
முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்
2. தமிழ் மக்களின் பண்டை நாகரிகம்
இங்ஙனமாக நந்தமிழ் மக்களின் முன்னோர்கள் ஏனைப் பண்டை நாகரிக மக்கள் எல்லாரையும்விட அறிவு முயற்சி யிலுந்த தொழின் முயற்சியிலுந் தலைசிறந்து விளங்கின பான்மை, அவர் தம்மில் நல்லிசைப் புலவராய்த் திகழ்ந்த மேன்மக்கள் இயற்றிய பழைய நூல்களாலுஞ் செய்யுட் களாலும் நன்கு தெளியப்படுதலுடன், அவர்தம் வரலாறுகளை நடுநின் றாராய்ந்து நூல்களை எழுதிய ஆங்கில ஆசிரியரின் உரைகளாலும், நடுவின்றி யாராய்ந்து நூல்கள் வரைந்த நம் இந்திய ஆசிரியர்கள் உரைகளாலுங்கூடத் தெற்றெனப் புலனாகின்றன. கால்ட்வெல் (Caldwell) ஆசிரியர் இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே செய்த அரிய பெரிய சொல்லாராய்ச்சி சொற்பொருளாராய்ச்சியின் முடிபாகப், பண்டைத் திராவிடர்கள் எந்தவகையிலும் நாகரிகமில்லாக் கீழ்மக்களாகக் காணப்படவில்லை. கானக வாழ்க்கையிலிருந்த மக்களின் நிலை எத்தகைய தாயிருப்பினுந், திராவிடர்கள் என்னும் பெயர்க்கு உண்மையில் உரியோர், தம்மிடையே பார்ப்பனர்கள் வந்து சேர்தற்கு முன்னமே, எவ்வளவு குறைந்தபடியாய்ப் பார்த்தாலும் நாகரிகத்திற்கு மூலமானவையெல்லாம் பெற்றிருந்தன ரென்பதில் ஐயுறுதல் ஏலாது, என்று வலியுறுத்திக் கூறினார். இவ்வாசிரியர் பழைய ஈபுருமொழி விவிலிய நூலிற் புகுந்த தோகை, அகில் முதலான தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்ட, அவற்றைக் கண்டு தமிழின் பழமை யுணர்ந்து வியந்த வடமொழிப் பேராசிரியரான மாக்மூலர் (Max Muller) இச் சொல்லாராய்ச்சி உண்மை யாகுமானால், ஆரியக்குடியினர் இவ்விந்திய நாட்டுப்புகு முன்னரே, தமிழ்மொழிகள் வழங்கிய பழமையினை உறுதிப் படுத்துதற்கு அது சிறந்ததொரு கருவியாகும் என்று உண்மையுரை புகன்றார். இன்னும், இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வடமொழிப் புலமை நடாத்தும் ராப்சன் (Rapson) என்னும் ஆசிரியர், பண்டை ஆரிய மக்கள் இவ்விந்திய நாட்டிற் குடிபுகுந்து பரவிய வரலாற்றினை ஆராய்ந்துரைக்கின்றுழி, இப் பரவுதலானது, சமஸ்கிருதமும் அதிற் றோன்றிய மொழிகளும் எவ்விடத்தும் பரவிய அடையாளத்தைக் காட்டுகின்றது. ஆனாலுந், தென்னிந்தியாவிலேதான் அவர் அங்ஙனம் பரவுதல் தடுப்புண்டது; ஏனென்றால், தென்னாட்டிலே ஆரிய நாகரிகத்தினும் பழையவாகிய திராவிட நாகரிகமுந் திராவிட மொழிகளும் இன்றுகாறும் நிலைபெற்றுத் தலைசிறந்து தோன்றுகின்றன. என்றும், எவ்வாற்றானுந் திராவிட நாகரிகமானது, ஆரியர் வருவதற்கு முன்னரே இந்திய நாட்டில் முதன்மையுற்றிருந்தது. திராவிட மக்களிற் பலர் தமக்கு உரியவல்லா ஆரியமொழிகளையும் பிறமொழிகளையும் இப்போது பேசுகின்றனர் என்றும், திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தினையும் ஆரிய மதத்தினையும் பெரிதுந் தம் வழிப்படுத்தி உருவாக்கினர் என்றும் மெய்யுரை பகர்ந்தார். இன்னும், சில்லாண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக் கழகத்திற் பொருணூல் ஆசிரியராய் அமர்ந்து, நம் இந்து மக்களின் வரலாறுகளையெல்லாம் நேரே பலமுகத்தான் ஆராய்ந்து உண்மைகண்டு ஓர் அரிய நூல் ஆங்கிலத்தில் எழுதிய லேட்டர் (Slater) என்பார் ஆரிய திராவிட நாகரிகத்தைப் பற்றிக் கூறவந்துழி, ஆரியர்கள், உழவுத் தொழிலை முற்றுமே அறியாதவர்கள் அல்லராயினும், அவர்கள் இடம் விட்டுப் பெயர்ந்து செல்லும் இடையர் வாழ்க்கையிலேயே முதன்மையாய் இருந்தவர்களென்பது ஐயமின்றி எல்லாரும் ஒப்புக்கொண்டதாகும்; ஆனால், திராவிடர்களோ நாம் அறிந்த மட்டில் ஆரியர்களினும் மிக்குயர்ந்த நாகரிக நிலையில் இருந்தவர் ஆவர், என்று முடிபு சொல்லி, அதற்கு அகச்சான்றாக ஆரியமொழியிலுள்ள இருக்குவேதத்திற் பண்டை ஆரியர், தமிழ்மக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும், உரைகளாகிய,
இந்திரன் திவோதாசன் பொருட்டாகச் சம்பரனுடையநூறுகோட்டைகளையுந் தகர்த்தெறிந்தான்இடியேற்றினைச் சுழற்றுவோனான இந்திரனே! நீ புருகுத்ஸன் பக்கத்தினின்று போரியற்றுங்கால் ஏழுநகரங்களை அழித்தொழித்தனை! சுதாசனுக்காகஅங்கனுடைய செல்வத்தைத் தொலைத்தனை!
ஆரியமகனுக்கு உதவியாய் நீ பிப்ருவின் நகரங்களைஉடைத்தெறிந்தனை! தயுக்களுடன் செய்தசண்டையில் ரிஜிவானைப் பாதுகாத்தனை!
நீ சுஷ்ணனது செல்வத்தை ஆண்மையுடன் துடைத்துவிட்டனை; அவனுடைய கோட்டைகளையுந் தகர்த்துவிட்டனை
என்பவைகளையும் எடுத்துக்காட்டிக்,
கோட்டைகளும் நகரங்களுஞ் செல்வச் செழுமையும் நாகரிக மேம்பாட்டினைக் குறித்தற்குப் போதுமானவைகளாகும். மேலுந், திராவிட அசுரர்கள் செல்வவளமும், மந்திர ஆற்றலும், விழுமிய கட்டிடங்கள் அமைக்குந் திறமும், இறந்தவரை எழுப்பும் வன்மையும் பெற்றிருந்தனரென ஸமகிருத நூல்கள் நுவலுதலை ஒல்ட்ஹாம் என்பவரும் எடுத்துரைத்தனர் என்றும் மொழிந்தனர்.
மேற்காட்டிய மேனாட்டாசிரியர் நால்வரும் ஆரியர் திராவிடர்களின் வரலாறுகளை அகச்சான்று புறச்சான்று களான் ஆழ்ந்தாராய்ந்து, திராவிடநாகரிகமே ஆரியநாகரிகத் தினுஞ் சிறந்ததும் முற்பட்டதும் ஆகும் என நடுநின்று முடித்துக் கூறினமை நினைவிற் பதிக்கற்பாற்று.
இனி, நம் இந்திய ஆசிரியரில் தமிழர் ஆரியர் நாகரிக வரலாற்றினை ஆராய்ந்தார் சிலர், தமிழரது நாகரிகம் பழமையானதுஞ் சிறந்ததும் மேனாட்டவர் நாகரிகத்திற்குத் தாயகமாவதுமாமெனக் கிளந்தனரேனும், முடித்துக் கூறுங்கால் அதுதானும் ஆரிய நாகரிகத்தினின்றே பிறந்ததென நடுவின்றியுங் கூறினார். அச் சிலருள், இருக்கு வேதத்தை ஆராய்ந்து இரண்டு விரிந்த நூல்கள் ஆக்கிய வங்காள அறிஞரான அபிநா சந்திரதா என்பார் பின்வருமாறு கூறுகின்றார்.
சாலடி நாட்டில் தெல்லோகம் என்னும் ஊரிற் கண்டெடுக்கப்பட்ட கற்பாவைகளினின்றும் பிரித்தெடுக்கப் பட்ட தலைகளின் அமைப்புந் தென்னாட்டிலுள்ள தமிழர்களின் முக அமைப்பும் வியக்கத்தக்கபடியாய்ப் பெரிது ஒத்திருத்த லாலுஞ் சுமேரியர் வழங்கிய மொழி திராவிட மொழிகளைப் போலவே பகுபத வுறுப்புகள் வாய்ந்திருத்தலாலுஞ், சோழர் களைப் போலவே சாலடியர்களும் உழவுத் தொழிலிற் சிறந்தவர்களாயுங் கால்வாய்கள் அமைப்பனராயும் இருந்தமை யாலுஞ் சோழர்களைப்போலவே அவர்கள் கடன்மேற் செல்பவர்களாயும் வணிகர்களாயும் விளங்கினமை யாலுஞ், சோழர்கள் தாமும் மரக்கலக்கலையையும் வாணிகமுறையையும் பணிகரிடமிருந்து கற்றே கடன்மேற் செலவிலும் ஏனை யெல்லாத் துறைகளிலும் அவர்களை யொப்ப நடந்தமையாலும், ஆசியாப் பெருந் தேயத்தின் மேற்கிலுந் தெற்கிலுமுள்ள எல்லா நாடு களிலுந் தென்னிந்தியக் கடற்கரை மருங்குள்ள நாடுகளுக்கும் பாரசிகக்குடாக் கடலோரமாயுள்ள நாடுகளுக்கும் இடையே தான் பண்டை நாள் வாணிகம் நடைபெற்று வந்தமையாலும், ஆசியாவின் தென்பகுதியிலாதல் ஆப்பிரிக்காவின் கீழ்ப்பகுதி யிலாதல், இந்தியர்களைப்போற் சென்று பாரசிகக் குடாக்கடற் கரை மருங்கிற் குடியேறிய அத்துணை உயர்ந்த நாகரிகமுடைய வர்கள் பிறர் இல்லாமையாலுஞ், சுமேரியர் என்பார் ஆரிய திராவிடக் கலவையிற் றோன்றியவர்களே யென்பது மறுக்க முடியாத உண்மையாம். இன்னும், பாபிலோனியர் அசீரியர் என்பாரின் உலகியல் நாகரிகமேயன்றிச் சமயக் கோட்பாடும், ஆரிய நாகரிக சமயக்கோட்பாட்டையுந் திராவிட நாகரிக சமயக் கோட்பாட்டையும் பின்பற்றியவை களேயாகும் என்பது.
இம் மேற்கோளுரையில், திராவிடநாகரிகமே, மிகப் பழைய காலத்தில் நாகரிகத்தாற் சிறந்து விளங்கிய மேனாட்டவர் நாகரிகத்திற்கெல்லாம் அடிப்படையாய் நிற்கும் உண்மையை மறைத்தல் ஏலாமையின் அதனை விண்டுசொல்லிய நம் அபிநா சந்திரதாஸர் அவ்வளவிலமையாது, தாம் ஏற்றஞ்சொல்ல விழைந்த ஆரிய நாகரிகத்தினையுந் திராவிட நாகரிகத் துடன் கொணர்ந்து ஒட்டவைக்கும் விரகினையுங் காண்மின்கள்!
அதுமட்டுமோ! சுமேரியர் முதலான மேனாட்டு நாகரிக மக்கள் அனைவர்க்கும் நாகரிக வாழ்க்கையினைக் கற்பித்தவர்கள், ஆரியர்க்குப் பன்னெடுங்காலம் முன்னே நாகரிகத்திற் சிறந் தோங்கிய தமிழர்களே யெனப் பலவலிய சான்றுகளான் நிலைநாட்டிய ஹால் என்னும் ஆங்கில ஆசிரியரையும் இராகொசின் என்னும் ஐரோப்பிய ஆசிரியரையும் மறுப்பான் புகுந்து, அதற்குத் தக்க வலியசான்றுகள் காட்டமாட்டாது ஆரியரது நாகரிகமே திராவிடரது கலைப்பயிற்சிமேல் அழியாத தனது இலச்சினையைப் பொறித்தது. அதுவே திராவிட மக்களை, முதன்மையாய்ச் சோழ பாண்டியர் களை மேலுயர்த்தியது. பின்னர்ச் சோழ பாண்டியர்கள் சீர்திருத்தப்பட்ட தமது நாகரிக வாழ்க்கையினைப் பாபிலோனிய நாட்டுக்கும் எகுபதி நாட்டுக்குங் கொண்டுபோயினர் என்று தாம் பிடித்த பிடியை விடாமற் கிளந்தார்.
பண்டைத் தமிழர்களே முதன்முதல் நாகரிகத்திற் சிறந்தவராய், ஏனைப் பழைய மக்கட்கெல்லாம் நாகரிகத்தைக் கற்பித்தவராய் இருக்கும் உண்மை வலிய சான்றுகளால் நிலைபெறுதல் கண்டு மனம்பொறாமல், அவரை ஆரியர்பால் நாகரிகங் கற்றவரென்று சொல்லி அவ்வெண்ணத்தை எப்படியாவது உண்டாக்கிவிட்டால், அவ் வெண்ணம் ஆராய்ச்சியில்லார்பால் எங்கும் பரவி, ஆரிய நாகரிகமே உலக நாகரிகத்திற்குக் காரணமாயிற்று என்னும் ஒரு போலிக் கொள்கை பரவிய வழக்காகிவிடுமெனக் கருதிப் போலும் மேற்குறிப்பிட்ட வங்காள அறிஞர் அங்ஙனம் வலிய சான்றுகட்கெல்லாம் மாறுபேசினார்! அற்றேல், அவர் தமது கூற்றுக்குச் சான்று ஏதுமே காட்டிற்றிலரோ வெனின்; நீரில் அமிழ்ந்துவோன் ஒருவன் தன் அருகு மிதந்துசெல்லும் ஒரு வைக்கோற்றுரும்பினைக் கைப் பற்றியவாறுபோல, அவ்வங்காள அறிஞருந் தாம் விழைந்ததனை நாட்டுதற்பொருட்டு, இருக்கு வேதத்திற் சொல்லப்பட்ட பணிகர் என்னும் ஆரிய வணிகவகுப்பினரே சோழ பாண்டியர்க்குக் கடன்மேற் செல்லும் வாணிக வாழ்க்கையினைக் கற்பித்தனர் எனவும், அவ் விருக்கு வேதத்திற் காணப்பட்ட மனா என்னும் எடைப்பெயர் ஆரியமொழிச் சொல்லாதலின் அதனை வழங்கிய திராவிடரும் பாபிலோனியரும் பணிகரென்னும் ஆரிய வணிகரிடமிருந்தே அதனைக் கற்றனரெனவுங் கூறினார்.



