
முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்
8. அரசர்க்குரிய கடமை
மேற்கூறியவாறெல்லாம் அரசர்களும் புலவர்களாய்ப், புலவர்களும் அரசர்களாய், ஒரோவொருகாற் புலவர்கள் அரசர்களினும் மிக்க சிறப்புந் தலைமையும் வாய்ந்தவர்களாய், அவ் விருதிறத்தாருந் தம்மில் அளவளாய் வாழ்ந்த அப் பழங்கால நிலை இஞ்ஞான்றைத் தமிழ்நாட்டு நிலைக்கு எத்துணை வேறுபட்டதாய் இருக்கின்றது! அப் பழைய தமிழ்க்கால நிலையினை ஒப்பதொன்று இஞ்ஞான்று காணல் வேண்டுமாயின், அதனை இஞ்ஞான்றை மேல்நாட்டவரிடத்தேதான் காணலாம். மேல்நாட்டு அரசர்களெல்லாருங் கல்வியில் வல்ல புலவர்களாய், அங்குள்ள புலவர்களுஞ் செல்வத்தின் மிக்க அரசர்களாய்ச், சிற்சிலகால் அவர் அரசரினம் மிக்க சிறப்புந் தலைமையும் வாய்ந்து அவரையுந் தஞ்சொல் வழி நிறுத்து அடக்கியாள் பவராய், அங்ஙன மாயினும் அவ்விருதிறத்தாருந் தம்முள் அளவளாவி வாழ்தலிற் குறை ஏதும் இலராய்ப் புகழ்மேம்பட்டு விளங்கல் எவரும் அறிந்த தொன்றன்றோ? பழைய தமிழ்வேந்தர்கள் தங்கீழ் வாழுங் குடிமக்கள் நலத்தையே முழுதும் வேண்டி நின்றமைக்கு அவர் வஞ்சினங் கூறுங்காற் “குடிபழி தூற்றுங் கோலேனாகுக” என்று கூவிக் கூறினமையே சான்றாம். இனிக், குடிமக்களும், அக் குடிமக்களிற் சிறந்த புலவர்களுந் தம்மரசனை அங்ஙனமே தம்முயிராய்க்கொண்டு ஒழுகினமையும் அஞ்ஞான்றைப் புலவர்கள் பாடிய செய்யுட்களால் அறியப்பெறுகின்றேம். இதற்கு, மோசிகீரனார் என்னும் நல்லிசைப்புலவர் நுவன்ற,
‘நெல்லும்உயிர் அன்றே நீரும்உயிர் அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்:
அதனால், யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே’
(புறநானூறு 186)
என்னும் அரிய செய்யுளே சான்றாம். ‘இந்த உலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிர் ஆகா, அரசனே உயிராகும்; அதுபோலக், கல்வியறிவிற் சான்ற என்னோரன்ன புலவர் தனக்கு உயிராதலை அறிதல் அரசற்குக் கடமையாகும் என்னும் அதன்பொருள் எத்துணை நுட்பமாகவும் அஞ்சா அறநெஞ்சத்துடனும் எடுத்துரைக்கப்பட் டிருக்கின்றது! மன்னன் உலகத்தார்க்கு உயிர் என்பதை எல்லாரும் அறிவர். கல்வியறிவின் மிக்க புலவர் அம் மன்னற்கு உயிராம் உண்மையினையறிவார் எவர்? அறிந்தாலும் அதனை எல்லாரும் அறியக் கூறுவார் எவர்? கல்விவல்ல புலவர்களை இல்லாத நாடும் அரசுங் கானகத்தையும் அதில் உலவுங் கோளரியையுமே ஒக்கும். ஆதலால். அறியாமை இருளை அகற்றி அறிவொளி பரப்பி அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் பெருகச் செய்யும் புலவர் குழுவினையுடைய நாடே விண்ணவர் உறையும் வான்நாட்டினை யொப்பதாகும். இவ்வுண்மையினை யுணரவல்லார்க்கு, அரசியலுக்கு உயிராவார் புலவர்களேயென்ற மோசிகீரனாரது செய்யுள் நுட்பம் விளங்காதொழியாதென்க.



