முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்

12. பின்றைத் தமிழ்ப்புலவர்

பல்லாயிர ஆண்டுகளுக்கு முற்றொட்டே தமிழ் முன்னோர்கள் நாகரிகத்திற் றலைசிறந்து விளங்கித், தம் பின்னோர் பொருட்டுப் பல்லாயிரக்கணக்கான விழுமிய தமிழ் நூல்களைப் பல துறைப்பொருளுந் தெளிந்துவிளங்க இயற்றி வைத்தும், அவை யிற்றை அவர்தம் பின்னோர்கள் கருத்தாய்ப் பாதுகாத்து வையாமையின், அவையிற்றிற் பெரும்பாலன அழிந்துபோயின. சிறுபான்மை அவ்வாறழிந்து போகாமல் தப்பித்தவறி அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதர்ந்து காணக்கிடந்த துண்டுப் பாட்டுகளே இடைக்காலத்துச் சான்றோர்களால் வருந்தித் தேடி யெடுத்து, ‘அகநானூறு,’ ‘புறநானூறு’ ‘நற்றிணை’ ‘குறுந்தொகை,’ ‘ஐங்குறுநுறு’ ‘பதிற்றுப்பத்து,’ ‘கலித்தொகை’ ‘பரிபாடல்’ என்னும் எட்டுத் தொகை நூல்களாகத் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இங்ஙனந் தொகுத்து வைக்கப்பட்டுள்ள பாட்டுகளிலும் எத்தனையோ பல சிதைந்த நிலைமையிலேயே இன்னும் வழங்கி வருகின்றன. மிகப்பழைய காலத்திலியற்றப் பட்ட தமிழ்ச்சான்றோர் நூல்களில், முழுநூலாக நமக்குக் கிடைத்திருப்பது தொல்காப்பியம் ஒன்றுமே யாம். ஏனைப் பல நூல்களிலிருந்து சிற்சில பாட்டுகளைத் தவிர, அந் நூல்கள் முற்றுமே அகப்படாமல் அந்தோ அழிந்தேபோயின!

இனிப், பண்டைத் தமிழ்ச் சான்றோரது மெய்வழக்குத் தழீஇத் தொடர்பாக இயற்றப்பட்டுவந்த தனிச் செந்தமிழ் நூல்களில் ஆசிரியர் திருவள்ளுவநாயனார் இயற்றிய தெய்வத் திருக்குறள் நூலே இறுதியாவது. ஆகவே, திருக்குறணூற் கால எல்லைவரையிற் சென்றகாலமே பழந்தமிழ்க்காலமா மெனவும், அக்காலத்து நிலவிய தமிழ்வல்ல அறிஞர்களே “முற்காலத் தமிழ்ப்புலவர்” ஆவரெனவும் பிரிந்துணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனித், திருக்குறளுக்குப் பின் எழுந்த நூல்களிற், முழுநூலாவதூஉம், பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் தம் மெய்வழக்கே பெரும்பாலுந் தழீஇச் செல்வதூஉம் ஆசிரியர் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் விழுமிய பொருட்டொடர்நிலைச் செய்யுளேயாம். இஃது இத்துணைச் சிறந்த நூலேயாயினும், வடநாட்டிலிருந்து வந்து தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்த சமணர் பௌத்தர்க்குரிய கோட்பாடுகளும் அவர் வழங்கிய வடசொற்கள் சொற்றொடர்களும் இதன்கட் சிறுபான்மை இடையிடையே விரவிக் காணப்படுதலின், இது செந்தமிழ்ச் சான்றோரியற்றிய பண்டை நூல்வரிசை யில் வைக்கப்படுதற்குரிமை யிலதாயிற்று. ஆயினும் பழந்தமிழ்ச் சான்றோர் காலத்துக்குப் பின்னெழுந்த நூல்களிற், சிலப்பதி காரங் காலத்தினால் முற்பட்டதாதலுடன், தமிழ்ச்சுவை நிரம்பித் துளும்புந் தகையானும் முன்வைக்கப்படுந் தகுதிப் பாடுடையதாகும்.

இனி, இச் சிலப்பதிகாரத்தை யடுத்துத் தோன்றி அதனோ டொருகாலத்தினதாக வைக்கப்படும் முழு நூலாகிய மணிமேகலை என்னுந் தொடர்நிலைச் செய்யுள் தமிழ்ச் சொற்சுவையில் முதிர்ந்த பதம் வாய்ந்த தொன்றேயாயினும், இதன்கட் பௌத்தமதத்தினர் கட்டிய கதைகளும், அவர்க்குரிய வடசொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளுஞ், சிலப்பதிகாரத் தினும் பார்க்கப் பன்மடங்கு மிகுதியாய் விரவிக் காணப்படு கின்றமையின், இதுவும் பண்டைத் தமிழ்நூல் வரிசையில் வைக்கப்படுதற்கேற்ற தகுதியிலதாயிற்று. என்றாலும், இடைக்காலத் தெழுந்தநூல்களிற் சிலப்பதிகாரத்தொடு தோழமைகொண்டு, இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன்னரே தோன்றிய பழைமையுடை சிறந்த தமிழ் முழு நூலாகலின் இதுவும் பாராட்டப்படுதற்குரிய செந்தமிழ் நூலேயாகும்.

இனிச், சிலப்பதிகார மணிமேகலை காலத்தை யடுத்துத் தோன்றிய திருவாசகமுந் திருச்சிற்றம்பலக் கோவையாருஞ் செந்தமிழ்ச் சொற்பொருட் சுவைநிரம்பித் ததும்பு மாட்சியுடையவாதலுடன், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளின் அருட்பெருநிலையினை எல்லார்க்கும் விளங்கத் தெருட்டி, அவரை மீண்டு பிறந்திறவா மெய்ந்நிலையில் ஏற்றுவிக்கும் அருட்டிறம் வாய்ந்தனவுமாகும்.

இவற்றிற்குப் பிற்றோன்றிய இடைக்காலத்து நக்கீரனார், காரைக்காலம்மையார், இடைக்காலக் கபிலர், பரணர் கல்லாடனார், திருநாவுக்கரையர், திருஞானசம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், பொய்கை பேய் ஆழ்வார்கள் அருளிச் செய்த செந்தமிழ் நூல்கள் தெய்வமாட்சியிற் சிறந்து விளங்குவனவாகும்.

இவ்விடைக்காலத்திற் றோன்றிய பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நாலடியார், பழமொழி, கல்லாடம், சூளாமணி, சிந்தாமணி, திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம், ஞானமிர்தம், சிவஞானபோதம் சிவஞான சித்தி முதலிய நூல்களெல்லாஞ் செந்தமிழ்த் திட்பநுட்பஞ் செறிந்தனவாதலுடன், பிற்கூரிய நான்கு நூல்களும் மெய்யன்பும் மெய்யறிவுந் தேற்றுந் தனிப் பெருஞ் சிறப்பும் ஒருங்கு வாய்ந்தனவாகும்.

இங்ஙனந் திருவள்ளுவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்துத் தோன்றிய சிலப்பதிகார மணிமேகலை காலத்திருந்து, அவர்க்குப்பின் ஆயிரத்து முந்நூறியாண்டு கழித்துக் தோன்றிய சிவஞானபோதஞ் சிவஞானசித்தியார் காலம் வரையிற் றோன்றிய தமிழாசிரியர் சமயாசிரியர் சந்தானாசிரியர்களும் அவர் இயற்றிய தமிழிலக்கண இலக்கிய நூல்களுந் தெய்வ அருணுhல்களும், வடசொற்றொடர்கள் வடமொழி வழக்குகள் வரவர மிகுதியாய் எடுத்தாளக் காண்டுமாயினும், அவரும் அவரியற்றிய நூல்களும் பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் சென்ற நெறிவழாமல் அவர் தேற்றிய சொற்பொருள் வழக்கே கடைப்பிடித்துத், தமிழறிவு பெருக்கித் தமிழ்மக்களை அறிவிலும் அன்பிலும் விளங்கச் செய்தமை காண்டும். இவ் விடைக்காலத்துப் பெரியார்கள் வடமொழிச் சொற்கள் சொற்றொடர்கள் வழக்குகளைத் தழீஇ யொழுகினார்போற் காணப்படினும் அவர் தழீஇய அவையெல்லாம் ஆரியமுனிவர்க்கு உரியவல்லவாய், அவ் ஆரியமுனிவரைத் திருத்துதற் பொருட்டு, அத் தமிழ்ப் பெரியார் தம்மாலேயே அவ்விடைக்காலத்திற் படைக்கப்பட்டனவாகும். இவர் ஆக்கிய வடசொற்கள் சொற்றொடர்கள் கதை வழக்குகள் முதலியனவெல்லாம் வடமொழிக் குரியனபோற் காணப்படினும், அவையெல்லாம் ஆரியர்க்குரிய பண்டை இருக்கு எசுர் சாமம் அதர்வம் முதலிய நால்வேதங்களிலாதல், அந் நால்வேத வழிவந்த பிராமணங் களிலாதல் காணப்படாமையின் அவை பண்டை யாரியர்க்குரிய அல்லவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்கு விளங்காநிற்கின்றது. அற்றாயின், முன்னை ஆரிய நூல்களிற் காணப்படாமல் இடைக் காலத்துத் தமிழ்ச்சான்றோர்களால் வடமொழியில் ஆக்கப்பட்ட அவை தம்முட் சில பல ஈண்டுக் காட்டுக வெனிற், காட்டுதும் :

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!