
முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்
13. தமிழாசிரியர் ஆரியத்தில் ஆக்கியவை
ஈசுரன்றன் ஐம்முகங்களின் பெயர்களான ஈசானம், தத்புருஷம், அசோகம், வாமம், கத்யோஜாதம் என்பன பண்டை ஆரிய நால்வேதங்களிற் காணப்படவில்லை.
சிவபெருமானுக்குரிய சிறப்புப் பெயர்களான அம்பிகாபதி, உமாபதி, ஈசானன், மகாதேவன் முதலான சொற்கள் மிகப் பழைய ஆரிய நூலாகிய இருக்கு வேதத்திற் காணப்படவில்லை. மற்று, இருக்கு வேதத்திற்கு எத்தனையோ காலம் பிற்பட்டதாகிய எசுர்வேதத்திலே தான் இவை சிவபிரானுக்குரிய பெயர்களாக முதன்முதற் காணப்படுகின்றன. அற்றேல், உருத்திரன் எனும் பெயர் இருக்குவேதத்திற் பலவிடங்களிலும் காணப்படுதல் என்னையெனின்; ஆரியர் கொணர்ந்த சிறு தெய்வப் பாட்டுகளைப் பழந்தமிழ்க் குடிகளாகிய பரதர் வகுப்பிற் றோன்றிய வியாசர் என்னுந் தமிழ்முனிவர் தொகுத்து வகைப்படுத்திய ஞான்று, தமிழராகிய தமக்குரிய சிவபிரானையும் அவ் ஆரியர் வணங்கி நலப்படல் வேண்டித், தாம் ஆரிய மொழியில் உருத்திரன்மேல் இயற்றிய சில பதிகங்களையும் அவ் வியாசமுனிவர் அதன்கட் கோத்துச் சேர்த்துவைத்தார். அதனால், உருத்திரன் என்னுஞ் சிவபிரான் பெயர் இருக்குவேதத்தின் இடையிடையே விரவித் தோன்றுவதாயிற்று. இனி, உருத்திரன் எனும் பெயர் இருக்கு வேதத்தில் ஒரோவிடங்களில் விரவி நிற்குமாறு தமிழ்ச் சான்றோர் செய்தாற் போலச், சிவன் எனும் பெயரும் அதன்கண் அங்ஙனம் நிற்குமாறு அவர் செய்யாமை யென்னையெனின்; சிவன் எனும் பெயர் மாயையைக் கடந்து நிற்கும் முழுமுதற் கடவுட்குரிய சிறப்புப் பெயராகும்; இதனாலன்றே அயல்நாட்டவரிற் பழைய நாகரிக மக்களாகிய எபிரேயரும் (ழநசெநறள) எல்லாம்வல்ல இறைவனைச் சிகோவா (துநாடிஎர) என்றுங் கிரேக்கர் (ழுசநநமள) ‘சியூஸ்’ (ஷ்நரள) என்றும், உரோமர் ‘சுபிதர் (துரவைநச) என்றுந் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றனர்; இப் பெயர்களெல்லாம் அம் மக்கள் தத்தம் மொழிகளிற் ‘சிவன்’ என்னும் பெயரைத் திரித்துப் பேசினமையாற் பிறந்தனவாகும்.
இனி, உருத்திரன் என்னும் பெயர் மாயைக்குள் நின்று அதனை இயக்கும் இறைவன் பெயராகும். இவ்விறைவன் முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் ஆணைவழி நின்று மாயையை இயக்குபவனேயன்றிச், சிவத்தின் ஆணையைக் கடந்து நிற்பவன் அல்லன்; ஆயினும், இவன் சிவத்திற்கு அணுக்கனாய்நிற்றலால் இவனை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் அத்தனையுஞ் சிவன்பாற் சேறல் பற்றி, இவனைச் சிவபிரானாகவே வைத்துத் தமிழ் அறிவு நூல்கள் நுவலாநிற்கும். இஃது ஆசிரியர் சிவஞான முனிவர், “கண்ணுதல் யோகிருப்ப” என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டின் உரையிற் “சீகண்ட ருத்திரர்க்குரிய வடிவங்களும் பெயர்களுந் தொழில்களும் முதல்வனுக்கும் ஒப்பவுளவென்பது வாயுசங்கிதையுட் கூறப்படுதலின், ஈண்டுக் கூறியனவெல்லாம் முதல்வனுக்குரியனவே யாமெனக் கொள்க” என்று கூறியவாற்றானுந் தெற்றென விளங்காநிற்கும்.
இங்ஙனம் மாயைக்குள் நின்று அதனை யியக்கும் இறைவனையும் அறியமாட்டாது, தம்மில் இறந்துபட்ட மறவர்களையே ‘இந்திரன்,’ ‘வருணன்’ ‘மித்திரன்’ முதலிய தெய்வங்களாக வைத்து வெறியாட்டயர்ந்து வணங்கிய ஆரியர்க்கு மாயையைக் கடந்துநிற்கும் முழுமுதற் கடவுளாகிய சிவத்தை யறிதலும் வழுத்துதலும், இயலாமையிற், பண்டைத் தமிழாசிரியர் சிவபிரான் வழிபாட்டுக் குரிய பாட்டுகளை இருக்குவேதத்தின்கட் புகுத்தாமல், அவரதியற்கைக்கு ஒருவாற்றான் இசைந்த உருத்திர வணக்கவுரைகள் சிலவற்றை மட்டுமே அதன்கண் இடையிடையே நுழைத்துவைப்பா ராயினர். உருத்திர வழிபாடு பண்டை ஆரியர்க் குரியதல்லாமை, அவர் முன்னாளிற் சென்று குடியேறி வைகிய போகஸ்கோய் (Bo-ghaz-koi) என்னும் மேல்நாட்டூரிற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இந்திரன், வருணன், மித்திரன், நாசத்தியரே அவர் வணங்கிய தெய்வங்களெனத் தெரிக்குமாற்றால் ஐயமின்றித் தெளியப்படும்; படவே, ஆரியர் இவ் விந்திய நாட்டுட் புகுந்து குடியேறிப், பண்டைத் தமிழ்மக்களோடு உறவாடி வாழலான போதுதான், அவர் வணங்கிப் போந்த உருத்திரனைத் தாமும் வணங்கலாயின ரென்பது துணியப்படும்.
இங்ஙனமாக உருத்திரனை வழுத்தும் பதிகவுரைகள் சிலவற்றை இருக்குவேதத்தின்கட் புகுத்திவைத்தாற் போலச், சிவபிரானை வழுத்தும் பதிகவுரை ஒன்றையேனும் பண்டைத் தமிழ்ப் பெரியார் அதன்கட் புகுத்தாவிடினுந், தம்மோடு ஆரியர்க்குண்டான தொடர்பு வளரவளர, உருத்திரனுஞ் சிவபிரானும் ஒருவரே யென்பது அவர்க்குப் புலனாகல் வேண்டி, அவர் இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தில் உருத்திரன் மேற்றான 92 ஆம் பதிகத்தின் 9 ஆஞ்செய்யுளில் ‘ஏபி : சிவ: ஸ்வவாந் ஏவயாவபிர்’ எனச் ‘சிவன்’ எனுஞ் சிறப்புப் பெயரைப் புணர்த்தோதி வைத்தமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று.
இவ்வாறு ஆரியர் முதன்முதற் றம்மொடு தொடர்பு கொண்டு பழகத்துவங்கிய இருக்குவேத காலத்தே, பண்டைத் தமிழ்ச் சான்றோர் அவர்க்கு மாயையுள் நின்ற உருத்திரனையன்றி, மாயையைக் கடந்துநின்ற சிவபிரானைக் காட்டாது மறைத்து வைப்பினும், அவர்க்குந் தமக்கும் உண்டான பழக்கம் முதிர முதிர அவருட் டூயராயினார் தமக்கு அணுக்கராகித் தமக்குத் தொண்டுபூண் டொழுகக் கண்டபிற், றாம் அவர்பால் இரக்கம் மிக்குடையாராகிப், பிற்காலத்ததாகிய எசுர் வேதத்தினிடை நடுவே சிவபிரான் மேற்றாகிய ‘திருவுருத்திரம்’ என்னுஞ் சிறந்த வழுத்துரையினை யியற்றிச் சேர்த்தருளினார். அத் திருவுருத்திரத்தின் நடுவில் (4-5-87) “நமச்சிவாயச் சிவதராயச” என்னுஞ் சொற்றொடருந், ‘தைத்திரீய ஆரணியகத்’ தில் (10-16-34) ஸர்வலிங்காயநம : சிவாயநம : சிவலிங்காயந : என்னுஞ் சிறந்த சொற்றொடரும் வருதல் காண்க. ‘சதருத்ரீயம்’ என்னும் பகுதி தனித்ததோர் உபநிடதமாய் வியாசராற் செய்யப்பட்டுப் பின்னர்ச் சுக்கில எசுர்வேதத்தி னிடையே சேர்க்கப்பட்டதென ‘யசோமித்திரர்’ என்னும் பௌத்த ஆசிரியர் கூறுமுரையும் எமது கூற்றிலுண்மையை நிறுவுதற்கொரு சான்றாய் நிலவுகின்றது.
இங்ஙனமாக, ஆரியமுனிவர் தமிழ்ச் சான்றோரின் மெய்யறிவு மாட்சி தெரிந்து, அவர்க்குத் தொண்டராகி, அவர்பால் எல்லாம் வல்ல இறைவனியல்பும், உயிர் களியல்பும், மும்மலவியல்பும், உயிர் மும்மலப் பிணிப்பு நீங்கி இறைவன் றிருவருளின்பத்தைத் தலைக்கூடுமாறு மெல்லாம் அறியத் துவங்கிய பின்னரே, இப் பொருள்களின் பெயர்களும் விளக்கங்களும் எசுர்வேதத்திலும, அதற்குப் பின்வந்த ஆரியமொழி நூல்களிலும், அவற்றிற்கும் பின்வந்த உபநிடதங்களிலும், அவற்றிற்கும் பிற்றோன்றிய சாங்கியம், யோகம், நையாயிகம், வைசேடிகம், வேதாந்தம், இதிகாசம், புராணம் முதலியவற்றிலுங் காலங்கடோறும் மிகுதியாய் இயற்றிச் சேர்க்கப்படலாயின. வடநூல் தமிழ் நூல்களின் காலவெல்லைகளையும், அவ்வக்கால வெல்லைகளிற் றோன்றிய அவ்வம் மொழிநூல்களையும் நுனித்தாராய்ந்து ஒத்து நோக்கிக் காண்பார்க்கு யாம் ஈண்டுக் காட்டிய உண்மைகளெல்லாம் பிரிந்தினிது விளங்காநிற்கும். அதுகிடக்க.
இனி, மேற்காட்டிய இறைவன் பெயர்களாகிய ஈசானன், மகாதேவன், அம்பிகாபதி, உமாபதி முதலியனவே யன்றிச், சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் ஐந்து சிவதத்துவப் பெயர்களும், அவ்வைந்தில் முதன் மூன்று தத்துவங்களில் வைகுவாரான வித்தைஈசர், மகேசுரர், சதாசிவர் முதலான கடவுளர்களும், அவர் தம்மைப் பொதுவகையிற் குறிக்கும் விஞ்ஞானாகலர், பிரளயாகலர் முதலிய சொற்களும் இருக்கு முதலான நான்கு வேதங்களிலும் ஒரு திணையளவு தானுங் காணப்படுகின்றில.
இன்னும், மேற்காட்டிய சிவபிரான் பெயர்கள், சிவதத்துவப் பெயர்கள், சிவதத்துவங்களில் வைகும் விஞ்ஞானாகலர் பிரளயாகலர் பெயர்கள் முதலியனவே யன்றிக், காலம் நியதி கலை வித்தை அராகம் புருஷன் மாயை என்னும் ஏழு வித்தியா தத்துவப்பெயர்களும், அவற்றின் கண்நின்று அவற்றை இயக்குவாரான அனந்தர் சீகண்டர் முதலான கடவுளர் பெயர்களுங்கூட இருக்கு முதலான நால்வேதங்களிலாதல், அவற்றிற்குப் பின்வந்த பிராமணங்களிலாதல் ஒரு சிறிதுங் காணப்படுகின்றில.
இனிச், சிவபிரானைத் தீவடிவில் வைத்து வணங்கி, எல்லா உலகமும் எல்லா உலகப்பொருளுந் தீயினால் எரிக்கப்பட்ட வழி எரிந்து மிச்சமாவது சாம்பற்பொடியே யாதலால் அத் தீ வணக்கத்தின்பின் அச் சாம்பற் பொடியாகிய திருநீற்றை எடுத்து நெற்றியில் தீற்றிக்கொள்வது தமிழ்மக்களுட் பண்டுதொட்ட வழக்கமாய்ப் போதருகின்றது. ஆரியர்க்குள் இவ் வழக்கம் இல்லாமையின், திருநீற்றுக்குப் பெயரான ‘விபூதி’ என்னும் வட சொல்லும், அதனை நெற்றியிலிடும் வழக்கமும் நால்வேதங்களிலும் பிராமணங்களிலும் எங்குங் காணப்படவில்லை.
இங்ஙனமே, உருத்திரனுடைய கண்களாகக் கொண்டு தமிழ்மக்கள் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமது கழுத்தில் அணிந்துவருங் கொட்டைக்கு வடமொழிப் பெயராகிய ‘உருத்திராட்சம்’ என்னுஞ் சொல்லும் பண்டை ஆரிய நால்வேதங்களிலும் அவற்றின் வழி வந்த நூல்களிலும் யாண்டுங் காணப்படவில்லை.
இனி, ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமேலாக எந்த நூலை ஓதத் துவங்கினாலும், எந்த வினையைச் செய்யப் புகுந்தாலும் முறையே ‘ஓம்’ என்னும் ஒலியாகிய பிரணவத்தை முன்வைத்தும், அவ்வோம் என்னும் வடிவிற்கு அடையாளமான விநாயகரை முன்நிறுத்தியும் ஒதுதலும் வழிபடுதலுஞ் செய்வாரான தமிழ்மக்களின் வழக்கம், பண்டை ஆரியநூல்களிற் சிறிதுங் காணப்படவில்லை. பிரணவம் என்னும் பெயராதல், விநாயகரென்னும் பெயராதல், விநாயகர்க்கு இளவலாக வைத்து வழுத்தப்படுந் தமிழ்தெய்வமாகிய முருகன்றன் வடமொழிப் பெயர்களான ‘சுப்பிரணியன்’ ‘கார்த்திகேயன்’ ‘ஸ்கந்தன்’ முதலான பெயர்களாதல் ஆரிய நான்மறைகளிற் சிறிதுங் காணப்படுகின்றில. ‘ஒம்’ என்னும் பிரணவத்தின் வடிவு ஆரியமந்திர வரிகளினிடையே வரையப்படுங்கால் ‘ஓ’ என்னுந் தமிழ் எழுத்தின் வடிவாகவே தீட்டப்படுதலானும், ஓசையைக் குறிக்கும் ஓதை, ஓசை, ஒலி என்னுந் தமிழ்ச் சொற்கள் ஓகாரத்தை முதலிற் கொண்டாற் போல ‘ஸப்தம்,’ ‘த்வநி’ முதலான வடசொற்கள் ஓகாரத்தை முதலிற் கொண்டிலாமை யானும் ஓங்காரமாகிய பிரணவந் தமிழ்மொழிக்கே உரித் தாதலைப் “பிரணவசொரூபம்” “திருவாசக விரிவுரை” முதலான எம்முடைய நூல்களில் முன்னரே விளக்கிப் போந்தாம்.
இங்ஙனமே, சிவாகமங்களில் நுவலப்படுந் திருக் கோயிலமைப்புகளுந், திருக்கோயிற் கிரியைகளும், அவை யிற்றைச் செய்யுங்கால் ஓதும் மந்திரங்களும், பௌஷ்கரம், மிருகேந்திரம் முதலான சிவாகம ஞானபாகங்களிற் கூறப்படும் முப்பொருள் ஆராய்ச்சிகளும், அவற்றின்கண் வழங்கப்படும் பல சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளும், பழைய ஆரிய வேதங்கள் பிராமணங்கள் ஆரணியகங்கள் கற்பசூத்திரங்கள் தன்மசூத்திரங்கள் முதலியவற்றில் ஒரெட்டுணையுங் காணப் படாமையின், இவையெல்லாம் இச்செந்தமிழ் நாட்டிலிருந்த பெரியார்களால் ஆக்கப்பட்டன வென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கா நிற்கின்றன.
அற்றேற், சிவாகம ஞானபாகங்களிற் காணப்படுங் கடவுள் உயிர் மலங்களைப்பற்றிய ஆராய்ச்சியோ டொத்தவை, வடமொழி யுபநிடதங்களிலுங் காணக்கிடத்தலால், அவையெல்லாந் தமிழாசிரியர்களாலேதாம் ஆக்கப்பட்டன வென்றல் யாங்ஙனமெனிற் கூறுதும்; காலங்கடோறும் புராணங்களும் ஆகமங்களுந் தலபுராணங்களும் புதிய புதியவாய் ஆக்கப்பட்டு வந்தமைபோல, உபநிடதங்களுங் காலங்கடோறும் பற்பல சமயத்தவராலுந் தத்தஞ் சமயக் கொள்கைக்கிணங்கப் பற்பலவாகச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. முக்திபோக நிடதத்தில் நூற்றெட்டு உபநிடதங்கள் அது தனக்குமுன் இருந்தனவாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. வடமொழிவல்ல வீபர் என்னும் ஆசிரியர் தம்மாற் கண்டுபிடித்துக் கணக்குச் செய்யப்பட்டவை இருநூற்று முப்பத்தைந்து உபநிடதங்களென்று தெரிவித்திருக்கின்றார். மகமதிய வேந்தரான அக்பர்காலத்திற் செய்யப்பட்ட ‘அல்லா உபநிஷத்’ ஒன்றும் உளதென்று வேதநூலாராய்ச்சியில் வல்லுநரான பிகாரிலால் சாஸ்திரி என்பவர் வரைந்திருக்கின்றார்.
என்றாலும், பிருகதாரணியகம், சாந்தோக்யம், தைத்திரியம், ஐதரேயம், கௌஷீதகி, கேநம் முதலிய ஆறு உபநிடதங்களும் மிகப் பழைய காலத்தனவாகும்; இவை உரைநடையில் ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்குப்பின் ஆக்கப்பட்டவை: கடம், ஈசம், சுவேதாசுவதரம், முண்டகம், மகாநாராயணம் என்னும் ஐந்துபநிடதங்களும் ஆகும்; இவை செய்யுள் நடையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்குப்பின் எழுந்தவை; பிரசிநம், மைத்திராயணீயம், மாண்டூக்யம் என்னும் மூன்றுப நிடதங்களும் ஆகும்; இவை பிற்கால ஸமஸ்கிருத உரை நடையில் வரையப்பட்டிருக்கின்றன. இப்பதினான்கு உபநிடதங்களுக்கும் வரவரப்பிற்பட்ட காலங்களிலேதாம் ஏனை உபநிடதங்கள் இயற்றப்பட்டனவாதல் ஆராய்ச்சியாற் புலனாகின்றன. இவ்வாறு வரவரப் பெருகிய உபநிடதங் களெல்லாம் பழைய தமிழாசிரியர்களாலுந், தமிழ்மக்களுட் பிற் பிற் காலங்களிற் கிளைத்த ஆகம சைவ வைணவ மாயாவாத மதங்களைப் பரவச் செய்தற்கட் கடைப்பிடியாய் நின்றவர் களான அவ்வச்சமய குருமார்களாலும் புதிய புதியவாகவே இயற்றப்பட்டு வந்தன வென்பதூஉம் அவ்வுபநிடதப் பொருள்களை நடுநின்றாராய்தலால் நன்கு விளங்கா நிற்கின்றது.
அற்றேலஃதாக; மிகப் பழைய உபநிடதங்கள் முதன் முதற் றமிழாசிரியர்களாலேதாம் ஆக்கப்பட்டன வென்பதற்குச் சான்று காட்டுகவெனிற், காட்டுதும். முற்பட்ட காலத்தில் எல்லா உபநிடதங்களுக்கும் முற்பட்டதாக இயற்றப்பட்ட பிருகதாரணியாக உபநிடதத்திலேயே பழைய ஆரியப் பார்ப்பனர்க்கு அவரின் முற்றும் வேறான க்ஷத்திரிய அரசர் மெய்யறிவு தேற்றினமை நன்கெடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு :
வேதநூல் வல்லானான பாலாகி முனிவற்கு மகனான கார்க்கியன் என்பான், காசிமன்னனான அசாதசத்துரு என்பவனை அணுகி, “யான் உனக்கு மெய்ப்பொருள் தேற்ற வந்திருக்கின்றேன்” என்றான். அதற்கு அசாதசத்துரு, “ஆ! உனக்கு நான் ஆயிரம் ஆக்கள் தருகிறேன்! சொல்” என்று விடை தந்தான். அதன்பிற் கார்க்கியன் பன்னிரண்டு வகையாக அதனைச் சொல்ல, அசாதசத்துரு அவன் சொல்லிய ஒவ்வொன்றிலு முள்ள குறைபாட்டை எடுத்துக்காட்டக், கடைசியாகக் கார்க்கியன் மேலேதுஞ் சொல்ல மாட்டானாய் வாயவிந்து வாளாவிருந்தான். அது கண்டு அசாதசத்துரு அவனை நோக்கி, “நினக்கு அத்துணை தான் தெரியுமோ?” என்று வினவ, அவன் “அத்துணை தான்” என்று விடை நுவன்றான். ஆனால், அசாதசத்துருவோ, “பிரமம் அவ்வளவுக்குமேற் செல்லாத அறிவினுள் அடங்குவதன்று” என மொழியக், கார்க்கியன் “யான் உமக்கு மாணவனாக வருகின்றேன்” என வேண்டினான். அதுகேட்ட அசாதசத்துரு, “மெய்யுணர்வு பெறுதற்பொருட்டு ஒரு அரசனுக்கு மாணவனாதல் மாறான வழியாயிருக்கின்றது. ஆனாலும், நீ வேண்டிய மெய்யுணர்வினை நினக்கு யான் அறிவுறுத்து கின்றேன். வா!” என அவன் கையைப்பிடித் தெழுந்தான். (பிருகதாரணிய கோபநிடதம், இரண்டாம் இயல், முதற்பிராமணம்.) என்னும் இப் பகுதியால், முழுமுதற்பொருளின் உண்மை நிலையினை, ஆரியப் பார்ப்பனர் முன்நாளில் அறியாதிருந் தமையும், அதனை அவர்க்குத் தமிழ் மன்னர்களே அந்நாளில் உணர்த்தினமையும், அங்ஙனம் அவருணர்த்திய மெய்யுணர்வு விளக்கமே ‘உபநிடதம்’ எனப் பெயர் பெற்றமையுந் தெற்றென விளங்குதல் காண்க.
அற்றேல், ஒரோவொருகாற் றமிழ்வேந்தர்கள் ஆரியக் குருமார்க்கு மெய்யறிவு தேற்றியது உண்மையேயாயினும், ஆரியக்குருமார் எல்லாருமே மெய்யுணர் வில்லாதவரென்று அதுகொண்டு முடித்தல் பொருந்தாதாம் பிறவெனின்; அற்றன்று; பழமையிற் பிருகதாரணியகத்தோ டொத்த சாந்தோக்கிய உபநிடதத்திற் பார்ப்பனர் எவருமே மெய்யுணர்வுடைய ரல்லரென்பதூஉம், க்ஷத்திரியமன்னர்கள் மட்டுமே பண்டுதொட்டு மெய்யுணர்வுடையராய் விளங்கி அம்மெய்யுணர்வு வலியால் உலகமெல்லாந் தஞ் செங்கோலரசின் கீழ் வைத்து ஆட்சி செலுத்தி வந்தனரென்பதூஉம் ஐயுறவுக்குச் சிறிதும் இடனின்றிச் தெளித்துரைக்கப்பட்டிருக்கின்றன. அவை வருமாறு:
“பாஞ்சாலர் அவைக்குச் ‘சுவேதகேது அருணேயன்’ வந்தான். அவனை நோக்கிப் ‘பிரவாகனசைவலி’ என்னும் அரசன் வினவினான், ‘இளைஞனே, நின் றந்தை நினக்கு மெய்யறிவு புகட்டினரா?’ அதற்குச் சுவேதகேது, ‘புகட்டினர் ஐய,’ என மறுமொழி புகன்றான். அதன்மேல் அரசன் ‘உயிர்கள் இந்நிலவுலக வாழ்வை விட்டுச் செல்லுங்கால் எங்கே போகின்றன? அறிவையா?’ என்று வினவினான். அதற்கவன் ‘அறியேன், ஐய,’ என்றான்.
அரசன்: ‘அவை திரும்பப் பிறவிக்கு வருங்கால் எங்ஙனம் வருகின்றன?’
சுவேதகேது ‘அறியேன், ஐய,’
அரசன்: ‘தேவர்கள் பாற் செலுத்துவதும், பிதிரர்கள்பாற் செலுத்துவதுமான இரண்டுவழிகள் பிரியுமிடம் நினக்குத் தெரியுமா?’
சுவேதகேது; ‘தெரியேன், ஐய’
அரசன்: ‘மக்கள் இறந்த பிற் செல்லும் உலகு ஏன் நிறைக்கப்படுதல் இல்லை?’
சுவேதகேது : ‘அறியேன், ஐய,’
அரசன்: “ஐந்தாம் வேள்வியிற் புனல்கள் ஏன் ‘புருஷன்’ என அழைக்கப்படுகின்றன?”
சுவேதகேது: ‘அறியேன், ‘ஐய’
அரசன் : ‘அற்றேல் நீ ஏன் மெய்யறிவு புகட்டப்பட்டேன் என்றனை? இவை தம்மை யெல்லாம் அறியாதான் ஒருவன் அறிந்தேன் எனக் கூறுதல் கூடுமோ?’ அதுகேட்ட அவ்விளையன் மனம் வருந்தினோனாய்த், தன் றந்தைபாற்சென்று ‘எனக்கு நீர் மெய்ப்பொருள் தேற்றாதிருக்கையிலேயே அது தேற்றினேன் எனப் புகன்றீர். அந்த ராஜந்யன் என்னை ஐந்து வினாக்கள் வினாயினான்; அவற்றுள் ஒன்றற்கேனும் விடைசொல்லத் தெரிந்தேனில்லை,’ என விளம்பினான். அதற்கவன் றந்தை, ‘நீ கூறிய அவ்வைந்து வினாக்களில் ஒன்றுக்குக் கூட எனக்கு விடை தெரியாதே. யான் அவற்றை அறிந்திருந்தால் உனக்குச் சொல்லாமலிருப்பேனென்று எண்ணுகின்றனையா?’ என மொழிந்தார். அதன்பிற், கௌதமர் அவ் வேந்தன் பாற் செல்ல, அவன் அவரைச் சிறப்புடன் வரவேற்றான். மறுநாட் காலையில் அரசனால் அழைக்கப்பெற்று. அவர் அவனெதிரே போக, அவன் ‘மாட்சிமை தங்கிய கௌதமரே! மக்கள் வாழ்க்கைக்குரிய செல்வத்தில் நுமக்கு வேண்டியது கேளும்’ என நுவன்றான். கௌதமர் ‘மன்னர்பிரானே! அச் செல்வம் நுமக்குத்தான் உரியதாகற்பாலது; என் மகனைக் கேட்ட கேள்விகள் ஐந்திற்கும் விடைதாம் எனக்கு வேண்டும்,’ என வேண்டினர். அதன் மேல் அரசன் மனந் திகைத்து, அவரை நெடுநாள் தனதரண்மனையிலிருக்கும்படி கட்டளையிட்டான். பின்னர் ஒருநாள் அவரை வருவித்து, ‘ஓ கௌதமரே! இம் மெய்யுணர்வு உமக்கு முன்னிருந்த பார்ப்பனரை அணுகியதில்லையென நீர் எனக்கு மொழிந்த வண்ணமே, மற்றை எல்லா வகுப்பினருள்ளும் க்ஷத்திரிய வகுப்பினராகிய அரசராலேயே இஃது அறிவுறுக்கப்பட்டு வருவதொரு மெய்க்கல்வியாகும்’ எனக் கூறி, அதனை அவர்க்குச் செவியறிவுறுத்தினான்” என்பது (சாந்தோக்கியம், 5-3-1 ) மிகப்பழைய இச் சாந்தோக்கிய வாய்மையுரையாற், சாகாக் கல்வியை அறிந்தவரும் அதனை அறிவிப்பவரும் பண்டை நாளில் அரசவகுப்பினருள் இருந்தனரேயன்றி, ஆரியப் பார்ப்பனருள் எவரும் இருந்திலரென்று முண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத்தெளிய விளங்குகின்ற தன்றோ?
அஃதொக்குமாயினும், க்ஷத்திரியரென்பார் தமிழஅரசரே யென்பது யாங்ஙனம் பெறுதும்? அவர் ஆரியருள்ளேயே ஒரு வகுப்பினராயிருத்தல் ஆகாதோ? எனின்; ஆகாது. ஆரியருட் டலை சிறந்த வகுப்பினராயும், வேத மோதுதலும் வேள்விவேட்டலுமாகிய தலையாய வினைகளைத் தாஞ் செய்வதோடு பிறரையுஞ் செய்விப்பாராய் ஆரிய வகுப்பின ரெல்லார்க்குங் குருக்கண்மாராயும் உள்ள பார்ப்பனர் வழி வழி மெய்யறிவாராய்ச்சிக் குரியராயின் அவரன்றோ அதனை முற்றவுணர்ந்தாராகல் வேண்டும்? அவரன்றோ தம்மிற் றாழ்ந்த தம்மாரிய இனத்தவரெல்லார்க்கும் அதனை யுணர்த்துவாராகல் வேண்டும்? மற்று, அவரிற் றாழ்ந்தவராகவும், எந்நேரமும் உலகிய லொழுக்கங்களிலேயே நினைவுஞ்செயலும் இழுபட்டு, அவற்றைச் சீர் திருத்தி முறையாகப் புரிவதிலேயே கருத்தொருப்பட்டு நின்றவராகவும் உள்ள அரசர்கள் ஆரியராயின் அவர் மட்டுமே, அவ் வாரியப்பார்ப்பனர் அறியாத மறைபொருட் பெருங் கல்வியை யுணர்ந்திருந்தன ரென்றலும், அதனையவர்க்கு அறிவித்தனரென்றலும், என்னை? என்று உண்மையை யுள்ளவாறு ஆராய்ந்து உணர்வார்க்கு, மெய்ப்பெருங் கலையுணர்வு பெற்ற க்ஷத்திரியரென்பார் பண்டை நாளில் ஆரிய இனத்தைச் சேர்ந்தவரல்லராய், நாகரிகத்திற் பண்டே ஏனையெல் லாரினும் பார்க்க மிக்கோங்கித் திகழ்ந்த பழந்தமிழ் மக்களினத்தைச் சேர்ந்தவராய் நின்ற வாய்மை தெற்றென விளங்கா நிற்கும்.
மேலும், பண்டை யாரியர் ஆடுமாடு மேய்த்துக்கொண்டு ஊர்ஊராய்த் திரிந்தவரேயல்லால், நாடு நகரங்கள் வகுத்து ஒருவனை அரசனாகவைத்து அவன்கீழ் அடங்கி முறையான நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்தவ ரல்லரென்பதூஉம் அந்நாளில் அவர் தாம் வணங்கிய சிறு தெய்வங்கண்மேற் பாடிய இருக்குவேதப் பழம்பதிகங்களால் நன்கறியக் கிடக்கின்றது. பண்டை ஆரியர் ஆடுமாடுகள் மேய்த்துக்கொண்டும், அவை தம்மைக் காப்பதற்கு நாய்கள் வளர்த்துக் கொண்டும், அவற்றின் மேய்ச்சலுக்காகப் புற்பூண்டுகள் செழித்துப் பச்சென்றிருக்கும் நிலங்களைத் தேடிக் கொண்டும் நடு ஆசியாவிலிருந்து அதன் தெற்கே ‘நடுநிலக்கட’ லோரங்கள் வரையிலும், ஐரோப்பாவின் நடுப்பகுதிகளிலும் பஞ்சாப்பிலுஞ் சென்று பரவினர். “அந் நாட்களில் அவ் வாரியக் குழுவினர் வணங்கிய தெய்வங்கள்: தியாவா, பிருதிவி, தையஸ், மித்திரன், வருணன், வலன், அத்திரி, மருத்துக்கள், பகலிரவுகள், வைகறை, பர்ஜந்யன் முதலியோராவர். இரும்பு, செம்பு, பொன், வெள்ளி முதலியவைகளை அவர் அறியார். விலங்குகளின் தோலையும் மரங்களினின்றும் உரித்தெடுத்த பட்டைகளையுமே உடைகளாக உடுத்திருந்தனர். அவர்களுக்கு நூறுவரையிற்றான் எண்ணத்தெரியும். தாஞ்சென்ற நாடுகளிற் றமக்குமுன் குடியேறியிருந்த ‘துராணியரர்’ ‘மங்கோலியர்’ முதலான மக்கட்பிரிவினருடன் உண்ணல் கலத்தல்களை ஏதொரு தடையுமின்றிச் செய்து வந்தனர். அவர்கட்கு அப்போது உழவுத்தொழிலே தெரியாதாகையால், உழவுத்தொழில் வளத்தாற் பெருஞ் செல்வராய் வாழ்ந்த பண்டைத் தமிழ்மக்களின் நாடுநகர்களின் புறங்களிற் புகுந்து வைகி, அவர்களுடைய ஆடுமாடுகளையும் உணவுப் பொருள்களையும் பிற பண்டங்களையுந் திருடிச் சென்று அடர்ந்த காடுகளினுள்ளும் மலைமுழைஞ்சுகளிலும் ஒளிந்திருந்து காலங்கழித்தனர்,” என்று ‘அபிநாஸ் சந்திரதாசர்’ வரைந்திருக்கின்றார். இப் பெற்றியினரான பழைய ஆரியர் இவ்விந்திய நாட்டின் வடமேற்கேயுள்ள பஞ்சாபு தேயத்திற் குடிபுகுந்து, ஆண்டு நின்றும் அதன் கிழக்கே கங்கையாறு பாயும் நாடுகளிலுங், கங்கையாற்றின் தெற்கே விந்திய மலைவரையிலுள்ள நிலப்பகுதிகளிலும், விந்தியமலைக்குந் தெற்கே கோதாவரியாறு பாயும் இடங்களிலும், அதற்குந் தெற்கே குமரிமுனை வரையிலும் நாளேற நாளேறப் படிப்படியே பரவி, அவ் வாரியர்க்கு முன்னே ஆங்காங்கே நாகரிகத்திற் சிறந்தாராய் உயிர்வாழ்ந்த தமிழ் வேந்தர்களாலுந், தமிழ்ச் செல்வர்களாலும், தமிழ்ப் பொது மக்களாலும் உதவப்பட்ட உண்டியும் உடையும் உறையுளும் பெற்றுப், பின்னர் அவரிற் சான்றோராயினார் ஆராய்ந்தறிந்த இலக்கண இலக்கியக் கலையறிவுகளும் அவர் அறிவுறுத்த அறிந்து, தாம் வணங்கிப்போந்த வருணன் மித்திரன் இந்திரன் முதலியோரெல்லாம் போர்க்களத்தில் இறந்து பட்ட மறவரின் ஆவிகளேயாதலால் அவரெல்லாங் கடவுளர் ஆகாமையும், பிறப்பிறப்புக்களிற் சுழலும் எல்லா உயிர்களையும் அவ்வுயிர் களிருக்கும் உலகங்களையுந் தோற்றுவித்துச் சுழற்றுவது பிறப்பிறப்பில்லா எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய உருத்திரசிவம் ஒன்றேயாதலும் அவர் தேற்றத் தெளிந்து வாழ்க்கை செலுத்துலாயினர். இவ்வாறு மிகவுங் கீழ்ப்பட்ட நிலையிலிருந்த பண்டை ஆரியர், இவ் விந்திய நாட்டுட் புகுந்து, ஈண்டு அவர்க்கு முன்னமே நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கிய பண்டைத்தமிழ் மாந்தருதவியால் நாகரிகம் எய்தி வாழ்ந்த வரலாறுகளை உண்மையான் ஆராய்ந்தறியாமல், இவ் விந்துதேய வரலாறு வரைந்தார் சிலர், ஆரியரே பண்டுதொட்டு நாகரிகத்தின் மிக்காராய்த் திகழ்ந்தனரென்றும், அவ் இவ் இந்திய நாட்டுட் புகுந்து தமிழ்மக்களைப் போரில் வென்று அவரை யெல்லாந் தமக்கடிமை ஆக்கினரென்றும், அவ் ஆரியரின் நாகரிகத்தில் ஒரு சிறுகூறே தமிழர் பெற்றனரென்றும் ஏதொரு சான்றுங் காட்டாது, தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொய்யும் புளுகும் புனைந்து கட்டிக் கூறினர்.
மற்று, இருக்குவேதப் பழம்பதிகங்களோ, ஆரியர் அலைந்துதிரியும் மேய்ப்பராய் இருந்தமையுந், தமிழர் நாடு நகரங்கள் வகுத்து வலிய கோட்டைகளிற் பகையச்சமின்றிச் செல்வத்திற் செழித்திருந்தமையும் நன்கெடுத்து நுவல்கின்றன. ஆரியர் பூஷணை வேண்டி வழுத்திய இருக்குவேத முதன் மண்டில 42ஆம் பதிகத்தில்,
“ஓ பூஷனே! எங்களுடைய வழிகளைச் சுருங்கச் செய்,
வழியிலுள்ள இடையூற்றை அகற்று.
எம்மொடு கூடி எமக்கு முன்னேசெல், முகிலிற்றோன்றிய முதல்வனே!
எமக்குத் தீங்கிழைக்கும் பொருட்டுப் பதுங்கியிருக்கும்பொல்லாத தீக்குறியான ஓநாயை, எமது வழியினின்றுந்துரத்து, பூஷனே!”
கள்ளநெஞ்சினனான கொள்ளைக்காரன் யாங்கள் செல்லும் வழியினருகே ஒளிந்திருக்கின்றான்; அவனை அவ் வழியினின்றும் பின்றொடர்ந் தோடச்செய்!
* * *
யாங்கள் செல்வத்தை எளிதில் அடையுமாறுசெய்! புல்லடர்ந்திருக் கின்ற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழிகாட்டிச் செலுத்து! எங்கள் வழியிலே விரைந்து வெப்பம் வராமற் செய்!
* * *
எம்பால் அருளுடையையாய் இரு! எமக்கு வயிறு நிறைய உணவுகொடு! எமதுடம்புக்கு உரம் ஏற்று!
எனப் போந்த வேண்டுகோளுரையால் பண்டை யாரியர் தொலைவான இடங்களிலுள்ள மேய்ச்சல் நிலங்களைத் தேடி நெடுவழி நடந்து எய்த்தமையும், அவர் சென்ற நெறிகளிலே ஓநாய்களுந் கள்வர்களும் பதுங்கியிருந்து அவர்க்குத் தீங்கிழைத்தமையும், அவர்கள் பொருளுக்குப் பெரிதும் மிடிப்பட்டமையும், ஒருவேளை கூட வயிறார உண்ணுதற்கு உணவு கிடையாமற் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து அவர்கள் பெருந் துன்புழந்தமையும் நன்கு புலனாதல் காண்க.
இனி, அவ் இருக்குவேத முதன் மண்டிலத்தின் கண்ணதான 44 ஆம் பதிகத்தில் இந்திரனைநோக்கி ஆரியர் செய்து கொண்டனவான,
“இந்திரனே, நீ நின் துணைவர்களுடன் சென்றாலுஞ்,
செல்வத்தில் சிறந்த தஸ்யுக்களை நீயே தனியாக நின்குலிசப்படையாற் பிளந்து கொன்றனை!
கிரியைகளைச் செய்யாத அப் பண்டை மக்கள் வான்நிலத்தினின்றும் பலமுகமாய்ச் சிதர்ந்தோடிச்சேய்மைக்கண்ணே அழிந்துபட்டனர்.”
என்றும்,
“பொன்னணிகளாலும் மணிக்கலங்களாலுந் தம்மை ஒப்பனை செய்து கொண்ட அவர்கள் இந் நிலத்தை மறைத்து ஓர் ஆடை விரித்தார்கள்.”
என்றும்,
“இந்நிலத்தின் கடைக்கோடிவரையில் ஊடுருவிப் பரவி நிற்கும் அவர்கள் தம் மந்திர ஆற்றல்களால் இந்திரனை வெல்லமாட்டாராயினர்”
என்றும்,
“இந்திரன் இலிபிசனுடைய வலிய அரண்மனைகளைத் தகர்த்தனன்”
என்றும்,
“தனது கூரிய குலிசப்படையால் அவர்களுடைய கோட்டைகளைப் பிளந்து துகளாக்கினான்.”
என்றும்,
“சுவித்திராளின் இளங்கன்றே, ஓ மகாவானே, துக்கிரனுடைய வீடுகளினிடையே எமக்கு நிலங்கிடைத்தல் வேண்டி நடந்த போரில் எமக்குதவி செய்கின்றனை!”
என்றும் போந்த வேண்டுகோள் மொழிகளினாலேயே, ‘தஸ்யுக்கள்’ என ஆரியரால் அழைக்கப்பட்ட பண்டைத் தமிழர்கள் செல்வத்திற் சிறந்தாராயிருந்தமையும், அவர் ஆரியர் செய்து போந்த சிறுதெய்வ வெறியாட்டுக் கிரியைகளைத் தாம் தழுவாதிருந்தமையும், அவர்கள் பொன்னாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட உயர்ந்த அணிகலங்களைப் பூண்டிருந்தமையும், அப் பழைய தமிழ்மக்கள் இவ் விந்திய நாட்டின் கடைக்கோடி வரையில் எங்கும் பரவி யுயிர் வாழ்ந்தமையும், அவர்கள் மந்திர ஆற்றலிற் சிறந்தாராயிருந்தமையும், இலிபிசன் என்னுந் தமிழ்மன்னன் வலிய அரண்மனைகள் பல உடையனா யிருந்தமையும், பொதுவாகத் தமிழ்மன்னர் பலருந் திண்ணிய கோட்டைகள் அமைத்து அவற்றினுள்ளிருந்து செங்கோல் செலுத்தினமையுந், தமிழ் மக்கள் தொகுதி தொகுதியாக வீடுகளமைத்து வாழ்ந்த நாடு நகரங்களினிடையே ஆரியர் தாமுங் குடியிருக்க நிலம் வேண்டினமையும் நன்கு பெறப்படுதல் காண்மின்கள்!
இங்ஙனம் பலவகையானும் நாகரிகத்திற் சிறந்தாராய், மெய்யுணர்விலும் மந்திர ஆற்றலிலும் மிக்கோங்கி வலியராய்த் திகழ்ந்த பண்டைத் தமிழ்மக்களை, ஓரிடத்தும் நிலைபெறுதலின்றி ஊர் ஊராய்த் திரிந்து உண்டிக்கும் உடைக்கும் மிடிப்பட்டு வந்த பழைய ஆரியர் போரில் வென்றாரெனப் புகல்வது எட்டுணையேனும் பொருந்துமோ? அற்றேல், அவர் வணங்கிய இந்திரன், தஸ்யுக்களைத் தன் குலிசப்படையாற் கொன்றனனென்றும், இலிபிசனுடைய வலிய அரண்களைத் தகர்த்து அழித்தனனென்றும், இன்னும் இங்ஙனமே பலவாற்றான் அவர்களைப் போரில் வென்றனனென்றும் ஆரியர் தம்முடைய வேண்டு கோளுரைகளிற் றமிழர்களைத் தாம் போரில் வென்ற குறிப்புத் தோன்றக் கூறுதல் என்னை? எனிற், கூறுதும்: ஆரியர் உண்மையாகவே தமிழரைப் போரில் வென்றனராயின், தாம் அடைந்த அவ் வெற்றித் திறத்தைத் தம் மேல் வைத்துக் கூறாதிரார். மற்றுத், தாம் அவரை வேறல் கூடாமையால், தாம் வணங்கிய இந்திரனே அவரை யழித்தானென அவன்மேல் வைத்து அவரை வென்றாற்போற் கூறினர். வலியான் ஒருவனை வெல்லமாட்டாமல் அவனால் தோல்வியுற்றவர், தாம் வணங்குந் தெய்வத்தின் முன்னே சென்று மண்ணை வாரியிறைத்து ‘அவனை அழித்துவிடு’ என்றோ ‘அவனை அவன் குடியோடு அழியச் செய்தனை’ என்றோ வைதுரைத்தல் இஞ்ஞான்றுங் கீழ்மக்கள்பாற் காணப்படுகின்றதன்றோ? இதுபோலவே வலியிலரான பழைய ஆரியருந் ‘தமிழரை அழிக்க’ என்றோ; ‘அழித்தாய்’ என்றோ இந்திரனைநோக்கித் தம்முடைய வேண்டுகோண்மொழிகளில் வயிறெரிந்து வைதுரைத்தாரென்பது. ஆரிய மொழியையும் ஆரிய நடையையும் பின்பற்றித் தம்மை ஆரியரென உயர்த்திச் சொல்லிக் கொள்ளும் இஞ்ஞான்றை மாந்தர் பலரைப் போற், பண்டிருந்த ஆரிய மாந்தருந், தம்மவரல்லாத பிறர் நன்கு வாழ்தலைக் கண்டு மனம் பொறாது வயிறெரியும் வன்மையரென்பது அவர் பாடிய இருக்குவேதப் பதிகங்களினாலேயே நன்கறியக் கிடக்கின்றது. ஆரியர்கள் இந்திரனைநோக்கிப் பாடிய இருக்குவேத முதன் மண்டில 106 ஆம் பதிகத்தில்,
“தெய்வங்கள் இந்தத் தாசனது சீற்றத்தைத் தணிப்பனவாக! எங்களினத்தவரைச் செல்வ வாழ்க்கைக்குச் செலுத்துவனவாக!”
தனது விருப்பத்தைத் தவிரத் தனக்கு வேறு உரிமை ஒன்று மில்லாதவன் தன்னையே தான் சார்ந்திருக்கின்றான்; நீரினிடையே நுரையினையே அள்ளித் தன்மேற் சொரிந்து கொள்கின்றான்.
குயவன்றன் மனைவியர் இருவருமோ பாலிலே தலை முழுகுகின்றனர்!அவர்கள் சிபாயாற்றின் ஆழத்திலே அமிழ்த்தப்படுவாராக!
எனப் போந்த வேண்டுகோளுரையிற், குயவன் என்னுந் தமிழ்மன்னன்றன் மனைவிமார் இருவரும் மிக்க செல்வ வளத்தொடு நீராடுதல் கண்டு மனம்பொறாது வயிறெரிந்து, அவர்களிருவரும் நீராடுஞ் சிபாயாற்றின் ஆழத்திலே அமிழ்த்தப்படுகவெனக் கூறிய வன்கண்மையை நோக்குங்கால், ஆரியர்கள் பண்டைத் தமிழரின் செல்வ வாழ்க்கையைக் கண்டு எத்துணை நெஞ்சம்புழுங்கி அவிந்தனரென்பது புலப்படவில்லையா? இங்ஙனமே வறுமையிலுழன்று வதங்கிய ஆரியர் தமிழரின் வளவிய நாகரிக வாழ்க்கையைக் கண்டு வயிறெரிந்து வைத வசவுகளையெல்லாம் ஈண்டெடுத்துரைப்பின் இது மிக விரியும். எமது “பண்டைத் தமிழர் ஆரியர்” என்னும் நூலில் இதன் விரிவுகளைக் காண்க. என்றிதுகாறும் விளக்கியவாற்றாற், பழைய ஆரியர் தாம் வணங்கிய சிறு தெய்வங்களை நோக்கித், தமிழரை வைதுரைத்த உரைகள் அவர்கள் தாம் அடைந்த வெற்றியினைக் குறியாமல், அவர்களது மிடிப்பட்ட வாழ்க்கையினையும் அவர்களது பொறாமையுள்ளப் பான்மையினையுமே குறிக்கின்றனவென்று உணரற்பாற்று. பண்டைத்தமிழர் நாகரிகத்தானும் நுட்பவறிவின் திறத்தானும் படைவலியில் மிக்காராய் விளங்கினமையின், அவர் எஞ்ஞான்றும் ஆரியரால் தோல்வியடைந்ததிலர். மற்றுப், புதிதுவந்த ஆரியர்க்கு உண்டியும் உடையும் உறையுளும் நல்கி, அவர்க்கும் பிறர்க்கும் வேந்தராயும், அவர்க்கு நல்லறிவுச் சுடர்கொளுவிய ஆசிரியராயுமே வென்றிபெற்று விளங்கினர். எனவே, ஆரியர்க்கு மெய்யறிவு தேற்றிய க்ஷத்திரியரென்பார் தமிழ்மன்னர்களேயாதல் தெற்றெனத் துணியப்படும். மநுநூல் ஆக்கிவைத்த பார்ப்பனர்களே, சோழவேந்தர்களையும் ஏனைத் தமிழர்களையும் முதலில் க்ஷத்திரிய இனத்தவர் என்று சொல்லிவைத்துப், பின்னர். அவர்கள் பார்ப்பனரைப் பெருமைப்படுத்தாமையானுந், தாஞ் செய்யுஞ் சிறந்த வினைகளுக்குப் பார்ப்பனருடைய கருத்துக்களைக் கலந்து அவற்றைச் செய்யாமையானும் அவர்கள் சூத்திராயினரென்று அம் மநுநூலில் எழுதி வைத்திருக்கின்றனர் (மநு: 10-43-44) ஆகவே, தமக்கு எல்லாவகையான உதவியுஞ் செய்து தம்மைக் கொண்டாடும் வரையில் தமிழர்களையுந் தமிழ்வேந்தர் களையும் ‘க்ஷத்திரியர்’ என்னும் வடசொல்லால் உயர்த்துக் கூறுதலுந், தம்முடைய இரண்டகச் செயலையும் படிற் றொழுக்கத்தையுந் தெரிந்துகொண்டு தமக்குச் செய்து போந்த உதவிகளை அவர் நிறுத்தித் தம்மைப் பாராட்டு தலையுங் கைவிட்டபிற், சிறிதும் நன்றியறிதலின்றி அவர் தம்மை யெல்லாஞ் ‘சூத்திரர்’ ‘தாசர்’ ‘தஸ்யுக்கள்’ என்னும் இழி சொல்லால் இழித்துக் கூறுதலும் ஆரியர்க்கும் அவர்தம் ஒழுகலாற்றை விடாப்பிடியாய்க் கைக்கொண்ட பார்ப்பனர்க்கும் இயற்கை இரண்டகச் செயல்களாய்ப் படிந்துவிட்டன. என்றாலுந், தம்மை யடுத்துவேண்டிய ஆரியப் பார்ப்பனர்க்குப் பழந்தமிழாசிரியர்கள் சிறிதும் ஒளியாமலே மெய்ப்பொருள் அறிவுறுத்தி வந்த உயர்குணமாட்சி, மேலே பிருகதாரணிய கோபநிடதத்தினின்றுஞ் சாந்தோக்கிய உபநிடதத்தினின்றும் எடுத்துக் காட்டிய இரண்டு மெய்ந்நிகழ்ச்சிகளாலும் இனிது விளங்காநிற்கும்.
இன்னும், அச் சாந்தோக்கிய உபநிடதத்திலேயே (5.11.24) ‘உத்தாலக ஆருணி’ என்னும் பெயர்போன ஆரியகுரு, தம்பால் வைஸ்வாநர ஆன்மாவைப் பற்றித் தெளிதல்வேண்டிப் போந்து உசாவிய கலைவல்ல பார்ப்பனர் ஐவர்க்கு, அதன் உண்மை தெரிவிக்கும் மெய்யுணர் வில்லாராய்க் கலக்கமெய்திப், பின்னர் அவ் ஐவரோடும் ‘அசுவபதி கைகேயன்’ என்னுந் தமிழ் மன்னன் பால் அணுகித், தமது சிறுமையுந் தாம் வினாய மெய்ப் பொருளின் பெருமையும் அவனால் ஒருங்கு அறிவுறுக்கப் பட்டுத் தெளிந்த உண்மைவரலாறு நன்கெடுத்து உரைக்கப் பட்டிருக்கின்றது.
இன்னும், அச் சாந்தோக்கியத்தின் ஏழாம் இயலிலே, நாரதமுனிவன் சநற்குமாரரை அணுகிப், “பெருமானே!” யான், இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதங்களும், இதிகாசபுராணங்களும், வியாகரணம் முதல் தேவஜனவித்தை ஈறான பதினான்கு கலைகளும் உணர்ந்திருக்கின்றேன். இறைவனே! யான் உணர்ந்தனவெல்லாம் மந்திரங்கள் அல்லது வெறுஞ் சொற்களே யன்றி, அவற்றின் உண்மைப் பொருள் அல்ல. உலகத்தில் துன்புற்றவர்கள் தேவரீரை அடைந்து அத் துன்பம் நீங்கப் பெறுவரென்று கேள்வியுறுகின்றேன். பெரும, யானும் மனங் கவன்று கலங்குகின்றேன், அதனைத் தீர்த்தருளும்!” என்று வேண்டச், சநற்குமாரர் “நீ கொண்டாடிய வேதங்களுங் கலைகளுமெல்லாம் வெறும்பெயர்களேயன்றி வேறல்ல. மற்று, அப்பெயர்கட்கு மேலாகவுள்ள மெய்ப் பொருளியல்பினை அறிவுறுத்துகின்றாம். கேள்!” என நுவன்று, அதன்மேல் அம் முழுமுதற் பெரும் பொருளியல்பினை அவற்கு விரித்து விளம்பினாரென்பது சொல்லப்பட்டிருக்கின்றது. இங்கே ஆரியமுனிவனாகிய நாரதற்கு உண்மைப் பெரும்பொரு ளியல்பினை அறிவுறுத்தினவர் தமிழ்த்தெய்வமாகிய முருகப் பிரானே யென்பது குறிக்கப் பட்டிருத்தலால், மெய்ப் பொருளுணர்வு அந்நாளில் தமிழாசிரியர்மாட்டேதான் விளங்கியதென்பது ஒருதலை. முருகப்பிரானே வடநூல்களிற் ‘சனற்குமாரர்’ என வழங்கப் படுவர். என்றிதுகாறும் விளக்கியவாற்றாற், பழைய ஆரிய வேதப்பதிகங்கள் ஒருசிலவற்றிற் காணப்படும் ஒரு முழுமுதற்கடவுளுணர்வும், அக்கடவுட் பெயர்களான ‘உருத்திரன்,’ ‘சிவன்’ என்னுஞ் சொற்களும், அக்கடவுளையும் அதனின் வேறான சிற்றுயிர் களையும் அச் சிற்றுயிர்களைப் பிணித்த மும்மல இயல்புகளையுந் தெரிக்குஞ் சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளும், ஆரியர் வணங்கிய இறந்தோராவிகள் தெய்வங்களாகாமையும், பிறப்பிறப்பில்லா முதற்பெரும் பொருளாகிய சிவம் ஒன்றே உலகுயிர்களைத் தோற்றுவித்த முழுமுதற்கடவுளாதலும் பிரித்து விளக்குஞ் சில புராணகதைகளுஞ், சைவசித்தாந்த உண்மைகளை அகத்தடக்கிய பழைய உபநிடதங்களும், அவ்வுண்மைகளை ஆராய்ந்து தெளிதற்குக் கருவிகளான சாங்கியம் யோகம் நையாயிகம் வைசேடிகம் வேதாந்தம் முதலான நூல்களும் பண்டைத்தமிழாசிரியர் ஆரியமொழியில் ஆக்கிவைத்தனவாதல் நன்கு தெளியப்படுமென்பது.
இவ்வாற்றால், திருவள்ளுவர் காலத்துக்கு ஒரு நூற்றாண்டு கழித்துத் தோன்றிய ‘சிலப்பதிகார’ ‘மணிமேகலை’ காலத்திருந்து, அவர்க்குப்பின் ஓராயிரத்து முந்நூறியாண்டு வரையிற் றோன்றிய இடைக்காலத்துத் தமிழாசிரியர் அத்தனை பெயருந், தமக்குமுன்னிருந்த பண்டைத் தமிழாசிரியர் ஆழ்ந்தாராய்ந்து கைக்கொண்ட கொள்கைகளையே ஓர் இம்மியளவும் பிழையாது தாமுந் தழீஇ அவற்றிற் கடைப் பிடியாய் நின்றனரேனும் வடநாட்டினின்றும் புகுந்து வைகிய பௌத்தர் சமணர் மாயாவாத வைணவப் பார்ப்பனர் முதலாயினார்க்கு மெய்யறிவுச் சுடர்கொளுவுதற் பொருட்டு, அவர் கொணர்ந்து மிகுத்துவழங்கிய வடமொழியைத் தாமுங் கையாண்டு, தம்முடைய கோட்பாடுகளை விளக்குஞ் சொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகள் கதைகள் முதலானவைகளை வடமொழியினாலேயே தாமும் வழங்கத் தலைப்பட்டனர். அதனால், திருவள்ளுவர் காலம்வரையில் மிகவுந் தூயதாய்ச் சுடரொளி விரிந்து திகழ்ந்த தனித்தமிழ் ஞாயிறு அதற்குப் பின்னர்த்தாகிய இவ் இடைக்காலத்தில் உண்டான வடமொழிக் கலவையாகிய மூடுபனியால் தனது தூய பேரொளி சிறிதுசிறிதே மங்கித் தோன்றியதாயினும், அப் பனியினைத் தனது பேரொளிவெப்பத்தால் உரிஞ்சித், தனதியற்கையொளி குன்றாமலே விளங்கி இயங்கியது. இவ்வாறு தனித்தமிழ் ஞாயிறு தனது தூய பேரொளி குன்றாதே விளங்கியகாலம், சைவசித்தாந்த ஆசிரியரில் இறுதியாக நின்றவரான உமாபதி சிவனார் வயங்கிய காலம் வரையிலேயாம். இவ்வுமாபதி சிவனார் ‘சங்கற்பநிராகரணம்’ என்னும் நூல் இயற்றிய காலம் இற்றைக்கு 623 ஆண்டுகளக்கு முன்னென்பது அந் நூற்பாயிரங் கூறுமாற்றால் நன்கு பெறக்கிடக்கின்றது.



