
முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்
7. பொருளற வொழுக்கம்
இனி, ஓர் ஆண்மகனும் அவன்றன் மனையாளும் அங்ஙனம் மாறாக் காதலன் பிற்பிணைந்து இல்வாழ்க்கையினை நடாத்து கின்றுழி, அதன்கட் பல்வகை யிடையூறுகளுந் துன்பங்களும் புகுந்து நிலைகலக்கினும், இருவரும் அவற்றைப் பொறுத்து, ஒருவர்மேல் ஒருவர் வருந்தாராய்ப் பண்டுபோல் அன்பில் மிகுந்து முயற்சியிற் றாழாராய்த் தங்கடமைகளை வழுவின்றி உவப்புடன் செய்குவர். வறுமையுந் துன்பமும் நீங்கி வளம்பெற்ற காலையிலும் அவர் தம் நிலையிற் றிரியாராய் எல்லார்க்கும் இனியன செய்தே ஒழுகா நிற்பர். இப் பெற்றித்தாகிய சிறந்த இல்வாழ்க்கையினை நம் பண்டைத் தமிழ்ப்புலவர் தாமே வாழ்ந்து காட்டினமை பெரிதும் பாராட்டற்பாலதாகும். இதற்குப், பழந்தமிழ்ப் புலவர் பெருந்தகையாகிய பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கை வரலாற்றினை ஈண்டொரு சிறிது எடுத்துக்காட்டுதும்.
பெருஞ்சித்திரனார் என்னும் ஆசிரியர் ஒருகாலத்தில் மிகவும் மிடிப்பட்ட வாழ்க்கையில் இருந்தார். இவரது இல்லத்தின் அடுக்களையில் உணவுப் பண்டங்களே இல்லாது போனமையால், ஒருநாள் இவர்தம் மனைவியார் அதனுள்ளே செல்லாமல் அதனை மறந்து வருந்தியொரு பக்கத்தே ஒடுங்கி யிருக்க, அவர் தஞ்சிறுபுதல்வன் நல்லுணவில்லாமையின் உதிர்ந்து சிற்சில மயிர்களே முளைத்து அழகு குறைத் தலையின் தோற்றம் வாய்ந்தவனாய், அங்ஙனம் ஒடுங்கியிருக்குந் தன் அன்னையின் பால் இல்லாத வெறுமுலையைச் சுவைத்துச் சுவைத்துப் பார்த்தும் அதிலிருந்து தினைத்தனைப் பாலும் பெறாமையிற், கூழுஞ்சோறுமாதல் பெறுவான் வேண்டி அவ் வடுக்களையுள் நுழைந்து, அகத்தே ஒன்றும் இல்லாத வெறும் பாண்டங்களை ஒவ்வொன்றாகத் திறந்துபார்க்க அங்கொன்றும் இல்லாமை கண்டு அழுதனனாக, அவன் அன்னை ‘அதோ புலி வருகிறது!’ எனச் சொல்லி அச்சுறுத்தியும், ‘உதோ அம்புலியைப் பார்! என நாப்புக் காட்டியும் அப்புதல்வன் அழுகை தீராமையின் அதற்கு உளம் நொந்தனளாய் நினது வாடிய நிலையை நின் தந்தைக்குக் காட்டு எனக் கூறி, அவனைப் பலவுஞ் சொல்லிக் கேட்ட படியாய் நனவின் கண்ணும் என் மனைவி பெருந்துயர் உழவாநின்றாள் என அவர் குமண வேந்தனை நோக்கிப் பாடிய,
இல்உணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்புல்உளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்பால்இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்கூழுஞ்சோறுங் கடைஇ ஊழின் உள்இல் வறுங்கலந் திறந்து அழக்கண்டுமறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்நொந்தனளாகி நுந்தையை உள்ளிப்பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்வினவல் ஆனாள் ஆகி நனவின் அல்லல் உழப்போள்.
என்னுஞ் செய்யுள் (புறநானூறு, 160) கன்னெஞ்சமுங்கரைய அவரது மிடிப்பட்ட வாழ்க்கை நிலையினை எடுத்துரைத்தல் காண்க.
இன்றைநாளிற் போல நூல் எழுதிப் பரப்புதற்குரிய கடிதம் அச்சுப்பொறி முதலிய கருவிகளும், போக்குவரவுக்கேற்ற புகைவண்டிகளுங் கடிதப் போக்குவரவுக்கு இடனான செய்தி நிலையங்களுங், கல்வியறிவூட்டுங் கல்லூரிகளும் பண்டை நாளில் இல்லாமையிற், பழந்தமிழ்ப் புலவோரிற் பெரும்பாலார் தாங் கற்ற பெருங் கல்வியைப் பிறர்க்குப் பயன்படுத்தவும், அதனாற் றம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் பெற்று இனிது வாழவும் இயலாதவராய், ஈகையிற் சிறந்த அரசரையுஞ் செல்வரையுந் தேடிச்சென்று அவர் வழங்கிய பொருள் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டிய இடர்ப்பாடான நிலையில் இருந்தனர்!
இத்துணை யிடர்ப்பாடான நிலையிலிருந்தும் பெருஞ் சித்திரனார் தாம் குமணவேந்தன்பாற் பெற்ற பெரும் பொருட்டிரளைத் தமக்கென்றுந் தம் மனைவி மக்கட்கென்றும் வரைந்து வைத்துக்கொண்டு கையிறுக்கமாய் இராது, அதனைத் தம் மனைவியார் கையிற்கொடுத்து,
நின்நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்பன்மாண் கற்பின் நின்கிளை முதலோர்க்குங்கடும்பின் கடும்பசி தீர யாழநின்நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்இன்னோர்க்கு என்னாது என்னெடுஞ் சூழாதுவல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்எல்லார்க்குங் கொடுமதி மனைகிழ வோயேபழந்தூங்கு முதிரத்துக் கிழவன்திருந்துவேற் குமணன் நல்கிய வளனே
(புறநானூறு 163)
என்று அவர் இசைத்த அரும்பெருஞ் செய்யுளால் அப்புலவர் பெருந்தகையின் பேரருட்டிறத்தை அறிந்து மகிழ்மின்கள்! இதன்கண், நின்பால் அன்புபூண்டு நின்னைச் சார்ந்திருக்கும் மகளிர்க்கும், நின்னால் அன்பு செய்யப்பட்ட மகளிர்க்கும், பல நற்குணங்களிலுஞ் சிறந்து மூத்துப்போன நின் முதிய மாதர்க்கும், நின் மிடிப்பட்ட சுற்றத்தாரின் கொடும்பசி நீங்குமாறு கொடுத்ததை நீ திருப்பிக் கொடுப்பாய் என எதிர்பார்த்துத் கொடுத்து உதவி செய்தார்க்கும், இன்னார்க்குக் கொடுப்போம் இன்னார்க்குக் கொடோம் எனக் கருதாமலும், என்னோடும் ஆராயாமலும், இனித் திறவிதாக வாழக்கடவேம் என எண்ணாமலும், யான் கொடுப்பதோடு கூட நீயும் எல்லார்க்குங் கொடுப்பாயாக என் மனைவியே, பல்வகைப் பழங்களுந் தொங்காநின்ற மரங்களையுடைய முதிரம் என்னும் மலைக்குத் தலைவனான திருந்துவேல் ஏந்து குமணன் எனக்கு வழங்கிய செல்வத்தை என்று அவ்வாசிரியர் தம் மனைவியார்க்கு அறிவுறுத்திய அறிவுரையானது எத்துணை மேம்பாடு வாய்ந்ததாய்த் திகழ்கின்றது ! இதனால் அப் புலவர்பெருமான் தனக்கென வாழா அருளமுது பொதிந்து பொங்குந் திருவுள்ளம் பொருந்தியவராதல் பொள்ளெனப் புலனாகின்றதன்றோ? ஆற்றொணா வறுமையிற் கிடந்து நைந்தவர் மீண்டுஞ் செல்வம் பெற்றால், அச் செல்வத்தின் அருமையுணர்ந்து அதனைத் தமக்கெனவே வரைந்து வைத்துக் கொள்வ ரல்லது, அதிற் கடுகளவுதானும் பிறர்க்குக் கொடுக்க மனம் ஒருப்படார்; என்னை ? அவர் தமது துன்பத்தையே பெரிதாக நினைப்பதன்றிப் பிறர்படுதுயரைச் சிறிதும் நினைப்ப தில்லையாகலின். ஆனால், நம் நல்லிசைப் பெரும் புலவரான பெருஞ் சித்திரனாரோ தாம் வறுமையிற்பட்ட துன்பத்தின் கொடுமையை நினைந்த போதெல்லாம், வறுமையிற்பட்ட பிறரது துன்பத்தையும் உடன்நினைந்து, அதனாற் றமது துயரினையும் மறந்தவராய்ப் பிறர்துயர்களைவதிலேயே கருத்து முனைந்து நின்றார். இவ்வாறு பிறர் துயர் நினைந்து நெக்குருகும் நெஞ்சம் வாய்ந்தாரே பெறற்கரிய கல்வியாற் பெறும்பேறு பெற்றாராவர்.
இனிப், பொறுத்தற்கரிய வறுமையிலுந் துன்பத்திலுங் கிடந்து உழன்றவழியும் புலமையின் மிக்க சான்றோர் தமது நிலைக்காகாதனவும் இழிதக்கனவுஞ் செய்யார் என்பதூஉம், ஆசிரியர் பெருஞ்சித்திரனாரது ஒழுகலாற்றால் நன்கு விளங்கா நிற்கின்றது. இவர் தமது வறுமையை நீக்கிக் கொளல்வேண்டிக் குமணவேந்தன்பாற் சென்ற காலத்து, அவன் எதனாலோ பரிசு கொடுத்தலிற் சிறிது காலந்தாழ்ப்ப, இவர் தமது உள்ளமேம்பாடு அவனுக்கு அறிவுறுத்துவாராய்ச் சிறிதும் அஞ்சாமல்,
உயர்ந்துஏந்து மருப்பிற் கொல்களிறு பெறினுந்தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென், உவந்துநீஇன்புற விடுதி யாயிற், சிறிதுகுன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண!
என்று கூறிய செய்யும் (புறநானூறு 159) எத்துணை விழுமிதாய் உயர்ந்தோங்கித் துலங்குகின்றது! பொருளுடையார்பால் அவர்தரும் பொருளை நச்சிச் சென்றவர், அவர் மகிழ்ந்திருக்குங் காலம் பார்த்து அவரது தலைவாயிலிலே அடங்கி யொடுங்கிக் காத்துக்கிடத்தலும், அவர் முன்னிலையிற் சென்றால் அவரிடத்தில்லாத குணங்களை யெடுத்து இருப்பனவாக வைத்து வரைகடந்து புகழ்ந்து பேசுதலும், அவர் ஏவியன விரைந்து பணிந்து செய்தலும் வழக்கமாய்க் காணப்படுகின்றன. அங்ஙனமிருக்க, நம் புலவர் விளக்கான பெருஞ்சித்திரனாரோ, மிகச் சிறந்த யானையையே பரிசிலாகப் பெறுவதாயிருந்தாலும், முகம் மாறியுங் காலந்தாழ்த்துங் கொடுக்கும் அதனை யான் கொள்ளேன்; அவ்வாறின்றி மகிழ்ந்து நீ விரையக் கொடுத்திடுவது குன்றிமணி அனைய சிற்றளவினதா யிருந்தாலும் அதனை யான் ஏற்பேன், என அவ்வரசனை நோக்கி மொழிந்தனர்; ஈது அவரது உள்ளப் பெருமையினை இனிது காட்டு கின்றதன்றோ?
பின்னர் ஒருகாற் பெருஞ்சித்திரனார் பொருளுதவி பெறல்வேண்டி ஈகையிற் சிறந்த வெளிமான் என்னும் அரசன்பாற் செல்ல, அவன் அந்நேரத்திற் றுயில் ஒழியா நிலையில் இருந்தமையால், தன் தம்பியை விளித்து அப்புலவர் பெருமானுக்குப் பரிசில் கொடு என ஏவ, அவன் கையிறுக்கம் உடையனாதலால், அவரது பெரும்புலமையின் அளவறிந்து நிரம்பக்கொடாது குறையப் பரிசில் கொடுப்ப, அவர் அதனை ஏற்றுக்கொள்ளாது மீண்டுங் குமண மன்னன் பால் ஏகி, அவன் கொடுத்த களிற்றியானையைக் கொணர்ந்து, வெளிமான் ஊர்க்காவல் மரத்திலே அதனைக் கட்டிவைத்து, வெளிமான் றம்பியிடம் போந்து, நீ இரப்போரைப் பாதுகாப்பாயும் அல்லை; இரப்போரைப் பாதுகாப்பவர் இல்லாமற்போகவும் இல்லை; பெருந்தன்மை வாய்ந்த இரவலர் இருத்தலுங் காண்பாயாக! அவ்விரவலர்க்கு வேண்டியவளவு ஈவோர் இருத்தலுங் காண்பாயாக! நின் ஊர்க் காவன் மரத்திலே யாம் கொணர்ந்து பிணித்த சிறந்த யானையானது யாம் பெற்ற பரிசிலாகும்; அரசிளைஞனே! யான் போவேன் என்னும் பொருள் அடக்கி,
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையுங்காண்! இனி இரவலர்க்குஈவோர் உண்மையுங்காண்! இனி நின் ஊர்க்கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்தநெடுநல் யானை எம் பரிசில்கடுமான் தோன்றல் செல்வல் யானே
என அவர் அருளிச்செய்த பாட்டின் ( புறநானூறு 162) திறனைக் காண்மின்! ஈயாது இவறிய அவ்வரசிளைஞனை ஒரு பொருட்படுத்தாது, அவன் வெட்குமாறு, ஈகையிற் சிறந்த குமண மன்னன்பாற் றாம் பெற்றுவந்த களிற்றியானையினை அவன் கண்முன்னே கொணர்ந்து காட்டி, உலகத்திற் பொருளாலுங் கல்வியாலும் மிக்கோங்கிப் புகழொடு பொலிவார் இயல்பினை அவன் அறியுமாறு துணிந்துகாட்டி, அவற்கு அறிவுதெருட்டிய பெருஞ் சித்திரனாரது உள்ள மாட்சியினை என்னென்பேம்! ஈதன்றோ நல்லிசைப் புலமை சான்ற நாவலர் திறமாகும்!
இன்னும், இவ்வாசிரியர் ஒருகால், வள்ளற்பெருந்தகையாகிய அதியமான் நெடுமான்னஞ்சியுழைப் பரிசில் பெறற் பொருட்டுச் சென்றஞான்று, அவன் ஏதுகாரணத்தினாலோ இவரைக் கண்டு உரையாடுதற்குக் காலம்பெறனாய், இவரைக் காணாமலே இவரது தகுதிக்கேற்பப் பெரும்பொருளைப் பரிசிலாக ஒருவர் வழியே விடுத்து நல்கினான். ஆனாற், பெருஞ்சித்திரனரோ தம்மைத் தன்பால் அன்புடன் வருவித்து அளவளாவிப் பரிசில் கொடாமல், தம்மைக் காணாமலே அவன் பரிசிலாக விடுத்த அப் பெரும்பொருட்டிரளை ஏலாமல் வெறுத்து, அவனுக்குப் பின்வருஞ் செய்யுளைக் குறித்துவிடுத்தார் :
குன்றும் மலையும் பலபின் ஒழியவந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு எனநின்ற என் நயந் தருளி ஈதுகொண்டுஈங்கனஞ் செல்க தானென என்னையாங் கறிந்தனனோ தாங்கருங் காவலன்?
காணாது ஈத்தஇப் பொருட்கு யான்ஒர்வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்தினையனைத் தாயினும் இனிது அவர்துணையளவு அறிந்து நல்கினர் விடினே.
(புறநானூறு 208)
ஈதன்றோ உண்மைத்துறவுள்ளம்! ஈதன்றோ அழிந்து படுஞ் செல்வப் பொருண்முன் அழிந்துபடாக் கல்விப் பொருட்சிறப்பை நாட்டுந் திறம்! தமக்கு வரும் பெரும் பொருளைக் கண்ட துணையானே தமது கல்வியையுந் தமது மானத்தையும் இழந்து, விழுமிய மக்கட்பிறவிக்கு ஆகாதன செய்யும் புலவர் எங்கே! தமது கைக்கெளிதாய்க் கிடைத்த பெரும்பொருளையும் பொருள் செயாது தமது கல்விப்பெருமையினையுந் தமது மானத்தினையுங் காத்த இப் புலவர் எங்கே!
இனி, இப் புலவர்பெருமான் பரிசில் வேண்டிச் சென்ற காலங்களி லெல்லாஞ் சிறிதும் மனங் கலையாது இவரது தகுதி யறிந்து இவர்க்குப் பெரும்பொருள் வழங்கி வந்த வெளிமான் என்னும் அரசன் இறந்து பட்டஞான்று, இவர் பெருந்துயரால் நெஞ்சம் பிளவுபட்டு நைந்து பாடிய செய்யுள் அவ்வரசனது வள்ளன்மையினையும், இவர் அவன் பால் வைத்திருந்த அன்பின் பெருக்கையும் மறவாநன்றியையும் நன்கு புலப்படுத்து கின்றதாகலின், அதனையும் ஈண்டு எடுத்துக்காட்டி மேற்செல்வாம்.
கவிசெந் தாழிக் குவியுறத் திருந்தசெவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவாவாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப்பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்குங்காடு முன்னினனே கட்கா முறுநன்!
தொடிகழி மகளிரில் தொல்கவின் வாடிப்பாடுநர் கடும்பும் பையென் றனவே!
தோடுகொள் முரசுங் கிழிந்தன கண்ணே!
ஆள்இல், வரைபோல் யானையும் மருப்பு இழந்தனவே!
வெந்திறற் கூற்றம் பெரும்பே துறப்பஎந்தை யாகுதல் அதற்படல் அறியேன்!
அந்தோ! அளியேன்! வந்தனென் மன்ற!
என்ஆ குவர்கொல் என்துன்னி யோரே!
மாரி இரவில் மரங்கவிழ் பொழுதின்ஆர்அஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு,
வரைஅளந் தறியாத் திரைஅரு நீத்தத்துஅவல மறுசுழி மறுகலின்தவலே நன்றுமன்! தகுதியும் அதுவே!
(புறநானூறு 238)
பிணம் உள் இட்டுக் கவிழ்த்துப் புதைத்த சிவந்த சாடியின் குவிந்த முதுகின்மேல்இருந்த சிவந்த செவியினவான ஆண் கழுகும் பொகுவற் பறவையும் அஞ்சுதல் இல்லனவாய், வல்லாய்க் காக்கையுடனுங் கோட்டானுடனுங் கூடிக்கொண்டு, பேய்க்கூட்டத்தொடு தாம் வேண்டிய வாறெல்லாம் நடமாடுஞ் சுடுகாட்டிற்போய்ச் சேர்ந்தனனே மறவர்க்குரிய நறவினை விரும்பும் வெளிமான்! அவனை யிழந்தமையாற் றம்முடைய கைகளிலுள்ள வளையலைக் கழித்து விட்ட அவன்றன் கற்புடை மகளிரைப்போலப் பழைய அழகு சோர்ந்து புலவோர் சுற்றமும் ஒளிமழுங்கின தொகுதியாய் உள்ள கொடைமுரசு போர் முரசுகளும் மேற்போர்த்த தோல் கிழிந்தன! செலுத்தும் பாகர் இல்லாமையால் மலைபோன்ற யானைகளுந் தம்முடைய கொம்புகளை இழந்தன! கொடிய வலிமையினையுடைய கூற்றுவன் பெரியதொரு சாக்காட்டினை உண்டுபண்ணின னேனும் என் அப்பனாகிய வெளிமான் ஆவது அதனைத் தப்பாமல் அதன் கண்ணே அகப்பட்டது ஏனோ அறிகிலேன்! ஐயோ! எளியேன் இத் துயரத்தைக் காணவோ வந்தேன்! என்னை யடைந்த என் சுற்றத்தார் இவ் வள்ளற் பெருமான் இறந்து பட்டமை அறிந்தால் என்ன துன்பம் உழப்பார்களோ! மழைகாலத்து இரவிலே ஒரு மரக்கலமானது கடலிற் கவிழ்ந்துவிட அதன்கண் இருந்த கண் இல்லாத ஊமையன் ஒருவன் பொறுத்தற்கரிய துன்பம் மிக்க நெஞ்சுடனே அக் கடலின்கண் அமிழ்ந்தாற் போல, எல்லையளந்தறியப் படாததும் அலை யில்லாததுமான துன்பவெள்ளத்தின் சுழலிற் கிடந்து சுழன்றுவருந்துதலைக் காட்டினும் இறந்துபடுதலே நல்ல தாகும்! நமக்குத் தகுதியாவதும் அதுவேயாகும்! என்பன இப் பாட்டிற் சொல்லப்பட்ட பொருளாகும்; இதன்கண் அடங்கிய கருத்துக்களின் நுட்பங்களை எடுத்துரைக்கப் புகுந்தால் இது விரியும்; என்றாலும், ஒன்றிரண்டு காட்டுதல்வேண்டும். வெளிமான் இறந்ததனாற்றமது நெஞ்சத்தே பெருகுந் துயரினைப் புலப்படுக்கின்றுழித் தம் சுற்றத்தார் அவன் இறந்தமையறிந்தால் எத்துணைப் பெருந்துயர் உழப்பரென்பதனை நினைந்து மேலும் ஆற்றாராகின்றார் பெருஞ்சித்திரனார்; ஏனென்றால், இவர் வெளிமானுழைப் பெற்ற பெரும்பொருளை யெல்லாம் வறுமைப்பட்ட தம் சுற்றத்தவர்க்கே கொடுத்து உதவிசெய்து வந்தாரென்பது, மேலெடுத்துக்காட்டிய நின் நயந்துறை நர்க்கும் என்னுஞ் செய்யுளால் நன்கு விளங்குதலால் வெளிமானது சாக்காட்டினைக் கேட்டு அச் சுற்றத்தார் ஆவி சோர்ந்து அயர்தல் திண்ணமேயாகலின், வெளிமான் தமக்குதவியாற்றியதைப் பின்னுந், தம் வழியே தம் ஏழைச் சுற்றத்திற் குதவியாற்றியதை முன்னும் வைத்து நினைந்து வருந்தும் இவ்வாசிரியரது அருள்நெஞ்சப் பான்மையினை உற்றுநோக்குங்கால் இவர் தாமுறு துயரினும் பிறருறு துயரையே பெரிதுநினையும் பெற்றியினரென்பது இனிது விளங்காநிற்கின்றது, மேலுங், கண்ணில்லாத ஊமையன் ஒருவன் தான் ஏறியிருந்த மரக்கலங் கவிழக் கடல் நீரில் அமிழ்ந்துங்காற்பட்ட துயரினை இவர் எடுத்துக் கூறுதலி லிருந்து, இவர் வெளிமான் இறந்துபட்டதனை ஆற்றாது எவ்வளவு துன்புற்றாரென்பது தெற்றெனப் புலனாகின்றது. ஊமைகளா யிருப்பவர்க்கு வாய் பேசுதல் இயலாமையுடன் காதுங் கேளாது; பிறர் பேசுவன கேளாமையாலும், பிறரொடு தாம் ஏதும் பேசுதல் கூடாமையாலும் அவர் படுந்துயர் இவ்வளவினதன்று; வாயுங் காதும் இல்லையாய் ஒழியினுங், கண்ணாவது இருந்தால், பிறர் கூறுவனவற்றை அவர் குறிகளாலாயினுங் கண்டு கொள்வர்; தாம் தெரிவிக்க வேண்டுவனவற்றையும் பிறர்க்குக் குறிக்களால் தெரிவிக்கமாட்டுவர். ஆனாற், கட்பார்வையும் ஒருங்கு இழந்த ஊமையர்களோ எவரையும் எதனையுங் காண்டலும் இயலாது, எவரொடு பேசுதலும் இயலாது, பிறர் கூறுவதைக் கேட்டலும் இயலாது, அத்தகைய ஊமர் தமக்குரியவருதவியை முழுதும் பெற்றே தமது வாழ்நாளைச் சொல்லொணாப் பெருந்துன்பத்திற் கழிக்க வேண்டியவராவர். இப் பெற்றியினரான கண்ணில் ஊமர் பகற்காலத்திலேயே கடலில் தாம் ஏறியிருந்த மரக்கலங்கவிழப் பெற்றால் அதனுள் அழுந்தாமற் றப்புதல் அரிது; ஏனெனில், அருகு மிதக்கும் ஏதேனும் ஒரு மரத்துண்டத்தைப் பற்றிக்கொள்ளுமாறு எட்ட இருந்து கூவுவார் ஒலியைத் தம் செவி கேளாமையாலும், பிறரைத் தமக்கு உதவிசெய்யுமாறு கூவியழைத்தல் தம்மால் இயலாமையாலும் மரக்கலங் கவிழ்ந்து வீழ்ந்த ஊமையர் தப்புதல் அரிதேயாம்; என்றாலும், அது கவிழ்ந்தது பகற்காலமாயிற் கிட்டவோ எட்டவோ இருப்பவர் அவரது நிலையினைக் கண்டு இரங்கி நீந்திவந்து அவரைக் கைகொடுத்தெடுத்துத் தப்புவித்தலும் ஒரோவழிக் கைகூடினுங் கூடும். ஆனால், அது கவிழ்ந்தது இரவு காலமாயின் அவ்வூமை யரின் நிலையைக் கண்டு பிறர் அருகுவந்து அவர்க்குதவி செய்தல் இயலாது; இன்னும், நிலவொளி விளங்கும் இராக்கால மாயிற் பிறர் அவர்பால் வந்து உதவி செய்தல் ஒரோவழிக் கூடினுங் கூடும்: மற்று, நிலவொளியும் மறைபட்ட மழைக் காலத் திராப்பொழுதானாலோ, கடலிற் றத்தளிக்கும் அவ்வூமையரின் நிலையை அயலவர் கண்டு இறங்கி வந்து அவர்க்குதவி புரிதல் எவ்வாற்றானும் இயலாது.
இயலாதாகவே, ஒரு சிறு துணையும் அற்றுத், தாம் தம் உயிர் இழத்தலைத் திண்ணமாய் உணர்ந்த கண்இல் ஊமர் கடற்பட்ட துன்பத்தின் மிகுதி உணருந்தோறும் உணருந்தோறும் மிகவுந் திகில் கொள்ளத்தக்கதாய் அளவிடப்படாததாயிருத்தல் உணர்வொருங்கிப் பார்ப்பார் எவர்க்கும் நன்கு விளங்கற்பாலதேயாம் இன்னும், மரக்கலம் உடைந்த தென்னாமற், கவிழ்ந்த தென்ற நுட்பத்தினை ஓருங்கால், மலைகளிற் றாக்கி அஃது உடைந்ததாயின் உடைந்த அதன் துண்டு ஒன்றனை அவ்வூமன் தானே பற்றிக்கொண்டு தப்புதலுங் கூடும்; மற்று உடையாமற் கவிழ்ந்த மரக்கலத்தைக் கொண்டோ அவ்வாறு தப்புதல் ஒரு சிறிதும் ஏலாதென்பது ஆசிரியர் அறிய வைத்தமை புலனாம். தமது வாழ்நாளெல்லாந் தம்மையுஞ் தஞ் சுற்றத்தாரையும் வைத்து நன்கு பாதுகாத்துப் போந்த வள்ளற் பெருந்தகையான வெளிமான் இறந்துபட்டமையால், தாமுந் தஞ்சுற்றமும் ஏதொரு பற்றுக்கோடுங் காணாது இறந்துபடும் நிலையில் அலமரும் அவ் வியல்வினை ஆசிரியர் பெருஞ்சித்திரனார், கண்ணில் ஊமன் மாரியிரவிற் கடற்பட்ட நிகழ்ச்சிக்கண் வைத்துப் புலப்படுத்திய நுட்பமுந் திறனும் ஆராயுந் தோறும் பெருவியப்பினைத் தருகின்றன; ஈதன்றோ நல்லிசைப் புலமை! ஈதன்றோ தம்முள்ளத்துறு காணாநிகழ்ச்சியினைப் பிறர்க்குக் காட்டுமாறு! அது நிற்க.
இனிப், பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப்புலவர் தமது தமிழ்மொழியை ஆழ்ந்து கற்றது, அதுகொண்டு பொருள் ஈட்டுதற்குமட்டும் அன்று; அரசியலில் உயர்ந்த நிலைமைகளைப் பெறுதற்கும் அன்று. உலக இயற்கை மக்களியற்கைகளில் ஆழ்ந்து மறைந்தும் மேன்மிதந்து விளங்கியும் உள்ள அரும்பொருள்கள் நுட்பங்கள் அழகுகளையெல்லாம் ஒருங்கினி தறிந்து, அவ்வாற்றால் தமது அறியாமை நீங்கி அறிவு விளங்கி மேன்மேற் பெருகும் இன்பத்திற் றிளைத்தற்கேயாம். ஆகவே, அக் காலத்தில் அரசர் முதல் ஏழையெளியவர் ஈறான எல்லாருந் தமிழறிவு நிரப்புதலிற் பெருவிழைவும் பெருமுயற்சியும் முனைந்தவராயிருந்தனர்; அக் காலத்தில் ஆண்பாலா ரயன்றிப் பெண்பாலாருந் தமிழ்ப் புலமையில் தலைசிறந்து நின்றனர்; அக் காலத்தில் இன்ன சாதியார் கற்கலாம்; இன்ன சாதியார் கற்கலாகாது என்னும் வரையறை சிறிதுமே யிருந்திலது; அக் காலத்திற் பிறப்புக்காவது குலத்திற்காவது குடிக்காவது செல்வத்திற்காவது நிலைக்காவது உயர்வு கொடாமற் கல்விக்குங் கற்றவர்க்குமே உயர்வு கொடுத்து வந்தனர்; அக்காலத்திற் கற்றவர்கள், அரசராயிருப்பினும் எளியராயிருப் பினும், உயர்குலத்தவராயினும் உயர்வில் குலத்தவராயினும், உயர்நிலை யிலிருப்பினும் உயர்வில் நிலைலிருப்பினும், அவைபற்றி உயர்த்தப்படுதலுந் தாழ்த்தப்படுதலும் இன்றி, ஏதொரு வேற்றுமையும் இன்றி எல்லாராலும் பாராட்டப்பட்டு வாழ்ந்தனர். இத் தன்மைத்தாகிய பழைய புலவர் நிலை யினை, ஆரியப்படை கடந்த மன்னர்பெருமானாகிய பாண்டியன் நெடுஞ் செழியன் பாடிய,
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்பு ஒரன்ன உடன்வயிற் றுள்ளுஞ்சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்மூத்தோன் வருக என்னாது, அவருள்அறிவுடை யோன்ஆறு அரசுஞ் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்கீழ்ப்பால் ஒருவன் கற்பின்மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
(புறநானூறு, 183)
என்னும் அருந்தமிழ்ப் பாட்டினால் நன்கறிந்து கொண்மின்கள்! இவ் விழுமிய செய்யுளை இயற்றிய பாண்டியன் நிகரில்லா வெற்றிவேந்த னாதலோடு செந்தமிழ்ப் புலமையிலும் எத்துணைச் சிறந்த திறம்பெற்றவனா யிருக்கின்றான்! இவனும் இவன் காலத்து அரசர்களுஞ் செல்வர்களு மெல்லாங் கல்வியின் மிக்க புலவரையன்றி வேறெவரையுங் துணை கொளாது தமது அரசியலையும் வாழ்க்கையும் நடாத்தின பான்மை, ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அவருள், அறிவுடையோன் ஆறு அரசன் செல்லும் என்று அவர் கிளந்தெடுத்துக் கூறியவாற்றால் விளங்குகின்ற தன்றோ? அவர்கள் சாதி யுயர்வு தாழ்வு கருதாது, கல்வியறி வினையே முழுதும் பாராட்டிக் கீழ்ச்சாதியிற் பிறந்தாரையும் மேற்சாதியாரினும் மேலாக வைத்து அவர் கூறிய உறுதிமொழிவழியே ஒழுகினரென்பதூஉம், வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கட் படுமே என்னு அப்பாண்டி வேந்தன் பகர்ந்தவாற்றால் நன்கறிகின்றனம் அல்லமோ? அஞ்ஞான்றை வேந்தர்கள் அறங்கூறுந் தமது அவைக்களத்தே, கல்வியறி வாற்றலிலும் நடுவுநிற்றலிலுந் திறப்பாடு வாய்ந்தாரையே இருத்தி முறை செய்து வந்தனர். இவ் வரும்பெருஞ் செங்கோலரசு முறை வழாப் பேராண்மை, ஓல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தன் பகைவர்மேற் படையெடுத்துச் செல்லுங்கால் வஞ்சினங்கூறிய வெஞ்சினப் பாட்டில்,
அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்திறன்இல் ஒருவனை நாட்டி முறைதிரிந்துமெலிகோல் செய்தேன் ஆகுக!
(புறநானூறு)
எனப் போந்த பகுதியில் எத்துணை உரமாக எடுத்துரைக்கப்பட்டிருக் கின்றது!
இப் பூதப்பாண்டியன் மனைவி இவனைப் போலவே தமிழ்ப் புலமையின் மிக்கவளாயிருந்தமை முன்னரே யெடுத்துக்காட்டப்பட்டது. இன்னும், ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினி, மாற்பித்தியார், மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக் கண்ணியார் என்னும் மாதர்கள் செந்தமிழ்ப் புலமையில் மிகச் சிறந்து விளங்கினமை புறநானூற்றின்கண் அவர்கள் பாடிய பாட்டுக்களால் தெற்றென விளங்காநிற்கின்றது. குறச்சாதியிற் பிறந்த இளவெயினியர் இருவருங், குயச்சாதியிற் பிறந்த வெண்ணிக்குயத்தியாரும், மறச் சாதியிற் பிறந்த காவற்பெண்டும், பாணச்சாதியிற் பிறந்த ஔவையாரும் பிறரும் நிகரற்ற நல்லிசைப்புலவராய் வயங்கினமையும், அவரெல்லாரும் ஏனை நல்லிசைப் புலவராலும் அரசர்களாலும் ஏதொரு வேறுபாடுமின்றிப் பாராட்டப்பட்டமையும் ஒருங்காற், கீழ்ச்சாதியிற் றோன்றிய பெண்பாலாருங்கூட அப் பண்டைநாளில் எவ்வளவு கல்வியிற் சிறந்தவராய், எவ்வளவு நாகரிகத்தின் மிக்கவராய் விளங்கின ரென்பது புலனாகின்றது! இது கொண்டு, அஞ்ஞான்றைக் தமிழ்மக்கள் எவ்வளவு அறிவும் எவ்வளவு அன்பும் எவ்வளவு அருளும் எவ்வளவு அறமுங் கனிந்த பயன்மிகு நாகரிகவாழ்க்கை வாய்ந்தவராய்ப் பொலிந்தனரென்பதும் புலனாகின்றது! கல்வியறிவிற்சிறந்த பெண்மக்கள் உறையும் நாடு கடவுளர் உறையும் வான்நாடு ஆகுமேயல்லால், அவ்வறிவில்லா மாக்கள் திரியும் மண்ணாடு ஆகாதென்று தெளிமின்கள்! பண்டைநாளில் ஆண்பாலாரேயன்றிப் பெண் பாலாருங் கல்விப்புலமையிற் சிறந்து இத் தமிழகத்தில் விளங்கினாற்போல வேறெந்த நாட்டகத்தும் விளங்கியதில்லை. அஞ்ஞான்று அங்ஙனங் தமிழ்ப்புலமையிற் சிறந்து திகழ்ந்த ஆண்பெண்பாலார் ஒருவர் இருவர் சிலர் அல்லர், எண்ணிறந்ததோர் ஆவர்; இவ்வுண்மை, பழைய தமிழ் நூல்களைச் சிறிதாராய் வாரும் எளிதில் அறிவர்.
இனிக் குடிமக்களேயன்றி, அக்காலத்திருந்த தமிழ் மன்னர்கள் அத்துணைப்பேருந் தமிழ்க்கல்வியறிவிற் சிறந்த புலவோராய் மிளிர்ந்தமை மேலெடுத்துக் காட்டிய பூதப் பாண்டியன் பாட்டாலும் பாண்டியன் நெடுஞ்செழியன் பாட்டாலும் நன்கு விளங்கற்பாலதேயாம். இன்னும் அதனை யறிதல்வேண்டின், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் பகைவர்மேல் சினந்துபாடிய வஞ்சினப்பாட்டை ஈண்டெடுத்துக்காட்டி விளக்கவே அது விளங்கும்; அது வருமாறு:
நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்;
இளையன் இவனென உளையக் கூறிப்படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்நெடுநல் யானையுந் தேரும் மாவும்படையமை மறவரும் உடையம் யாம் என்றுஉறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரைஅருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோடுஒருங்ககப் படேஎனாயிற், பொருந்தியஎன்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாதுகொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்குடிபழி தூற்றுங் கோலேன் ஆகுக!
ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விமாங்குடி மருதன் தலைவனாகஉலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்புலவர் பாடாது வரைக என் நிலவரை!
புரப்போர் புன்கண் கூரஇரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே!
(புறநானூறு. 72)
என்னும் இச் சிறந்த பாட்டைப் பாடி வஞ்சினங் கூறுகின்றுழி, இம் மன்னர்பிரான் ஆண்டில் இளைஞனாயிருந்தன னென்பது இதன் இரண்டாம் அடியினாற் புலனாகின்றது. இவ்வரசிளை ஞனை இளைஞனென்று இகழ்ந்தும், இவன் அரசாண்ட நாட்டைக் குறைத்துப் பேசியும் அஞ்ஞான்றிருந்த தமிழ் வேந்தர்கள் சிலர் இவனுக்குப் பெருஞ்சீற்றத்தை விளைத் தமையால், இவன் அவர்களோடு போர்புரிந்து வெல்வது குறித்து இதனை வெகுண்டு பாடினன். இவன் தன் அரசின்கீழ் வாழும் குடிமக்களின் நலத்தையும், அவர் தமது செங்கோன்மையை நெஞ்சாரப் புகழ்ந்து பேசுதலையுமே முதன்மையாய் விரும்பினவ னென்பது என் நிழல் வாழ்நர் சென்னிழற் காணாது என்பது முதலாக முதற்சொல்லிய மூன்றடிகளால் தெற்றென விளங்காநிற்கின்றது. அதனை யடுத்து இவன் இரண்டாவதாகக் கூறிய வஞ்சினவுரையால், இவன் செந்தமிழ்ப்புலவரது சேர்க்கையைப் பெரிது விழைந்தவனென்பதும், அஞ்ஞான்று தன் அவைக் களத்திருந்த புலவருள்ளெல்லாம் மதுரைக்காஞ்சி என்னும் முதுமொழி நூல் இயற்றிய மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப் பெரும்புலவரையே தலைவராக வைத்துப் பாராட்டின னென்பதும் புலனாதல் காண்க. இனி, அதன்பின் மூன்றாவதாக இவன் எடுத்துரைத்த ஆணை மொழியால், வறுமையால் வாடிவந்த இரவலர் துன்பத்தைக் கண்டு இவன் சிறிதும் மனம்பொறாது அவரது வறுமைதீர நிறையக் கொடுக்கும் வள்ளற்பெருந்தகையாதலுந் தெள்ளிதிற் பெறப்படு கின்றதன்றோ! இவன் பகர்ந்த இம் மூன்று வஞ்சின மொழி களாலும், இவன் தான் மேற்கொண்ட அரசியற் கடமையினை நன்குணர்ந்த செங்கோன் மன்னனாதலொடு, மக்களின் புறநலனைத் தருஞ் செங்கோலரசின் திறம்போலவே அவர் தம் அகநலனாகிய அறிவுவிளக்கத்தைத் தரும் புலவர் கூட்டத்தையும், இவ்வகப்புற நலன்களால் விளையற்பாலவாம் ஈகையறங்களையும் இவன் வேண்டியுஞ் செய்தும் நின்றமை நன்கு புலனாகின்றதன்றோ! இம்மன்னர் பெருமான் தான் தமிழ்க்கலைவல்ல நல்லிசைப்புலவனாய் வயங்கியதொடு, தன்போற் சிறந்த தமிழ்வல்ல சான்றோரையுந் தன் அவைக்களத்து ஒருங்கு இருத்தி, அவர் தம்மால் தனித் தமிழ்மொழியை வளம்படுத்துவந்த அரும்பெருஞ்செயலுந் தமிழ்மக்களெல்லாராலும் என்றும் நினைந்து நன்றி பாராட்டுதற் குரித்தாகும்.
இனித், தமிழ்வல்ல சான்றோரைப் பழைய தமிழ் வேந்தர்களிற் பலர் தம்மோடொத்த நிலையில் வைத்து அரும்பெருநட்புச் செய்தும், மற்றும் பலர் அவரைத் தம்மினும் மேலான நிலையில் வைத்து அவரைத் தெய்வமாக வழிபட்டுப் போற்றியும் வந்த வரலாறுகளும் பல; அவற்றுள் ஒன்றிரண்டு ஈண்டெடுத்துக் காட்டுவாம் நல்லிசைப் புலவர்களான பிசிராந்தையார்க்கும் பொத்தியார்க்கும் ஆருயிர் நண்பனாய் விளங்கிய கோப்பெருஞ்சோழன் என்னும் வேந்தர்பெருமான் புகழ் பண்டைத் தமிழிலக்கிய மாப்பெரும் பொருப்பின் குவட்டின்மிசை மங்கா – மாமணியாய்த் தங்கி மாப்பேரொளி வீசாநிற்கின்றது இவன், பாட்டும் ஆட்டமும் வல்லார்க்கு நிரம்பக் கொடுக்கும் வள்ளன்மையின் மிக்கோனென்பதும், அறநெஞ்சம் உடையாராற் புகழப்பட்ட செங்கோலரசு செலுத்துபவனென்பதும், அறிவுமிக்க பெரியாராற் புகழ்ந்து பேசப்படும் அன்பிற் சிறந்த அண்ணலா மென்பதுந், தனக்குரிய மகளிர் பால் மென்றன்மை வாய்ந்தவனாய் ஒழுகுபவ னென்பதுந், தன்னொடு மாறுபட்ட வலியுடையார்க்குத் தானும் வலிது செய்யுந் தறுகணாண்மை யுடையனென்பதுங், குற்றமற்ற கேள்வியினையுடைய அந்தணர்க்குப் புகலிட மாவனென்பதும், நல்லிசைப் புலவரான பொத்தியார்,
பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே,
ஆடுநர்க் கீத்த பேரன் பின்னே,
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே,
திறவோர் புகழ்ந்த திண்ணன் பின்னே,
மகளிர் சாயல், மைந்தர்க்கு மைந்து,
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
(புறநானூறு 221)
என அவன் நடுகல்லாய் நிற்றல்கண்டு உள்ளந்தேம்பிப் பாடிய பாவால் இனிதறியக்கிடக்கின்றன.
இத்துணைச் சிறந்த இச் சோழமன்னன் தன்புதல்வர் இருவர் தன்னைப் பகைத்துத் தன்னொடு பொரவந்தமையால், இனித் தான் உயிரோடிருத்தலாகாதென இம்மை வாழ்வை வெறுத்துத் தன் அரசுதுறந்து வடநாட்டின்கட் சென்றோ அல்லது வடக்கு நோக்கியிருந்தோ தன்னுடம்பை மெலிவித்து உயிர்நீத்தலை மேற்கொண்டான். அஃது அப்போது அவன் பாடிய செய்குவங் கொல்லோ நல்வினையெனவே என்னும் அரிய செய்யுளில்,
மாறிப் பிறவா ராயினும் இமயத்துக்கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே
(புறநானூறு 214)
எனப்போந்த அடிகளால் அறியப்படும் இவ்வாறு அம் மன்னன் வடக்கிருந்தவழித், தான் அங்ஙனம் உயிர் நீத்தற்கு வடக்கிருத்தலைக் கேட்ட துணையானே தன் ஆருயிர் நண்பரான பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான், தன்னைப் பிரிந்திருக்க லாற்றாது தன்பால் வந்து தாமுந் தம் இன்னுயிர் நீப்பரென அவன் கூற, அவன்பாலிருந்த சான்றோர், அவர்வாரார் என எதிர்மறுத்துரைப்ப, அதற்கு அச் சோழ வேந்தன்,
தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனேசெல்வக் காலை நிற்பினும்அல்லற் காலை நில்லலன் மன்னே
(புறநானூறு. 215)
என்று தனக்கும் அவர்க்குமுள்ள பிரியாநட்பின் கெழுதகைமை யினை அவர் அறிய எடுத்தோதினன். அவன் ஓதியவாறே பின்னர்ச் சிலநாட்களிற் பிசிராந்தையார் தம்மாருயிர் நண்பனான கோப்பெருஞ்சோழன் தன்னின்னுயிர் நீத்தற்கு வடக்கிருந்தானென்பது கேள்வியுற்று அவன்பாற் போந்து அவனொடு ஒருங்குயிர் நீத்தனர். இவ் வரும்பெருங்கேண்மை நிகழ்ச்சியை நேரிருந்து கண்டு வியந்து ஆற்றராகிய பொத்தியார்,
நினைக்குங் காலை மருட்கை யுடைத்தேஎனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்!
அதனினும் மருட்கை யுடைத்தே பிறன் நாட்டுத்தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றிஇசைமர பாக நட்புக்கந் தாகஇளையதோர் காலை ஈங்கு வருதல்!
வருவன் என்ற கோனது பெருமையும்அதுபழு தின்றி வந்தவன் அறிவும்வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே!
அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையுஞ்சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசைஅன்னோனை இழந்த இவ்வுலகம்என்னா வதுகொல்! அளியது தானே!
(புறநானுறு 217)
என நெஞ்சம் நெகிழ்ந்துரைத்த செய்யுளால் அதன்உண்மை ஐயுறுதலின்றித் துணியப்படும். இவ்வாற்றாற், கோப்பெருஞ் சோழவேந்தன் தன் ஆருயிரேயெனப் பிசிராந்தையாரைக் கேண்மை கொண்டிருந்தமையும் அவரும். அவனொடு பெருநட்புச் செய்திருந்தமையுந் தமிழ்மக்களாவா ரனைவருந் தம்முள்ளத்திருத்தி நினைந்து நினைந்து மகிழற்பாலார்.
இன்னும் பிசிராந்தையாரொடு மட்டுமேயன்றிப், பொத்தியாரோடுங் கோப்பெருஞ்சோழன் ஆருயிர்க் கேண்மை கொண்டொழுகினமை,
‘கோழியோனே கோப்பெருஞ் சோழன்பொத்தில் நண்பிற் பொத்தியொடு கெழீஇவாயார் பெருநகை வைகலும் நக்கே’
(புறநானூறு 212)
என்னும் பிசிராந்தையார் செய்யுளால் நன்கு தெளியப்படு
கின்றது, உயிர்நீத்தற்கு வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனைப் பிரியகில்லாது பொத்தியாரும் ஒருங்குயிர் நீத்தற்கு அவன்பாற் போந்தனரென்பதூஉம், அப்போது பொத்தியார் மனைவி கருக்கொண் டிருந்தமையால் அதனை யறிந்த அவ் வேந்தன் “மகன் பிறந்தபின் வாரும்!” என்று அவரைப் போக்கி உயிர்நீத்துவிட, அவருந் தமக்கு மகன் பிறந்த பின் மீண்டுவந்து தாமும் அவன்பக்கத்தே கிடந்து உயிர்விடுதல் குறித்து இடம் வேண்டினரென்பதூஉம் அவர் அப்போது சொல்லிய,
“அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனிநிழலினும் போகாநின் வெய்யோள் பயந்தபுகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாஎனஎன்இவண் ஒழித்த அன்பி லாள!
எண்ணா திருக்குவை அல்லை!
என்இடம் யாது? மற்றிசைவெய் யோயே!”
(புறநானூறு222)
என்னும் உருக்கமான செய்யுளால் உணரப் பெறுகின்றேம்.
இவ்வாறெல்லாந் தமிழ்ப்பெரும் புலவர்க்கு ஆருயிர் நண்பனாயுந், தானும் நல்லிசைப் புலமைமிக்க நாவலனாயும் விளங்கிய இக் கோப்பெருஞ் சோழவேந்தன், தன்னொடு மாறுபட்டுத் தன்மேற் போர்க்குவந்த தன்புதல்வர் இருவர் மேற் சீற்றங்கொண்டு தானும் அவர்மேற் போர்புரிதற்கு எழுந்தன னென்னுஞ் செய்தியை உணருங்கால் எவர்க்குத் தான் வியப்புண்டாகாது! தந்தை செய்த நன்றியை மறந்து அவனொடு மாறுகொண்டு நிற்கும் புதல்வர்கள் இக் காலத்துத் தான் உளர் என்று நினைக்கும் நம்மனோர், அப் பழைய நல்ல காலத்தும் அத்தகைய நன்றிகெட்ட புதல்வர்கள் இருந்தன ரென்பதை அறியுங்கால் வியப்படையாமல் இருத்தல் ஏலுமோ! தீய, நன்றிகெட்ட புதல்வர்களும் உடன் பிறப்பினரும் எக்காலத்தும் எவ்விடத்தும் உளர். ஈகையிற் சிறந்த அருள் உள்ளம் வாய்ந்த வள்ளற்பெருமானுங், கல்வியறிவின்மிக்க சான்றோரைத் தன் இன்னுயிரெனுங், உண்மையாய்க்கொண்டு ஒழுகினவனும், நல்வினை செய்தலையே தன் வாழ்நாள் முழுதுங் கடப்பாடாகக் கொண்டவனுந், தானுந் தமிழ்க்கல்வியறிவில் முதிர்ந்து நிற்வனும் ஆன இச் சோழவேந்தனைத் தமக்குத் தந்தையாகப் பெற்ற புதல்வர் நல்லறிவும் உள்ளன்பும் நல்வினையும் வாய்ந்த வராயிருந்தால், தாம் பெற்ற அப் பெறலரும் பேற்றின் அருமை பெருமையினை யுணர்ந்து, தம் தந்தைபால் எத்துணையன்பும் எத்துணை நன்றியும் உடையராய் நடந்திருத்தல் வேண்டும்! ஆனால், அப் புதல்வர் செய்த தீவினையோ, அன்றி அவர்க்குள்ள இறுமாப்போ, அன்றி அவர் தஞ் சீர்திருந்தா இயற்கையோ அவரை அவ் விழுமிய தந்தைபால் அன்பும் நன்றியும் இல்லாமற்செய்ததோடு, அவர் அவனொடு கலாய்த்து அவனைத் தாக்குதற்கும் அவரை ஏவியது! இப் புதல்வர் செயல் கொடிது! கொடிது! இவரது கொடிய செயலை நினைக்குங்கால் நல்லார் எவர்க்குத்தாம் நெஞ்சம் இரண்டாய்ப் பிளவாது! இத்துணைத் தீயராய் இருந்தமையாற்றான், ஆன்றமைந்தடங்கிய அறவுள்ளம் வாய்ந்தவனான இம் மன்னர்பிரான், அவ் விருவரையுந் தன் புதல்வரென்றும் பாராது செயிர்த்து அவர்மேற் போர்செய்தற் கெழுந்தனன். இங்ஙனம் புதல்வருந் தந்தையும் ஒருவரையொருவர் பகைத்துப் போர்புரிதற்கெழுந்த எழுச்சி நடைபெற்றிருந்தால், அவ்விரு திறத்தாரில் ஒருவர் ஒருவரை அழித்து மகார் தந்தையை யழித்த அல்லது தந்தை மகாரையழித்த மாயா வசையினை இத் தமிழுலகில் வழிவழி நிறுத்தியிருப்பார்! ஆனால், அவ் வசை யுண்டாகாவாறு ஆண்டும் ஒரு நல்லிசைப்புலவர் அவ் விருதிறத்தார்க்கும் இடையே புகுந்து அக் கொடும்போர் நிகழவொட்டாமற் றடுத்து, வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழற்கு வழிவழி மங்காஇசையே பொங்கிப் பெருகுமாறு செய்தனர். செயற்கரிய செய்த அப் புலவர் பெருந்தகைக்கு, இத் தமிழுலகம் யாது கைம்மாறு செய்யவல்லது! அங்ஙனம் அரியது ஆற்றிய புலவர் பெருமான் புல்லாற்றூர் எயிற்றியனார் எனப்படுவர். தன் மக்கள் இருவர் தன்மேற் போர்க்கு வந்தமையறிந்து சீற்றங்கொண்ட கோப்பெருஞ்சோழன் தானும் அவர்மேற் போர்செய்தற்கு எழுந்தமை யறிந்தவளவானே, இந் நல்லிசைப்புலவர் உடனே அவ்வரசன்பாற் சென்று கீழ்க்குறித்த செய்யுளை நுவன்று, அவனது சினத்தை யாற்றி, அக்கொடும்போர் நிகழாவாறு செய்து, அமைதியையுண்டாக்கித், தமிழுலகிற்கு ஒருபெரும் புகழினை நிலைநிறுத்தினார். அவர் அப்போது கோப்பெருஞ் சோழனை நோக்கி நுவன்ற செய்யுள் வருமாறு;
“மண்டமர் அட்ட மதனுடை நோன்றாள்வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை யுலகத்துநின்தலை வந்த இருவரை நினைப்பின்தொன்றுஉறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்;
நினையுங் காலை நீயும்மற் றவர்க்குஅனையை அல்லை அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி மற்றுநீஉயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்ஒழித்த தாயம் அவர்க்குஉரித் தன்றே!
அதனால், அன்ன தாதலும் அறிவோய்! நன்றும்இன்னுங் கேண்மதி இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்தஎண்ணில் காட்சி இளையோர் தோற்பின்,
நின்பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே?
அமர்வெஞ் செல்வம் நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவையே!
அதனால், ஒழிகதி லத்தை நின்மறனே வல்விரைந்துஎழுமதி! வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்குஏம மாகும்நின் தாள்நிழல் மயங்காதுசெய்தல் வேண்டுமால் நன்றே; வானோர்அரும்பெறல் உலகத்து ஆன்றவர்விதுப்புறு விருப்பொடு விருந்துஎதிர் கொளற்கே”
(புறநானூறு 213)
இவ் வருந்தமிழ்ப் பாவில் எத்துணை நயமாக உண்மையை எடுத்துச்சொல்லி இந்நல்லிசைப்புலவர் அம் மன்னன் கொண்ட சீற்றத்தைத் தணிக்கின்றார் காண்மின்! நின்மேற் போர்க்கு வந்தார் இருவரையும் யாரென நினைத்துப் பார்ப்பின் அவர் நினக்குப் பகைவராய் உள்ளவர் அல்லார்; நீயும் அங்ஙனமே அவர்க்குப் பகைவனாய் உள்ளவன் அல்லை; நீ இங்கே நின் அழியா நற்பெரும்புகழை நிலை நிறுத்தி வானுலகுசெல்லும் ஞான்று, நீ விட்டுச்செல்லும் அரசுரிமை அவர்க்கன்றோ உரியதாகும்? இது நீ அறிந்ததுதானே. இன்னும், நின்மேற் போர்க்கெழுந்த இளைஞர் தோற்றே போனாரானாலும், நின் செல்வத்தினை அவர்க்கல்லாமல் வேறியார்க்கு விடுவை? நீ அவரொடு பொருது தோற்றனை யானால், நின் பகைவர் மகிழ உலகில் வசையினையன்றோ நிறுத்துவை! அதனால், அவரொடு பொருதல் ஒழிக! வறுமையால் வருந்தி வந்தார்க்கு நின் அடிநிழல் அது தீர்த்துத் தண்ணருள் வழங்குமாறு செய்க! என்று அப் புலவர் பெருந்தகை அஞ்சாதெடுத்துரைத்த நயமிகு மெய்யுரை எத்துணைச் சீற்றங் கொண்டிருந்தாலும் அது தணித்து வேந்தர்க்கு அறிவு தெருட்டுந் திறனுடைத்தாய்த் திகழ்தல் எவர்க்கும் விளங்காற்பாலதேயாம். இவ்வறிவுரை கேட்ட பின்னரே கோப்பெருஞ்சோழன் தன்மக்கள் இருவர்மேலும் போர் செய்தலை யொழிந்து தன் அரசியலையும் அவர்க்கே விட்டுத் துறவு பூண்டானாதல் வேண்டுமென்பது உய்த்துணரப் படும். இங்ஙனம் அறிவு தெருட்டி அவ் வேந்தர் பெருமானுக்கு எஞ்சாப் பெரும்புகழை என்றும் நிலவவைத்த எயிற்றியனாரது புலமையன்றோ உண்மை நல்லிசைப் புலமையாகும்! இவரது உண்மையுரையைக் கேட்டு உளந்திருந்திய அரசன் அல்லனோ உண்மையரசனாவன்! தமிழ்ப் புலமை நிறைந்த இச் சான்றோரைத் தன்னிலும் மிகமேலாக நன்குமதித்து அவரது சொல்வழி நடந்து தனது மெய்ப்புகழை நிலைநிறுத்திய கோப்பெருஞ்சோழனை யொத்த தமிழ்வேந்தர் இஞ்ஞான்றிருந் தனராயின், இத்தமிழ்நாடுந் தமிழ்மொழியும் எத்துணை மேலான நிலையில் திகழ்ந்திருக்கும்! அந் நல்வினை இப்போதிவற்றிற் கில்லையே!
இன்னுங், கோப்பெருஞ்சோழனே யன்றி, அஞ்ஞான்றிருந்த வேறுபல் தமிழ்வேந்தர்களுந் தமிழ்வல்ல நல்லிசைப் புலவர்களைத் தம்மினும் மேலாகப் பாராட்டி, அவர் கூறிய அறிவுரை கேட்டுத், தம்முட் செற்றம் ஒழிந்து அன்பிற்கெழுமி இனிது வாழ்ந்த உண்மை வரலாறுகள் மேலும் எத்தணையோ பல உள. அவற்றுள் இன்னும் இரண்டு ஈண்டு எடுத்துக் காட்டுதும். போராண்மையிற் றனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லானாய் அடலேறெனநின்ற சோழன் நலங்கிள்ளி என்னும் மன்னர் பெருமான் ஒருகால் தன் தாயத்தானாகிய நெடுங்கிள்ளி யென்பவன்மேற் சினங்கொண்டு, அவன் அரசாண்ட ஆவூரை முற்றுகை செய்தனன். அங்ஙனம் அவன் முற்றுகை செய்தவழி, நெடுங்கிள்ளி அரசன் அவனை யெதிர்ந்து அவனொடு போர் புரியாமல் தனது கோட்டை வாயிற் கதவினை அடைப்பித்துக் கொண்டு, தன் அரண்மனை யினுள்ளே வாளா இருந்தனன். அஞ்ஞான்று அவரிருவர்க்கும் நண்பராயிருந்த கோவூர் கிழார் என்னும் நல்லிசைப்புலவர் அடைத்திருந்த நெடுங்கிள்ளி யுழைச்சென்று,
“இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅதிருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றிநிலமிசைப் புரளுங் கைய, வெய்துயிர்த்துஅலமரல் யானை உருமென முழங்கவும்,
பால்இல் குழவி அலறவும், மகளிர்பூஇல் வறுந்தலை முடிப்பவும், நீர்இல்வினைபுனை நல்இல் இனைகூஉக் கேட்பவும்இன்னாது அம்ம; ஈங்கு இனிது இருத்தல்;
துன்அருந் துப்பின் வயமான் தோன்றல்!
அறவை யாயின் நினதெனத் திறத்தல்!
மறவை யாயிற் போரொடு திறத்தல்!
அறவையும் மறவையும் அல்லை யாகத்திறவாது அடைத்த திண்நிலைக் கதவின்நீண்மதில் ஒருசிறை ஒடுங்குதல்நாணுத்தகவு உடைத்துஇது காணும் காலே.”
(புறநானூறு 44)
என்னும் அரிய அறவுரைச் செய்யுளை அஞ்சாது நுவன்று அறம் மறம் என்னும் இருவகை நிலையில் ஒன்றை அவ்வரசன் மேற்கொள்ளுமாறு அறிவுதெருட்டினமை பெரிதும் வியக்கற் பாலதா யிருக்கின்றதன்றோ? ‘போர்செய்தலாற் பல்லுயிர்க்கும் வரும் ஏதம் அஞ்சி அதனை ஒழிதல் வேண்டும் அறவுள்ளம் உடையையாயின், “இந்நகரும் என்னரசும் நின்னுடையனவே” என இனிது கூறிப் பகைத்த மன்னனோடு உறவுகொள்ளல் வேண்டும்; அஃது இசையாதேல் ஆண்மையுள்ளம் உடையை யாய்ப் பகைத்து எதிர்த்தவன்மேற் போர்க்கு எழுதல் வேண்டும்; இரண்டிலொன்றுஞ் செய்யாது, நின் கோட்டையின் அகத்துள்ள குடிமக்களும் பிறவுயிர்களும் அளவிலாத் துன்பம் எய்த, நீ கோட்டைவாயிற் கதவை யடைத்துக் கொண்டு நின் அரண்மனையினுள்ளே இனிது வைகுதல் நாணத்தக்கதாகும்’ என்று இப் புலவர் பெருமான் அவ் வரசனை இடித்துக்கூறிய அஞ்சா உள்ள உரம் நினையுந்தோறும் பெரியதோர் இறும் பூதினைப் பயவாநிற்கின்றது! பகைத்து நின்றவர் எளிய மக்கள் அல்லர்; சோழவேந்தர் குடியிற் பிறந்த சோழ மன்னராவர், இவர் தமக்கு இடையே சென்று அஞ்சியிருந்த மன்னற்கு இடிப்பான அறிவுரை பகர எவரேனும் மனந்துணிவரோ! அஞ்ஞான்றை அரசர்கள், செந்தமிழ்ப் புலமை சான்ற பெரியாரைத் தம்மினும் மேலாக நன்குமதித்து அவர்தம் ஆணைவழி யொழுகி வந்தமையானும், அஞ்ஞான்றை நல்லிசைப் புலவர்களும் அவர் அங்ஙனந் தமக்கடங்கி யொழுகுமாறு ஆன்றமைந்த அறவுள்ளமும் பொய்யாநாவும் வாய்ந்தாராய் நன்றுசெய்தலிலேயே கருத்தொருங்கி நின்றமையானும், அங்ஙனம் அரசரும் புலவரும் அரியதொரு நட்பின் கெழுதகைமையின் வழாது திகழலாயினர் என்க.
பின்னும் ஒருகாற் சோழன் நலங்கிள்ளிவேந்தன் தன் தாயத்தானான நெடுங்கிள்ளியின் மற்றொரு நகராகிய உறையூரின் மேற் படையெடுத்துச் சென்று அதனை முற்றுகை செய்ய, நெடுங்கிள்ளி முன்போலவே அவன்மேல் எதிர்ந்து செல்லாது, தனது கோட்டைவாயிற் கதவை அடைத்துக்கொண்டு உள்ளிருந்தனன். அதுகண்டு அவ்விருவர்க்கும் நண்பரான ஆசிரியர் கோவூர் கிழார், அவரிருவர்க்குள்ளும் உண்டான பகைமை யொழித்து, அவரை உறவு கொள்ளச் செய்யுங் கருத்தினராய் அவ்விருவரையும் நோக்கிப் பிற்குறித்த பாவினைப் பகர்வாராயினர்:
“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்,
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே! நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே!
ஒருவீர் தோற்பினுந் தோற்பது உங்குடியே!
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே! அதனாற்குடிப்பொருள் அன்று நுஞ்செய்தி; கொடித்தேர்நும்மோர் அன்ன வேந்தர்க்குமெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே.”
(புறநானூறு 45)
‘சோழர் குடியிற் பிறந்தவராகிய நீவிர் இருவீரும் ஆத்தி
மாலையைச் சூடுவீராவீர்! நின்னைப் பகைத்து வந்தவன் பனந்தோடு புனையுஞ் சேரனும் அல்லன், வேப்ப
மாலையணியும் பாண்டியனும் அல்லன்; நும்முள் ஒருவீர் தோற்றாமலும் அது நுமது குடிக்கு வடுவேயாகும்; இருவீரும் வெற்றி யடைதலும் இயலாது; ஆதலால் நீவிர் ஒருவரையொருவர் எதிர்த்தல் நுமது குடிக்குத் தக்கதன்று; இவ்வாறு நீவிர் எதிர்த்தல் நும் பகையரசர்க்குப் பெரியதொரு மகிழ்ச்சியினைப் பயப்பதாகும்’ என்று மிக நயமாக அறிவுரைகூறி இப் புலவர் பெருமான் அவ் விருவரையும் நட்புக்கொள்ளச் செய்தமை நினையுந்தோறும் எவ்வளவு மகிழ்ச்சியினை நமக்குத் தருகின்றது!
இன்னும், இப் புலவர் பெருந்தகையார் செய்த பேரருட் செயல் ஒன்று அருளொழுக்கம் உடையாரெல்லாராலும் எஞ்ஞான்றும் நெஞ்சம் நெக்குருகி நினைந்து வியந்து பாராட்டற்பால தொன்றாயிருத்தலின், அதனையும் இங்கே எடுத்துக்காட்டுதும். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான் தனக்குப் பகைவனான மலயமான் என்னும் அரசன் பயந்த சிறுபிள்ளைகளைக் கொணர்ந்து, அவரைத் தனது யானைக்காலின்கீழ் இட்டுக் கொல்லத் துவங்கியவழி, அதனைக் கண்ட நல்லிசைப் புலவரான கோவூர் கிழார் பெரிதும் மனங்கலங்கி, அவ்வரசனை நோக்கி,
“நீயே புறவின் அல்லல் அன்றியும், பிறவும்,
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!
இவரே, புலன்உழுது உண்மார் புன்கண் அஞ்சித்தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்;
புன்தலைச் சிறாஅர்; மன்றுமருண்டு நோக்கிவிருந்திற் புன்கணோ உடையர்;
கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே!”
(புறநானூறு 46)
என்னும் மிக உருக்கமான செய்யுளைச் சொல்லி, அச் சிறார் அவனால் அங்ஙனங் கொல்லப்படாமற் றப்பும்படி செய்தனர். இவ் விழுமிய செய்யுளில் ஆசிரியர், அம் மன்னன் அச் சிறார் மேற்கொண்ட சினத்தை ஆற்றி, அவன் அவர்மேல் அருளுடையனாகுமாறு செய்யுந்திறம் பெரிது! பெரிது! ஒரு வேட்டுவனால் துரத்தப்பட்டுவந்த ஒரு புறாவினைப் பாதுகாத்தல் வேண்டி, அப் புறாவின் எடைக்கு ஈடாகத் தன் உடம்பின் தசையை அறுத்து அவ்வேட்டுவற்குக் கொடுத்த அருட்செல்வனான பழைய ஒரு சோழ மன்னன் வழியிற் பிறந்தவன் நீ’ என்று அவனை நம் புலவர் பெருமான் முன்னிலைப்படுத்து, அவனது நினைவைத் தன்முகப்படுத்தலி னாலேயே சிற்றுயிர்கள் மாட்டும் அத்துணை அருள் நெஞ்சம் வாய்ந்தார் மரபிற்றோன்றிய கிள்ளிவளவன் ஏனைப்பிறவியிற் சிறந்த மக்கட் பிறவியில் வந்தார்மாட்டு இன்னும் எத்துணை மிகுந்த அருள்நெஞ்சம் வாய்ந்தானாய் ஒழுகல் வேண்டுமென்பது குறிப்பித்தாராயிற்று; இன்னும், மக்கட் பிறவியுள்ளுஞ் சிறந்த மன்னர் குடியிற் றோன்றித், தாம் உண்ணும் உணவையும் வறுமைப்பட்ட புலவர்க்கும் பகுத்துக் கொடுத்து அவரை யோம்பும் மலையாமானாட்டு அரசர் குடியின் வழித்தோன்றல்கள் இச் சிறுவர் என்று அதன்பிற் கூறியவாற்றால், அத்துணை ஈகையறங்களிற் சிறந்த அரசர் வழிப்பிறந்த இவ்வருட் குழவிகளை யானைக் காலின் கீழ் இட்டுத் தேய்ப்பித்தல் அறமாகுமோ என்பது குறிப்பித்தாராயிற்று; அதுவேயுமன்றி, இச்சிறார் யானையைக் கண்டு அஞ்சியழும் இளங் குழவிப் பருவந் தாண்டி, அதனைக் கண்டு வியந்துநோக்கும் பிள்ளைமைப்பருவத்தினர் என்றமையாற், சிறிது சிறிது அறிவு கூடப் பெற்றுவரும் இம் மக்களைக் கண்டு கன்னெஞ்சம் உடையாரும் கரைந்துருகுவரன்றி அவரைக் கொலைசெய்தற்குக் கருதாரென்பது குறிப்பித்தாராயிற்று; அதன்மேலுந், தாம் பழகியறியாத புதியதோரிடத்திற் றாம் வந்திருத்தல் கண்டு இச்சிறுவர் வெருண்டு நோக்குகின்றனர் என்றமையால், இவ் விளம்பிள்ளைகள் அஞ்சி விழித்தலைப் பார்த்து எத்தகைய வரும் உளம் இரங்குவரென்பது குறிப்பித்தாராயிற்று; இத்துணையும் எடுத்துரைத்தபின் நம் ஆசிரியர் அச் சோழவேந்தனை நோக்கி, ‘யாம் சொல்லிய இச்சொற்களை நீ நின் கருத்துவைத்துக் கேட்டாயாயிற், பின்னர் நீ விரும்பியது செய்க’ என்று எத்துணை நயமாகக் கூறி அவனைத் தம் கருத்துக்கு ஒருப்படுவிக்கின்றார்! பாருங்கள்! இவ்வாசிரியர் கோவூர்கிழாரின் அருள் நெஞ்சப் பான்மையும், அவ்வர சிளைஞரைக் காக்கும் பொருட்டு அவர் துணிந்தெழுந்து அவரைக் கொல்லப்புக்க அரசனுக்கு எடுத்துக்கூறிய அறவுரையும் எவ்வளவு மேதக்கனவாயிருக் கின்றன! இவ்வளவு மேதக்க அறவுரையைக் கேட்ட பின்னுந் தெருண்டு மனந்திருந்தாத ஒரு மகன் இருப்பனோ! ஆதலால், அக் கிள்ளிவளவன் தான் கொண்ட சினமுஞ் செற்றமுந் தீர்ந்து, அம் மலையமான் மக்கண்மேல் அருள் பெருகி அவர்களை உயிர் பிழைப்பித்துக் காத்தனன். இங்ஙனமே, பண்டைக்காலத்திருந்த அஃகா அறநெஞ்சமும் பொய்யாநாவும் வாய்ந்த அருந்தமிழ்ப் புலவர்கள் செய்த செயற்கருஞ் செயல்களும், அவர்தம் அறவுரைகேட்டு ஆண்மையின்மிக்க வேந்தர்களும் அவர்க் கடங்கி அறநெறிச்சென்ற வரலாறுகளும் இன்னும் எத்தனையோ பல உள; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின், இது மிக விரியும்.
இனிப், பழைய தமிழ்வேந்தர்கள், தமிழ்ப்புலவோரைத் தலைவராகவும் தம்மை அவர்க்கு ஏவலராகவுங் கொண்டொழுகின வரலாறுகளும் பல உள. அவற்றுள் ஒன்றனை இங்கெடுத்துக் காட்டுதும். ஒருகால் மோசிகீரனார் என்னும் நல்லிசைப் புலவர், சேரமான்தகடூர் எறிந்த பெருஞ்சோரலிரும் பொறை என்னுந் தம்மரசனது அரண்மனையிற் பல இடங்களின் காட்சிகளையும் நோக்கிக்கொண்டு வருகையில், அவ்வரசனது போர்முரசம் ஒன்று மிகவுந் தூய்மையாக வைத்துப் பாதுகாக்கப்படும் ஒர் அறையினுள்ளே வந்து சேர்ந்தனர். அப்போது அப்போர் முரசம் நீராடி வருதற் பொருட்டு நீர்த்துறைக்குச் சென்றிருந்தது; அது வைக்கப்படுங் கட்டிலோ எண்ணெய் நுரையை முகந்து வைத்தாற்போலும் மெல்லணை யிடப்பட்டிருந்தது; அதுகண்ட, அப் புலவர் பெருந்தகை அக் கட்டிலின் மேல் ஏறிப் படுத்தார். படுத்த அவர் தம்மை அறியாமலே அயர்ந்துறங்கி விட்டனர். அந்நேரத்தில் அப்பக்கமாய்ப் போந்த சேரவேந்தன், தனது போர்முரசு இருத்தற்குரிய அக் கட்டிலின் மேன் மோசிகீரனார் நன்கயர்ந்து உறங்குதல் கண்டு, அவர்மேற் சிறிதுஞ் சினவானாய்ப், பின்னும் அவர்மீது அன்பு மிகப்பெற்று, அருகிருந்ததொரு கவரியினைக் கைக்கொண்டு, இன்னும் அவர் நன்றாய் உறங்குதல் கருதி, மென்காற்று அவர்மேற் பட வீசுவானாயினன். பின்னர்ச் சிறிது நேரத்திலெல்லாம் உணர்வுகூடி யுறக்கம் நீங்கி யெழுந்த மோசிகீரனார் தம்மருகே சேரவேந்தன் நின்றபடியாகத் தமக்குக் கவரிவீசுதலைக் கண்டு முதலில் திடுக்கிட்டு, அதன்பின் மனவமைதியுற்று, அவனது தமிழ்ப் பேரன்பின் றிறனை வியந்து,
“மாசுஅற விசித்த வார்புறு வள்பின்மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞைஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்குருதி வேட்கை உருகெழு முரசம்மண்ணி வாரா அளவை எண்ணெய்நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கைஅறியாது ஏறிய என்னைத் தெறுவரஇருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததைஅதூஉஞ் சாலும் நற்றமிழ் முழுதுஅறிதல்;
அதனொடும் அமையாது அணுக வந்துநின்மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணெனவீசியோயே வியலிடங் கமழ,
இவண்இசை உடையோர்க் கல்லது அவணதுஉயர்நிலை உலகத்து உறையுள் இன்மைவிளங்கக் கேட்ட மாறுகொல்வலம்படு குரிசில் நீ ஈங்கிதுசெயலே”
(புறநானூறு)
என்னும் அரிய செய்யுளை அவனை நோக்கிக் கூறினர்.
“இம் மென்பூஞ்சேக்கைமீது, அது மிகவுந் தூயதாக வைத்து நின்னால் ஒம்பப்படுதலை யறியாமல், ஏறித்துயின்று பெருந்தவறிழைத்த என்னை, நீ நின் வாளால் இருகூறாக வெட்டி வீழ்த்த வேண்டியிருக்க, நீ அங்ஙனஞ் செய்யாது விட்டது, நீ தமிழ் முழுதும் நன்கறிந்து அதனால் தமிழறிவு மிக்காரது அருமையினை இனிதுணர்ந்த பயன் அன்றோ! அதுவேயுமன்றி, எனதருகே வந்து நின்று நீ கவரி கைக்கொண்டு என்மேல் மெல்லிய குளிர்ங்காற்றுப்பட இவ்விடமெல்லாம் மணக்கும்படி வீசிய பரிசை எண்ணிப் பார்க்குங்கால், இவ்வுலகத்தில் இங்ஙனஞ் செயற்கரிய செய்து பெரும்புகழ் பெற்றார்க்கல்லது பிறர்க்கு மறுமைக்கண் உயர்ந்த இன்ப உலகத்தில் இருத்தல் வாயாது என்பதனை நீ விளங்கக் கேட்ட பெற்றி புலனாகின்ற தன்றோ?” என்னும் இப் பாட்டின் கருத்துப் பொருள், அச் சேரமன்னனது தமிழறிவின் மாட்சியினையும், அவன் இம்மையிற் கற்றாரை யோம்புதல் முதலான செயற்கரிய செய்து பெரும்புகழ் பெற்று விளங்குதலையும், அதனான் அவன் மறுமைக் கண்ணும் இன்னுஞ் சிறந்த இன்பவுலகத்தைப் பெறுதல் திண்ணமாதலையும் மிகவும் நயமாக உள்ளடக்கி நிற்றல் வியக்கற்பாலதாயிருக்கின்றது.
இன்னும், பழைய தமிழ்வேந்தர்கள் தமக்கு நண்பராயுள்ள தமிழ்ப் புலவோர் ஒரோவொருகால் தம்மை வெகுண்டு ஏசிய வழியும், அதற்காகத் தாம் அவர்மேற் சினவாது பொறுமையோடிருந்து, பின்னர் அப்புலவோராற் பாராட்டப்பட்ட வரலாறுகளும் பல. அவை தம்முள் ஒன்றனை இங்கெடுத்துக் காட்டுவாம். சோழன் நலங்கிள்ளி என்னும் மன்னர் பெருமானின் தம்பி மாவளத்தானுந், தாமப்பல் கண்ணன் என்னும் புலவர் பெருந்தகையும் வட்டாடிக்கொண்டிருந்தவழிப், புலவர் அவ் வாட்டத்தில் ஏதோ சூதுசெய்ய, அதுகண்டு பொறாத அவ்வரசிளஞ் செல்வன் வெகுண்டு தன்கையிலிருந்த வட்டை வீசியெறியத், தாமப்பல் கண்ணனார் “நீ சோழனுக்குப் பிறர்தாய் அல்லை,” என்று மிகவுங் கொடுமையான சொல்லால் அவனை இழித்துப் பேசினர். அக்கொடுஞ்சொற் கேட்டும், மாவளத்தான் அவர்மேற் சீற்றங்கொள்ளாது, வாளாநாணித் தலைகவிழ்ந்திருந்தனன். இதற்குட் சினந்தணிந்த அப் புலவர், தாம் சூதுசெய்தது கண்டு அவன் வெகுண்டது முறையே யாமென்றுந், தாஞ்செய் பிழையினைத் தாம் உணராமல் தாம் அச் சிறந்த அரசிளஞ் செல்வனை அத்துணைக் கொடுஞ் சுடுசொல்லால் இழித்துப் பேசியது பெரும் பிழையே யாமென்றும், இங்ஙனம் இருகாற்றவறிழைத்த வழியுந் தமக்கு ஏதுந் தீதுபுரியாது வாளா நாணியிருந்தது அவற்கு ஒரு பெரு மேதகு குணமேயாகுமென்றுந் தெளிய வுணர்ந்து,
“தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சின் சீரை புக்கவரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவிற்றேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்கொடுமர மறவர் பெரும! கடுமான்கைவண் டோன்றல் ஐயம் உடையேன்,
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிதுஞநர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறிநின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்நீ பிழைத் தாய்போல் நனிநா ணினையே!
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணுமெனக்,
காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின்,
யானே பிழைத்தனென்! சிறக்கநின் ஆயுள்!
மிக்குவரும் இன்நீர்க் காவிரிஎக்கர் இட்ட மணலினும் பலவே”
(புறநானூறு 43)
என்னும் உருக்கமான செய்யுளை மனங்குழைந்துரைத்து, அவ்வர சிளஞ்செல்வன் உள்ளத்தைக் குளிரச் செய்தனர். இங்ஙனம் ஒரு புலவர் தாம் நடுவிகந்து பிழை செய்தும், அப் பிழையினைத் தாம் உணராமையேயன்றிப், பிழையேதுஞ் செய்யாத ஓர் அரசிளஞ்செல்வனையுங் கொடியதோர் இழிமொழியால் இகழ்ந்துபேசியது எத்துணைப் பெருஞ் சீற்றத்தை விளைக்கத்தக்கதாகும்! நிலையிற்குறைந்தவரே இத்தகைய குறும்பினைப் பொறார். அங்ஙனமாக, மாப்பெருஞ் செல்வத்திலுந் தலைமையிலும் உயர்ந்து திகழும் ஓர் அரசிளைஞன் அத் தகுதியில் செயலைப் பொறுத்திருப்பதென்றால், அஃது அவனுள்ளம் அறிவாலும் அன்பாலும் எத்துணை மென்பதம் வாய்ந்து அமைதியுற்றிருக்க வேண்டுமென்பதனை இனிது புலப்படுக்கின்றது! இதனை அப் புலவர் பெருமானே மேற்கிளந்த செய்யுளில் “நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீ பிழைத்தாய்போல் நனிநா ணினையே!” எனக் கூறுமாற்றானும் இங்ஙனம் பெரும்பிழை செய்தாரையும் பொறுத்தல் அவ்வரசிளைஞன்றன் அரச குடியிற் பிறந்தார்க்குத் தொன்று தொட்ட விழுப்பேரொழுக்க மாய்ப் போதருகின்ற சிறப்பினை அவர் “தம்மைப் பிழைத் தோர்ப் பொறுக்குஞ் செம்மல், இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்” எனத் தெரிக்குமாற்றானும் நன்குணரலாம். இதனையும் இதனை யொத்த வேறு பழைய வரலாறுகளையும் ஆய்ந்தறியுங்காற், பழைய தமிழ்வேந்தர்கள் தமக்குத் தமிழ் வல்லார் செய்த பெரும் பிழைகளையும் அகத்துக் கொள்ளாது, அவரை யென்றும் ஒரு தன்மையாகவே பாராட்டி வந்தன ரென்பதுங், கற்றாரேயன்றி மற்றையார் செய்த பிழைகளையும் அவர் மிகப்பொறுத்து எதனையும் ஆய்ந்தோய்ந்து பார்த்து முறை செய்யும் இயல்பினராய் ஒழுகினரென்பதுந் தெற்றென விளங்கா நிற்கின்றன.
இன்னும், பண்டைத்தமிழ் அரசர்கள் தமது உயிர் வாழ்க்கையினுந் தமிழ்வல்ல சான்றோரின் உயிர் வாழ்க்கை யினையே மேலதாகக் கருதி, அவரை நீடுஇனிது வாழச்செய்வதிற் கண்ணுங்கருத்தும் உடையராயிருந்த அரும்பெருந் தகைமையுஞ் சிற்சில வரலாறுகளாற் புலனாகின்றது. இதற்கோர் உண்மை வரலாற்றினை ஈண்டெடுத்துக் காட்டுதும். ஈகையிற் சிறந்த வள்ளற்பெருமானாகிய அதியமான் நெடுமான் அஞ்சி என்பான் நீண்ட உயிர்வாழ்க்கையினைத் தருவதாகிய ஒரு கருநெல்லிக்கனியினை ஒருகால் தான் அரிதிற் பெற்றனன். பெற்ற அது தன்னையுண்டார்க்கு உடல்உரம் மன உரங்களை உண்டாக்கி, அவரது உயிர்வாழ்க்கையினை மிகவும் நீளச் செய்வ தொன்றாதலால், அஃதெல்லார்க்கும் எளிதிற் கிடைப்ப தன்றென்றும், அத்துணை அரிதாகிய ஒருகனியினை அரசனாகிய தான் உட்கொண்டு நீண்டகாலம் உயிர் வாழ்வதினும் அறிவிற்சிறந்த தமிழ்ப்புலவர் ஒருவர் உண்டு நீடுவாழ்வதே உலகத்திற்குப் பெருநன்மை பயக்குமென்றும் நினைந்துபார்த்தான்; பார்த்துத், தான் அறிந்த தமிழ்வல்ல சான்றோரில் ஒளவையாரே மிகச் சிறந்தவரெனவும், அவர் அப்போது முதுமைமிக்குச் சாநாளைத் தலைப்படுதலால் அவர் அக் கருநெல்லிக்கனியினை அருந்திச் சாதல்நீங்கி நீடுவாழ்தலே நன்றாமெனவுங் கருதி, அதனை அவர் கையிற்றந்து அவர் அதனை உட்கொண்டு பின்னும் பல ஆண்டுகள் நன்குயிர் வாழுமாறு செய்தனன். வறுமையும் நோயும் இன்றி எல்லாச் செல்வங்களிலுந் தழைத்து இனிதுவாழும் ஒர் அரசன் பின்னுந் தான் வலியுடன் வாழ்தற்கு ஒர் அருமருந்து பெற்றனனாயின் அதனைத் தான் அருந்தி நீடினிது வாழ விழைகுவனேயல்லது, அதனைச் செல்வவாழ்க்கையில் இல்லாப் பிறர் ஒருவர்க்குக் கொடுக்கச் சிறிதுமே மனந்துணியான். ஏனெனில் மக்களேயன்றி ஏனைச் சிற்றுயிர்களுங்கூடத் தாம் உயிர்வாழவே விரும்பு மல்லது, தம்முயிரைத் துறந்து பிறவுயிரை வாழ்விக்கத் துணியா; இஃது எல்லா வுயிர்களிடத்துமுள்ள பொதுவியற்கையாகும். ஆனால், தம்முயிரையும் நீத்துப் பிறவுயிரைப் புரக்குந் தன்மையோ எல்லாவுயிர்களிடத்தும் அங்ஙனம் பொதுவகை யாற் காணப்படாமல், அறிவும் அன்பும் ஆற்றலும் மிக்க ஒருசில வுயிர்களிடத்துமட்டுமே ஒரோவொருகாற் சிறப்புவகையாற் காணப்படுவதாகும். ஆகவே, அதியமான் நெடுமான் அஞ்சி யென்னும் வள்ளற்பெருந்தகை தான்நீடுவாழ்தலை வேண்டாது, தமிழ்ப்புலமை சான்ற ஒளவையார் நீடுவாழ்தலை வேண்டித் தான் அரிதிற்பெற்ற அக் கருநெல்லிக்கனியினை அவர்க்கு அளித்த வள்ளன்மை பெரிது! பெரிது! அதனலான்றோ அவன் ஒளவையார் திருமொழியால்,
‘வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கைஆர்கலி நறவின் அதியர் கோமான்போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னிநீல மணிமிடற் றொருவன் போல,
மன்னுக பெரும! நீயே! தொன்னிலைப்பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்டசிறியிலை நெல்லித் தீங்கனி குறியாதுஆதல் நின்னகத்து அடக்கிச்சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே’
(புறநானுறு 91)
என்று பாராட்டி வாழ்த்தப்பட்டனன்! ‘தன்னை யுண்டவர் வாழ்நாளை நீள்விக்கும் அரியதொரு நெல்லிக்கனியினை நீ அரிதிற் பெற்றும், அதனை யுட்கொண்டு நீ யுயிர்வாழ நினையாமலும், அஃது அத்துணை மேதக்கது ஆதலை எனக்குத் தெரிவியாமல் நின்னுளத்தே அடக்கிவைத்தும், யான் சாதல் நீங்கி நீடுவாழுமாறு அதனை எனக்கே அளித்தனை! அதனால், தேவர் பிறரெல்லாந் தாஞ் சாவாமைப்பொருட்டு ஒருமருந்து பெற்ற அதனை அயின்றுஞ் சாக்காடு தீர்ந்திலராகத், தன்னை அணுகினாரை உடனே கொல்லும் ஒரு கொடு நஞ்சை அத் தேவர்கள் சாவாமைப் பொருட்டுத் தான் அயின்றுந் தான் ஊறுபடாதிருந்த ‘நீலமணிமிடற்றொருவனாகிய சிவ பிரானைப்போல் நீ என்றும் நிலைபேறுற்று வாழ்வாயாக!’’ என்று ஒளவையார் இதன்கட் கூறிய வாழ்த்துரைப் பொருளை உண்ணுழைந்து நோக்குங்கால், உயர்ந்தோர் பிறர் வாழ வேண்டுமென விரும்பாது தாமே வாழ வேண்டுமென நினைப்பவர் தம்மைப்பற்றிய அந் நினைவால் நீடுவாழா தொழிவ ரென்பதூஉம், பிறர் வாழ்தலையே வேண்டித் தமக்கு வரும் ஊறுபாட்டையும் நோக்காது அவர்க்கு நன்றுசெய்பவர் அவ் விழுமிய நினைவாகிய அருமருந்தால் தம்மையறியாமலே தாம் நீடுவாழ்வரென்பதூஉம் அவர் அதன்கண் அறிவுறுத்திய மனவியல் நுட்பம் இனிது விளங்காநிற்கின்றது. இவ்வா றெல்லாம், பண்டைத் தமிழ்ப்புலவர், தம்மினும் நீடினிது வாழ்தலையே அவர்காலத்திருந்த அரசர்களெல்லாம் வேண்டி நின்றமையால், பழைய தமிழகமானது தமிழ் வளங்கெழுமித் திகழ, அதன்கண் உயிர்வாழ்ந்திருந்த பழந்தமிழ் மக்களெல்லாம் உயிரும் உடம்புஞ் செழித்து அறிவிலும் அன்பிலும் நாகரிகத்திலுந் தலைசிறந்து, இறைவனது அருட்பேற்றிற் குரியராய் விளங்காநின்றனர் என்பது.



