பல புதிய தமிழ் நூல்களையுஞ் செலவாய்ப்போன பல பழைய தமிழ் நூல் களையும் அச்சிடுவித்துவருதலாலும், இவற்றின் பொருட்டு இரவு பகல் ஓவாது பற்பல நூல்களை ஆராய்ந்து வருதலாலும், பலதிறத்தவான இந் நன்முயற்சிகளினூடே உடம்பு நலங் குன்றிப் பின்னரது முன்போல் மீண்டு நன்றாதற்குப் பல நாட்கள் கழிதலாலும், இந்நூல் இடையிடையே விட்டு விட்டெழுதி முடிவுபெறுதற்கு இரண்டாண்டுகளும் மூன்று திங்களும் ஆயின.
முற்காலத்து விளங்கிய செந்தமிழ் நல்லிசைப்புலவர்கள் தமதருமைச் செந்தமிழ்மொழியைத் தம் இன்னுயிரினும் விழுமிதாக ஓம்பிப், பொய்சிறிதுங் கலவா அறவுரையே பகருந் தமது நாவால் மெய்ப்பொருள்களையே நிரப்பிய பாக்களும் நூல்களும் அதன்கண் இயற்றி, அதனை மேன்மேல் உரம்பெற வளர்த்துவந்தனர். அஃது அஞ்ஞான்று மலைமேல் ஏற்றிய நந்தாமணி விளக்குப்போல், தனது பொங்கு பேரொளியை எங்கணும் வீசி, இவ்வுலகின் கண்ணிருந்த மாந்தரெல்லாருடைய அறிவுக் கண்ணையும் விளங்க விளக்கிற்று. மற்றுப் பிற்காலத்தே, அஃதாவது சென்ற அறுநூறு ஆண்டுகளாகத், தோன்றிய தமிழ்ப் புலவர்களோ பெரும்பாலுந் தம்முன்னோர் சென்ற நெறியே தேர்ந்து செல்லாதவர்களாய், அவர் சென்ற மெய்ந்நெறி பிழைத்துப், பொய்ந்நெறி ஏகித் தமதருமைச் செந்தமிழ் மொழியின் தூய்மையை ஓம்பாது, அதனைப் பிறமொழிச் சொற்களொடு கலந்து மாசுபடுத்தியதல்லாமலும், அதன்கண் மெய்யல் லாதனவும் முழுப் பொய்யும் மிடைந்த பாவும் நூலும் இயற்றி அதன் மெய் வழக்கினையும் பாழ்படுத்தி விட்டனர். அவ் விருதிறமும் பிரிந்து நனிவிளங்க விளக்கிக் காட்டினாலன்றி, இனித் தமிழ் கற்பார் தமிழ்மொழியினையும் அதனை வழங்கும் மக்களையும் பேணி வளம்படுத்தாரெனக் கருதியே இந் நூலை இயற்றலானேம். இதனைப் பயில்வார் பண்டைத்தமிழ் நல்லிசைப் புலவரின் அளக்கொணா மாட்சியும் மெய்வழக்கும் நன்கறிந்து, அவர் ஒழுகிய மெய் யொழுக்கத்தையே கடைப் பிடித்துத், தாம் மிக்குயர்வதொடு, தமிழையுந் தமிழ்மக்களை யும் மிக்குயரச் செய்வார்களாக!
மறைமலையடிகள்



