
முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்
11. புலவர்தம் பரந்த தூய துறவுள்ளம்
இனிப், பழைய நாட் புலவர்களும், அவர்தம் ஆணை வழி நின்று தமது வாழ்க்கையை நன்கினிது நடாத்திய தமிழ் மக்களும் ஒரேயொரு முழுமுதற் கடவுளாகிய முக்கணானைத் தொழுது, தாமெல்லாரும் அம் முதற்பெருங் கடவுளாகிய ஒரே யொரு தந்தைக்கு உரிமைப் புதல்வர்களாம் உண்மைகண்டு, தமக்குள் ஏதும் வேற்றுமை இலராய் இம்மையிலேயே பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர். பண்டைத் தமிழாசிரியருந் தமிழ்மக்களும், ஒரே முழுமுதற் கடவுள் உலகமே யுருவாய் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றொளிகளையும் மூன்று திருக்கண்களாக் கொண்டு, எல்லா வுயிர்க்கும் புறக்கண் அகக்கண்களை விளக்கி, அவர்தம் மெதிரேநின்று பேரருள் வழங்கும் பான்மையினைத் தெளியக்கண்டு அவனொரு வனையே முக்கணானென்னும் பெயரால் வணங்கி வழுத்தினமை,
“பணியிய ரத்தைநின் குடையே முனிவர்முக்கட்
செல்வர் நகர்வலஞ் செயற்கே”
(புறம் 6)
என்னும் மிகப்பழைய திருப்பாட்டில் அதனாசிரியர் காரிகிழார் ‘பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி’க்கு அறிவுரை தெருட்டு மாற்றானும், ஆரியராற் போற்றப்பட்ட ‘இந்திரன்,’ ‘வருணன்’, ‘அக்நி’ ‘மாதரிஸ்வான்’, ‘பிரமன்,’ ‘விஷ்ணு’ முதலியோரெல்லாம் உண்மையிற் கடவுளரல்ல ராய்ப் பிறந்திறக்கும் ஆருயிர்வகையிற் சேர்ந்தவராகலின் அவரெல்லாந் தம்மை யொத்த மாற்றாரால் தமக்குவரும் ஏதங்கள் களைய மாட்டாராய் இளைத்து வருந்தி எல்லாம் வல்ல இறைவனான முக்கணானை வேண்டிக் குறையிரப்ப, இறைவனே அவர்தம் அல்லல் களைந்து அவர்க்கருள் செய்தமை,
“ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்தகறைமிடற் றண்ணல்”
(புறநானூறு 55)
என்னும் பழைய பாட்டில் மதுரை மருதனிளநாகனார் குறிப்பிடுமாற்றானும், அங்ஙனமே கலித்தொகை என்னும் பழந்தமிழ்ப் பெருநூலும்,
“தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாகஅடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின்மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்உடன்றக்கான் முகம்போல ஒண்கதிர் தெறுதலிற்சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்ஏறுபெற் றுதிர்வன”
(பாலைக்கலி, 1)
என்று மொழிந்திடுதலானும், பின்னர்க் காலங்கடோறும் வடவாரியர் செந்தமிழ்நாடு புகுந்து குடியேற அவர் வணங்கிய தெய்வங்களும், இத் தமிழகத்தார் வணங்கிய வேறு சில தெய்வங்களும் இங்குள்ளாராற் றொழப்படலானபோதும், அவ்வெல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக முக்கட் பெருமானே முதல்வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தமை,
“ஏற்றுவல னுயரிய எரிமரு ளவிர்சடைமாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்,
கடல்வளர் புரிவளை புரையு மேனிஅடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையு மேனிவிண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்,
ணிமயில் உயரிய மாறாவென்றிப்பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனுமெனஞாலங் காக்குங் கால முன்பிற்றோலா நல்லிசை நால்வர்”
(புறநானூறு 56)
என மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் அருளிச் செய்திருக்கு மாற்றானும் நன்கறிகின்றன மல்லமோ?
இனி, அம் முழுமுதற் கடவுளாகிய முக்கணானுக்கு மக்களெல்லாரும் உரிமைப் புதல்வர்களாகலின் அவர்களெல்லாரும் ஒரே குலத்தினராய் ஒருவரோடொருவர் வேற்றுமை யேதுமின்றி அளவளாவி வாழ்தற்குரியரென்னும் உண்மையினையும் நம் பண்டைத் தமிழாசிரியர் கண்டறிந்தமை.
“யாதும் ஊரே, யாவருங் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாரா:
நோதலுந் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவதன்றே; வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்று மிலமே; முனிவின்இன்னா தென்றலும் இலமே; மின்னொடுவானந் தண்டுளி தலைஇ ஆனாதுகல்பொரு திரங்கும் மல்லற் பேர்யாற்றுநீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉமென்பது, திறவோர்காட்சியிற் றெளிந்தன மாகலின், மாட்சியிற்பெரியோரை வியத்தலும் இலமேசிரியோரை இகழ்தல் அதனினும் இலமே”
(புறநானூறு 192)
என்னும் ஆசிரியர் கணியன் பூங்குன்றனா ரருளிய திருப் பாட்டால் நன்கு விளங்கிக்கிடத்தல் காண்மின்கள்! இவ்வரும் பெறற் செய்யுளிற் பொதிந்துள்ள மெய்ப்பொருள் விழுப்பத்தை என்னென்பேம்! முழுமுதற் கடவுள் ஒருவனே யென்றும், அம் முதற்பெருந் தந்தைக்கு எல்லா உயிர்களும் இனிய மகாரே யாவரென்றும், அவ் வுயிர்களுள்ளும் மக்கள் எல்லாரும் ஆறறிவுடையராகலின் அவர் தம்மைத் தோற்றுவித்த எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையையும் அத் தந்தைக்குத் தாம் எல்லாம் அருமைப் புதல்வர்களாம் உரிமையையும் நன்குணரத் தக்க நிலையினரேயென்றும் இனிதுணர்ந்தன்றோ இச் செய்யுளின் முதற்கண் ஆசிரியர் ‘எல்லாம் எமக்கு ஊராகும்; எல்லாரும் எமக்கு உறவினராவர்;’ என்றருளிச் செய்தார். தேய வேற்றுமையானும், மொழி வேற்றுமையானும், நிறவேற்றுமை யானும், நடையுடை யுணவு வேற்றுமையானுந் தம்மை வேறு வேறாகக் கருதி ஒரு பாலார் மற்றொரு பாலாரை இழித்துத் தம்மை அவரின் மேலாக உயர்த்தி, ஒருவரோ டொருவர் போராடிக்கழியும் இம் மாநிலத்தில், மக்களெல்லார்க்கும் பிறப்பு ஒன்றாய் இருத்தலையும், இடம் மொழி நிறம் நடையுடை யுணவு முதலாயினவெல்லாஞ் சில சில காரணத்தாற் றோன்றி அப்பிறப்பின் ஒப்புமையினைச் சிதைக்கமாட்டாவாய்க் கழிதலையும் உண்மையான் ஆராய்ந்துணர்ந்து பார்ப்ப வர்களுந், தாங் கண்ட அவ் வரும் பேருண்மையினைப் பிறர்க்கெடுத்துரைப்பவர்களும் அரியரா யிருக்கின்றனரன்றோ? அதிலும், இக் காலத்துப் போலன்றி இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட அக்காலத்திலேயே இவ்வுண்மை யினைக் கண்டார் நம் செந்தமிழ்ச் சான்றோரே யல்லால் வேறு பிறரல்லாமையினை, அப்பண்டை மக்கள் நூல்களை ஆராய்ந் துணரும் முகத்தால் நாம் அறியுந்தோறும் நந் தமிழ்ச் சான்றோரின் தூய உண்மை அறிவின் மாட்சி நமக்குப் பெரியதோர் இறும்பூதினை விளைக்கின்றது!
தமிழரல்லாத ஆரிய முனிவர்களோ மக்களைப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுடையராகக் கற்பனை செய்து, அவருட் பார்ப்பனரே இறைவன் முகத்திற் றோன்றிய வரென்றும், ஏனை அரசர் வணிகர் ஏவலர் என்பார் இறைவன் றோளிலுந் தொடையிலும் அடியிலும் முறையே தோன்றியவ ரென்றும் ஒரு புனைந்துரை கட்டிப், பார்ப்பனர்க்கே இம்மை மறுமை இன்பநுகர்ச்சிகளை யெல்லாம் வரைந்து வைத்து, ஏனை யோரை யெல்லாம் அறியாமைக்குந் துன்பத்திற்கும் உரிய வராகக் கிளந்து அவரை இன்பத்திற்குப் புறனா வைத்தார்.
ஆனாலும், அவர் கட்டிய அப் புனைந்துரையும், அதன் வாயிலாக அவர் பிறரைத் தமக்கு அடிமைப்படுத்த முயன்ற முயற்சியும் பண்டைத் தமிழ் மக்கள் பாற் செல்லவில்லை. இனிப், பழைய நாகரிகமக்களில் எபிரேயரும் (ழநசெநறள) இசரவேல் என்னும் மாந்தர் குழுவே இறைவனுக்குரிய மக்கட் குழுவாமென்றும், ஏனையோர் அன்னரல்லரென்றும் நிறுவுதலிற் கடைப்பிடியாய் நின்றனர். இவரை யொப்பவே மகமதியருந் தம்மவரல்லாத பிறரையெல்லாங் கடவுளுக்குப் புதல்வர்களல்லரெனக் கரைகின்றனர். பௌத்தர்கள், மாந்த ரெல்லாரையும் ஒத்த நிலைமையில் வைத்து அறவுரை பகரினும் அவர்கட்குக் கடவுள் நம்பிக்கை யில்லாமையால், அவர் கூறும் பொதுவுரிமை பொருளற்றதா யிருக்கின்றது; ஏனெனில், தந்தையே யில்லாதபோது, புதல்வரென்னும் பெயரும், அவர் தமக்குள் நெருங்கிய உறவும், பொருளுக்குப் பொதுவுரிமையும் யாங்ஙனம் உண்டாம்? அவ்வவர் தேடும் பொருளும், அதற்காக அவ்வவர் செய்யும் முயற்சியும் பிறவு மெல்லாந் தனித்தனியே அவ்வவர்க்கே உரியவாகவன்றோ கொள்ளப்படும்? அங்ஙனங் கொள்ளப்படுங்கால் அவர் தம்முள் ஒருமித்து உறவாடி ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று வாழ்க்கை நலங்களை ஒருங்கு நுகர்ந்தின்புற் றிருக்குமாறு யாங்ஙனம்? ஆதலாற், பௌத்தர்கள் பகருங் கடவுளைக் கைவிட்ட அறவாழ்க்கையும் பயன் றருவதாகக் காணப்பட வில்லை. இனிச், சமணர்களும் பௌத்தர்களைப் போலவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர் களாதலால், அவர்கள் கூறும் அறவுரையும் மக்களை ஒருங்கு கூட்டி உறவாடச்செய்ய மாட்டாதாயிருக்கின்றது. மற்றுக் கணியன் பூங்குன்றனாரும், இவரது காலத்தும், இவர்க்கு முற்பட்ட காலத்தும் இருந்த தமிழ்ச்சான்றோருந் தழீஇ யொழுகிய கோட்பாடோ பிறவாயாக்கைப் பெரியோனான முக்கட் பெருமானையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடும் நீர்மையது. அங்ஙனம் அம் முழுமுதற் கடவுள் வழிபாட்டில் உறைத்துநின்ற தமிழ்ச்சான்றோர்களே, தாமுந் தம்மையொத்த எல்லாநிலத்து மாந்தர்களும் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுங்கூட எல்லாம் அம்முதற் கடவுளாகிய ஒரு பெருந்தந்தைக்கு உரிமைப் புதல்வர்களேயாய் நிற்கு முண்மையை ஐயந்திரிபின்றி யுணர்ந்தவர்களாதலால், அவர்களியற்றிய நூல்களிலும் நூற்பாக்களிலும், மக்களுட் பிறப்பளவில் உயர்வுதாழ்வு கற்பிக்கும் போலி வேறுபாடு ஓரெட்டுணையுங் காணப்படுகின்றிலது. அதுமட்டுமோ, கல்வியும் பிறநலங்களுமெல்லாம் எல்லாரும் பெறுதற்கு ஒத்த உரிமையுடைய ரென்பதூஉம் அவரால் அவரியற்றிய நூல்களிலும் பாக்களிலும் அடிக்கடி வற்புறுத்துரைக்கப்பட்டு மிருக்கின்றது.
அப் பண்டைத் தமிழாசிரியர் கோட்பாட்டினையே ஒருங்கு தழீஇ அதனிற் சிறிதும் வழுவாதொழுகிய தெய்வத் திருவள்ளுவனாரும்,
“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யால்”
(குறள் 972 )
என்றும்,
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்
கீழிருந்துங்கீழல்லார் கீழல் லவர்”
(குறள் 973)
என்றும்,
“விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.”
(குறள் 410)
என்றும்,
“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”
(குறள் 393)
என்றும்,
“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்”
(குறள் 2)
என்றும்,
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்
செகுத் துண்ணாமை நன்று”
(குறள் 259)
என்றும்,
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”
(குறள் 356)
என்றும்,
“யான்என தென்னுஞ் செருக்கறுப்பான்
வானோர்க்குயர்ந்த உலகம் புகும்”
(குறள் 346)
என்றும், அப் பண்டைத் தமிழ்ச்சான்றோர் கொள்கைகளையே தாம் அருளிச் செய்த திருக்குறளில் யாண்டும் வலியுறுத் துரைத்தல் காண்க. பிறப்பளவில் எல்லா மாந்தரும் ஒருங்கொத்தலால், அவ்வவர்தம் அறிவாலுங் குணத்தாலுஞ் செயலாலுமன்றி மற்றுப் பிறப்பொன்றே காரணமாகக் கொண்டு ஒருபாலாரை உயர்த்தலும் ஏனை யொருபாலாரை இழித்தலும் பொருந்தா வென்பதூஉம், பிறப்பளவில் தம்மை மேலோராகக் கருதியிருப்பவர் அறிவு குணச் செயல்களில் இழிந்தவராயின் அவர் மேலோராதல் செல்லா தென்பதூஉம், பிறப்பளவிற் கீழோராகக் கருதப்படுபவர் அறிவுகுணச் செயல்களில் உயர்ந்தோராயின் அவரே மேலோராவ ரென்பதூஉம், ஒருவரை மேலோருங் கீழோரும் ஆக்குவது கல்வியறிவின் உண்மை இன்மைகளேயாகலிற் கல்வியறிவில்லாதவர் எவராயிருப்பினும் அவர் மக்களுள் விலங்குகளே யாவரென்பதூஉம், அத்துணைச் சிறந்ததாகிய கல்வியறிவு காணப்பட்டதுகொண்டு காணப்படாத முழுமுதற் கடவுளை யறிதற்குத் துணைசெய்வதாகலின் அதனைப் பெற்றவர் கடவுளை யுணர்ந்து அவன் றிருவடிகளைத் தொழுது பெரும்பயன் பெறாராயின் அதனாற் பயனில்லை யென்பதூஉம், முழுமுதற் கடவுளைத் தொழுது பிறவிப்பயன் பெறுதல் கைவிட்டு மக்களைப் போலவே இறைவனால் அரிது படைக்கப் பட்ட ஆடு மாடு குதிரை முதலான உயிர்களைக் கொன்று ஆரியர் வேட்கும் உயிர்க்கொலை வேள்வி மேலும் மேலுந் தீவினையையே பெருக்குமல்லது தினைத்தனையும் நன்மை பயவா தென்பதூஉம், உலகு உயிர் முதல்வனைப் பற்றிய உண்மைகளைக் கற்றறிந்து மெய்ப்பொருளாகிய இறைவன் நிலையைக் கண்ட மெய்யறிவினரே மீண்டும் இப்பிறவிக்கு வராத பேரின்ப நெறிக்கட் செல்வரென்பதூஉம், முதல் வனல்லாத தன்னை முதல்வனாகவும் எப்பொருட்கும் உரியன் அல்லாத தன்னை அப்பொருட்கெல்லாம் உரியனாகவும் பிழைபடக் கருதிக் செருக்கும் முனைப்பு உளதாங்காறும் ஒருவன் தனது சிறுமையையும் எல்லாம் வல்ல இறைவனது பெருமையையும் உள்ளவா றுணரானாகலின் யான் எனதென்னுஞ் செருக்கற்றவனே இறைவன் திருவடியைத் தலைப்படுவனென்பதூஉம் ஆசிரியர் திருவள்ளுவனார்க்கும் அவர்க்கு முன்னும் பின்னுமிருந்த ஏனைத் தமிழ்ச்சான்றோர்க்கும் முடிந்த கொள்கைகளாகும்.
ஆகவே, ஈண்டுக் கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே, யாவருங் கேளிர்” எனக்கூறிய உரிமையுரை, இறைவனாகிய ஒரு முழுமுதற் றந்தைக்குத் தாமும் தம்மை யொத்த எல்லா மாந்தரும் உண்மையிற் புதல்வர்களேயாயிருக்குந் தன்மையினைக் கண்டு பகர்ந்த மெய்யுரையேயாம்.
இனி, அப் பெற்றியினரான மக்கள் தம்முட் பலர் நல்லராயுஞ் சிலர் தீயராயும் இருத்தற்குக் காரணம் என்னை யென்று நமக்குள் ஐயம் நிகழுமாகலின், அதனைச் தீர்த்தற்குத் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று அருளிச் செய்தார்; ஒருவர் தீயராதற்கும் ஏனையொருவர் நல்லராதற்கும் அவரவர்தம் எண்ணமும் முயற்சியுமே காரணமாகுமல்லால், அவர் அவ்வாறாதற்குப் பிறர் காரணராகாரென்னும் அரும்பே ருண்மையினை இப் புலவர்பெருமான் தேற்றியதுங் கருத்திற் பதிக்கற்பாற்று. எனவே, மக்கள் ஒவ்வொருவர்க்கும், மக்களினுந் தாழ்ந்த ஏனை யெல்லாச் சிற்றுயிர்கட்குந் தாந்தாம் வேண்டியவா றெண்ணும் எண்ணமுந் தாந்தாம் வேண்டியவாறு ஒன்றைச் செய்தலும் பிறிதொன்றைச் செய்யாது விடுதலுமாகிய முயற்சியும் உளவென்றும், அவ்வெண்ணத்தைச் செவ்வனே எண்ணி அம் முயற்சியைச் செவ்வனே செய்துவரும் உயிர்கள், அறிவு விளக்கத்திலும் அவ் வறிவு விளக்கத்திற் கேற்ற உடம்பின் அமைப்பிலும் உயர்கின்றனவென்றுந், தம்முடைய எண்ணத்தையும் முயற்சியையுஞ் செவ்வனே செலுத்தாத உயிர்கள் வரவர அறிவு விளக்கத்தை இழந்து அதற்குத்தக உடம் பினமைப்புங் குன்றப் பெறுகின்றன வென்றும் இஞ்ஞான்றை உயிர்நூலார் (க்ஷiடிடடிபளைவள) கண்டறிந்துரைக்கும் அரும் பேருண்மை, இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே கணியன் பூங்குன்றனாரால் நன்கறிந்துரைக்கப்பட்டமை வியக்கற்பாலதா யிருக்கின்றது. தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த,
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந்
தத்தங்கருமமே கட்டளைக் கல்”
(குறள் 505)
என்னுந் திருக்குறட் பொருளுங் கணியன் பூங்குன்றனார் கருத்தோடு ஒத்திருத்தலும் உணரற்பாற்று.
இனித், தீய நினைவு, செயல்களால் வருந்துதலும், நல்ல நினைவு, செயல்களால் அவ் வருத்தந் தீரப்பெறுதலும் அவ்வவர்தம் மனமுயற்சி மெய்ம்முயற்சிகளால் வருவனவேயன்றி, அவை தாமும் பிறரால் வருவன அல்லவென்பதனையும் “நோதலுந் தணிதலும் அவற்றோ ரன்ன” என்னும் மெய்யுரையால் அறிவுறுத் தருளினார். உலகிற் பெரும்பாலும் மாந்தர்க்கு வரும் மனநோய் உடல்நோய்கள் அவ்வவர் எண்ணும் எண்ணத்தாலுஞ் செய்யுஞ் செயலாலுமே வருகின்றனவென்பது, அவற்றின் காரணத்தை ஆராய்ந்து பார்ப்பவர்க்கெல்லாம் நன்கு விளங்கும். நல்லது வரினுந் தீயது வரினும் மனம் பொங்காதுங் கலங்காதும் அமைதியாயிருந்து உண்மகிழ்ந் திருத்தலிலேயே பழகி விடுவார்க்கு எத்தகைய மனநோயும் உடல்நோயும் வருவதில்லை; வேறு சில புறக்காரணங்களால் வரினும் ஒளிமுன் இருள் போல அவை மிகுவிரைவில் அகன்றொழியும். ஏனென்றால், நல்லெண்ணங்களிலேயே தோயப்பெற்ற மனமுடையார்க்கு அவரது முகத்திலே எல்லாரையும் எல்லா உயிர்களையும் இன்புறுத்தும் ஓர் அருளொளி தோன்றி மிளிர்ந்து கொண்டேயிருக்கும். அதனால், அவர்க்குத் தீதுசெய்ய வருவாரும், வரும் உயிர்களுங்கூட அவரை அணுகியவளவிலே தாங்கொண்ட தீயவெண்ணம் விலகி அவர்பால் அன்பு மீதூரப் பெறுவர். ஆகவே, ஒருவர் துன்புறுதற்கும், அது தீர்ந்து இன்புறுதற்கும் அவர்தாமே காரணராவரல்லது, பிறர் காரணராகாரென்றது வாய்மையே யாம்.
அற்றேல், தீயது வரின் மங்காதும், நல்லது வரிற் பொங்கி வழியாதும் அமைதியாயிருந்து உண்மகிழ்ந் துயிர் வாழ்தற்கு வழி யாதெனின்; அதனையும் ஆசிரியர் கணியன் பூங்குன்றனார் இயற்கை நிகழ்ச்சியில் வைத்து இனிதறிவுறுக்கின்றார். அவ்வியற்கை நிகழ்ச்சி யாவன; “சாதலும் புதுவதன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே” என்னும் அரிய தொடர் மொழிகளிற் காட்டப் பட்டனவேயாம். தமக்கு நெருங்கிய உறவினராவார் இறந்துபடுதல் கண்டு எவர்க்கும் ஆற்றொணாப் பெருந்துயர் உண்டாதல் காண்டுமாகலின், அத்துயர் தம்மால் வருவதல்லா
தாய்த் தமக்குறவினராகிய பிறரால் வருவதன்றோவெனின்; அற்றன்று, அதுவுந் தம்மால் வருவதேயாம்; யாங்ஙனமெனிற் காட்டுதும். ஒருவர் தமக்கு உற்ற உறவினராவர் இறந்து பட்டவழி மனம் பிறிதுற்றுப் பெருந்துயர்கூர்ந்து நைந்தழக் காண்டுமேயல்லாமல், தமக்குறவினரல்லாத ஏதிலார் அங்ஙனம் இறந்துபடக் கண்டவழி அவ்வாறு பெருந்தயர்கூரக் கண்டதுண்டோ, இல்லையன்றே. ஆதலால், உறவின் கிழமையினை நினைந்தன்றோ அவர்க்கு அவ் வருத்தந் தோன்றா நிற்கின்றது. மற்று, அவ்வுற வுரிமையுனை நினையாது, ‘உலகந் தோன்றிய காலந்தொட்டு, உலகில் உடம்பொடுகூடிப் பிறந்த வுயிர்களெல்லாஞ் சில காலம் அவ்வுடம்பிலிருந்து பின்னரதனைவிட்டு இறந்து போதல் எவராலும் மாற்றலாகா இயற்கைநிகழ்ச்சியாய்ப் போதருகின்றதன்றோ? இன்றைக்கு இவர் இறந்துபட்டால், நாளைக்கோ இன்னுஞ் சிலநாட் கழித்தோ யாமும் இறந்துபடுதல் திண்ணம்; ஆதலால் இதற்காக யாம் வருந்தி மனம் மாழ்குதல் எற்றுக்கு?’ என்று ஒருவர் சிறிது எண்ணிப் பார்ப்பரானால், அவர்க்குண்டாய அப் பெருந்துயரின் வன்மை குன்றிவிடும். அதுபற்றித்தான் சாதலும் புதிய நிகழ்ச்சியன்று, அது தொன்றுதொட்டு நிகழ்வ
தொன்றென, அதனால் நிகழும் பெருந்துயர் தீர்தற்கு ஆசிரியர் எளியதொரு வழிகாட்டினாரென்க.
அங்ஙனமே, நோயும் வறுமையும் இன்றிப் பல்வகையின் பங்களும் நுகர்ந்துவாழும் வாழ்க்கை வாய்த்துழியும், அஃது ஊழ்வினையானும் அதனோடொத்துத் தோன்றும் முயற்சியானும் ஒரு சிலர்க்குக் கைகூடுதல் தொன்று தொட்ட நிகழ்ச்சியாய்ப் போதரலின், அதுகண்டு மனம் பொங்கி வழிதல் அறிவின் மிக்கார்பாற் காணப்படுதல் இல்லை. ஏனென்றால், அத்தகைய இன்ப வாழ்க்கையி லிருந்தோர், ஊழ்வினை மாறி விட்டால் அதற்குத் தக மனமடி யுடையராகிச் செல்வமெல்லாம் ஒருங்கிழந்து, வறியராகி இரத்தலையும் ஆங்காங்குக் காண்கின்றோம்; ஆதலால், மெய்யறிவுடையார் செல்வ வாழ்க்கையைக் கண்டு மெய்ம்மறந்திரார் என்பது.
அதுபோலவே, எவரானும் வெறுக்கப்படுவதாகிய வறிய வாழ்க்கையில் ஒருவர் இருந்துழியும், அவர் உலகியல் நிகழ்ச்சியினை உண்மையான் ஆராயுந் தன்மையினராயின், அதுபற்றி மனம் அழியாராய், ‘இஃது ஊழ்வினைப் பயனாகலின் இதனான் மனம் வருந்துவ தெற்றுக்கு? பெற்றதுகொண்டு மனவமைதியாயிருந்து வாழ்தலே செயற்பாலது’ என்று மனநிறைவொடு தமது வாழ்க்கையினைச் செலுத்தாநிற்பர்.
இன்னும், மழைபெய்தலாற் பெருகியோடும் ஒரு பெரிய யாற்றுவெள்ளத்தி னிடைப்பட்டதொரு தெப்பமானது அவ் வெள்ளஞ் சென்றவழியே செல்லுமல்லது அதனை எதிர்த்துச் செல்லாதன்றே; அதுபோல, மேற்சென்ற பிறவிகளிற் செய்த பழவினைத் தொகுதியாகிய ஊழின்வழியே உயிர்களின் நினைவும் முயற்சியுஞ் செல்வதல்லாமல், அவ் வூழுக்கு எதிராய் அவை செல்லவல்லனவாய் இருத்தலைப் பெரும்பாலும் யாண்டுங் காண்கிலேம். அதனாற், பழைய நல்வினைப்பயனால் நினைவும் முயற்சியும் வலிவேறப்பெற்றுப் பெரியராய்த் திகழ்வாரைக் கண்டு வியந்து பேசுதலும் இலம்; பழைய தீவினைப்பயனால் நினைவும் முயற்சியும் பழுதுபட்டுச் சிறுமையுடைய ராயிருப்பாரைக் கண்டு இகழ்ந்துபேசுதலும் இலம். ஆனாலும், பெரிய ராயினாரை, வியந்து பேசுதல் ஒரோவொருகால் நமக்கு இன்றியமையாததாயிருப்பினுஞ், சிறியராயினாரை இகழ்ந்து பேசுதல் நமக்கெக்காலத்தும் இசையாது. அதனால் நமக்கு “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று ஆசிரியர் கணியன் பூங்குன்றனார் தாம் முற்றொடங்கிக் கூறிய ஒப்புயர்வற்ற கொள்கைக்குப், பிற்றொடர்ந்து கூறியவைகளை ஏதுவாக வைத்துரைத்த நுட்பம் உண்மையறிவினா ரெல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்பம் பயப்பதா மென்க.
இங்ஙனமாகப் பண்டை நல்லிசைத் தமிழ்ப்புலவரும் நல்லாசிரியரும் முழுமுதற் கடவுளாகிய முக்கணானையே தொழுது, தம்மையொத்த எல்லா மாந்தரையும் ஏதொரு வேற்றுமையுங் காணாது அவற்குரிய உண்மை மகாராகவே நினைந்து, எல்லாரிடத்தும் அன்புபூண்டு ஒருமித்து வாழ்ந்து வந்தமை இயன்றமட்டும் நன்கெடுத்துக் காட்டப்பட்டது. இனிப், பிற்காலத் தமிழ்ப்புலவரின் நிலையினைச் சிறிதெடுத்து விளக்குவாம்.



