முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்

10. புலவர்தம் இனிய இல்லற வாழ்க்கை

முன்னே எடுத்துக்காட்டிய கோப்பெருஞ்சோழன் என்னும் அரசர்பெருமான் தன்னரசு துறந்து உயிர்நீத்தற்கு வடக்குநோக்கி யிருந்தவழி, அவற்கு இன்னுயிர் நண்பரான பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் அவனைப் பிரிந்து உயிர்வாழ மாட்டாராய்த் தாமும் அவனோடு ஒருங்கு உயிர் நீத்தற்கு அவனிருந்த இடமே போந்தனர். அப்போது அவ்வரசனோடு உடனிருந்த சான்றோர்கள், பிசிராந்தையார் ஆண்டில் முதிர்ந்தும் உருவத்தில் இளையராய் விளங்குதல் கண்டு வியந்து, “கேட்குங்காலம் பலவாலோ, நரைநுமக்கு இல்லையாலோ?” என அவரை நோக்கி வினவ, அவர்,

‘யாண்டு பலஆக நரைஇல ஆகுதல்யாங்கா கியரென வினவுதி ராயின்,
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,
யான்கண் டனையர்என் இளையரும், வேந்தனும்அல்லவை செய்யான் காக்கும், அதன்தலைஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் பலர்யான் வாழும் ஊரே’

(புறநானூறு 191)

என்னும் அருமருந்தன்ன செய்யுளால் அச் சான்றோர்க்கு விடைகூறினர். தாம் ஆண்டில் முதிர்ந்தும் நரையிலா இளைய வுருவத்தொடு தாம் விளங்குதற்கு ஏற்ற காரணங்களைக் கூறுவான் புகுந்த ஆசிரியர் பிசிராந்தையார், தம் மனைவி மக்கள் எல்லா நற்குணங்களினாலும் நிரம்பினராயிருத்தலை முதற்கண் எடுத்துரைக்கும் நுட்பம் பெரிதும் நினைவுகூரற்பாலது. ஒராண்மகன் தானுந் தன் குடும்பத்தவரும் இனிதுவாழ்தற்கு இன்றியமையாது வேண்டும் பொருள் கடைக்கூட்டுதற் பொருட்டு, நாள் முழுதும் வெளியேசென்று முயலும்வழித், தனக்குத் தலைவராயினாரோடுந், தன்னோடு உடன்முயல்வாரோடும் பழகும் நேரம் மிகச் சிறிதேயாகும்; அங்ஙனம் பழகுங்காலும் அவன் தன்னுள்ளத்தைத் திறந்து வைத்து அவரொடு பழகுதல் இயலாது; அல்லதூஉந், தன் தலைவர்களுந் தன்னோடு உடன் முயல்வாருந் தன்னொடு மாறுபட்டவராய் இருந்தால் அவரால் அவன் படுந்துன்பம் அளவிடப்படாததாய் இருக்கும். இவ்வாறெல்லாம் வெளியே பலவகை அல்லல் உழந்து, மாலைப்பொழுதில் அயர்ந்து அவாவுடன் தன் இல்லத்திற்குத் திரும்பும் அவ் வாடவன், தன் அழகிய இனிய கற்பிற்சிறந்த அறிவுடைமனையாளால் நகையரும்பு குளிர்முகத்தோடு அன்புடன் எதிரேற்கப் படுவனாயின், அவன் தான் வெளியே பட்ட துன்பங் களெல்லாம் மறந்து எத்துணை ஆறுதலுங் களிப்பும் மிக்கவனாய்த் தன் இல்லத்தின் உள்ளே சென்று வைகுவன்! இனி, அவ்வாறின்றி அவள் தன் கணவனைக் கண்டவுடன் தன் கடுகடுத்த முகத்தாலும் வெடுவெடுத்த சொல்லாலும் அருவருத்த நடையாலும் அவனைப் பேய்போல் வாட்டி வருத்துந் தீய இயற்கை யுடையவளாயின், முன்னமே வெளியில் அல்லற் பட்டுவந்த அவன் தன் வீட்டின் அகத்தும் அங்ஙனந் துன்புற்று, அதனாற் கவலையும் நோயுங்கொண்டு செந்நீர் நஞ்சாகி இளமை யிலேயே மூத்துப்போவன்; மூத்து விரைவிலும் மாண்டு போவன். இவ்வுண்மை யுணர்ந்தன்றே ஒளவையார்,

“இல்லாள், வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல்
அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும்”

என்றுந், திருவள்ளுவர்,

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனை மாட்சித் தாயினும் இல்”

(குறள் 52)

என்றும்,

“உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று”

(குறள் 890)

என்றும் அருளிச்செய்தனர். எனவே, ஆடவரும் மகளிரும் முதுமை எய்தாமல் நீண்டகாலம் இளமைச்செவ்வியுடன் இனிது வாழ்தற்கு, அவர், தம்மில் எஞ்ஞான்றும் அன்பினால் அகங்கெழுமிக் குளிர்ந்த முகனும் இழைந்த சொல்லுங் குழைந்த நடையும் வாய்ந்து மாறின்றி ஒழுகுதலேயாம் என்பது போதரும்.

அஞ்ஞான்றிருந்த நந் தமிழ்மேன்மக்கள், அன்புக்கும் அருளுக்கும் அறத்திற்குமே தலைமை தந்து, சாதிக் கட்டுப்பாடு சமயக் கட்டுப்பாடுகளை அவற்றின் தலைமைக்கீழ் அடக்கி வைத்து வாழ்க்கை செலுத்தி வந்தமையால் ஆடவர் தமக்கேற்ற மகளிரையும், மகளிர் தமக்கேற்ற ஆடவரையுங் காதலன்பின் வழிச்சென்று மணக்கலாயினர். அங்ஙனம் இருபாலா ருள்ளமும் அன்பினாற் குழைந்துருகி ஒருமையுற்றபின், அவரது வாழ்க்கையிற் கவலையாதல், துன்பமாதல் நுழைதற்குச் சிறிதேனும் இடன் உண்டாமோ? அவ்வாறு மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்த அவர்தந் திருவுருவம் என்றும் மூவாது இளமையாகவே விளங்குமல்லது பிறிதாமோ? இன்னும் இதன்விரிவை எமது ‘மக்கள் நூறாண்டுயிர்வாழ்தல் எப்படி?’ என்னும் நூலிற் கண்டுகொள்க. இத்துணைச் சிறந்த ஒர் அரும்பெரு நுட்பத்தைக் கண்டு அதனைத் தமது இளமைக்குத் தலைசிறந்த காரணமாக முதற்கண் எடுத்துரைத்த ஆசிரியர் பிசிராந்தை யாரின் கூர்த்த அறிவின் மாட்சி என்றும் நினைவுகூர்ந்து பாராட்டற் பாலதாகும்.

இனி, தாம் ஆண்டில் முதியராயிருந்தே வடிவில் இளைஞராய்த் தோன்றுதற்கான இரண்டாவது காரணத்தைத், தம் ஏவலர்பால் வைத்துரைக்கின்றார் பிசிராந்தையார். நம் புலவர் பெருந்தகைக்கு ஏவலராய் அமைந்தவர்கள் தம் தலைவன் கருத்தறிந்து, அதற்கொத்து நடப்பவர்கள் என்பது ‘யான் கருதி அதனையே கருதுவர் எனக்கு ஏவல்செய்வாரும்’ என்று அவர் கூறுமாற்றால் அறியப்படும். தம் தலைவன் கருத்தை அறியாமல் நடப்பவராகவேனும், அறிந்தும் அதற்கேற்ப நடவாதவராகவேனும், அல்லததற்கு மாறாக நடப்பவராகவேனும் ஏவலர் ஒழுகுவராயின், அதனினும் மிக்க துன்பத்தையுங் கவலையையுந் தலைவற்குத் தரவல்லது பிறிதில்லை. ஓர் அரசன் ஒருகால் தன் பக்கத்திருந்த இருவரில் ஒருவனை நோக்கி, “என் மார்பில் உதைத்தான் கால்களுக்கு யாது செய்யலாம்?” எனப் புன்னகை புரிந்துகேட்ப, அவன் பரிந்து “அவனுடைய கால்களை இரண்டாகத் துணித்தெறிதல் வேண்டும்,” எனப் பரபரப்புடன் கூறினன். அதன்பின் அம் மன்னன் அங்ஙனமே புன்னகைசெய்து மற்றொருவனைப் பார்த்து, “என் மார்பில் உதைத்தான் கால்கட்கு யாது செய்யலாம்?” என வினவ, அவன் “அங்ஙனந் தங்கள் மார்பில் உதைத்த குறும்பன் கால்கட்குப் பொற் றண்டையுஞ் சதங்கையும் அணிதல் வேண்டும்” என மொழிந்தனன். பார்மின்! அரசன் மார்பில் ஏறி உதைக்கத்தக்கவன் அவன் ஈன்ற சிறானேயன்றிப் பிறனொருவனாதல் பொருந்தாதே! தன் மகன் தன் மார்பின் மீதேறி விளையாடினதை உட்கொண்டு வினாய அரசனது கருத்தை முன்னவன் அறியாதுரைப்பப், பின்னவன் அதனை யறிந்துரைத்த நுட்பம் எத்துணை வியக்கற்பாலதாய் மகிழற் பாலதாய் இருக்கின்றது! இனி ஒரு சிறந்த விருந்தினர் தமதில்லத்திற்கு வரப்பெற்ற ஒரு தலைவன் தன் சமையலாளை அழைத்து, “இப் பெரியார்க்கு நல்விருந்து செய்க!” என்று ஏவினன். அதற்கு அவ்வேலவன் மிகமகிழ்ந்து பல்வகைக் கறிகளுங், குழம்பும், அடிசிலும் பிறவும் அமைப்பானாய்ப் புகுந்து வந்த விருந்தினர்க்குப் பசியெடுக்கும் வேளை யிதுவாகுமென நினைந்து பாராமற் சமையல் தொழிலிலேயே முனைந்து நின்றான்; பிற்பகல் இரண்டு மணிக்கு மேலாகியும் விருந்துணா முடிந்த பாடில்லை. இதற்குள் விருந்தினர்க்குப் பசித்துன்பம் மிகுவதாயிற்று. தன் தலைவன் கருத்தும், விருந்தினர் பசிக்குறிப்புந், தன் சமையலாள் மடமையும் முன்னமே அறிந்து வைத்த அவ் வில்லத்தலைவி, மிகச்சிறந்த உணவன்றாயினும் பசிவேளைக்கேற்ற இன்சுவை யுணவாவ தனை விரைந்தமைத்துத் தம்மில்லம் வந்த அவ் விருந்தினர்க்குந் தங் கொழுநற்கும் படைத்து அவர்தம் பசித்துன்பத்தைப் போக்கினாள். ஆகவே, ஒருவரது கருத்தறிந்தும் அதற்கேற்ப நடவாமை எத்துணை அருவருக்கற்பாலதா யிருக்கின்ற தென்பதூஉம், அதனையறிந்து அதற்கேற்ப நடத்தல் எத்துணை விரும்பற்பாலதாயிருக்கின்ற தென்பதூஉம் இதனால் நன்கு விளங்குகின்றன வல்லவோ? இனித், தம் தலைவன் கருத்துக்கு மாறாக நடக்கும் மடமைக்கும் ஒன்றெடுத்துக் காட்டுதும். சிறந்த நிலையிலமர்ந்து வேலை பார்க்கும் அறிஞர் ஒருவர் ஒருகால் தமக்கொரு சமையற் காரனைப் புதிது அமைத்தார். அவர் ஒருநாள் விரைந்து வெளியே போகல்வேண்டினமையின் விரைந்து உணவமைக்கும்படி அவற்குக் கட்டளையிட்டார். குறிப்பிட்ட நேரத்தில் அவர் அடுக்களையிற் போந்து தமக்கு உண வமைக்கும்படி கேட்க, அச்சமையற்காரன் சோற்றைமட்டும் வேகவைத்துக் கொண்டிருந்தான்; குழம்பு கறிகள் ஏதும் இன்னும் அமைத்திலன். இவையெல்லாம் அமைப்பதற்கு மூன்று மணிநேரங்கள் முன்னமே அவர் தெரிவித்திருந்தும் அவன் அறிவின்மையினாலோ அல்லது ஒழுங்காகச் செய்ய மாட்டாமையினாலோ, சோற்றை முக்கால் வேக்காடாக அவித்தற்கு மேல் வேறேதுஞ் செய்திலன்; அத் தலைவர் காலந்தாழ்த்தல் ஆகாமையின் செய்தவரையிற் கொணர்ந்து படைக்கவென அவனை ஏவினர். அவன் முக்கால் வேக்காட்டி லுள்ள சோற்றைமட்டுங் கொணர்ந்து படைத்து, ‘இன்னுஞ் சிறிது நேரத்திற் குழம்புகறிகள் ஆய்விடும்’ என நுவன்றனன். அவர் அவ் வாளின் மடமைக்கு உள்ளே மிகவருந்தி, ‘நல்லது, சோற்றில் விட்டுக்கொள்ளுதற்கு என்ன வாங்கி வைத்திருக் கின்றாய்?’ என வினவ அவன் ‘நெய்யுந் தயிரும் வாங்கி வைத்திருக்கின்றேன்’ எனக் கூறி உட்சென்று ஒரு தயிர்க் கிண்ணத்தை எடுத்துவந்தனன். ‘முதலிற் சிறிது நெய்யை விடு’ என அவர் கேட்ப, அவன் தான் கொணர்ந்த கிண்ணத்தைக் கவிழ்த்துப் பார்க்கத் தயிர் கீழே சிந்திப்போனதை அவன் உணராமல் ‘ஐய! நெய்யுந்தயிரும் வாங்க இரண்டு கிண்ணம் ஏதுக்கு என்று இந்த ஒரு கிண்ணத்தின் அடிப்பக்கத்துள்ள வட்டிலில் நெய்யும் மேற்பக்கத்துள்ள வட்டிலில் தயிரும் வாங்கிவைத்தேன். கீழேயுள்ள வட்டிலில் நெய்யைக் காணோம், மேலே யுள்ள தயிரையாவது விட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அக் கிண்ணத்தை மேலே திருப்பினான். கீழ்த் திருப்பியபோதே கொட்டிப்போன தயிரை நோக்காமல் அவன் செய்ததைப் பார்த்து, அவனது மடமைக்காக அவ்வறிஞர் சிரிக்க, அவன் அவர் தனது சமையல் தொழிலின் திறமையைக் கண்டு மகிழ்கின்றாரென நினைந்து, ‘பெருமானே! எனக்குச் சம்பளஞ் சிறிது கூடக் கொடுத்தருளல் வேண்டும்!’ என அவரைப் பணிந்து கேட்டனன். இங்ஙனந், தலைவன் கருத்துக்கு மாறாக நடக்கும் மடமைமிக்க ஏவலர் உளராயின், அவரையுடைய தலைவற்கு வசதியும் மனக்கிளர்ச்சியும் உண்டாகுமோ என்பதை நினைந்துபார்மின்கள்! அவரால் தலைவர்க்கு ஓயாக் கவலையுந் துன்பமுமே உளவாகுமாதலான், அவர் நீண்டநாள் நன்கு உயிர்வாழ்தல் இயலாது. மற்றுத், தந்தலைவன் குறிப்பறிந்து அவன் எல்லாவகையிலும் உவக்கும்படி ஏவற்றொழில் புரியவல்லாரே, அவற்குக் கவலையில்லா உள்ளக் களிப்பினையும், அதன் வாயிலாக நீண்ட வாழ்நாளினையும் அவற்கு விளைக்க மாட்டுவாராவர். இந் நுட்பமறிந்துரைத்த பிசிராந்தையாரது புலமை எத்துணை நுண்ணிதாய்த் திகழ்கின்றது! இங்ஙன மெடுத்துக்காட்டிய இரு காரணங்களும் ஒருவன் நீண்டநாட் கவலையின்றி வாழ்தற்கு இசைந்த அகக் காரணங்களாகும்; அஃதாவது ஒருவனது இல்லத்தே உளவாய காரணங்கள்.

இனி, ஒருவன் கவலையில்லா நீண்ட வாழ்க்கையில் வாழ்தற்கு அவன் தன் இல்லின் புறத்தே உணவாதற்குரிய காரணங்களிரண்டைப் புலவர்பிரான் பிசிராந்தையார் நுவன்றதூஉம் ஒரு சிறிது ஆராயற்பாற்று. ஆசிரியர் குடியிருந்து வாழும் ஊர்க்கு அரசனாய் இருந்தவன் தனது அரசியன் முறையிற் றீயதேதும் புகாமற் செங்கோல் செலுத்திக் குடிபுறந்தந்தமையே தாம் கவலையின்றிப் முதுமை தெரியாமல் உயிர்வாழ்ந்ததற்கு ஏதுவாயிற் றென்கின்றார். அரசன் கொடியனாய்க் குடிமக்களை வருத்தி இறைப்பணம் வாங்குபவனாயிருந்தாலும், முறை வேண்டினார்க்குங் குறை வேண்டினர்க்கும் நடுநின்று அரசு செலுத்தாமல் நெறி வழிஇ ஒழுகுபவனாயிருந்தாலுங், குடிமக்கள் இனிது வாழ்தற்கு இன்றியமையாது வேண்டிய நற்செயல்களைப் புரியானாய்க் குடி சூது காமம் முதலிய தீச்செயல்களிலேயே முழுகினவனாயிருந்தாலும் அவனது நாட்டின்கீழ் வாழ்வார்க்குத் துன்பமே நோயே வறுமையே வாழ்நாட் குறைவேயல்லால் வேறு நன்மை சிறிது உளதாகாது. இது பற்றியே,

“கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டிற்கடும்புலி
வாழுங் காடு நன்றே”

என்றும்,

“குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றாமடிகொன்று பால்கொளலும் மாண்பே”

என்றும்,

“இன்று கொளற்பால நாளைக் கொளப் பொறான்,
நின்று குறையிரப்ப நேர்படான் – சென்றொருவன்ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும்வேடலன் வேந்தும் அலன்”

என்றும்,

“கெடுவல்யான் என்ப தறிகதன் னெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்”

(குறள் 116)

என்றும் அறநூல்கள் கூறுவவாயின. ஆனாற், பிசிராந்தையார் காலத்திருத்த அரசனோ அரசியன் முறையிற் சிறிதும் பிறழாதவனாய்த் தீநெறிச் செல்லாதவனாய் எப்போதுங் குடிமக்கட்கு நன்மையே செய்பவனா யிருந்தமையின், அவனது செங்கோல் நீழற்கீழ் வைகி உயிர்வாழ்ந்த ஆசிரியர்க்கு எவ்வகைக் கவலையுந் துன்பமும் நோயும் இலவாயின. அதனால் அவர் ஆண்டில் முதியராயிருந்தே உருவில் இளைஞராய்க் காணப்படலாயினர்.

இனி, மேற்கூறிய புறக்காரணமேயன்றி, ஆசிரியர் பிசிராந்தையார் தாம் வாழ்ந்த நாட்டிற், கல்வி கேள்விகளும் நற்குணங்களும் ஒருங்கமைந்து உயர்ந்தோர்க்குப் பணிந்து ஐம்புல அவாக்கள் அடங்கப்பெற்ற சான்றோர்கள் பலர் உளராதலாகிய பிறிதொரு காரணமும் எடுத்துக் காட்டுகின்றார். இப்பெற்றியரான சான்றோர் குழுவிற் சேர்ந்து, பொய்யா நாவினரான அவர் கூறும் ஆழ்ந்தகன்ற மெய்யுரை களைக் கேட்டலானும், அவர்க்குள்ள இயற்கை நற்குணங் களொடு பழகுதலானும், அவரை அங்ஙனஞ் சேர்ந்தார்க்கு உயர்ந்த அறிவும் விழுமிய இயல்பும் அவாவின்மையும் ஒரு தலையாக உண்டாதல் திண்ணம். மேலும், அவர் கூறுவன வற்றின் சொற்சுவை பொருட் சுவைகளில் உள்ளம் ஊறிஇன்பத்திற் றிளைத்தலால் அவருடைய உயிரும் உடம்பும் இன்பவொளியால் ஊடுருவப் பெற்று ஒளிரும். அதனால் அவர் காலத்தை மறந்து, சிற்றின்ப வேட்கையற்று என்றும் இளைஞராயே திகழுவர். இது குறித்தன்றோ தெய்வத் திருவள்ளுவர்,

“நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்”

(குறள் 460)

என்றும்,

“மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கின
நலம் ஏமாப் புடைத்து”

(குறள் 458)

என்றும்,

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கினத்
தியல்ப தாகும் அறிவு”

(குறள் 452)

என்றும் அருளிச் செய்தனர். இக் கருத்துப்பற்றியே நாலடியாரில்,

“தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்இகலிலர் எஃகுடையார் தம்மிற் குழீஇநகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்தும்பர் உறைவார் பதி”

என்னும் அரிய செய்யுளும் எழுந்தது. பார்மின்! இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே, நல்லிசைப்புலமை மிக்க ஆசிரியர் பிசிராந்தையார் நீண்டகாலம் நரை திரை மூப்பின்றி வாழ்தற்குரிய அகக் காரணங்களிரண்டும் புறக்காரணங் களிரண்டும் எத்துணை நுட்பமாக எடுத்தருளிச் செய்திருக் கின்றார்!

ஆசிரியர் பிசிராந்தையார் பாடிய இச் செய்யுளினாலும், இவர் காலத்திருந்த ஏனை நல்லிசைப் புலவர்களும், நல்லிசைப் புலமை நிரம்பிய அரசர்கள் அரசியர்களும், முத்தமிழ்ப் புலமை மிக்க மாதர்களும் அருளிச்செய்த அருந்தமிழ்ப் பாடல்களினாலும், அஞ்ஞான்றிருந்த தமிழ்மக்களின் இல்லற வொழுக்கங் காதலன்பிற் பிணிப்புண்ட கணவரும் மனைவியரும் ஒருங்குகூடி நடாத்த நடைபெற்ற வரலாறும்; அத்துணைச் சிறந்த அன்பின் சேர்க்கையிற் றோன்றிய புதல்வர்களுந் தம் பெற்றோர்களைப்போல் அன்புக்கும், அருளுக்கும் அறத்திற்கும் உறையுளாய்த் திகழ்ந்த வரலாறும்; அஞ்ஞான்றை அரசர்களெல்லாருந் தாங் கல்வியில் தலைசிறந்து விளங்கித் தங்கீழ் வாழுங் குடிகளும் அதிற் புலமைமிக்குப் பொலியச் செங்கோலோச்சி வந்தமையால் இருபாலாருந் தீதின்றி நல்வழியிற் செல்லுதலையே கடைப் பிடியாய்க் கொண்டு வாழ்ந்த வரலாறும்; இவ்வாறு எல்லாருங் கல்வியறிவிலும் மேம்படு குணங்களிலும் நாளுக்கு நாட்பிறை மதிபோல் வளர்ந்து வாழ்ந்து வந்தமையால், அவருட் பொருள் வளமின்றி வறுமையால் வாடிப் பிறர்க்கு ஊழியஞ் செய்யப் புக்காரும் அவையிரண்டிலுங் குன்றுதலின்றித் தந் தலைவர் தங் கருத்தறிந்து ஒழுகிப் பயன்பட்ட வரலாறும்; அந் நாட்களிற் கல்வி யறிவு ஆராய்ச்சித் துறைகளின் ஆழங்கண்டு மனநலங் களெல்லாம் ஒருங்கே பொருந்தப்பெற்ற சான்றோர்குழாந் தலைநகரங்களிலும் அவற்றைச் சூழ்ந்த ஊர்களிலுந் தொகை தொகையாயிருந்த வரலாறுந் தெற்றென விளங்குதல் கண்டுகொள்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!