முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்

9. குடிமக்கட்குரிய கடமை

இனித், தமது கடமையினை நன்குணர்ந்து செங்கோல் ஒச்சும் அரசரது அரசியலும், உழுதொழிலை இனிது நடாத்தி அதனால் வரும் விளைபொருள்களை எல்லார்க்கும் பகுத்துக் கொடுக்கும் வேளாண்வாழ்க்கைத் தாளாளரையே அச்சாணியாகக் கொண்டு ஊர்ந்துசெல்லாநிற்கின்றது, இது,

“பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ் காண்பர்
அலகுடை நீழ லவர்”

என்றும்,

“உழுவார் உலகத்தார்க்காணி.”

என்றும், ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் கூறுமாற்றால் அறியப்படும். இன்னும் ஓர் அரசின்கீழ் வாழும் பல திறத்தரான குடிமக்கள் எல்லாரிலும், உழவும் வாணிகமும் மடியாது நடாத்தும் வேளாளக் குடிகளென்னும் அச்சுமரத்தின் இருபுறத்தும் உள்ள அவ்வுழவும் வாணிகமுமாகிய ஈருருளின் மேல் நின்றே அரசியலாகிய ஒரு பெருந்தேர் ஒடுகின்றதென்றும் உரைக்கலாம். இங்ஙனம் அரசியலுக்கு இன்றியமையாச் சிறப்பினரான வேளாண்மக்களின் வாழ்க்கை இனிது நடைபெறவே, அரசியல் இனிது நடைபெறுவதோடு, அவ்வரசின்கீழ் வாழும் ஏனைக் குடிமக்களின் வாழ்க்கையும் இனிது நடைபெறுமென்பது தானே போதரும். அஞ்ஞான்றிருந்த வேளாண்மக்கள் தாம் உலகிய லொழுக்கத்திற்கு முதல் வேராயிருப்பதனை நன்குணர்ந்து தங்கடமையின் வழா தொழுகினமையாற்றான், அவ்வுலகிய லொழுக்கஞ் செவ்வனே நடைபெறலாயிற்றென்று, பாண்டிமன்னனும் நல்லிசைப் புலவனுமாகிய இளம்பெருவழுதி என்பான்,

“உண்டால் அம்மஇவ் வுலகம், இந்திரர்அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்,
துஞ்சலும் இலர்,பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின்உலகுடன் பெறினுங் கொள்ளலர், அயர்விலர்,
அன்ன மாட்சி அனையராகித்தமக்கென முயலா நோன்றாட்பிறர்க்கென முயலுநர் உண்மையானே.”

(புறநானூறு 182)

என்று நன்கு விளக்கிச் சொல்லிய செய்யுள் நினைவிற் பதிக்கற் பாலதாகும். இச் செய்யுளை உரையாசிரியர் இளம்பூரணர், தொல்காப்பியப் புறத்திணையியல் 17 ஆஞ்சூத்திரத்திற்கு மேற்கோளாக எடுத்துக்காட்டி “நோன்றாட்பிறர்க்கென முயலுநர் வணிகவேளாளர்” என்றதூஉம் மறவற்க. விருந்து வந்தவர் தம்மினத்தவர் அல்லாக்கால், அவர் எத்துணைப் பசியோடிருப்பினும் அவரைப் புறத்தே வருந்தியிருக்க வைத்துக் கதவடைத்துத், தாம் அகத்தே தம்மவரோடிருந்து விலாப் புடைக்கத் தின்று, தாம் தின்று மிகுந்ததைப் பின்னர் அவ் விருந்தினர்க்கு இடும் ஆரியப் பார்ப்பனர் தம் தந்நல வொழுக்கம், பண்டை நம் தமிழாசிரியர்மாட்டும் அவரது ஆணைவழியொழுகிய உயர் குடிப் பிறப்பினரான பண்டை நம் வேளாண்மாந்தர் மாட்டும் இல்லாமை, “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத், தமியர் உண்டலும் இலர்” என இச் செய்யுண் முதலிற் சொல்லப்பட்டமையால் நன்கறியக் கிடக்கின்றது. வேற்றுமையின்றி மக்கள் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவி வாழும் நேயவாழ்க்கை, உணவருந்துங் கால் அவர் ஒருங்கிருந்து மகிழும் வழியல்லது உண்டாகாமை யானும், ஒருவர் தம்மை உயர்வாகவும் விருந்துவந்த பிறரைத் தாழ்வாகவும் நினைந்து அவரோ டருகிருந்து உணவெடுக்க ஒருப்படாது அவரை யொதுக்கித் தாம் தம்மினத்தவரொடு மட்டுந் தனியிருந்து அயிலுங்கால் அவர்க்கும் அப் பிறர்க்கும் மனவொற்றுமை எவ்வாற்றானும் உளதாகாமையானும் அத்தகைய வேற்றுமை யுணர்ச்சி யுடையார் மிகுந்துள்ள நாடு சிறந்த நேயவாழ்க்கைக்குரிய நாடாகாமையினை நன்கு வற்புறுத்தவே அதன் ஆசிரியனான அரசன், தமியர் உண்ணா மக்கள் தங்காலத்து மிக்கிருந்து உலக வாழ்க்கையினை அன்பினால் நடைபெறச் செய்த முதற்பெருஞ் செயலினை முதற்கட் கூறுவானாயினன். இதனால், அஞ்ஞான்றிருந்த அரசர்களும் அவரது செங்கோலரசின்கீழ் வைகிய வேளாண் மாந்தர்களும், உணவருந்துங்கால் எவரோடும் வேற்றுமையின்றி அன்பினால் அளவளாவி மகிழ்ந்திருந் தருந்திய நேய வாழ்க்கையின் முதன்மையுஞ் சிறப்பும் நன்கு புலனாகா நிற்கின்றன. அங்ஙனம் அவர் எல்லாரோடும் அளவளாவியது எதனாலென்றால், தம்மவரல்லாரை வெறுக்கும் ஆரியப் பார்ப்பனர் போலாது, அவர் எவரையும் வெறாது ஒழுகிய பெருங் குணத்தினாலேயாம் என்பது தெரிப்பான் “முனிவுஇலர்” என அவர்க்குரிய நல்லியல்பினை அரசன் அதன்பின் எடுத்துக் கூறினான். இனி, அஞ்ஞான்றை வேளாண்மாந்தர் பிறர் துயருறக் கண்டால், அது தீர்க்கும் வரையில் தாம் கண் துயிலாரென்பதும், மெய்ப்புகழ் விளைக்கும் ஓர் அரும்பெருஞ் செயலினைத் தமது உயிர் கொடுத்தாயினும் முடிப்பரென்பதும், பிறிதொரு செயல் பழியைத் தருவதாயின் உலகத்தையே அது செய்தற்குக் கூலியாகக் கொடுத்தாலும் அவரதனைச் செய்யா ரென்பதும், அதனால் அவர் மனக்கவலையே இல்லாத பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்திருந்தன ரென்பதும், இங்ஙன மெல்லாந் தமக்கென்றே வாழாது பிறர்க்கென்றே வாழ்ந்த விழுமிய முயற்சியினரான வேளாண்மக்கள் உண்மையினாலே தான் இவ்வுலகம் இனிது நடவாநின்ற தென்பதும் பாண்டி மன்னன் இளம்பெருவழுதியினால் மேலைச் செய்யுளில் எத்துணை அழகியவாக உருக்கமாக அடுத்தடுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றன!

இவ்வாறு அப் பண்டைநாள் வேளாண்மக்கள் குணமுஞ் செயலும் மேதக்கனவாயிருக்க, இஞ்ஞான்றை வேளாளர் இயற்கையுஞ் செய்கையும் எத்துணை மாறுபட்டன வாயிருக்கின்றன வென்பதையுஞ் சிறிது ஓர்ந்து பார்மின்கள்! “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு, இனத்தியல்ப தாகும் அறிவு” என்று தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த படி, இந்நாள் உள்ள சைவவேளாளர்கள் தம்மை முகத்தெதிரே ‘வைசியர்’ ‘க்ஷத்திரியர்’ என்றுந் தம்மைக் காணாவிடத்தே ‘சூத்திரர்’ என்றும் இரண்டகமாய்ப் பேசித் தமது பொருளைப் பலவகையாற் கவர்ந்துவரும் ஆரியப் பார்ப்பனர் சேர்க்கையால், தாமும் இப்போது தம்மவரல்லாதார் தம்மில்லத்திற்கு விருந்தினராய் வந்தால் அவரைப் புறம்பே வைத்துத், தாம் தம்மவரொடு மட்டும் உள்ளிருந்துணவருந்தித் தாம் உண்டு மிகுந்ததைப் பின்னர் அவர்க்கு இடுகின்றனர். வேளாளராகிய தம்மைச், ‘சூத்திரர்’ எனப் பார்ப்பனர் வாய்கூசாது சொல்லுதலைக் கேட்டும், அதற்கு மருந்து தேடாது அதனை ஏற்றுக்கொள்ளும் அவர், தமக்குப் பலவகையிற் பயன்படும் ஏனை இனத்தவர்களைத் தாமும் ‘சூத்திரர்’ என இழித்துரைப்பது எவ்வளவு நகைப்புக்கிடமாய் இருக்கின்றது! இவ் வேளாண்மக்களிற் பலர் தாம் பார்ப்பன வழக்கத்தைப் பின்பற்றி, இறந்துபோன தம் முன்னோர்க்கு வழிபாடு ஆற்றியபின், தம்மவரோடிருந்துண்டு கழித்த மிச்ச உணவையும் ஏழையெளியவர்க்குக் கொடுத்தால் தமக்குத் தீட்டுண்டாமெனப் பிழைபடக்கருதி, அதனை நிலத்தே வெட்டிய பள்ளத்திற் கொட்டிப் புதைத்து விடுகின்றார்கள்! தமக்குரிய உழவு தொழிலைத் தாம் செய்யாமல் தம்மகத்தே அவர் மடிந்து களித்திருக்கத், தமக்காக மழையிலும் பனியிலும் வெளியிலும் அல்லும் பகலும் பாடுபட்டுப் பயிர் செய்து அவ்வேழைகள் விளைத்துக் கொடுத்த பெருஞ்சோற்றை அவ்வேளாளர் தாம் நன்றாக விழுங்கிய பின்னும், எஞ்சிய சிறு மிச்சிற் சோற்றை யாதல் அவ்வேழை மக்கட்கு வயிறு குளிரக் கொடுத்தால் அவர் தீட்டுப்பட்டா மாண்டு போய்விடுவர்! ஐயோ! இவ்வாறு திருக்குறள் முதலான எந்தப் பழைய தெய்வத் தமிழ் நூலிலாவது சொல்லப் பட்டிருக்கின்றதா? வேளாளர் முதலான தமிழ் மக்கட்குச் சிறிதும் இசையாத வடமொழி நூல்களிற் பார்ப்பனர் தம்மையே எவ்வாற்றானும் உயர்த்தி வைத்து, ஏனையோரையெல்லாம் முற்றும் இழித்து வைத்து எழுதிய பொல்லா உரைகளை நம்பி, இஞ்ஞான்றை நம் தமிழ்மக்கள் இங்ஙனம் ஏமாந்து இழிபுபடுதலுந், தமக்குள் ஒற்றுமையின்றிச் சீர் குலைதலுந் தெய்வத்திற்கு அடுக்குமா? தம்மில்லத்திற்கு விருந்துவந்தவரும் பிறரும் எவராயிருப்பினும் அவரை முன் ஊட்டித் தாம் பின் உண்ணுதலன்றோ பண்டை நம் வேளாண்மாந்தர்க்குரிய விழுமிய ஒழுகலாறாக, மேலே, நல்லிசைப்புலவனும் அரசனும் ஆகிய இளம்பெருவழுதி கட்டுறுத்துச் சொல்லியிருக்கின்றான்? ஆசிரியர் தெய்வத் திருவள்ளுவனும்,

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”

(குறள் 82)

என்றருளிச் செய்திருத்தலை இஞ்ஞான்றே வேளாளர் அறிந்திருந்தால் இங்ஙனஞ் செய்து ஏதம் உறுவார்களா? அது கிடக்க.

இனிப் பழைய தமிழ்க்குடிமக்கள் தாஞ் செய்து போந்த பலவேறு தொழில்களாற் பலவேறு இனத்தவர்களாய்ப் பாகுபடுற்று நின்றார்களாயினும், அதுபற்றி ஒருவர் பிறர் ஒருவர் செய்யும் தொழிலையும் அத்தொழில் செய்வாரையும் இகழ்தல் இலராய்ப், பொதுக்கூட்டங்களின் எல்லாருமாய் ஏதொரு வேற்றுமையும் இன்றி ஒருங்கு அளவளாவி அன்பினால் இன்புற்று வாழ்ந்தது எதனாலென்றால், மக்களெல்லாரும் வாழ்க்கை நிலையில் ஓரியல்பினரேயாதலை அவர் நன்குணர்ந்து தெளிந்தமையினாலேயாம். எத்துணைப் பெருஞ்செல்வத்தில் இருப்பவராயினுஞ் செல்வமின்றி அன்றாடம் உழைத்துப் பெற்ற கூலிகொண்டு வயிறு பிழைப்பவ ராயினும், எல்லாரும் ஒரு நாளைக்கு உண்பது ஒருபடி அடிசிலேயன்றி அதற்குமேல் இல்லையே! அவரெல்லாரும் உடுப்பன மேலாடை கீழாடை இரண்டேயன்றி அவற்றிற்குமேல் இல்லையே! ஆதலால், மக்கள் செல்வத்தால் உயர்தலும் அஃதின்மையாற் றாழ்தலும் எல்லாம் வெறுஞ் சொல்லே! ஆகவே, பழந்தமிழ்மக்கள் வாழ்க்கையின் ஒத்த நிலைமையினை நன்குணர்ந்து பார்த்து, எவரையும் உயர்வுதாழ்வாக நினையாமல் எல்லாரையும் ஒத்த தன்மையின ராகவே நினைந்தொழுகினர்; ஒரோவொருகால் அவர் அந்நினைவிற் பிறழ்ந்து இறுமாப்புறக் கண்டால், அவரிடை யிருந்த நல்லிசைப் புலவர்கள் அவர்க்கு உடனே அவ்வுண்மை யினை அறிவுறுத்தி அவரைத் திருத்தி ஒருமையுறச் செய்து வந்தனர். இதற்கு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய ஒர் அரிய செய்யுள் சான்றாய் நின்று ஒளிக்கின்றது; அது வருமாறு;

“தென்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்கடுமாப் பார்க்குங் கல்லா ஒருவற்கும்உண்பது நாழி. உடுப்பவை இரண்டே,
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே,
செல்வத்துப் பயனே ஈதல்.
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.” (புறநானூறு 189)

‘உலகமெல்லாம் ஒரு வெண்குடை நிழலில் வைத்து அரசு செலுத்தும் வேந்தனேயானாலும், தான் பயிர்செய்த ஒரு தினைப்புனத்தின் விளைவைக் காட்டி யானைகளுங் காட்டுப் பன்றிகளும் புகுந்து அழித்துவிடாமல் இரவும் பகலுங் கண்ணுறக்கங் கொள்ளானாய் அதனைப் பாதுகாக்கும் ஒரு கானவனேயானாலும் எல்லாரும் ஒருநாளைக்குக் கொள்ளும் உணவு ஒரு நாழியேயாகும்; அவர் உடுப்பன இரண்டு ஆடைகளேயாகும்; இவையேயன்றிப் பிறப்பும் இறப்பும் நோயுங் கவலையுந் துன்பமும் இன்பமும் எல்லாம் எல்லார்க்கும் உள்ளனவேயாகும்; ஆதலாற், செல்வத்தாற் பெற்ற பயன் ஈகை அறங்களைச் செய்தலே யாகும்; செல்வத்தைப் பிறர்க்குக் கொடாமல் யாமே நுகர்வமெனில் அது கைகூடாமல் தவறுதல் பலவாகக் காணப்படுகின்றன’ என்றும் இச் செய்யுட்பொருள் மக்கள் வாழ்க்கையின் ஒத்த தன்மையினைப் பசுமரத்தாணி அறைந்தாற்போல் எவ்வளவு திறமாகத் தேற்றுகின்றது! இத்துணைச் சிறந்த அரிய அறிவுரையினை அரிய மிருதி நூல்களிற் காண்டல் இயலுமோ? அம் மிருதி நூல்கள் பிறப்பளவில் மக்களுள் உயர்வு தாழ்வு வகுத்துக்கொண்டு, அவ் வகுப்புக்கேற்ற பயன் இல்லாப் புறவினைகளைச் செய்யுமாறு நுவன்றுசெல்லக் காண்கின்றனமேயன்றி, அறிவாலும், அன்பாலும், அறவினையாலுஞ் சிறந்தாரைச் சிறந்தெடுத்துப் பாராட்டிப் பிறப்பளவில் மக்களெல்லாரும் ஒரு தன்மையினரே யென அவை அறிவுறுத்தக் காண்கிலேம். அதனால், அந் நூல்கள் அவைதம்மை ஆக்கிய பார்ப்பனக் குருவினராலன்றி, ஏனை எல்லா மக்களாலும் எல்லாச் சமயத்தாராலுந் தழுவப் படாமலே ஒழிந்தன. மற்று, மேற்காட்டிய உண்மை அறவுரை போல்வனவே பொதிந்துள்ள திருக்குறள் நாலடியார் போன்ற தமிழ் அறநூல்களோ, தமிழ்மக்களேயன்றி, உலகம் எங்கணும் உள்ள எல்லாமக்களும் எல்லாச் சமயத்தவரும் விரும்பித் தலைமீதேற்றுப் போற்றும் மேம்பாடு வாய்ந்தனவாய்த் திகழ்கின்றன. அது நிற்க.

இனி, மேலே விளக்கியவாறு அந்நாளிருந்த தமிழ்ப் பெருங்குடிகள் தாம் பிறப்பளவில் ஒத்த தன்மையினராதலை யுணர்ந்து, தம்முள் அன்பினால் அளவளாவுங் கடமையில் வழுவாதொழுகினமையாலும், ஒரோவொருகால் அவர் தம்மிற் சிலர் அக் கடமையின் வழுவக் கண்டால் அவர்காலத் திருந்த அறிவான் மிக்க நல்லிசைப்புலவராகிய சான்றோர் சிறிதும் அஞ்சாது விரைந்து சென்று அவர்க்கு அக் கடமையினை யெடுத்து இடித்துச் சொல்லி அவரைத் திருத்திவந்தமையாலும் அஞ்ஞான்றைக் குடிமக்கள் வாழ்க்கையும், அதற்குயிராய் உள்ள அரசவாழ்க்கையும், அன்பும் அறமும் நிரம்பித், தூய தீம்பால் பெய்த தூய பசும்பொற் குடமேயெனப் பொலிந்தன. அவ் விருதிறத்தார் வாழ்க்கைக்கும் இன்றியமையாத் துணையாய் நின்ற புலவர் வாழ்க்கையும், அத் தீம்பாற் பொலன்குடத்தைக் தமது திருக்கையிலேந்திய திருமாலேயெனத் தெய்வத்தன்மை மிக்கு விளங்கிற்று. அஃது அன்னதாதலைச் சிறிது விளக்குதும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!