முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்

3. பணிகர் ஆரியர் அல்லர், தமிழரே

அபிநா சந்திரதாசர் சிறிதாயினும் நமது தமிழ் மொழியினைக் கற்றிருந்தனராயின் இங்ஙனம் எல்லாம் உண்மைக்கு முழுமாறானவை களைக் கூறி இழுக்குற மனந் துணியார்! அவர் அது கல்லாமையினாலும், ஆரியர்க்கே ஏற்றஞ் சொல்லவேண்டுமென்னும் பற்றுள்ளத்தினாலும் பெரிதும் பிழைபடக் கூறினார். மேலும், பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இருக்கு வேதத்தில் ஒரு தினையளவு சான்று தானும் இல்லை. மற்று, அப் பணிகர் என்னும் வணிகக்கூட்டத்தார் ஆங்கீரசர் என்னும் ஆரிய இனத்தார்க்கு முற்றும் பகையானவரென்றும், அக்குழுவிலுள்ளார் அனைவருங் குவியல் குவியலாகப் பொன்னும் எருதுகளும் ஆக்களுங் குதிரைகளும் உடையவர்களா யிருந்தனரென்றும், பணிகர் தமது மலைமுழைஞ்சிலே தொகுத்து வைத்திருந்த சிறந்த செல்வத்தை ஆரிய ஆங்கீரசர் சுற்றிச் சுற்றித் திரிந்து பெரிது முயன்று தேடிக் கவர்ந்து கொண்டனரென்றும், பேரவாவுடைய பணிகர் ஒநாய்களாதலின் அவர்களை அழித்து விடுகவென ஆரியர்கள் விசுவதேவர்களை வேண்டினரென்றும் இருக்கு வேதம் (1, 83, 24, 6, 61, 14) நன்கெடுத்துக் கூறக் காண்டலிற், பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கற்பாலதாகும். மேலும், ஆரியர்கள் தாம் உவந்து வழிபடும் பெருந்தெய்வமான இந்திரனை வேண்டும் இருக்குவேத ஆறாம் மண்டிலத்து முப்பத்துநான்காம் பதிகத்தில் (6-34-2) அவ் விந்திரன் பணிகரைத் தன் அம்பினாற் றுளைத்து அவர்களது பொருளைக் கொள்ளை கொண்டமையும் நுவலப்பட்டிருக் கின்றது. இன்னும் இங்ஙனமே பணிகரைப் பற்றிச் சொல்லும் இடங்களிலெல்லாம் அவர்கள் ஆரியர்க்குப் பகையானவ ரென்றே இருக்குவேத வுரைகள் நுவலக் காண்டுமின்றி, அவர்கள் ஆரியவினத்தைக் சேர்ந்தவர்களென்று ஒர் எட்டுணையேனும் அவை கூறக் காண்கின்றிலேம். உண்மை இவ்வாறிருக்கப், பணிகர் ஆரிய வினத்தவரென்றும், அவரே தமது ஆரிய நாகரிகத்தைத் தமிழர்க்குங் கற்பித்தவ ரென்றும் அபிநா சந்திரதாசர் அதனை முழுதும் புரட்டிக்கூறியது மிகவும் வருந்தற்பாலதா யிருக்கின்றது. பற்றுள்ளம் உடையார் எத்துணைச் சிறந்த அறிவுடையராயினும், அவர் தமக்கு ஆகாத உண்மையினைக் கிளவாது புரட்டிவிடுவ ரென்பதற்கு இவ் வங்காள நண்பர் சான்றாய் நிற்றல் காண்மின்கள்!

இனிப், பணிகர் என்பார் ஆரியரல்லராயின் அவர் வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவரென்பது சிறிது ஆராயற்பாற்று. பணிகரென்பார் வாணிக வாழ்க்கையிற் சிறந்தவர்களென்றும், அவர்கள் காலினுங் கலத்தினுஞ் சென்று பெருந்திரளான அரும்பொருள் ஈட்டியவர்களென்றும் அவர்கள் மேனாடுகளிற் சென்று குடியேறி அங்கிருந்த மக்களையெல்லாம் நாகரிகம் அடையச் செய்தனரென்றும், அங்ஙனம் மேனாடுகளிற் சென்று வைகிய பணிகரே பின்னர்ப் பீனிசியர் என வழங்கப்பட்டனரென்றும், இவர்கள் கடல் கொண்டொழிந்த குமரி நாட்டிலிருந்து மேனாடுகளுக்குச் சென்றமையாலுங் குமரிநாடு குசத்தீவு எனப் பழைய புராணங்களிற் சொல்லப்பட்டமையாலும் இவர்கள் குசமக்கள் என ஆரியரால் அழைக்கப்பட்டன ரென்றும், இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளின்முன் அமைக்கப்பட்டு இப்போது தென் பாபிலோனியத்தின் கண்ணதான தெல்லோகத்திற் கண்டெடுக்கப்பட்ட கற்பாவைகளின் தலைகள் இஞ்ஞான்றை நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் முகமுந் தலையும் போற் செவ்வையாக மழிக்கப்பட்ட வடிவுடன் காணப்படுதலின் அவைகள் பண்டை வணிக மக்களான பணிகரின் வடிவத்தையே குறிக்கின்றன வென்றும் அபிநா சந்திரதாசரும் அவர் தழுவி யெடுத்துக் காட்டிய ஐரோப்பிய ஆசிரியர்களும் ஒருப்பட்டு உரைக்கின்றனர். ஆரியப்பற்றின்றித் திராவிட நாகரிகத்தின் உண்மைகளை உள்ளவாறு ஆழ்ந்தாராய்ந் துரைக்கும் வழியெல்லாம் அபிநா சந்திரதாசரின் ஆராய்ச்சி யுரைகள் பெரிதும் பாராட்டற் பாலனவா யிருத்தலையும் நம்மனோர் கருத்திற் பதித்தல் வேண்டும்.

இவ்வாறாகப் பல முகத்தானும் நன்காராய்ந்து காணுங் காற் பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமை திண்ணமாய்ப் பெறப்படுவதுடன், அவர்கள் தென்னாட்டின் கட் பண்டைநாட் டொட்டு வாணிக வாழ்க்கையிற் சிறந்து வாழ்ந்து வரும் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களாகிய தூய தனித் தமிழ்மக்களே யாதலுந் தெளியப்படும். இவர்கள் இருக்குவேதப் பதிகங்கள் இசைக்கப்பட்ட மிகப் பழைய காலத்தே பணிகர் என்னுந் தூய தனித்தமிழ்ப் பெயரால் வழங்கப்பட்டதூஉம் இதற்கொரு பெரு வலிய சான்றாகும். அற்றேற், பணிகர் என்பது தூய தமிழ்ச் சொல்லாதல் காட்டுக வெனிற், காட்டுதும். பணிகர் என்பது பண் என்னும் முதனிலையிற் பிறந்தது; பண்ணல் ஆவது ஒரு தொழிலைச் செய்தல்; பணி என்பது ஒரு தொழிலை யுணர்த்தும்; இங்கே கொண்டுவிற்றலாகிய தொழிலே பணியென விதந்து வழங்கப் பட்டது. இஞ்ஞான்றுங் கொண்டுவிற்றல் செய்வாரைத் தொழில் செய்வார் எனக் கூறுப. ஆகவே, பண்டைநாளிற் கொண்டு விற்றலாகிய பணி செய்வார் பணிகர் என வழங்கப் பட்டனர். பணிகர் என்னும் பழைய தமிழ்ச்சொல்லே பின்னர் வணிகர் எனத் திரிந்தது. இங்ஙனஞ் சில தமிழ்க் சொற்களிற் பகரவெழுத்து வகரவெழுத்தாக மாறி நடத்தல், பகுப்பு என்பது வகுப்பு எனவும், பன்றி யென்பது வன்றி யெனவுந் திரிந்து வழங்குதலில் வைத்துக் கண்டு கொள்ளப்படும். இனி, வணிகர் நடத்துந் தொழிலே வாணிகம் என வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாற்றால், இருக்குவேதத்திற் பண்டைத் தமிழ் வணிகர்க்குப் பெயராக வழங்கப்பட்ட பணிகர் என்னுஞ் சொல் தூய தனித்தமிழ்ச் சொல்லேயாதல் கடைப்பிடித்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இது தமிழ்ச் சொல்லாதல் தெரிந்தனராயின், அபிநா சந்திரதாசர், அகச்சான்று புறச்சான்றுகட்கெல்லாம் முழுமாறாகப் பணிகரை ஆரியவினத்திற் சேர்ந்தவராகக் கருதி, அவ்வாரியராற் பண்டைத் தமிழரும், அப் பண்டைத் தமிழராற் பிற நாடுகளிலுள்ளாரும் நாகரிகம் பெற்றனரெனப் பிழைபடக் கூறியிரார். இவ்வொரு சொல்லின் உண்மை யறியாமையின் எவ்வளவு பெரும்பிழை நேர்ந்துவிட்டது பார்மின்கள்!

இனிப், பணிகர் வழங்கிய மனா என்னும் நிறுத்த லளவைச் சொல், இருக்குவேத எட்டாம் மண்டிலத்து அறுபத்தேழாம் பதிகத்திற் (8-67-2) குறிப்பிடப்பட்டிருத்தல் கொண்டு அதனைத் தாசர் ஆரியமொழிச் சொல்லென்றதூஉம் பொருந்தாவுரையாம். இவர்க்கு முன்னரே இச்சொல்லை யாராய்ந்த ஆசிரியர் மாக்மூலர், இச் சொல் இருக்கு வேதத்தில் இவ்வோரிடத்தே தவிர வேறு எங்குங் காணப்படவில்லை யென்றும், வடமொழியிலுள்ள வேறெந்த நூலிலுங்கூடக் காணப்படாத இஃது இலத்தீன் கிரேக்கம் பினீசியம் முதலான மொழிகளிலெல்லாம் ஒரு நிறையளவுப் பெயராகவே வழங்கப்படுகின்றதென்றுங் கூறினாரேனும், இவ்வொரு சொல்லை மட்டும் ஆரிய மொழிப் புலவர் பாபிலோனி யரிடமிருந்து பெற்று வழங்கினாரென்றல் இசையாதென்றும் மொழிந்தனர். ஆனால், இராகொசின் என்னும் ஆசிரியரோ, இச்சொல் பழைய சாலடி நாட்டிலும் பாபிலோனிய நாட்டிலும் பண்டை நாளில் வழங்கப் பின்னர்க் கிரேக்க மொழியிற் புகுந்து அதன்பின் இலத்தீன் மொழியிலும் வழங்கலாயிற்றெனவுங், தென்றமிழ் நாட்டின் மலை நாட்டோரத்திலன்றி இந்தியாவில் வேறெங்கும் வளராத தேக்குமரத்தின் துண்டம் ஒன்று இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்குமுன் சாலடிநாட்டில் ஊர் என்னும் இடத்தில் எடுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் கணிருந்து கண்டெடுக்கப் பட்டமையாலும், பண்டைப் பாபிலோனியர் பிறநாடுகளிலிருந்து தம்மூர்க்குக் கடல்வழியே வந்த பண்டங்களைக் குறிக்கும் பெயர்கள் பெரும்பாலுந் தமிழ்ச் சொற்களாகவே யிருத்தலால் அப் பண்டங்களை மரக்கலங் களில் ஏற்றுவித்துவிட்ட துறைமுகமுந் தமிழ்நாட்டின் கண்ணதாகவே யிருத்தல்வேண்டு மாகையாலும், பண்டைத் தமிழ் மக்களைத் தவிரப் பிறரெவருங் கடல்வழியே மரக்கலம் ஊர்ந்துபோந்து மேனாடுகளில் வாணிகஞ் செய்வதில்லாமை யாலும், மனா என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாகவே இருத்தல் வேண்டுமெனக் கருதினார். இவ்வாசிரியர் கருதிக் கண்டமுடிபே உண்மை முடிபாகும். மனா என்னுஞ் சொல், மாக்மூலர் மொழிந்தவாறு பாபிலோனி யரிடமிருந்து ஆரியர் எடுத்த தொன்றாதல் இசையாது; ஏனென்றால், ஆரியர்க்கும் பாபி லோனியர்க்கும் இடையே அஞ்ஞான்று வாணிகம் நடந்ததே யில்லை. மேலும், அவ் விருவரும் எட்டாத் தொலைவிலுள்ள நாடுகளில் இருந்தவர் ஆனாற், பணிகர் என்னுந் தமிழ்மக்களோ, அப் பழைய நாளில் இவ்விந்திய நாட்டகத்தே ஆரியர் வருதற்கு முன்னரே செழுமையாயிருந்து, விருந்துவந்த ஆரியரின் நல்லாரை வரவேற்று அவர்க்கு வேண்டும் உதவிகளெல்லாஞ் செய்து, ஒரோவொருகால் அவ்வாரியராற் புகழ்ந்தேத்தப் பட்டவர்களாவரென்பது, இருக்குவேத ஆறாம் மண்டிலத்து நாற்பத்தைந்தாம் பதிகத்தால் (6-45-1) நன்கு விளங்கா நிற்கின்றது. ஆகவே, மனா என்னுஞ் சொல்லை, ஆரியர்கள், இராகொசின் ஆசிரியர் கருதியவாறு, தம்மை விருந்தோம்பித் தமக்குப் பொற்றிரள் வழங்கிய பணிகராகிய தமிழ்வணிக ரிடமிருந்தே பெற்று வழங்கினாரென்பது சிறிதும் ஐயுறவின்றித் துணியற் பாலதாயிருக்கின்றது.

நன்று, அங்ஙனம் மனா என்பது தமிழ்ச்சொல்லாயின், அது தமிழ் வழக்கிற் காணப்படுதல் வேண்டுமாலெனின்; வேண்டும்; தமிழ்மக்கள் அல்லாதார் வாயில் மனஃ, ம்னா, மின, மனா எனச் சிதைந்து தோன்றிய சொல்லே, தனித் தமிழ் மக்கள் வாயில் மணங்கு எனத் திருத்தமாகத் தோன்றி இன்றுகாறும் வழங்கிவரா நிற்கின்றது. எட்டு வீசை கொண்டதோர் எடையை மணங்கு என இஞ்ஞான்றைத் தமிழ் வணிகர் மிகுதியாய் வழங்கி வருகின்றனர். பண்டைக் காலத்திருந்த வணிகர் எட்டுவீசை கொண்ட எடைக்கே அதனை வழங்கினரோ, அல்லததனிற் குறைந்த எடைக்கே அதனை வழங்கினரோ, இதுதான் என்று தெரிதற்குக் கருவியில்லை. அஃதெவ்வாறா யினும், மணங்கு என்பது ஒரு நிறுத்தலளவைக் குறிக்குங் தூய தமிழ்ச் சொல்லே யாதலும், பண்டைத்தமிழரொடு வாணிகம் நடாத்திய பண்டை மேனாட்டுமக்கள் அனைவரும் அதனைத் தமிழரிடமிருந்து கற்றே தாமும் அதனை நெடுக வழங்கினாராதலும் மறுக்கப் படாத உண்மைகளாமென்பது. இங்ஙனமாக மணங்கு என்பது தூய செந்தமிழ்ச் சொல்லாதலும், அது பண்டை ஆரியர் வாயில் மனா எனத் திரிந்து வழங்கியதாதலும் அபிநா சந்திரதாசர் சிறிதாயினும் அறிந்திருந்தனராயின், அதனை ஆரியச் சொல்லெனப் பிழைபடக் கொண்டு ஆரியநாகரிகமே ஏனை யெல்லா நாகரிகத்திற்கும் பிறப்பிடமா மெனக் கூறி யிழுக்கி இரார். பார்மின்! செந்தமிழ் உணர்ச்சி பெறாமையால் தமிழர் ஆரியர் வரலாறுகளை எழுதுவோர் எத்துணைப் பிழை பாடானவைகளை எழுதி உண்மையைப் பாழ்படுத்து கின்றனர்! அது கிடக்க.

இனி, இவ்வாறு உலகமெங்கணும் நாகரிகத்தைப் பரவி விளங்கச்செய்த பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேராதவராய், ஆரியராற் பெரும்பகைவராகக் கருதப்பட்ட பண்டைத் தமிழ்மக்களில் வணிகவகுப்பைச் சேர்ந்தவராய்த், தமது வாணிக வாழ்க்கையிற் பயன்படுத்திவந்த பல அளவைச் சொற்களில் மணங்கு என்பதனை ஆரியர்க்கும் பிறர்க்குங் கற்பித்தவரென்பது பெறப்படவே, பண்டைநாளில் தமிழுந் தமிழ் நாகரிகமுமே உலக மெங்கணும் பரவி, ஏனை மக்கள் எல்லாரையும் நாகரிகத்தில் ஓங்கச்செய்த வாய்மையுந் தானே பெறப்படும். இவ்வுண்மையை முன்னரே நன்கு தெளியக் கண்டன்றோ நந்தமிழ்மக்களில் முதலாராய்ச்சிப் பேரறிஞராய்த் திகழ்ந்த சுந்தரம்பிள்ளை யவர்கள் தமது மனோன்மணீய நாடகத் தமிழ்த் தெய்வவணக்கத்திற்,

சதுமறை யாரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே

என்று இனிது இசைத்தார்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!