முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்

5. பண்டைப்புலவர் தமிழ் ஓம்பினமை

இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ப்புலவர் அனைவருந் தமது தமிழ்மொழி திரிபடைந்து மாறுதற்கும் அயன்மொழிச் சொற்கள் அதன்கட் புகுந்து விரவுதற்கும் இடங்கொடாமல், இலக்கண இலக்கிய வரம்புகோலித், தாமுந் தனித்தமிழிலேயே நூல்கள் இயற்றி, அதனை ஒருமுகமாய் நின்று கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தனர். தமிழ்ச் சொற்கள் திரிபடையாமலும், அயன்மொழிச் சொற்கள் விரவுதலாற்றன்சொற்கள் இறந்துபடாமலும் வழங்கி வருதலாலன்றோ இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்களை நாம் இன்றைக்கும் எளிதிலே கற்றறியப் பெறுகின்றோம்? ஆசிரியர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டதாயிருந்தும், அதன் பாக்களின் சொல்லும் பொருளும் இற்றைக்கும் நம்மால் எளிதில் அறியப்படுகின்றன வல்லவோ?

கற்றதனால் ஆய பயன்என்கொல வால்அறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்காற்றான்
நோக்கி மெல்ல நகும்

என்றற் றொடக்கத்துத் திருக்குறட்பாவின் பொருள்களை அறியாதார் இஞ்ஞான்று தமிழ்மக்களில் எவரேனும் உளரோ? ஆனால், இச் செய்யுட்களில் வந்த சொற்கள் ஒவ்வொன்றும் நாளடைவில் வடிவு திரிந்து வேறுபட, அதனோடு அயன் மொழிச் சொற்களுங் கலந்து நந்தமிழ் மொழி வேறொரு மொழியாய் மாறுபடின், அதனைப் பேசுந் தீவினையுடைய நாம் நம் அருமைத் திருக்குறளை இன்று போல் எளிதில் அறிதல் கூடுமோ? உணர்ந்து பார்மின்கள்! இத்தகைய துயர்பட்ட நிலையன்றோ நம் பண்டைத் தமிழரினத்தைச் சேர்ந்தவர்களான மலையாளர் தெலுங்கர் கன்னடர் முதலாயினாரெல்லாம் இப்போதிருக்கின்றனர்? பண்டை நம் ஆசிரியர் நிறுத்திய இலக்கண இலக்கிய வரம்பில் நில்லாது, இத் தமிழ் மக்கட் பிரிவினர் நம் தமிழ்ச் சொற்களைத் தாம் வேண்டிய வேண்டியபடி யெல்லாந் திரித்துக் கொண்டு சென்றதல்லாமலும் வடமொழிச் சொற்களையும் வரை துறையின்றிச் சேர்த்து வழங்கிவந்தமையாலன்றோ, பண்டு தமிழாயிருந்த ஒருமொழியே இப்போது மலையாளந் தெலுங்கு கன்னடம் முதலிய பல மொழிகளாய்ப் பிரிந்து போக, அவற்றை வழங்கும் பழந்தமிழ் மக்களும் பல வகுப்பினராய்ப் பிளவுபட்டு, ஒருவர் மொழியினை மற்றவர் அறியாராய்க் குறுகிப் போயதனா லன்றோ, இவரெல்லார்க்குந் தாயகமான தமிழ் மொழிக்கண் உள்ள சீரிய தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், திருக்கோவையார் முதலான அரும்பெறல் நூல்களையும் அவரெல்லாம் அறியமாட்டாதவராயினர்! ஒருமொழி பலமொழியாவது அம் மொழித் சொற்கள் திரிபடைதலினாலே யாம்; ஒரு மக்கட் கூட்டத்தவராய் ஒற்றுமையும் வலிமையுங் கொண்டு வாழ்ந்தவர், பல வேறு மக்கட்பகுப்பினராய்ப் பிளவுபட்டு ஒற்றுமையும் வலிமையும் இழந்து வறுமைப்பட்டுத் தாழ்வது அவர் தமது பண்டைமொழிச் சொற்களைப் பலவாறு திரித்துப் பேசி அயன்மொழிச் சொற்களையும் எடுத்துச் சேர்த்து வழங்குதலினாலேயாம். பார்மின்!

பண்டு ஒருமொழி பேசிய ஒரு மக்கட் பெருங்கூட்டமாயிருந்த தமிழரே, இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகம், தோடம், கோடம், கோண்டம், கொண்டம், ஒரம், இராசமாலம் முதலான பன்மொழி பேசும் பலவகை மக்கட் பிரிவினர் ஆயினார். ஐயோ ! 1911 ஆம் ஆண்டு எடுத்த குடிக்கணக்கின்படி இவ்விந்திய நாட்டில் திராவிடமொழி பேசுவோர் தொகை ஆறுகோடியே இருபது நூறாயிரமாகும். இத்துணைப் பெருந்தொகையினரான மக்கள் அனைவருந் தமக்குப் பழமையை உரியதான தமிழ்மொழி யொன்றையே வழங்கிவந்திருந்தனராயின், அவர் எத்துணை ஒற்றுமையும் வலிமையும் நாகரிகமும் வாய்ந்தவராய் வாழலாம்! பழைய தமிழைப் பலவாறு சிதைத்துத் திரித்தமையாலும் வட சொற்களைக் கலந்து கொண்டமையாலுமன்றோ இத்தனைப் பெருங் கூட்டத்தவரும் வெவ்வேறு சிறு கூட்டத்தவராய் ஒருவரோ டொருவர் அளவளாவுதற் கிடனின்றி, வெவ் வேறினத்தவர் போல் வெவ்வேறு நாட்டவர்போல நாட்கழிக் கின்றனர்.

இவர் எல்லாருந் தமிழாகிய தமது பண்டை மொழியையே வழங்கிப் பிளவுபடாதிருந்தாற், குமரிமுதல் இமயம் வரையில் இற்றைக்குந் தமிழுந் தமிழருமே பிறங்கி நிற்கும் பெரும்பேறு உளதாமன்றோ! இமயம் முதற் குமரி வரை யிலுள்ளாரெல்லாரும் நம் பண்டைப் பேராசிரியர் இயற்றியருளிய தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம் முதலான ஒப்புயர் வில்லாச் செந்தமிழ் நூல்களைச செவ்விதிற்பயின்று இம்மைமறுமைப் பயன் களெல்லாம் ஒருங்கெய்துவரல்லரோ! ஆதலாற், பண்டைத் தமிழகத் திலிருந்து பிரிந்து போய்த் தமக்குரிய இனிய செந்தமிழ் மொழியை ஓம்பாது அதனைப் பலவகையால் மாறுபடுத்தி அதனால் தாமும் பல்வேறினமாய் மாறித் தம் பிறவிப் பயனையும் இழந்த ஏனை மக்கள் போலாது, நம் பழைய நல்லிசைப்புலவரது ஆணை வழி நின்று, அவர் வழிவந்த புலவருந் தமிழைத் தூயதாக ஒம்பி வளர்த்துத் தந்த பேருதவிக்கு எளியரேம் எங்ஙனங் கைம்மாறு செலுத்த வல்லேம்! நம் பண்டையாசிரியர் இயற்றியருளிய நூல்களிற் செல்லுக்கும் ஆடிப்பெருக்கிற்கும் இரையாய்ப்போன எண்ணிறந்த நூல்கள் ஒழிய எச்சமாக இஞ்ஞான்று நாம் நம் கைகளில் ஏந்தி மகிழுந் தொல்காப்பியம், பரிபாடல், இறைய னராகப் பொருளுரை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலான அருந்தமிழ்நூல்களைச் சிறிதாயினும் உற்று நோக்குவாமாயின், நம் பழைய பேராசிரியர் நம் ஆருயிர்த் தமிழன்னையை எவ்வளவு கருத்தாய், எவ்வளவு அன்பாய்ப் பாதுகாத்து நின்றனர் என்பது தெற்றென விளங்காநிற்கும். இம் முன்னாசிரியர் நூல்களில் நூற்றுக்கு ஒன்று இரண்டு விழுக்காடு கூட வடசொற்களைக் காண்டலரிது.

இனி, இற்றைக்கு ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகட்கு முன்னிருந்த தொல்லாசிரியர் ஆணைவழியே, அவர்க்குப்பின் இடைப்பட்டகாலத்திற் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார் முதலான விழுமிய நூல்கள் இயற்றிய ஆசிரியர்களும், அவர்களுக்குப்பின் புறப்பொருள் வெண்பாமாலை, பெருங்கதை, கல்லாடம், சூளாமணி, சீவக சிந்தாமணி, தேவாரம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், பெரிய புராணம் முதலான நூல்கள் இயற்றியருளிய ஆசிரியர்களுந் தமது செந்தமிழ்மொழியைத் தம்மால் இயன்றமட்டுந் தூயதாய் எவ்வளவு பாதுகாத்து வழங்கியுள்ளனர் என்பது அவையிற்றைச் சிறிதாராய்ந்து பயில்வாரும் நன்கறிவர், இடைக்காலத்திருந்த இவ்வாசிரியர் தமது காலத்திற் தமிழ்நாட்டிற் புகுந்த பௌத்த சமண்கோட்பாடுகளைத் தழுவியும் மறுத்துந், தமக்குரிய சைவ வைணவக் கோட்பாடுகளை ஆராய்ந்து நிறுவல் வேண்டினமையிற், புதிதுபுகுந்த பௌத்த சமணர் வழங்கிய வட சொற்கள் குறியீடுகள் வழக்குகள் கதைகள் முதலியவைகளை அங்ஙனமே எடுத்தும் அவற்றையொப்பத் தாமுஞ் சிலபல படைத்தும் முன்வழங்கியவைகளை மாற்றியும் நூல்கள் யாக்கலாயினர். அங்ஙனம் யாத்த நூல்களில் மட்டுமே நூற்றுக்கு ஏழுமுதற் பத்து விழுக்காடு வடசொற்கள் புகுந்து கலப்பவாயின. மற்றுச், சமயப்பொருள் தழுவாத இவ்விடைக்காலத்து நூல்களிலுங் கூட நூற்றுக்கு மூன்று நான்கிற்குமேல் வடசொற்கள் கலந்தில.

இனி, இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்னிருந்து கடைக்காலத்திற்றோன்றிய சிவஞானபோதம் முதலான பதினான்கு சித்தாந்த நூல்களிலும், இராமாயணம், பாரதம், காந்தம் முதலான மொழிபெயர்ப்பு நூல்களிலும் நூற்றுக்கு ஏழு முதற் பன்னிரண்டு விழுக்காடே வடசொற்கள் கலந்துள்ளன. ஆனாலும், இக்காலத்தெழுந்த நளவெண்பா கலிங்கத்துப்பரணி முதலான இலக்கிய நூல்களிலும், மூதுரை, நல்வழி முதலான அறநூல்களிலும் நூற்றுக்கு மூன்று முதல் ஐந்து வடசொற்களே காணப்படுகின்றன. ஆகவே, இக் கடைக்காலத்திருந்த ஆசிரியர்களுந் தமிழைத் தூயதாக வழங்குதலிற் கருத்துள்ள வர்களாகவே யிருந்தனரென்பது புலனாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!