
முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்
4. புலவர்களே நாகரிகத்திற்குத் தாயகம்
இனி, இதுகாறும் எடுத்து விளக்கியவாற்றாற் பண்டைத் தமிழ்மக்களே ஏனைப் பழையமக்கள் எல்லாரையும் விட முதன் முதல் நாகரிகத்தில் மிக்காராய்த், தாம் கற்ற நாகரிக வாழ்க்கை முறைகளைப் பிறர்க்கெல்லாங் கற்பித்தவரென்பது போந்ததாகலின், அத்தகைய தமிழ்மக்கள் அங்ஙனம் நாகரிகத்தில் முதன்மைபெறலானது யாங்ஙனம் என்பதனைச் சிறிது ஆராய்வாம். பழையநாள் மக்கள் வேட்டுவ வாழ்க்கையிலும், ஆடுமாடு மேய்க்கும் மேய்ப்பர் வாழ்க்கையிலும் இருந்தவரையில், தமக்கு உணவாக விலங்கினங்களைத் தேடித் திரிவதிலுங், தமக்குந் தாம் மேய்க்கும் ஆடுமாடுகளுக்கும் வேண்டும் பயறுகளையும் புல் நிலங்களையுங் தேடித்திரிவதிலுமே காலங்கழித்து வந்தமையின், அவர்கள் நாகரிகம் எய்துதற்கு வாயில் இல்லாமலே போயிற்று. ஆனால், அவர்களிற் கூர்த்த அறிவும் ஆராய்ச்சியும் உடையார் சிலர், அவ் விருவகை வாழ்க்கை நிலையுங் கடந்து, நிலத்தைக் கிண்டிக்கிளறி விதைகள் விதைத்து அவை ஒன்று பல்லாயிரமாய்ப் பயன்றரும் உழவுதொழிலைக் கண்டறிந்து, அதனை நன்கு நடாத்தும் முயற்சியும் உடையரான பின்னரே, இடம் இடமாய் அலைந்து அல்லற்படும் நிலையா வாழ்க்கையொழிந்து, சிற்சில வளவிய இடங்களில் நிலைபெறத்தங்கி இனிது வாழும் நிலையும் வாழ்க்கை உளதாயிற்று. இவ்வாறு உழவுதொழில் நாகரிக வாழ்க்கைக்கு முதற்பெருங் காரணமா யிருத்தல்பற்றியே ஆசிரியர் திருவள்ளுவர், சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் என்றும் உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றும், பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர் என்றும் அருளிச் செய்தார்.
இனி, நன்செய் புன்செய்ப் பயிர்கள் மிகுதியான விளை பொருள்களைத் தர அவற்றை விளைத்த வேளாளர் தாம் அவற்றைப் பகுத்துண்டு, மிஞ்சிய பொருள்களைப் பிறர்க்கு விலைசெய்து, பிறரிடமுள்ள அரிய பண்டங்களைத் தாம் விலைகொண்டு, இங்ஙனமாக அவர்கள் விற்றல் வாங்கல் செய்யப் புகுந்த காலந்தொட்டு வாணிக வாழ்க்கை உளதாயிற்று.
இவ்வாறு மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையா உழவு வாணிகம் என்னும் இருதொழிலும் பெருகவே, இவை தமக்கு உதவியாக வேறு பதினெண் கைத்தொழில்களும், அவற்றைச் செய்யும் மக்களும், அவர் வாழும் நாடு நகரங்களும், அவரைப் புரக்கும் அரசரும், நிலத்தினும் நீரினுஞ் செல்லுஞ் சகடைகள் மரக்கலங்களும், பலவேறு பிரிந்த தொழில்களின் நுட்பங்களை அறிவிக்குங் கலைகளும், அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களுங், கற்கும் மாணாக்கருங், கலைபயில் கழகங்களும், பொருள்நிலையும், உயிர்நிலையும், இம்மை மறுமை யியல்புகளும் ஆராய்ந்து இறைவனுண்மை தெளியும் அறிவு நூல்களும், எல்லாம்வல்ல ஒளியுருவினனான இறைவனைக் குறிவடிவில் வைத்து வழிபடுந் திருக்கோயில்களும், அறிவுநூல் கல்லா மாந்தர்க்கு இறைவன்றன் அருட்செயல்களைப் புலப்படுத்துந் திருவிழாக்களும் பிறவும் பெருகலாயின. இவை பெருகவே, மக்கள் அறிவும் இன்பமும் பெருகிய நாகரிகரிக வாழ்கை யுடையராயினர். ஆகவே, நாகரிக வாழ்க்கைக்குக் காரணம் உழவும் வாணிகமும் ஆமென்றும், அவை யிரண்டற்குங் காரணம் அறிவும் முயற்சியுமாமென்றும் அறிதல் வேண்டும்.
இனி, அறிவும் முயற்சியுமுடையார் தம்மில் ஒருங்கு கூடித் தாம் அறிந்தவைகளையுந் தாஞ் செய்பவைகளையுந் தம்முள் ஒருவர்க்கொருவர் தெரிவித்து மேலும் மேலும் அறிவிலும் முயற்சியிலுந் தாம் மேம்படுதற்குந், தம்போல் அறிவும் முயற்சியும் வாயாத ஏனைப் பொதுமக்கட்குத் தம் அறிவையும் முயற்சியையும் புலப்படுத்தி அவரை அவ்விரண்டிலும் மேம்படுத்துதற்கும் இன்றியமையாக் காரணமாயிருப்பது அவரெல்லாரும் வணங்குந் தமிழ் முதலான மொழிகளேயாமென்றும்; அம் மொழிகள் நாளுக்கொரு வகையாய்த் திரிபடைந்து ஒவ்வொரு மக்கட்குழுவில் ஒவ்வொரு வகையாய் மாறி வழங்கி, இலக்கண இலக்கிய நூல்களின்றி இலக்கண இலக்கிய வரம்பின்றிச், சிதைந்து கொண்டே போகுமானால் முன்னோர் கருத்தைப் பின்னோரும் பின்னோர் கருத்தை இனி வருவோரும் ஒரு மக்கட் குழுவினர் கருத்தைப் பிறிதொரு மக்கட் குழுவினரும் உணர்தற்கு வாயில் இன்றி, ஒருகாலத்தில் நிலைபெற்ற ஒரு மொழி வழக்கின் பயனாய்ச் சிறிதுண்டான சிறு நாகரிகமும் அம்மொழியின் திரிபாலுஞ் சிதைவாலுந் தானுந் திரிந்து சிதையுமாகலின் நாகரிக வளர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் அடிக்காரணமாவது தமிழ் முதலான மொழிகள் தம்முள் திரிபெய்தாமலும் அயல்மொழிக் கலப்பால் தம்முடைய சொற்கள் இறந்துபடாமலும் வழங்கப் பெறுதலே யாமென்றும்; இங்ஙனம் நாகரிக அடிக்காரணமான ஒரு மொழியின் நிலைபேறு அதனை நன்காய்ந்து பயின்று அதனை மேலும் வளம்படுத்தித் தம் கூட்டத்தார்க்குப் பயன்படுத்தும் புலவோரையே வேர்க்காரணமாய்க் கொண்டிருக்குமென்றும் நன்கு கருத்திற் பதித்தல் வேண்டும்.
இங்ஙனம் அறிவும் முயற்சியும் வாய்ந்த சிலரால் அவர் பிறந்த மக்கட்பகுதி உழவிலும் வாணிகத்திலுஞ் சிறந்தோங்க, அதற்கு முதற்பெருங்காரணமாய் நின்ற ஒருமொழியானது அவர் தம்மால் நிலைபேறுற்று நூல் வடிவில் வழங்கப்படலான காலந்தொட்டே, அம் மக்களுட் சிறந்த புலவரைப் பற்றியும் அவரியற்றிய நூல்களைப் பற்றியும் பிற்பிற் காலங்களில் வந்தார் அறியவேண்டுவனவெல்லாம் அறிந்து தாமும் அவர்போல் அறிவிலும் முயற்சியிலும் மேம்படுவாராயினர். ஆகவே, புலவர் என்பார் அறிவின்மிக்காரே யாவரெனவும், அறிவாவது உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்பவற்றின் இயல்புகளின் உட்புகுந்து அவற்றின் உண்மைகளை உள்ளவாறுணர்ந்து அவ் வியல்புகளுக்கொப்ப அவை தொழிற்படுங்கால் ஒன்று மற்றொன்றனுக்கு உறவாகவாதல் அல்லததற்குப் பகையாகவாதல் நின்று வினைசெய்யும் வகைகளையும், அவ் வினைகளால் மக்கள் தமக்கும் பிறர்க்கும் நலன் உண்டாக அவை தம்மைப் பயன்படுத்தும் முறைகளையும் ஒருங்கறிவதுவே யாமெனவும், அறிவு பெருகப்பெருக இன்பமும் உடன் பெருகுதல் இயல்பாதலல் உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களில் தாம் நுண்ணிதாக நுழைந்தாராய்ந்தறிந்த அழகிய கூறுகளைப் பாக்களிலும் உரைகளிலுஞ் சுவைபெருகவமைத்தும் பயில்வார்க்கு அறிவோடு இன்பத்தையும் பயக்கவல்லவர்களே நல்லிசைப் புலவராவரெனவும், பொருளியல்புகளை உள்ளவாறறிந்து உண்மை தெருட்டவல்ல நல்லிசைப் புலவர்கள் உண்மைக்கு மாறாவன சொல்லின் அறியாமையுந் துன்பமும் உண்டாமாகலின் அவையிற்றை மறந்தும் உரையாராய் உண்மையொடு பட்டனவே மொழிகுவரெனவுங் கருத்திற் பதித்தல்வேண்டும்.
இங்ஙனமாக ஒருமக்கட் குழுவின் விழுமிய நாகரிக வாழ்க்கைக்கு வேராய் நிற்கும் நல்லிசைப்புலவர், மேனாடு கீழ்நாடுகளில் நாகரிகமெய்திய எல்லா மக்கட்பரப்பின் இடையேயுங்கிடந்து, நாகரிகத்தை வளம்பெற, வளர்த்து, அவர்க்கு அறிவும் இன்பமுமாகிய பயன்களைத் தந்தது உண்மையே யென்றாலும், நாகரிக மாந்தரனைவர்க்கும் முன்னே விளக்கிக்காட்டியபடி நாகரிகத்தைக் கற்பித்து இன்றுகாறும் அழியாது நிற்குந் தமிழ்மாந்தர்க்குட் பண்டு தோன்றிய நல்லிசைப் புலவரை ஏனை அப்புலவர்கள் பெரிதும் ஒவ்வார், ஏனென்றால், அம் மற்றைநாட்டுப் புலவர், நம் பண்டைத் தமிழ்ப்புலவோரைப்போற் பொருளுண்மை உள்ளவாறறிந்து, அதனைத் தம்மனோர்க்கு அறிவுறுத்தி அவரைச் சீர்திருத்தியிருந்தால் அவரும் அவரது நாகரிகமும் அழிந்துபடுதல் ஆகாதன்றோ? ஆனால் இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டு களுக்கு முன்னமே நாகரிகத்தில் மிக்கோங்கிய எகுபதியரும் அவரது வாழ்க்கையும் இப்போதெங்கே? இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிகத்திற் சிறந்தாராய் வாழ்ந்த சாலடியர் பாபிலோனியர் மெக்சிகர் என்னும் மாந்தரெல்லாம் இப்போதெங்கே யுளர்? இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னமே நந்தமிழ் மக்களுடன் வந்து போராடிய ஆரியரும் அவர் தம் வழக்க வொழுக்கங்களும் இப்போதெங்கே? இற்றைக்கு இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னே உயர்ந்த நாகரிகம் வாய்ந்தாராய் விளங்கிய கிரேக்கரும், இரண்டாயிர ஆண்டுகட்கு முன் மேனாடுகளை யெல்லாந் தமது செங்கோலாட்சியில் வைத்து அரசு புரிந்த உரோமரும் இப்போதெங்கேயுளர்? இவரெல்லாந் தாம் இருந்தவிடத் தில்லாது மறைந்து போக, இவர்கள் வழங்கிய மொழி களெல்லாம் நூல்வழக்கிலன்றி உலகவழக்கிலில்லாது இறந்து போக, இவர்கள் எடுப்பித்த எவ்வளவோ மிகப்பெரிய எவ்வளவோ மிக அழகிய அரண்மனைகளுங் கோயில்களும் மாளிகைகளும் எல்லாம் இடிந்து பாழாய்க்கிடக்க, எகுபதியார் சாலடியர் பாபிலோனியர் முதலான அச்சீரிய மக்கட்கெல்லாம் நாகரிகத்தைக் கற்பித்த தமிழர்களும், அவர் வழங்குந் தமிழ்மொழியும், அவரெடுப்பித்த திருக்கோயில்களும் எல்லாம் இன்றுகாறும் பழுதுறாமல் நிலைத்திருத்தல் என்னை? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், அது முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் தம் நுண்ணறிவின் திறத்தையும், அவர் அதனால் மடியாத ஆள்வினை மேற்கொண்டு தமது தமிழ்மொழியையுந் தந்தமிழ் மாந்தரையும் விழிப்பாய் ஒம்பிய வகையையும் நன்கு தெரிக்கின்றது அற்றேல், இஞ்ஞான்று தமிழ்மொழிப் பயிற்சி குன்றி வருதலுந், தமிழ் மக்களிற் பெருந்தொகையா யுள்ளவர் கல்விப் பயிற்சியும் ஆராய்ச்சி யுணர்வும் இல்லாராய் உண்மை நாகரிகத்தில் வரவரக் குறைந்து, உலகத்திலுள்ள ஏனை மக்கட் பகுப்பினரெல்லாம் இம்மை மறுமைக்குரிய எல்லாத் துறைகளிலும் பெருமையுற்றுவர இவர்கள் எல்லா வகைகளிலுஞ் சிறுமையுற்று வரல் யாது காரணத்தாலெனின்; இஞ்ஞான்றைத் தமிழ்ப்புலவரிற் பெரும்பாலார் நுண்ணறிவும் நடுநிலை யாராய்ச்சியும் மடியா ஆள்வினையும் வாயாராய், அவை வாயாமையால் தமது தமிழ் மொழியையுந் தந்தமிழ் மாந்தரையும் விழிப்பாய் ஓம்புதற்குத் தக்க தகுதி யில்லாராய் இருத்தலினாலே யாமென்பது புலனாகின்றது. எக்காலும் நீர்வரத்துக் குன்றா ஓர்யாறு இருக்குந்தனையும் அதன் இருமருங்குமுள்ள நாடுநகரங்களெல்லாம் எல்லா வளனுங் குறைவரப்பெற்றுச் செழித்தல் போலவும், நந்தா மணி விளக்கு ஒன்று ஒளிருந்தனையும் அஃதொளிரும் இடனெல்லாம் இருளின்றி ஒளிகெழுமி விளங்குதல் போலவுங், குடிகளின் நலத்தையே எந்நாளுந் கோரும் ஒரு செங்கோன் மன்னன் அரசுபுரியுந்தனையும் அவனது வெண்கொற்றக் குடைநிழற்கீழ் வாழுங் குடிமக்கள் அனைவரும் இன்பவாழ்க்கையிற் றிகழ்தல் போலவும், விழுமிய புலவர் ஒருவர் இருந்தால் அவரைச் சூழ்ந்துவாழும் மாந்தரெல்லாரும் அவர்போல் விழுமியராய் வாழ்குவர். மற்று, விழுமிய புல்வர் இல்லாத மக்கட்குழுவோ, வறண்ட யாற்றையடுத்த ஊர்போலவும், ஞாயிறுந் திங்களும் விளக்கும் இல்லாஇராப் பொழுதுபோலவுஞ், செங்கோன் மன்னனில்லாக் குடிகள் போலவுஞ் சீரழிந்து போமன்றோ? அற்றேல், முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் நிலைக்கும் பிற்காலத்துள்ள தமிழ்ப் புலவர் நிலைக்கும் வேற்றுமை காட்டுகவெனிற், காட்டுதும்;



