முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்

14. பிற்காலத் தமிழ்ப்புலவர்

இவ்வாறு திருவள்ளுவர் காலத்திற்குப் பின்னேயிருந்து உமாபதிசிவனார் காலத் திறுதிவரையில் திகழ்ந்த இடைக்காலம் போக, அதற்குப் பின் அறுநூறு ஆண்டுகளாகச் செல்லுங்காலமே தமிழ்மொழிக்குப் பிற்காலமெனவும், இதன்கண் இருந்த தமிழ்ப் புலவர்களே பிற்காலத் தமிழ்ப் புலவரெனவும் பகுத்தறிதல் வேண்டும். இப் பிற்காலத் தமிழ்ப்புலவரிற் பெரும்பாலார் தமிழுக்கு ஆக்கமாவது ஏதேனுஞ் செய்தனரோவென்று ஆராய்ந்துபார்ப்பின், அவர் அத்தகைய தேதுஞ் செய்தில ரென்பதே தெளியப்படுகின்றது. ஆக்கமாவது செய்யாதொழியினும், அதற்குக் கேடு தருவதேனுஞ் செய்யாது வாளா இருந்திருப்பரேல் அதுவே அவர் தமிழுக்குச் செய்த ஆக்கமாகும் ஆனால், அவர், பண்டைத் தமிழாசிரியரும் அவர்க்குப்பின் இடைக்காலத்தே வந்த தமிழாசிரியரும் செந்தமிழ் மொழியை இயற்கைச் சொற்பொருள் வகையிற் பேணியவாறுபோற் பேணாது, அவரொடு திறம்பிச் செயற்கைச் சொற்பொருட் குறுநெறியே புகுந்து அதனொளியையும் வனப்பையுங் குறைத்து அதனைக் குற்றுயிருங் கொலையுயிருமாய் வலிவிழந்து கிடக்கச்செய்தனர். இவர் இங்ஙனஞ் செய்யலானது, பண்டைத் தமிழ்வளனும் அதனையோம்பிய பேராசிரியரின் நுண்மான் நுழைபுலனும் ஒரு தினையளவுதானும் இவர் ஆராய்ந்து அறியப் பெறாமை யினாலேயாம். சொல்வகையானும் பொருள் வகையானும் இவர் தமிழுக்கிழைத்த தீங்கு பெரிது! பெரிது!

இவர் சொல்வகையாற் செய்த தீங்கு, ‘தலைக்குத்தக முடியமைப்பேன்’ என்னாது, ‘முடிக்குத்தகத் தலையைச் சீவுவேன்’ என ஒரு பொற்கொல்லன் முடிவேண்டினார் தலையை ஒரு கூர்ங்கத்தியாற் சீவப் புகுந்தாற்போல, இவர் பொருளுக்குத்தகச் சொல்லமையாமற் சொல்லுக்குத் தகப் பொருள் புகுத்துவதிலேயே கருத்தீடுபட்டு நின்றார். இப்பிற்காலப் புலவர் ஆக்கிய ‘அந்தாதிகள்’ ‘கலம்பகங்கள்’ ‘கோவைகள்’ ‘உலாக்கள்’ ‘பிள்ளைத் தமிழ்கள்,’ ‘பரணிகள்,’ ‘விடுகவிகள்,’ ‘சீட்டுக்கவிகள்,’ போல்வனவெல்லாம் பெரும்பாலும் பொருள் சென்ற வழியே சொற்செல்லாமற், சொற்சென்றவழியே பொருள் செலுத்தப்பட்டு, பொருட்பயன் தருவனவல்லவாய்ப் பொலிவிழந்து காணப்படுகின்றன. நூல் பயில்வதெல்லாம் உணராத பொருளை உணர்ந்து அறிவுபெறுதற்கும், உணர்ந்த பொருளை மேலும் அழகுறக் கண்டு இன்புறுதற்குமேயாம். இவ்வாறு அரிய பொருளும் அழகிய பொருளும் நுவலப்படுங்கால் அவற்றின் இயல்புக்கிசைந்த சொற்கள், ஓர் இழையில் முழுமணிகள் கோக்கப்பட்டாற்போற், கவினுறப் போந்தமைய உருவானும் உள்ளுறை பொருளானும் அறிவும் இன்பமும் மேன்மேற் பெருகச் செய்வதே ஒரு விழுமிய நூலின் தன்மையாகும். மற்றுச், சொற்களைத் திரித்தும் புணர்த்தும் பலவாறு பிரிந்து பொருடர இயைத்தும் பெரிது அறிவுழன்று செய்த ஒரு நூலை அங்ஙனமே அறிவுழன்று பலநாட் பயின்றுங் கடைசியாக அப் பயிற்சியாற் பெற்ற பயன் யாதென்று அறியலுறுவார்க்கு, அதனாற் போந்த பொருட்பயன் ஏதுமே இல்லையென முடியுமாயின், அஃது “உமிக்குற்றிக் கை சலித்த” பான்மையாய் முடியுமன்றே? இதனை ஓர் எடுத்துக்காட்டான் விளக்குதும். துறைமங்கலஞ் சிவப்பிரகாச முனிவராற் செய்யப்பட்ட “பழமலையந்தாதி” என்பது அந்தாதி நூல்களிற் சிறந்த தொன்றாக வைத்துப், பழையவழியே தமிழ்கற்கும் மாணவர்க்குத் தமிழாசிரியரான் முதன்முதற் கற்பிக்கப்பட்டு வருகின்றது. யாம் எமதிளமைக் காலத்தில் ஆசிரியரது கட்டளையால் முதன்முதற் பயின்றதும் இவ்வந்தாதியே யாகும். இதிற் போந்த செய்யுட்களில் ஒன்று வருமாறு :

‘ஒழியாக் கவலையொழிவதென் றோசொல் லுழல்புலத்தின்வழியாக் கவலை யிடைப்படு மானின் மயங்கிநின்றுபழியாக் கவலை மனமே பரந்து பரவிலைவேல்விழியாக் கவலை மகளிறை தாழ்பழ வெற்பினையே.’

இச் செய்யுளின் ஒவ்வோரடியிலும் முதலிரு சீரின் கண்நின்ற சொற்கள் முதற்சீர் முதலெழுத்தொழிய ஏனையெழுத் தெல்லாம் ஒரே யுருவினவாயிருத்தல் காண்க. அங்ஙனம் அவை ஒரே யுருவினவாய் இருந்தாலும். பொருளுரைக்கப் படுங்கால் அவை வெவ்வேறு சொற்களாகப் பிரிந்து வெவ்வேறு பொருள்களைத் தரல்வேண்டுமென்பது இன்னோரன்ன அந்தாதி நூல்களுக்குப் பிற்காலத்தார் சொல்லும் இலக்கணமாகும். அதற்கியையவே இச் செய்யுளின் முதலிருசீர்க்கண் நிற்குஞ் சொற்கள் வேறு வேறாகப் பிரிந்து வேறு வேறு பொருடரல் காண்மின்கள்! முதலடியின் முதலிருசீர்ச்சொற்கள் ‘ஒழியாத’ ‘கவலை’ எனப் பிரிந்து ‘நீங்காத மனக்கவற்சி’ எனப் பொருள்படுகின்றன! இரண்டாமடியின் முதலிருசீர்ச்சொற்கள் ‘வழி’, ‘யாக்கு’ ‘அ’ ‘வலை’ எனப் பிரிந்து ‘வழியிலே கட்டிவைக்கும் அந்தவலை’ எனப் பொருள் தருகின்றன; மூன்றாமடியின் முதலிருசீர்ச் சொற்கள் ‘பழி’ ‘ஆக்க’ ‘வல்லை’ எனப் பிரிந்து ‘பழியை உண்டாக்கவல்லை’ எனப்பொருள் பயக்கின்றன! இவற்றுள் ‘வல்லை’ என்னுஞ் சொல்லின் நடுநின்ற லகர ஒற்றுக் கெட்டு ‘வலை’ என நின்றதாக அதனை வைத்தல் வேண்டும்; நான்காம் அடியின் முதல்நின்ற சொற்கள் ‘விழி’ ‘ஆக்க’ ‘அலை’ எனப் பிரிந்து முன்னும் பின்னுமுள்ள ‘வேல்’ ‘மகள்’ என்னுஞ் சொற்களோடு இயைந்து ‘வேலையொத்த விழியினளாய்ச் செல்வத்தைத் தரும் அலைமகள்’ எனப்பொருள் தருகின்றன; ஈண்டுச் செல்வம் எனப்பொருள்படும் ‘ஆக்கம்’ என்னுஞ்சொல் ஈறுகெட்டு ‘ஆக்க’ என நின்றதெனக் கொள்ளல்வேண்டும்; ‘அலைமகள்’ என்றது கடலரசன் புதல்வியாகிய உமைப் பிராட்டியாரை. இவ்வாறு முதலிரு சீர்ச்சொற்கள் வேறு வேறாகப் பிரிந்து வேறு வேறு பொருள்களைத் தருமாறு இயற்றப்பட்ட இச் செய்யுளின் பொழிப்புரை இது:

‘நீங்காத மனக்கவற்சி நீங்குவது எந்நாளிலோ சொல்; தான் உலவித்திரிகின்ற கானகத்தின் வழியிலே வேட்டுவர் கட்டிவைத்த வலையினிடத்தே அகப்பட்டுக் கொண்ட ஒரு மானைப்போல் உணர்வு திரிபுற்று நின்று, என்னைப் பழிக்கு உள்ளாக்கவல்லை என் மனமே! உள்ளம் விரிந்து வழுத்துகின்றிலை, வேலை யொத்த விழியினளாய்ச் செல்வத்தைத் தரும் அலைமகளாகிய உமைப் பிராட்டியார்க்குக் கணவனாகிய சிவபிரான் தங்கியிருக்கும் பழமலையை.’

மனமே! அலைமகளிரை தாழ் பழவெற்பினைப் பரவிலை; (அதனால்) ஒழியாக்கவலை யொழிவதென்றோ சொல்! வலையிடைப்படு மானின் மயங்கிநின்று பழியாக்கவல்லை என வினைமுடிவு செய்க.

இச் செய்யுளைச் சொன்ன அளவிலே சிறந்த தமிழறிவுடை யாரும் இதன் பொருளை உடனே அறியாது திகைத்துப், பின்னர்த் தமதறிவை அதன்கண் உய்த்து, ஒவ்வோரடியின் முதலிருசீர்ச்சொற்களையும் பலவகையாலெல்லாம் பிரித்துப் பிரித்துப் பார்த்து, அதன்பின் இதன் பொருள்களை உணர வல்லராவர். இதனை முதற்கட் பயில்வார் இதன் சொற்களை அங்ஙனம் பலவகையாற் பிரித்து வருந்திப் பின்னர் இதன் பொருளை அறிதல் போலவே இச் செய்யுளை அமைக்கப் புகுந்த புலவரும் முதலிற் றாங் கருதிய பொருளைத் தாங் கருதியவாறே அமைக்க இயலாதவராய், முதலிரு சீர்ச்சொற்கள் பலவகையிற் பிரிந்து பலவாறு பொருடருமாறு பலவகையால் வருந்தியமைத்து, அங்ஙனம் அமைத்த சொற்பொருள்கட் கேற்ப ஏனைச் சொற்பொருள்களைத் தொடுத்து இச் செய்யுளை மிகவருந்தி யமைத்தாராவர். இங்ஙனமெல்லாம் வருந்தியமைத்தும், இச் செய்யுளும் இதன்பொருளும் இறைவன் மேலனவாயிருந்தும், இவை இதனை ஓதுவாருள்ளத்தை உருக்கவல்லனவாயில்லை. மற்று, இங்ஙனமெல்லாஞ் சொற்படுகரிற் கிடந்து அலக்கண் உறாது, இறைவன்பால் நெஞ்சம் நெக்குருகி மாணிக்கவாசகப் பெருமான் தாம் கருதிய பொருள்வழியே கரைந்துரைத்த தாகிய,

“அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்தமெழுகே அன்னார், மின்னார் பொன்னார் கழல்கண்டுதொழுதே யுன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதேபழுதே பிறந்தேன், என்கொண் டுன்னைப் பணிகேனே”

என்னுந் திருவாசகச் செய்யுளை மேற்காட்டிய பழமலையந்தாதிச் செய்யுளோடு ஒருங்குவைத்து ஒப்பிட்டுப் பார்மின்கள்! பழமலையந்தாதிச் செய்யுள், தன்னை ஒதுவார் எத்துணைத் தமிழறிவிற் சிறந்தாராயிருப்பினும் அவர்க்குத் தன் பொருளை எளிதிற் காட்டமாட்டாதாய்க் கருதி நிற்பப், பிற்காட்டிய திருவாசகச் செய்யுளோ, தன்னை யோதுவார் தமிழறிவிற் சிறவாராயிருப்பினும் அவர்க்குத் தன் பொருளைத் தன்னை அவரோதும் அப்பொழுதே தெளிபளிங்கின் றெண்ணீரெனத் தெளியக்காட்டி அவரது நெஞ்சத்தை நீராய் நெகிழ்த்தி ஒளிர்ந்து நிற்றல் காண்க. மேற்றந்த பழமலையந்தாதிச் செய்யுட் சொற்களைப் பிரித்துப் பொருள் விளக்கியவாறுபோல் அத் திருவாசகச் செய்யுளைச் சொற்பிரித்துப் பொருள் விளக்க வேண்டிய இடர்ப்பாடில்லாமையும் அறிந்து கொண்மின்கள்! திருவாசகத்தைப் போலவே, பண்டைச் செந்தமிழச் சான்றோர் இயற்றிய நூற்பாக்களும், இடைக்காலத்துப் பெரியார் இயற்றிய நூற்பாக்களும் பெரும்பாலும் இடர்ப்பாடின்றிப் பொருள் சென்ற வழியே சொற்சென்று தம்மை யோதுவார்க்கும் பயிலவார்க்கும் அறிவும் இன்பமுமாகிய பெரும்பயன்றந்து பிறங்குவனவாகப், பிற்காலத்துப்புலவர்கள் இயற்றிய நூற்பாக்களோ சொற்செருகப்பட்ட புழைவழியே பொருள் துறுத்தப்பட்டுத் தம்மை யோதுவார்க்கும் பயில்வார்க்கும் பொருட்பயன்றருவன வல்லவாய் இருண்டுகிடத்தல் பகுத்தறிந்து கொள்ளற்பாற்று. வெறுஞ் சொன்மயக்குடைய செய்யுட்கள் இத்தகையன சில பெரும் பொருட்டொடர் நிலைகளில் (காவியங்களில்) ஆங்காங்கு அருகிவருமாயின் அதனைக் குற்றமாகக் கருதுதல் ஆகாது. ஆனால், இஞ்ஞான்றைப் புலவர்கள் இயற்றிய நூல்கள் பெரும் பாலும் இத்தகைய சொற்றொடர் நிலைகளான அந்தாதிகள், கலம்பகங்கள், உலாக்கள், கோவைகள் முதலியனவாகவே காணப்படுகின்றன. இவை தம்மைப் பயிறலாற் பெரும்பயன் விளையாமை இவை தம்மை நுண்ணறிவினாற் சிறிது பயின்று பார்ப்பினும் நன்கு விளங்கும். இத்தன்மையாவன பயனில் நூல்கள், பண்டைச் செந்தமிழ்க்காலத்திலும் இடைக் காலத்திலும் அருகியல்லது இயற்றப்படாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று.

இனிப், பொருள்வகையாலும் பிற்காலத் தமிழ்ப் புலவர் தமிழுக் கிழைத்த தீங்கு பெரிதென்பது காட்டுவாம். முற்காலத்துப் புலவர்கள் இயற்கைத் தோற்றங்களையேனும் மக்கள் இயல்புகளையேனும் பாடப்புகுந்தால், உண்மைக்கு மாறாகாமல் ஓவியம் வரைந்து காட்டினாற்போல் அவை தம்மை நம் அகக்கண்ணெதிரே விளங்கக் காட்டுவர். அவர் பாடிய தோற்றங்களையும் மாந்தர்தம் நிலைகளையும் நாம் நேரே சென்று காண்டல் கூடுமாயின், அவை அவர் பாடியவாறே யிருக்கக்கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் எய்துவம். அவர் பாடியவெல்லாம் அங்ஙனம் பட்டாங்கு மொழியும் பெற்றியவாயிருத்தலைச் சில செய்யுட் காட்டி விளக்குவாம். காவற்பெண்டு எனப் பெயரிய நல்லிசைப் புலமைவாய்ந்த நங்கையாரை, அவர்க்கு நண்பரான மற்றொரு மாதரார் காணவந்துழிக், காணவந்த அவ்வம்மை தமதில்லினுள்ளே புகுந்து நின்ற பரிசும், நின்று தம் மகனைப்பற்றி அவர் உசாவிய பரிசும், அதற்கு அந்நங்கையார் கூறிய விடையும் விளங்க அக் காவற்பெண்டு என்னும் அவரே பாடிய செய்யுள் உருவிற் சிறிய தொன்றாயினுந் தன்னகத் தடங்கிய அப் பொருட் பொலிவால் எத்துணைப் பெரியதாய் இலங்குகின்றது! அது வருமாறு:

“சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்யாண்டுள னோஎன வினவுதி: என்மகன்யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்புலிசேர்ந்து போகிய கல்அளை போலஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே!”

(புறநானூறு 86)

“எனது சிறிய வீட்டிலே நிறுத்தப்பட்டிருக்கும் அழகிய தூணைப் பிடித்து நின்றுகொண்டு ‘நின்மகன் எவ்விடத்தே இருக்கின்றான்?’ என என்னைக் கேட்கின்றாய்; என் மகன் எவ்விடத்தி லிருக்கின்றானாயினும் யான் அதனை அறியேன்; ஒரு புலியானது படுத்துக்கிடந்து பின் விட்டுப்போகிய மலை முழைஞ்சு (குகை) போல அவனைப் பெற்ற வயிறோ இது; என் மகனோ போர்க்களத்தின்கண்ணே காணப்படுவன்,” என்பது மேலைச் செய்யுளின் பொருளாகும். காவற்பெண்டு என்னும் புலவர் பெருமாட்டி ஆறடியில் அடக்கிப் பாடிய இவ் அகவற்பா எத்துணை அழகும் அறிவும் வாய்ந்து மிளிர்கின்றது. தம்மைக் காணவந்த மாது தமது இல்லிலே ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு நின்ற நிலையை முதலில் அறிவிக்கின்றார்; இங்ஙனம் அறிவிக்குங்கால், தமது இல்லம் பெரியதொரு மாளிகையாயிருந்துந் தாழ்மைதோன்ற அதனைச் சிறிய இல் என்கின்றார்; உண்மையிலே அஃதொரு சிறுகுடிலாயிருந்தால் அதன்கண் அழகிய தூண்கள் நிறுத்தப்பட்டிருத்தல் ஆகாமை யால், அம்மையாரது இல்லம் பெரியதொன்றேயாதல் திண்ணம். வந்த அம்மாது தம் மகன் எங்கே உளன் என வினாயதற்கு, அவனிருக்குமிடந் தமக்கு உறுதியாய்த் தெரியாதேனும், அவன் போர்க்களத்திலேதான் இருக்கற்பாலன் என ஒரு குத்துமதிப்பாய் மறுமொழி தருகின்றார். இவ்வாறு மறுமொழி தருகின்றுழி, அப் புதல்வனை ஈன்ற தம் வயிற்றைச் சுட்டிக்காட்டி, அதற்கு, ஒரு புலிகிடந்து துஞ்சிப்போகிய மலைமுழைஞ்சினை உவமை சொல்லுகின்றார். இவ்வாறு அவர் சொல்லிய இச் செய்யுளில், அழகிய தூண்கள் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு சிறந்த இல்லத்தின் உருவமும், அதனுள் தம்மைக் காணவந்த ஒருமாது அத் தூண்களில் ஒன்றை ஒரு கையாற் பற்றிக் கொண்டு தம் மகனைக் குறித்து வினவிய நிலையுந், தம் மகன் போராண்மையிற் சிறந்து தம்மைப் பிரிந்துபோய்ப் போர்க்களத்தில் மறஞ் சிறந்து நிற்குந் தோற்றமும், அவனை ஈன்ற தம் வயிற்றுக்கு உவமையாகக் காட்டிய புலிகிடந்து துஞ்சிப்போன மலைமுழைஞ்சின் தனித்தோற்றமும், ஓவியத்தில் வரைந்துகாட்டினாலென நமதுளக்கண்ணெதிரே விளக்கமாய்த் தோன்றி நம்மை இன்புறுத்துதல் நோக்கு மின்கள்! இங்ஙனஞ் சில சொல்லிற் பலபொருட்டோற்றமும் உலக இயற்கை மக்களியற்கையில் உள்ளவாறே எழில் கெழும எழுதிக்காட்டும் பேரறிவாற்றல் பண்டை நல்லிசைப் புலவரெல்லார் மாட்டும் வீறி விளங்காநிற்கின்றது.

இனிப், பண்டைச் செந்தமிழ்ப் புலவரேயன்றி, இடைக்காலத்து வந்த தமிழ்ச்சான்றோரும் உலக இயற்கை மக்களியற்கையை அவையிற்றின் உண்மைக்கு மாறாகாமலே ஓவியத்தில் வரைந்து காட்டுவதுபோற் காட்டி அரும்பெருஞ் செய்யுட்கள் இயற்றிவந்தனர். இதற்கு, மணிமொழிப் பெருமான் அருளிச் செய்த திருச்சிற்றம்பலக் கோவையார் என்னுந் தமிழ்த்தேன் நிறைந்த பொலன் குடத்திருந்து ஒரு நறுந் திவலையினை எடுத்து ஈண்டு நுஞ்செவிவாய்ப் பெய்குதும்:

“ஈவிளை யாட நறவினை வோர்ந்தெமர் மால்பியற்றும்வேய்விளை யாடுவெற்பா! உற்று நோக்கிஎம் மெல்லியலைப்போய்விளை யாடல்என் றாள்அன்னை; அம்பலத்தான்புரத்தில்தீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே”

என்னும் இச் செய்யுள், ஒரு மலைநாட்டுத் தலைவி தன் மகளுக்கும் பிறனொருவனுக்கும் இடையே மறைவில் நிகழ்ந்து வருங் காதலொழுக்கத்தினைத் தன் மகன் வடிவ வேறுபாடுகளை உற்றுநோக்கு முகத்தால் உய்த்தறிந்து, இனி நீ அம்பலத்தான் மலைக்கண்ணே சென்று விளையாடல் வேண்டாம்’ எனக் கூறி அவளைத் தடைசெய்துவிட்டாள் என்னுஞ் செய்தியை அப் பெண்ணின் தோழி அவடன் காதலனுக்கு அறிவித்து, அவன் அவளைக் காலந்தாழாதே மணஞ்செய்து கொள்ளல் வேண்டுமென அவனுக்குக் குறிப்பாக உணர்த்தும் முறையில் இயற்றப்பட்டிருக்கின்றது. இதன்கட் டோழி தலைவனை முதலில் முன்னிலைப் படுத்துகின்றுழி, அவனும் ஒரு மலை நாட்டுக்குத் தலைவன் என்பது புலப்பட அவனை ‘வெற்பா’ என்றழைக்கின்றாள்; அங்ஙனம் அழைக்கும்வழி, அவனது மலைக்கண்ணே தேனீக்கள் மேலெழுந்து சுற்றிச்சுற்றிப் பறத்தலைக் கண்டு, அதன்கண் அத் தேனீக்கள் கட்டிய தேனடை தேன் நிரம்பிவிட்டதனையுணர்ந்து செங்குத்தான அம் மலைமுகட்டின் ஒரு புறத்தே தொங்கும் அத் தேனடை யினை எடுக்கல் வேண்டித் தன் சுற்றத்தாரான வேட்டுவர் கண்ணேணியினைச் செய்கின்றனர் என நுவல்கின்றாள். மால்பு என்பது கண்ணேணி; அஃதாவது நீண்ட ஒரு பச்சைமூங்கிலை யெடுத்து, அதன் கணுக்களின் நெடுகஉள்ள கிளைகளை ஒரு சாண்விட்டு நறுக்கி அமைப்பது: இங்ஙனம் அமைத்த அம் மூங்கிற் கோலைச் செங்குத்தான ஒரு மலையின் புறத்தே சார்த்திவிட்டால், அதன் கணுக்கள் நெடுக ஒருசாண் நறுக்கி விடப்பட்ட கிளைகளிற் காலை வைத்து வைத்தேறி எவ்வளவு உயரமான இடத்தின் உச்சிக்கும் வேட்டுவர் ஏறிவிடுவர். இங்கே அத் தலைமகனது தலையினுச்சியின் உள்ள தேனடையில் தேன் நிரம்பிவிட்டதனை, அத் தேனடையின் மேலெழுந்து சுழன்று பறக்குந் தேனீக்களின் இயக்கத்தாற் கண்டுணர்ந்து தன் உறவினரான வேட்டுவர் அதன் தேனை யெடுக்கக் கண்ணேணி அமைக்கின்றரெனத் தோழி கூறிய உரையினுள்ளே, ‘நினக்கும் நின் காதலிக்கும் இடை நிகழும் இக் காதலொழுக்கத்தினை எம் வேட்டுவச் சுற்றஞ் சில குறிப்பான் அறிந்து நின் காதலியை மணஞ்செய்து கொடுத்தற்குரிய முயற்சிகளைச் செய்கின்றனர்; அதனால் நீ அவளை விரைந்து மணம்புரிதல் வேண்டும்’ என்னுங் குறிப்புப் பொருளும் அடங்கிநிற்றல் காண்க. இச் செய்யுள் நான்கடிகளால் அமைக்கப்பட்ட சிறிய வடிவினதா யிருந்தும் ஆழ்ந்த பொருள் பெரிதுடைத்தாய், நம் அகக் கண்ணெதிரே இயற்கைக் காட்சியினையும் மக்கள் நிலை யினையும் முறைபிறழாமல் இனிது விளங்கக் காட்டுதல் நினைவிற் பதிக்கற்பாற்று. ஒரு மலைமுகட்டிலே தேனடை யொன்று தொடுக்கப் பட்டிருத்தலும், அதனைத் தொடுத்து அதன் கட்டேனை நிரப்பிய தேனீக்கள் தமக்குணவு நிறைய இருத்தலால் மகிழ்ச்சிமிக்கு அவ் அடையினைச் சுற்றிச்சுற்றிப் பறத்தலும், அதுகண்ட அம் மலைவாணரான குன்றவர்கள் அவ் அடையிலுள்ள தேனை எடுத்துக் கொள்ளுதற்காக அம்மலைக் கண் வளர்ந்த மூங்கிலொன்றை வெட்டிக் கொணர்ந்து ஒரு கண்ணேணி இயற்றுதலுந், தன் தலைமகளின் அன்னை அவடன் வடிவ வேறுபாட்டை உற்றுநோக்கி அவள் காதல் வயப்பட்ட உள்ளமுடையளாயிருத்தலை உணர்ந்து ‘இனி நீ அம்பலத்தான் மலையிற் போய் விளையாடாதே’ எனத் தடை செய்ததனைத் தோழி அவடன் காதலனுக்கு அறிவித்தலும் இஃது எத்துணை உண்மையாக எத்துணை அழகாக நம் உளக்கண்ணெதிரே கொணர்ந்து காட்டுகின்றது!

இங்ஙனமே, இடைக்காலத் தாசிரியர்களில் முதற் றோன்றிய வர்களான இளங்கோடிவகளுங் கூலவாணிகன் சாத்தனாருந் தங்காலத்து நிகழ்ந்த கோவலன் கண்ணகி வரலாறுகளும், மணிமேகலை உதயகுமரன் வரலாறு களுமாகிய மெய்ந்நிகழ்ச்சிகளையே யமைத்துச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும்பொருட் டொடர்நிலைகளை (காப்பியங்களை) இயற்றினார். வடநாட்டு ஆரியமொழியின் வழியே புனைந்துரைப் பொய்க்கதைகள் இத் தமிழ்நாட்டுட் புகுந்து தமிழ்மக்களின் மனநிலையைச் சிதைத்தற்கு முன்னெல்லாந், தமிழாசிரியர் மனநிலையைச் சிதைத்தற்கு முன்னெல்லாந், தமிழாசிரியர் அனைவரும் மெய்ந்நிகழ்ச்சி களைப் பாடுதலிலேயே கடைப்பிடியாய் நின்றனர். ஒரோ வொருகாற் றமிழ்ப்புலவர் சிலர் ஆரியர் கொணர்ந்த பொய் வழக்கினைப் பருகி அறிவு மயங்கி அப் பொய்யினை மெய்யாகப் பிறழக்கொண்டு ‘பாரதம்,’ ‘சூளாமணி,’ ‘கொங்குவேள் மாக்கதை,’ ‘குண்டலகேசி’ ‘வளையாபதி’ ‘சீவகசிந்தாமணி’ ‘இராமாயணம்’ முதலான பொய்ந்நூல்களை ஆக்கினாராயினும், மெய்கூறுதலிலேயே மெய்யுணர்தலிலேயே பழகிப்போந்த பழைய தமிழ்மக்கள் உள்ளத்திற்கு அவை இன்பம் பயவாமையின், அவை பெரும்பாலும் வழங்காதேபோயின; அன்றி ஆரியர் வயமான பேதைமாக்கள் குழுவிலே அருகி வழங்கின. இதனாலன்றோ திருவள்ளுவர் காலத்தை யடுத்துத் தோன்றிய ‘பெருந்தேவனார்’ என்னுந் தமிழ்ப்புலவர் வடமொழி யிலிருந்து பாரதக் கதையைத் தமிழிலே மொழிபெயர்த் தியற்றியும், அந் நூல் இங்கு வழங்காமலே அழிந்துபோயிற்று. இப்பாரதக் கதையினும் பொய்ம்மை நிறைந்ததாயிருத்தல் பற்றி வடமொழியிலுள்ள இராமாயண கதையைப் பண்டையாசிரியர், இடைக்காலத்தாசிரியர் எவருந் தமிழில் மொழி பெயர்த்துச் செய்திலர். இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கம்பரென்னும் புலவராற் பாடப் பட்ட இராமாயணம், வடமொழியிலுள்ள வான்மீகி ராமாயணத்தைப் பார்த்துச் செய்யப்பட்டதாயினும், அதனினும் பார்க்கப் பொய்ம்மை நிறைந்ததாய்ப், பழைய தமிழாசிரியர் கைக்கொண்ட இயற்கை வழக்கொடு மாறுபட்டதாய்த் தோன்றினமையின்; அக் கம்பர்க்குப் பிற்பட்டிருந்த சிறந்த உரையாசிரியர்களாலும் அஃது ஏற்றுக்கொள்ளப் படாததாயிற்று. இங்ஙனமாக இவ் விடைக் காலத்து நடுவிலும் இதன் இறுதியிலும் இருந்த தமிழ்ப் புலவர் சிலரால் வடமொழிப் பொய்வழக்குத் தழீஇ ஒரோ வொருகால் இயற்றப்பட்ட சூளாமணி, சிந்தாமணி முதலான பொருட்டொடர் நிலைகள் பெரும்பாலும் பொய்க்கதைகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டமையாற்றான், பண்டைத் தமிழாசிரியர் சென்ற மெய்ந்நெறியே செல்லுங் கடப்பாடுடையரான ஆசிரியர் சேக்கிழார் உண்மை நாயன்மாரின் அரிய அருள் வாழ்க்கை வரலாற்றுண் மைகளைப் பலவாற்றானுந் துருவி யாராய்ந்து திருத்தொண்டர்புராணம் என்னும் பெரியபுராணம் என்றும் வழங்குஞ் செந்தமிழ்ச் செம்பொருட்டொடர் நிலையினை இயற்றியருளினார். இடைக்காலத் துவக்கத்திலெழுந்த ‘சிலப்பதிகாரம்,’ ‘மணிமேகலை’ தவிர ஏனைப் பொருட்டொடர் நிலைகளுள் எதுவும், பிற்காலத்துத் தோன்றிய ‘கம்பராமாயணம்,’ ‘கந்தபுராணம்’ ‘வில்லிபுத்தூரர்பாரதம்,’ ‘நைடதம்’ முதலியனவும், பெரியபுராணம் என்னுஞ் சுடரொளி ஞாயிற்றின்முன் மின்மினித்துணையும் விளங்காவென்பது நடுநின்று உண்மையை உள்ளவாறு ஆராய்வாரெவர்க்குந் தெற்றென விளங்கற் பாலதேயாம்.

மேலும், இடைக்காலத்தும் பிற்காலத்துந் தோன்றிய இந் நூல்கள் வர வர வடசொற்களை மிகுதியாய் எடுத்தாண்டு, பல்லாயிரந் தனிச் செந்தமிழ்ச் சொற்கள் வழக்கு வீழ்ந்தொழிதற்கும் இடஞ்செய்தன. இங்ஙனஞ் சொல்வகையாலும் பொருள் வகையாலுந் தமிழ்க்குந் தமிழ் மக்களது அறிவு விளக்கத்திற்கும் பேரிடர் பயப்பனவாயும் அவற்றைக் கவிந்த பொய்ந்நூல்களாயும் எழுந்த இருட்பெரும் பரவையினைக் கீழ்ந்த மெய்ந்நூல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் என்னுஞ் செம்பொருட் செந்நூல்களேயாகும்; இவை தோன்றித் தஞ்செஞ்சுடர்க் கதிர்களை எங்கும் பரப்பிய தில்லையாயின், இத் தமிழ்நாடு பொய்யும் அறியாமையுமாகிய திண்ணிருளாற் கவரப்பட்டுத் தன் பண்டைநாகரிகத்தினை ஒருங்கே இழந்துபோயிருக்கும்! மற்று, அஃது அங்ஙனம் ஆகாமைப் பொருட்டு இம் மெய்ந்நூல்களை இதன்கண் இடையிடையே தோற்றுவித்த இறைவன் தன் அருட்டிறம் பெரிது! பெரிது!

அஃதொக்கும், பிற்காலத்துத் தோன்றிய பொருட் டொடர் நிலைகளிற் பெரும்பாலன உண்மையில் நடவாப் பொய்க் கதைகண்மேல் எழுந்தனவாயினும், அவையிற்றிற் காணப்படும் இலக்கியச் சுவை பயில்வார்க்கு இன்பம் பயத்தலின், அதுபற்றி அவை பாராட்டற் பாலனவல்லவோ வெனின்; அல்ல. அந் நூல்களை ஆக்கிய புலவர்கள் தாம் பாடுதற் கெடுத்துக்கொண்ட கதைகளில் மெய் இவை பொய் இவை யென்று ஆராய்ந்துரைத்தவரல்லர்; கதை பொய்யே யாயினும் அவற்றால் அறியப்படும் உறுதிப் பொருள்கள் இவையென்பது தேற்றிப் பாடினவருமல்லர். பொய்யான கதைகளை ஆராயாது மெய்யெனக்கொண்டு தாம் நம்பிய தல்லாமலும், அவற்றைப் பயில்வார் கேட்பாரெல்லாரும் அங்ஙனமே நம்புமாறுசெய்து உலகத்திற் பொய்யைப் பரப்பி மெய்யே விளங்க வொட்டாமலுந் திரிபுபடுத்தினர். அவ்வாறு பொய்யை மெய்யாக நம்புவதிலும் அதனைப் பிறரும் நம்புமாறு செய்வதிலுமே பிற்காலத்துப் புலவரிற் பெரும்பாலார் அழுந்திப் பழகிவிட்டமையால், அவர் கதையைவிட்டு இலக்கியச் சுவை தோன்றக் கூறுமிடங்களிலும் மெய்யுரை பகரமாட்டாராய்ப் பொய்யே கூறுவாராயினர். மற்றுப், பண்டைத் தமிழாசிரியர்களும், அவர்வழி பேணிய இடைக்காலத்தாசிரியர் சிலரும் யாண்டுந் தாம் மெய்யே காண்பதொடு, தாங்கண்ட மெய்யையே பிறர்க்குங் காட்டுவாராய்த் திகழ்ந்தமையின், அவர் இலக்கியச் சுவை தோன்றக் கூறுவனவும் இயற்கை நிகழ்ச்சியொடு முழுதொத்து மெய்யாகவே மிளிர்கின்றன. இவ் வேறு பாட்டினை இரண்டு எடுத்துக் காட்டுகளான் விளக்குதும்: கொல்லி மலையாண்ட வல்வில் ஓரி என்னுந் தலைவனைப் பாடிய பழந்தமிழ்ப் புலவாபெருமானான வன்பரணர் அவனது விற்றொழிலாண்மையினைச் சிறந்தெடுத்துக் கூறுதற்குப் புகுந்து,

“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழிபேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரற்றலைக்கேழற் பன்றி வீழ அயலதுஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்வல்வில் வேட்டம் வலம்படுத்திருந்தோம்”

(புறநானூறு 152)

என்று அதனை வியந்துபாடியிருக்கின்றார்: இதன்பொருள் வருமாறு: ‘யானையைக் கொன்று கீழேவிழச்செய்த, சிறந்த நாணினின்றும் விடுக்கப்பட்ட அம்பானது பெரிய வாயினை யுடைய ஒரு புலியை ஊடுருவி இறக்கப் பண்ணித், துளையுள்ள கொம்புகளைத் தலையில் உடைய ஒரு புள்ளிமான் கலையைக் கீழே உருளப்படுத்தி, உரல்போலுந் தலையினையுடைய காட்டுப்பன்றி யொன்று நிலத்தே விழுமாறு சென்று, பக்கத்தே உளதாகிய ஆழ்ந்த புற்றின்கட் கிடக்கும் உடும்பின் உடம்பிலே பட்டு நிற்கும் அத் துணை வலிய வில்லாண்மை வேட்டத்தில் பெற்றியை யுண்டாக்கி யிருந்தவனான ஒரி!’ என்பது, இங்ஙனம் ஓரியென்னும் மலையரசன் ஓர் யானையை நோக்கி எய்த அம்பானது அவ்வியானையைக் கொன்று கீழே வீழ்த்திய தல்லாமலும், அது தான்சென்ற கடுவிசையினால் தான் சென்ற வழியின்கண் ணிருந்த ஒரு புலியின் திறந்த வாயினுள் நுழைந்து அதனை ஊடுருவிப்போய்ப் போகும் நெறியில் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானையும் உருட்டிவிட்டு, அதன் பின் ஒரு காட்டுப் பன்றியையுங் கீழ்விழச் செய்து, அவ்வளவிற் றன்விசை குறைதலின், அப்பன்றி வீழ்ந்த பக்கத்தேயுளதான ஒரு புற்றின்கட் கிடந்த ஓர் உடும்பின் உடம்பிலேபட்டு நின்றது என, அவ்வம்பை ஏவிய அவனது விற்றொழில் வல்லமையினையும், அதனைப் புலப்படக் காட்டும் அவ்வம்பினது விசையினையும் ஆசிரியர் வன்பரணர் நன்கெடுத்துக்காட்டினார். இதன்கண் இயற்கைக்கு மாறாகக் கருதற்பாலது ஏதுமேயில்லை. ஏவப்பட்ட மிகக் கூரிய அம்பு, ஏவியவனது பேராற்றலாற் கடுவிசையிற்சென்று ஒர் யானையை யூடுருவிப்போய்ப், பின் அவ்வியானையை நோக்கித் திறந்த வாயுடன் வந்த ஒரு புலியின் வாயினுள்ளே நுழைந்து அப் புலியினையுங் கீண்டுசென்று, அவ் வளவிற் றனது விரைவு சிறிது சிறிது குறைதலின் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானைக் கீழே உருளச்செய்து, அதன்பின் ஒரு காட்டுப் பன்றியைக் கீழ்விழமோதி, கடைசியாக அதன் பக்கத்தேயிருந்த ஒரு புற்றினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த ஓருடும்பின்மேற் றைத்து நின்றுபோதல் நிகழக் கூடியதேயாம்.

மற்றுப், பிற்காலத்துப் புலவரான கம்பர் அங்ஙனமே இராமனது விற்றொழிலாண்மையினைப் புலப்படத்துதற்குப் பாடிய இரண்டு செய்யுட்களையும் அற்றின் பொய்ம்மை யினையும் ஈண்டெடுத்துக் காட்டுதும்:

“அலையுருவக் கடலுருவத்து ஆண்டகைதன் நீண்டுயர்ந்தநிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கு ஐயா!
உலையுருவக் கனல் உமிழ்கண் தாடகைதன் உரம்உருவிமலையுருவி மரம் உருவி மண்உருவிற்று ஒருவாளி”

(பால, குலமுறை 26)

“ஏழு மாமரம் உருவிக்கீழ் உலகமென்று இசைக்கும்ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடன் அடுத்து இயன்றஏழுஇ லாமையின் மீன்டதுஅவ் விராகவன் வாளி”

(கிட்கிந், மரா, 138)

இவ்விரண்டனுள் முதற்செய்யுள் இராமனது வில்லாண்மையினை அவனை யுடனழைத்துச்சென்ற விசுவாமித்திரர் சனக மன்னனுக்கு எடுத்துரைக்கும் நிலையில் வைத்துக் கம்பராற் பாடப்பட்டிருக்கின்றது. அதன்பொருள் வருமாறு:

‘அலைகளையே தனக்கு உருவமாய்க்கொண்ட கடலைப் போலும் நீலநிறத்தினும் ஆண்மைக் குணத்தினனுமான இராமனுடைய நீண்டு நிமிர்ந்த நிலையினையே வடிவாகவுடைய தோள்களின் வலிமையை நீ ஊடுருவப் பார்த்தல் வேண்டும் ஐயனே! கொல்லனது உலைக்களத்திலே செக்கச் சிவந்து தோன்றுங் கனலையொப்பத் தீயைக் கக்குங் கண்களையுடைய தாடகையென்னும் அரக்கியின் மார்பைத் துளைத்துச் சென்று, அதன்மேலும் மலையினையுந் துளைத்துப்போய், அதனாலுஞ் தன்விசை அடங்காமையின் மரத்தினையும் நிலத்தினையுந் துளைத்து ஏகிப், பின்னும் அது குறையாமையின் துளைத்தோடியது அவன் ஏவிய ஒருகணை.’

இப்பொருளைச் சிறிதறிவுடையாரும் உற்றுநோக்குவராயின், இஃது எத்துணைப் பொய்ம்மை நிறைந்ததாயிருக்கின்ற தென்பதனை யுணர்ந்து அதன்கண் அருவருப்பு எய்துவர். இராமன் ஏவிய ஓர் அம்பு தாடகை தன்மார்பைத் துளைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அஃது அதன்பின் ஒரு மலையினைத் துளைத்துச் சென்ற தென்றதும், அதன் பின்னும் ஒரு மரத்தையோ பல மரங்களையோ துளைத்துப் போயதென்றதும், அதனானும் அதன் விரைவு குன்றாமல் இந் நிலத்தையே ஊடுருவி ஏகிய தென்றதும் இயற்கை நிகழ்ச்சியிற் காணப்படாத, கருதுதற்குங் கூடாத பெரும் பொய்யா யிருக்கின்றவல்லவோ! இருப்புக் கோலிற் செய்த ஒருகணை மலையைத் துளைத்துச் செல்லுதல் கூடுமோ! அதனைத் துளைத்தபின்னுந் தன் விரைவுங் கூர்மையும் மழுங்காமல் துளைத்துப், பின்னர் இந் நிலவுலகத்தையுந் துளைத்து அப்பாற் போகியதென்றது எத்துணைப் பெரும் புளுகாயிருக்கின்றது! இதனை நன்குணர்ந்து பார்மின்கள் அறிவுடையீர்! ஒருவனது வலிவை, ஒரு பொருணிகழ்ச்சியைச் சிறப்பிக்க ‘உயர்வுநவிற்சி’ சொல்லுங்கால் இங்ஙனம் இயற்கைக்கு முழு மாறுபாடுண் டாகச் சொல்லுவது நல்லிசைப் புலமையாகுமா? கூர்ந்து பாருங்கள்!

மற்று, மேலெடுத்துக் காட்டிய பழந்தமிழாசிரியரான வன்பரணர் ஓரியினது வில்லாண்மையை வியந்து பாடிய அரிய செய்யுளிற் காணப்படும் ‘உயர்வு நவிற்சி’ உலக இயற்கைக்கு எத்துணைப் பொருத்தமுள்ளதாய் விளங்கி நமக்குத் தேருந்தொறும் ஆராமகிழ்ச்சியினைத் தருகின்றதோ, அத்துணைக்கு இயற்கையொடு பொருந்துவதிலதாய்க் கம்பர் கூறும் இவ் வுயர்வுநவிற்சி நினைக்குந்தொறும் நமக்குப் பேரா வெறுப்பினையே விளைக்கின்றது!

இன்னும்; ஆசிரியர் வன்பரணரது செய்யுளில் மற்றுஞ் சில நுட்பங்களுந் தோற்றங்களும் ஓவியத்தில் வரைந்து காட்டினாலென நமதுளக் கண்ணெதிரே தோன்றி நம்மை இன்புறுத்துதலும் அறியற்பாற்று. ஓரிமன்னன் ஒரு வேழத்தை நோக்கியெய்த கடுங்கணை அவ் வேழத்தை ஊடுருவிப்போய், அதனைக் கொல்லுதற்கு அங்காந்தவாயுடன் வந்த ஒரு புலியையுங் கொன்ற நிகழ்ச்சியும்; அதன்பின் துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளிமான் ஒன்றையும் உருட்டி, அதன்பின் உரல்போலுந் தலையினையுடைய ஒரு காட்டுப்பன்றியையும் வீழ்த்திய நிகழ்ச்சியுங் கடைசியாக அப் பன்றியின் பக்கத்தே ஒரு புற்றினுள்ளே அடங்கிக்கிடந்த ஒர் உடும்பின் உடம்பிற்சென்று தைத்து அவ் வளவில் நின்றுபோன நிகழ்ச்சியும்; இயற்கையில் உள்ளவைகளை உள்ளவாறே கைவல்லான் ஒருவன் வரைந்து காட்டும் ஓவியங்கள்போல் நம் கண்ணெதிரே தோன்றுகின்றமயுங் காண்மின்கள்! இத்தகைய இயற்கைத்தோற்றவனப்பு மேற்காட்டிய கம்பரது செய்யுளிற் சிறிதும் இல்லாமையும் நோக்குமின்கள்!

இனி, இராமன் ஏழு மராமரங்களைத் துளைத்தற்கு ஏவிய ஓர் அம்பு அவைதம்மைத் துளைத்துச் சென்றதாகக் கம்பர் கூறும் இரண்டாவது செய்யுட்பொருள் வருமாறு :

அவ்விராமன் தனது வில்லினின்றுங் தொடுத்துவிட்ட ஒரு கணையானது ஏழு பெரிய மராமரங்களையுந் துளைத்துச் சென்று, அதன் பின்னுந் தனது கடுவிசை சிறிதுங் குறையாமையின், கீழுலகம் என்று சொல்லப்படும் ஏழினையும் நடுவே புகுந்து துளைத்துப்போய்ப், பின் அக் கீழ் ஏழ் உலகங்களை உடன் அடுத்துத் தொடர்பாக உள்ள வேறு ஏழ் உலகங்கள் இல்லாமையினாலே திரும்பிவந்தது.

என்னும் இப்பொருளை நோக்குங்காற், கம்பர் மேலெடுத்துக் காட்டிய முதற் செய்யுளிற் புளுகியதினும் பன்மடங்கு மிகுதியாக இச் செய்யுளிற் புளுகிவிட்டனரென்பது நன்கு புலப்படுகின்றதன்றோ? மராமரங்களேழனைத் துளைத்தற்கு ஏவிய ஒரு வாளி அம் மராமரங்கள் ஏழனையுந் துளைத்துச் சென்றதல்லாமலுங் கீழ் ஏழ் உலகங்களையுந் துளைத்துப் போய்ப், பின்னர்த் துளைத்துச் செல்லுதற்கு ஏதும் இல்லாமையின் திரும்பி இராமனிடமே வந்து சேர்ந்த தென்பது உலகிலுள்ள புளுகுகட்கெல்லாம் முதற்பெரும் புளுகாய் முன் நிற்கின்றது. மேலே வன்பரணர் பாடிய செய்யுளில் ஓரிமன்னன் ஏவிய வாளி, யானை புலி மான் உடும்பு முதலான உயிர்களின் ஊன் உடம்பைத் துளைத்துச் சென் றடங்கியதென்று சொல்லப்பட்டதே யல்லாமல், மரத்தை மலையை நிலத்தைத் துளைத்துச் சென்றதெனச் சொல்லப்பட்டதில்லை. ஏனெனில் இரும்பிற் செய்த கூர்ங்கணை விலங்குகளைக் கொல்லுதற்பொருட்டும், மக்களைக் கொல்லுதற் பொருட்டும் அக் காலத்திற் செய்யப் பட்டனவே யல்லாமல் மரங்களை மலையை நிலத்தைத் துளைத்தற்காகச் செய்யப்பட்டன அல்ல. ஆதலால், அவை மெல்லிய தசையுள்ள யானை புலி மான் முதலான உயிர்களின் உடம்பைத் துளைத்துச்சென்றன வென்பதுதான் பொருத்தமாகுமே யல்லாமல், அவை மரத்தை மலையை நிலத்தைத் துளைத்துச் சென்றனவெனக் கூறுதல் ஒரு சிறிதும் பொருத்தமுடையதாகாது; பொருத்தமுடைத்தாகாமையின் அக் கூற்று உண்மையுடைத் தாகலுமில்லை. இல்லையாகவே, இராமன் மராமரங்கள் ஏழனை ஒரு கணையாற்றுளைத்து விட்டன னென்பது, பார்ப்பனர் இராமனது திறலை மிகுதிப் படுத்திக் காட்டுதற்குக் கட்டிவிட்ட ஒரு பொய்க்கதையே யாம். வான்மீகி இராமாயணத்திற் கட்டிவிடப்பட்ட இப் பொய்க் கதையினை உண்மையென நம்பிக் கம்பருந் தமிழில் இதனை எடுத்துப் பாடியது, பண்டைத் தமிழாசிரியரது மெய் வழக்கிலேயே பழகினார்க்கு உவர்ப்பினையும் வருத்தத் தினையுந் தாராதொழியுமோ?

இவ்வாறு கம்பர் நடவாத பொய்க்கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்தமையால், வடமொழிப் பொய்வழக்கிற் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்றக் கூறவேண்டும் இடங் களிலும் பொய்யாவனவே புனைந்து கூறி இழுக்கினார். இங்ஙனமே, கம்பருக்குப் பின்வந்த தமிழ்ப்புலவர்களெல்லாரும், பொதுமக்களை ஏமாற்றுதற்பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையுந் தலபுராணங்களையுமே பெரும்பாலுந் தமிழில் மொழிபெயர்த்துவைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய்வழக்கினை அடியோ டழித்துவிட்டார். இப் பிற்கால மொழிபெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங்களில் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவுவரையில் அவற்றின்கட் பொய்யாவனவே தொடுக்கப்பட்டிருத்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.

அற்றேல், ஆங்கிலம் முதலான இஞ்ஞான்றை நாகரிக மொழிகளிற் பொய்யாகப் புனைந்த கட்டுக்கதைகளுங், கட்டுக் கதைகண்மேற் பாடப்பட்ட செய்யுள் நூல்களுஞ் சாலப் பெருகிவருதலும், அவற்றின் பயிற்சியைச் சிறந்த அறிவுடையாரும் பாராட்டிப் பேசுதலும் என்னையெனின்; அப் பிறமொழிக் கட்டுக்கதைகளை ஆக்கிய புலவர்கள் அவற்றைக் கட்டுக்கதைகளென்றே கூறுதலோடு, அவற்றைப் பயில்வாரும் அவை பொய்யெனவே யுணர்ந்து அவையிற்றை அயர்வுதீர்ந்து இன்புறுதற் கருவியாகவே கைக்கொண்டு பயில்கின்றனர். அதனால் அந் நூல்களைப் பயிறலில் தீங்கேதும் விளைவ தில்லை. மற்றுப், பிற்காலத்துத் தமிழ்ப்புலவர்களோ வடமொழிக் கட்டுக்கதைகளை ஆராய்ந்து அவற்றுட் பொய்யாவன இவை மெய்யாவன இவையென்று தெளியும் பகுத்தறிவில்லாதவர் களாய்ப், பொய்யை மெய்யாக நம்பித் தாம் அறிவுமழுங்குவ தோடு, அப் பொய்யை மெய்யாகப் பிறரும் நம்புமாறு காட்டி அவரதறிவையும் மழுக்குவதால் இவரால் தமிழ்க்குந் தமிழ்மக்கட்கும் உண்டாங் கேடு அந்தோ! பெரிது! பெரிது!

அஃதொக்கும்; இடைக்காலத்துப் புலவர்கள் ஆக்கிய ‘உதயணன் கதை,’ ‘சூளாமணி’ ‘சிந்தாமணி’ முதலியனவுங் கட்டுக்கதைகண்மேல் எழுந்த பொருட்டொடர் நூல்களே யாதலால், அவைதம்மை விழுமியவெனத் தமிழ் வல்லார் கொண்டாடுதல் என்னையெனின்; அங்ஙனம் அவற்றைக் கொண்டாடுதல் அவை கூறுங் கதைக்காகவன்று; அக் கதைகளை மெய்யென நம்புவார் ஈண்டு யாரும் இலர்; மற்று, அவை தம்மை ஆக்கிய புலவர்கள் அந்நூல்களில் இலக்கியச் சுவைமுதிரத் தொடுக்கு மிடங்களிலெல்லாந், தொல்லாசிரியர் சென்ற நெறியே சென்று, பெரும்பாலும் இயற்கைக்கும் மக்களொழுகலாற்றிற்கும் முரணாகாத முறையிலேயே வைத்து அவைதம்மைப் புனைந்துரைத்தலால், அதுபற்றி அவையிற்றை அவர் கொண்டாடி வருகின்றனரென்க.

இங்ஙனமே, வடமொழியின்கண்ணுங் கதைகண்மேற் கட்டப்பட்ட சில காவியங்களும் நாடகங்களும் நடவாத நிகழ்ச்சிகளை நடப்பனபோல் வைத்துரைப்பினும், இலக்கியச் சுவை மலியக் கிளக்கு மிடங்களிbல்லாம் பெரும் பாலும் உலகவியற்கைக்கும் மக்களியற்கைக்கும் மலைவாகாத முறையில் வைத்தே அவைதம்மைப் புனைந்துசெல்லுதலால் அவையும் பாராட்டப் படுவனாவாயிருக்கின்றன. அத்தகைய வடநூல்கள் வடமொழியிற் காளிதாசர் என்னும் பெரும்புலவர் இயற்றிய ‘சாகுந்தலம்,’ ‘குமாரசம்பவம்’ முதலியனவும்; பாரவி என்பார் இயற்றிய ‘கிராதார்ச்சுரீயம்’ முதலியனவும் ஆம். இன்னோரன்ன வடமொழி நூல்களைப் பின்றைத் தமிழ்ப்புலவ ரெவருந் தமிழில் மொழிபெயர்த்து வையாது, ஒருவகையினும் பாராட்டுதற் குரியவல்லாப் புராணங்களை மட்டும் அவர் கணக்கின்றிச் செய்துவைத்தது மிகவும் வருந்தற்பாலதே யாம்.

இன்னும், வடமொழியிற் பண்டைத் தமிழாசிரியர் ஆக்கிவைத்த பழைய உபநிடதங்கள், சாங்கியம், யோகம், நையாகிகம், வைசேடிகம்,வேதாந்தம் முதலான அறிவு நூல்களையும் பின்றைத் தமிழ்ப்புலவர் எவருந் தமிழில் மொழிபெயர்த்து வையாததும் பெரியதொரு குறைபாடே யாம். இனியேனும், நம் செந்தமிழ்ப் புலவர்கள் பண்டை நந்தமிழாசிரியர் காட்டிய மெய்ந்நெறியே கடைப்பிடித்துத், தனித்தமிழில் மெய்யறிவு நூல்கள் மெய்யுணர்வு நூல்கள் இயற்றித் தமிழை வளம்படுத்து, நந்தமிழ்மக்களைச் சிறந்த துறைகளெல்லா வற்றிலும் முன்னேற்றி நலம் பெருக்குவாராக!

முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர்
– முற்றும் –

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!