முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்

1. மக்களின் முக்காலவுணர்வு

முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் நிலையினையும் பிற்காலத் துள்ள தமிழ்ப்புலவர் நிலையினையும் ஒப்பிட்டுப் பார்த்தாலன்றி, இனிவருந் தமிழ்ப்புலவர் தமது நிலையினை மேன்மேல் உயரச் செய்தலும், இத் தமிழ்நாட்டின்கண் உள்ள கல்வியறிவில்லாத் தமிழ்மக்களைக் கல்வியறிவில் உயர்த்துதலும் ஏலா. ஆதலால், முன்பின் என்னுங் கால வேறுபட்டால் நிலையும் வேறுபட்டுள்ள இருவேறு தமிழ்ப் புலவரின் தன்மை களை ஆராய்ந்துபார்த்தல் புலவர்க்கேயன்றித் தமிழ்மொழிப் பயிற்சியினை வேண்டுவார் அனைவர்க்கும் இன்றியமையாததாய் இருக்கின்றது.

மேலும், இப்போதுள்ள நிலையளவில் அமைதி பெற்றிருப்பது பெரும்பாலும் விலங்கினங்களில் மட்டுமே காணப்படுகின்றது. பசியெடுத்தவுடனே இரை தேடித் தின்பதும், பசி தீர்ந்தவுடன் உறங்குவதுங், காமவிருப்பு மிகுந்தக்கால் ஆணும் பெண்ணுமாய் மருவி யின்புறுவதும், அங்ஙனம் மருவுதலாற் பிறக்கும் இளங்குழவிகளை அவை தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பருவம் எய்துந்துணையும் வளர்த்து அதன்பின் அவற்றொடு தொடர்பின்றி யொழுகு வதும், விலங்கினங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இவ்வளவுக்குமேல், அவை தம்முடைய முற்கால நிலைமை யினை இப்போதுள்ள நிலைமையுடன் இணைத்துப் பார்த்து, இனிவருந் தமது எதிர்கால நிலைமையினை ஒழுங்குசெய்து கொள்ள வல்லன அல்ல. ஆனால் மக்களினும் தாழ்ந்த சிற்றுயிர்களில் எறும்பு தேனீ முதலான சில சிற்றுயிர்களோ தமது பிற்கால நிலைமையினையும் உணர்ந்து அதற்கேற்றபடி தமது நிகழ்கால முயற்சியினை இசைத்து நடக்குந் தன்மைய வேனும், அவை அங்ஙனஞ் செய்வதூஉந் தமக்குள்ள இயற்கை யுணர்ச்சியினால் அல்லாமற் பகுத்துணர்ச்சியினால் அன்று.

ஆனால், மக்களோ உண்ணல் உடுத்தல் உறங்கல் இன்புறல் என்னும் நிகழ்கால நுகர்ச்சியளவில் அமைதி பெறாது தாமுந் தம்மைச் சார்ந்தாரும் நண்பரும் பகைவருமென்னும் இவரெல்லாம் முன்னிருந்த நிலமையினை எண்ணிப்பார்த்து, அதற்கும் இப்போது நடைபெறாநின்ற தமது நிகழ்கால வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினையுந் தொடுத்தாராய்ந்து, இனி வரக்கடவ தாகிய தமது எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டுங் கருவிகளையும் இப்போதே தேடிப்பெற்று, அவ்வெதிர்கால வாழ்க்கையைக் குறியாக வைத்தே தமது நிகழ்காலமுயற்சியினை நடைபெறச் செய்கின்றனர். இருந்தவாற்றால், மாபெருங்கடல் ஒன்றிலே யுள்ள மலைகளையும் மணல்மேடுகளையும் மிகுவிரைவாய்ப் பேராற்றலுடன் செல்லும் நீரோட்டங்களையும் மென்காற்றும் புயற்காற்றும் வீசும் பருவங்களையும் கோள்கள் நாள்களின் இயக்கங்களையுந் தான் செல்லும் நாடு நகரங்களின் இருப்புக் களையும் முன்னதாக நன்கறிந்த மீகாமன் ஒருவனே அதன்கண் இப்போது தான் கொண்டு செலுத்தும் மரக்கலத்தினைச் செவ்வனே செலுத்த வல்லனாவனல்லது, அவைதம்மை முன்னறியாப் பேதையொருவன் அதனை அதன்கண் நடத்த மாட்டுவனோ? அதுபோல, இவ்வுலகவாழ்க்கை யென்னும் மாபெருங்கடலிலே தமது உயிர் வாழ்க்கை யென்னும் மரக்கலத்தினை நடத்தலுறும் மக்கள் ஒவ்வொருவரும், தமது வாழ்க்கைக்கு இசைவான காலம் இடங் கருவிகளையும் அதற்கு மாறான காலம் இடங் கருவிகளையும், தம்மோடு ஒத்த தொடர்புடை யாரையுந் தமக்கு மாறாய்நிற்கும் பகைஞரையும், தமக்கு ஒத்தாரைத் துணைக்கொண்டு அல்லாரை விலக்கி யொழுகும் வகைகளையும் முன்னறிந்து, தமது வாழ்க்கை எதன் பொருட்டு நடைபெறுகின்றது? அஃது எதன்கட் சென்று எவ்வாறு நிலைபெறும்? என்னும் வருங்கால உணர்வினையும் உடையராயினல்லது, அவர் தமது வாழ்க்கையினை அறிவும் பயனும் இன்பமும் மேன்மேற் பெருக நடத்த மாட்டுவாரல்லர். செல்கால வருங்கால நிகழ்ச்சிகளைத் தமது நிகழ்கால வாழ்க்கை யுடன் பிணைத்துப் பார்க்கவும், பார்த்து அதனை அவற்றிற்கேற்ப நடைபெறு விக்கவும் வல்ல தகுதி மக்களுக்கேயல்லாமல், மக்களல்லாத விலங்கினங் கட்கும் அவற்றினுங் தாழ்ந்த பிற சிற்றுயிர்கட்கும் பெரும்பாலும் இல்லையன்றோ? அத்தகைய தகுதியிருந்தும், அதனைப் பயன் படுத்தும் அறிவும் முயற்சியும் இல்லாதவர் மக்களெனப் படுவரோ? உணர்ந்து பார்மின்கள்!

செல்கால வருங்கால நிகழ்ச்சிகளைத் தமது நிகழ்கால வாழ்க்கையுடன் இயைத்து, அதனை மேன்மேற் பெருகும் அறிவாலும் மேன்மேன் முறுகும் முயற்சியானுந் திறம்பட நடாத்துவாரே, அதனை அங்ஙனம் நடாத்தாத ஏனை மக்களினுஞ் சிறந்த நாகரிவாழ்க்கை வாய்ந்தவராய்த், தாமுந் தாம் பிறந்த மக்கட்கூட்டமும் எல்லா நலங்களிலும் எல்லா ஆற்றல்களிலும் மிக்குயர்ந்து, அங்ஙனம் உயரமாட்டா ஏனைமக்களை யெல்லாந் தம் அடிக்கீழ்ப்படுத்து இனிது வாழக் காண்கின்றோம். எனவே, தாம் பிறந்த மக்கட் குழுவின் முன்னோர் இருந்த நிலையினை நன்காராய்ந்து காண்டலும் இனித் தாம் அடையப்போகும் நிலையினை முன்னாய்ந்து தெளிதலுந், தான்நின்ற நிலையில் நின்றே முன்னும் பின்னும் நோக்கும் அரிமாவையொத்த உரவோரின் மாண்டகு செயல்களாதலும், அங்ஙனம் முன்பின் நோக்காது பிறரைச் சார்ந்து அவர் தருவன பெற்று உண்டு உடுத்து உறங்கி உறுவதுநினையாது கழிதல் நரிமாவையொத்த இரவோரின் இழிதரு செயல்களாதலும் நன்கு பெறப்படும். பெறப்படவே, முன்பின் நோக்கி இம்மை மறுமைக்காவன செய்யாதவர், கல்வியில் மிக்கவரேயாயினுஞ் செல்வத்திற் சிறந்தவரே யாயினும் நிலைகளில் உயர்ந்தவரேயாயினும், அவரெல்லாம் உண்டு உறங்கி இன்புற்றுக்கழியும் விலங்கின்வாழ்க்கை யுடைய ராயிருத்தலால் அவரை அவ்விலங்குகளோடு ஒத்தவராக வாதல், விலங்கு கட்கில்லாப் பகுத்தறிவு தமக்கிருந்தும் அதனைப் பயன் படுத்தாமையின் அவ்விலங்குகளினும் கடைப்பட்டவ ராகவாதல் வைத்துவிடுதலே செயற்பாலது.

இனி, முன்பின் நோக்கித் தமது வாழ்க்கையைச் சீர்திருத்தி நடத்தல் மக்களாய்ப் பிறந்த மன்னுயிர்க்கே வாய்த்த பெரும்பேறாயினும், அப் பேற்றினைப் பயன்படுத்தி மேன்மேல் உயர்வார் சிறு கூட்டத்தவராகவே காணப்படுகின்றனர். அச் சிறு கூட்டத்தவருள்ளுந், தம் முன்னோரின் பழங்குடி வாழ்க்கையின் வரலாறுகளை யுணர்ந்து அவை விழுமியவாய் இருத்தலின் அவற்றாற் பயன்பெறுவார் மேலுஞ் சிறு பகுதியினராயுந், தாம் அறியப்புகுந்த தம் முன்னோரின் வாழ்க்கைநிலைகள் சிறந்த வல்லாமையின் அவற்றாற் பயன்பெறாதவர் பெரும்பகுதி யினராயும் இனித் தம்முன்னோர் எவ்வகையாலுஞ் சிறந்திலாமை யினாலும் அவரது வாழ்க்கையின் இயல்புகளை யுணர்தற்கு எத்தகைய கருவியும் வாய்த்திலாமை யினாலும் அவற்றை அறியப் புகுந்து ஏமாற்றம் அடைந்தவர் இன்னும் பெரும்பகுதியினராயுங் காணப்படுகின்றனர். இங்ஙனம் நால்வேறுவகைப் பட்ட மக்கட் குழுவினரையும் இவ் விந்தியநாட்டகத்தும் இதற்குப் புறம்பேயுள்ள நாடுகளிலும் இன்றுங் காணலாம். அவருட் சிலரை இங்கெடுத்துக்காட்டுவோம். தம்முன்னோரின் நிலைகளைப் பலவாற்றானுந் துருவி யாராய்ந்து, தமது இம்மை வாழ்க்கையைச் சீர்திருத்தி, மேன்மேல் உயர்ந்து வருங் குழுவினர் ஆங்கில நன்மக்களாகவே காணப்படுகின்றனர். இனித், தம் முன்னோரின் வரலாறுகளை ஆராயப்புகுந்து அவை சிறந்தனவாயிருத்தலின் அவற்றோ டொப்ப வாழ்க்கை செலுத்திப் பயன்பெறுஞ் சிறு குழுவினர் நம் தமிழ் மக்களுள்ளேயே ஆங்காங்குச் சிதர்ந்து காணப்படுகின்றனர். இனி, இஞ்ஞான்றை இந்திய மக்களிற் சிறு சிறு கூட்டத்தினராய் ஆங்காங்கு உயிர்வாழ்குவார் பலருந் தம்மை ஆரியரெனக் கருதித், தம்முன்னோரின் வாழ்க்கை இயல்புகளைப் பெரிது ஆராய்ந்தும், அம் முன்னோர் ஆற்றிய வேள்விகள் பல்லுயிர்க்கொலையுஞ் சோமப்பூண்டை நறுக்கிப் பிழிந்து ஆக்கிய கட்குடியும் பலவேறு சிறு தெய்வவணக்கமும் வாய்ந்தனவா யிருத்தலாலும், அவர் கட்டிய மிருதி நூற்கோட்பாடுகளைத் தழீஇ நடந்தால் இஞ்ஞான்றை உயிர் வாழ்க்கை தமக்கு இனிது நடவாதெனக் கண்டமையாலும் அவை தம்மைப் பெரும்பாலுந் தழுவி நடவாதவராகவே காணப்படுகின்றனர். இனித், தெலுங்கர் மலையாளர் கன்னடர் முதலான பண்டைத் தமிழ் மக்கட் பகுப்பினர், தம்முன்னோர் அறுநூறு எழுநூறு ஆண்டுகட்குமுன் எத்தகைய வாழ்க்கை செலுத்தினர், அவர் எவ்வெந்நூல்கள் எழுதிவைத்தனர் என்று ஆராய்ந்து பார்த்தும், அவ் வாராய்ச்சியாற் றம் முன்னோரைப்பற்றிய குறிப்பு ஏதுமே புலனாகாமையின் அவரெல்லாம் அதில் ஏமாற்றம் அடைந்தவராகவே காணப்படுகின்றனர்; அல்லதூஉம் இற்றைக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட அவர்தம் முன்னோர் சிலரும் வடமொழியிலுள்ள மாபாரதம் இராமாயணம் முதலான சில நூல்களை மொழிபெயர்த் துரைத்தவர்களே யல்லாமல், திருக்குறள் நாலடியார் சிலப்பதிகாரம் திருவாசகம் திருக்கோவையார் முதலான தனித்தமிழ் நூல்களைப்போல் எவையுஞ் செய்தவர் அல்லர். ஆகவே, தம் முன்னோரின் நிலைகளை யுணர்ந்து, அவ் வுணர்ச்சி வலியால் தமது நிகழ்கால வாழ்க்கையைச் சீர்திருத்தி, வருங்காலத்தில் தமது வாழ்க்கையை மேன்மேற் சுடர்ந் தொளிரச் செய்யவல்ல தகுதிவாய்ந்தவர் தமிழரும் ஆங்கிலரு மாகவேயிருத்தல் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாகும். இவ்விருவேறு வகுப்பினருள் ஆங்கிலர் தமது வாழ்க்கையைப் பலதுறையிலுஞ் சிறந்தெழச்செய்து, ஏனையெல்லாரிலும் அது மிக்கோங்கி ஒளிவீசத் திகழ்தலால், அவரைப் பற்றி நாம் இங்குப் பேசுதல்வேண்டா. மற்று, நந்தமிழ் மக்களிலோ அவர்போல் மேன்மேல் உயருந் தகுதி வாய்க்கப் பெற்றிருந்தும் அதனாற் பயன்பெறாதாரே மிகப் பலராயும், பயன்பெறுகுநர் மிகச் சிலராயும் ஆங்காங்கு ஒளி குறைந்து மின்மினியெனக் காணப்படுகின்றனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!