முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள்

6. பண்டைப்புலவர் முப்பால் ஒழுக்கம் ஒம்பினமை

இன்பவொழுக்கம்

இனி, முன்னிருந்த நம் ஆசிரியர் நமதருந்தமிழ் மொழியைப் பொருந்திக் காத்தமைபோலவே, அம்மொழியாற் குறிக்கப்படும் இன்பமும் பொருளும் அறனும் என்னும் முப்பாற் பொருளையும், அவை காரணமாக வரூஉம் மூவகை யொழுக்கங்களையும், உலகவியற்கை மக்களியற்கையொடு பொருந்தக் கண்டு ஓம்பின பான்மையும் பெரிதும் பாராட்டற் பாலதாகும். ஆகவே அதனைச் சிறிதெடுத்துப்பேசுதல் இன்றியமையாததா யிருக்கின்றது

இந்நிலவுலகிற் காணப்படும் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்னும் இரண்டில் உயிர்ப்பொருளுக்குப் பயன்படுதற் பொருட்டாகவே உயிரில்பொருள்கள் அமைக்கப்பட்டிருத்தல் நன்கு புலனாகின்றது. ஆகவே இவ்வுலக அமைப்பும் இதன் இயக்கமும் எல்லாம் உயிர்களின் பொருட்டாகவே நடைபெறுகின்றன வென்பது எவரும் மறுக்கலாகாத உண்மையாகும். இத்துணைச் சிறந்த உயிர்கள் இவ்வுலக அமைப்பிற் புகுந்து சிறிது காலங் காணப்படுதலும், அதன்பின் அவை காணப்படாது மறைதலும், என்னையென்று நுணுகியாராயுங்கால், இவ்வுலகுக்கு வரும்பொழுது அறிவும் இன்பமும் இலவாய்த் தோன்றும் அவ்வுயிர்கள், இதன்கண் வந்து சிறிதுகாலந் தங்கியவளவானே அறிவுவளர்ந்து இன்பத்திற் றிளைத்தல் காண்கின்றேமாகலின், அவை அறிவுவளர்ச்சியும் அதன்வழியே இன்ப நுகர்ச்சியும் எய்துதற்கே இங்கு வருகின்றன வென்பது புலனாகின்றது. புலனாகவே, இவ்வுலகுக்குவரும் முன் அறியாமையுந் துன்பமும் வாய்ந்தனவாகவே எல்லாவுயிர்களும் இருத்தல் வேண்டுமெனவும், இங்கு வந்தபின் அவை அறிவும் இன்பமுஞ் சிறிதுசிறிதாகக் கைகூடப்பெறினும் அவை இரண்டும் முதிர்ந்த நிலைக்கு வரும் முன்னரே உயிர்கள் இதனைவிட்டு மறைந்தொழியக் காண்டலால், அரைகுறையாய்ப் பெற்ற அறிவு இன்பங்களுடனே அவ்வுயிர்கள் பிறவியை முற்றும் விட்டொழிதல் இசையாதெனவும், அறிவு இன்பங்களிரண்டும் ஒரு சிறு குறையும் இல்லையாய் நிறைந்த நிலைக்கு வரும்வரையில் இந்தவுலகத்திலோ அல்லது இதனையொத்த வேறு உலகங்களிலோ அவை பற்பல பிறவிகளை யெடுக்குமெனவும் உய்த்துணர்கின்றேம். எனவே, இப் பிறவியிற் காணப்படும் நிகழ்ச்சி கொண்டு இதனோடு தொடர்புடைய முற்பிறவி நிகழ்ச்சியும், இனித் தொடரும் பிற்பிறவி நிகழ்ச்சியுங் காணவல்ல அறிவு விலங்கினங்கட்கு இன்றி மக்களுயிர்க்குமட்டுமே அமைந்திருத்தலால், மக்கள் வாழ்க்கை யானது பகுத்தறிவு விளக்கத்தையும், அதன்வழியே இன்பப்பேற்றையுமே அவாவிநிற்றலும், அறிவு விளங்கப்பெறுவதெல்லாம் அறியாமைவாயிலாக வருந் துன்பங்களை நீக்கி இன்பத்தைப் பெறுதற்பொருட்டாகவே நிகழ்தலாற் பிறவி யெடுப்பதன் முடிந்தநோக்கம் மாறாப்பேரின்பப் பேறாகவே கடைக் கூடுதலுந் தாமே போதரும். இவையே பண்டை நந்தழிழாசிரியர் கண்ட முடிந்த வுண்மைகளும் ஆகும். இஃது ஆசிரியர் தொல்காப்பியனார்,

எல்லா உயிர்க்கும் இன்பமென்பதுதானமர்ந்து
வரூஉம் மேவற் றாகும் (பொருளியல். 29)

என்று அருளிச்செய்தவாற்றானும், உறுதிப்பொருள்களைப் பிற்காலத்தார் அறம் பொருள் இன்பம் எனப் பாகுபடுத் தோதியதுபோலாது, அவர்

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கன்பொடு
புணர்ந்த ஐந்திணை மருங்கின்

எனக் களவியல் முதற்கண் ஓதியவாற்றானுந் தெளியப்படும்.

இனி, அறிவும் இன்பமும் பெற்றுவரும் மக்கள் அவை தம்மைத் தாந் தனித்திருந்து பெறமாட்டாராய், ஒருவர் மற்றொருவரோடு அளவளாவி ஒருங்குவாழும் உறவு முறையினாலேயே அவை தம்மைப் பெற்றுவருதலுங் காண்கின்றோம். இன்னும், இம் மக்களின் உறவுவாழ்க்கை யுள்ளும் ஆடவரும் மகளிருங், கணவரும் மனைவியருமாய் ஒருங்கு கூடி வாழும் வாழ்க்கையே அவர் இந்நிலவுலகில் இருக்குந் துணையும் நிலை பெற்றிருக்கும் நெருங்கிய நீண்ட வாழ்க்கையாய், மேலும் மேலும் உயிர்கள் பிறவிக்கு வருதற்கு ஏதுவாய், மக்கள் வாழ்க்கை யென்பதொன்று இம் மாநிலத்தில் நடைபெறுதற்கு அடிக்காரணமாய்ச் சிறந்து நிற்றலின் அத்துணைச் சிறப்பினதாகிய இல்வாழ்க்கையினையே நம் பண்டைப் பேராசிரியர் தாம் இயற்றிய நூல்களிலெல்லாஞ் சிறந்தெடுத்து, அதனைப் பலவாற்றானும் அழகுபடுத்துப் பாடியும் பேசியும் இருக்கின்றனர். ஒர் ஆண்மகனும் ஒரு பெண்மகளுங்கூடி நடாத்துவதாகிய அவ் வில்வாழ்க்கை மிக உயர்ந்த பேரன்பின்வழித்தாக நடைபெறுவதாமென்பதும், அவ் விருவர்க்குள் இயற்கையேயுண்டாம் அப்பேரன்புதான் காதல் என்னும் பெயரால் வழங்கப்படுமென்பதும்,

காதற் காமங் காமத்துச் சிறந்ததுவிருப்போ
ரொத்து மெய்யுறு புணர்ச்சி

என்று பரிபாடலும்

சொற்பா லமிழ்திவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனேநற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பிற்கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே

என்று திருச்சிற்றம்பலக் கோவையாரும் (8) நுவலுமாற்றால் தெளியப்படும். இப் பெற்றித்தான சிறந்த காதலன் பிற்பிணைப் புண்டவழி மனைவி தன் கணவனையன்றி ஆடவர் பிறரைக் கனவிலும் நினையாமையின் அவட்கே உண்மைக் கற்பொழுக்கம் நிலைபெறும்; அவள் கணவனும் அவளை யன்றி மகளிர் பிறரைக் கருதாமையின் அவற்கும் உள்ளம் உரன் அழியாதாய் நிற்கும். இவ்விருவரின் சிறந்த கற்பியல் நிலை,

மீண்டா ரெனவுவந் தேன்கண்டு நும்மைஇம் மேதகவேபூண்டா ரிருவர் முன் போயின ரே? புலி யூரெனைநின்றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண்டேன், அயலேதூண்டா விளக்கனை யாய்! என்னை யோஅன்னைசொல்லியதே

என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையாரால் (244) தெளிவுறுத்தப்படுதல் காண்மின்கள்! இத் திருப்பாட்டிற் சொல்லப்படுவது இது; தன் மகள் தன்னாற் காதலிக்கப் பட்ட ஒர் ஆண்மகனை மணந்து கொள்ளுதற்பொருட்டு அவனுடனே கூடித், தன்னவர் எவரும் அறியாமே அவனூர்க்குப் போய்விட்டனள். அவள் அங்ஙனம் போயதை யறிந்த செவிலித்தாய், தன் மகளும் அவள் காதலனுங் கூடிச் சென்றவழியை அவருடைய அடிச்சுவடு களால் அறிந்து அவ் விருவரையுந் தேடிச் செல்லத், தனக்கெதிரே ஓர் இளைய அழகிய மங்கையும் அவள் கணவனும் வரக்கண்டு தான் மேலுஞ் செல்வதை நிறுத்தி நின்றாள். நிற்க. எதிர்வந்த அவ்விருவந் தன்னருகு புகுந்ததுந், தம்மூர்க்குச் சென்ற என் மருமகனும் மகளுமே திரும்பி வருகின்றாரென நினைந்து நும்மைக் கண்டு மகிழ்ந்தேன்; ஆனால், நீவிர் வேறென்பது அணுகிவந்ததுந் தெரிந்தேன். நுங்களைப் போலவே எல்லாவகையிலுஞ் சிறந்தார் இருவர் நும்மை எதிர்ப்பட்டுச் செல்லக் கண்டீரோ? என அச் செவிலித்தாய் சொல்லி வினவ, அவ்விருவரில் ஆண்மகனாய் நின்றவன் அத் தாயை நோக்கி, அன்னாய்! புலியூர்ச்சிற்றம் பலத்தே புலனாய் நின்று என்னை அடிமைகொண்ட சிவபெருமானது மலைக்கண் உள்ள அரிமாவை யொத்தான் ஒர் ஆண்மகனை யான் கண்டேன் என விடைகூறி, அதன் பிறகு, தன் பக்கத்தே நின்ற தன் மனையாளை நோக்கித், தூண்டாத மணிவிளக்கை யொத்த காதலி யான் கண்ட அவ் வாண்மகன் பக்கத்தே வேறொன்றை இவ் வன்னை சொல்லினளே; அஃது யாது? அதனை அவட்கு அறிவிப்பாயாக! என்று கூறித் தன் மனையாளை ஏவின பான்மையை உற்றுநோக்குமின்கள்! செவிலித்தாய் வினாவியதற்கு ஆளியன்னானைக் கண்டேன் என்றவன், அவன் பக்கத்தே சென்ற அவன்றன் காதலியைத் தான் கண்டதாகக் கூறிற்றிலன்; ஏன்? அவன் தன்னுடன் போந்த காதலியைத் தன்னுயிராகக் கருதித் காதலன்பு கொண்டிருந் தானாகலின் அவன் தன் மனைவியின் உருவத்தையன்றிப் பிறள் ஒருத்தியைச் சிறிதும் நினைந்திலன் அதனால், எதிரே சென்ற ஆடவனையன்றி அவன்றன் காதலியை அவன் கண்டுங் காணாதவனோயாயினான்; என்றாலுஞ் செவிலித்தாய் வினாவியதில் ஓர் ஆண்மகனேயன்றி ஒரு பெண்மகளுங் குறிப்பிடப்பட்டமையால், தான் காணாத அப் பெண்மகளைத் தன் மனையாளே கண்டிருக்கவேண்டுமெனக் கருதி, அவளை அக் குறிப்புக்கு விடைதருமாறு ஏவின நுட்பம் பெரிதும் வியக்கற்பாலதாகும். இன்னும் செவிலித்தாய் கேட்ட அவ் வினாவுக்கு, அவ் விளைஞன் முதலில் விடையுரை பகர்ந்த நுட்பத்தினை ஓருங்கால், அவன்றன் மனையாள் அவன்மேற் பெருங்காதல் பூண்ட ஒழுக்கத்தினளாகலின் அவளுந் தன் கணவனை யன்றித் தம்மெதிரே சென்ற அவ் வாண்மகன் பிறனொருவன் உருவினை நினைந்திற்றிலள்; அதனால், அவள் அவன் பக்கத்தே போய பெண்மகளை மட்டும் நோக்கினாளா கற்பாலள் என்பதூஉம் போதரா நிற்கும். எடுக்குந்தோறுங் குறையாத் தெய்வக் கருவூலம் போல், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த இத் திருப்பாட்டு இங்ஙனம் எடுக்க எடுக்கக் குறையாப் பொருளாழம் வாய்ந்து, ஈருடம்பின் ஓருயிராய்த் திகழுங் கணவன் மனைவியரின் காதற்பெருங் கிழமையினையும் அதனால் அவர்க்கு நிலைபெற்ற கற்பொழுக்க விழுப்பத்தினையும் நன்கு தேற்றுமாறு கருத்திற் பதிக்கற் பாலதொன்றாம்.

இங்ஙனம் ஈருடம்பின் ஓருயிராய் நிற்குங் காதலரின் கற்பியல் வாழ்க்கைக்கு, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் அவன் மனைவி பெருங்கோப்பெண்டும் உறுபெருஞ் சான்றாய்த் திகழ்கின்றனர். இவர் இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாத அத்துணைக் காதற்பெருங்கேண்மை யுடையராய் விளங்கினமை, தமிழ்மொழிவல்ல இவர் இருவரும் பாடிய பாட்டுக்களால் நன்கு தெளியப்படுகின்றது. ஒருகால் இப் பாண்டிவேந்தன் தன்னை எதிர்க்க முனைந்த அரசர்களைத் தாக்கி வெற்றிபெறேனாயிற் காதற்கிழமையிற் சிறந்த என் மனைவியைப் பிரிந்தேன் ஆகுக! என்று வஞ்சினங் கூறியதை,

மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்தடங்காத் தானை வேந்தர் உடங்கியைத்தென்னோடு பொருதும் என்ப, அவரஆரமர் அலறத் தாக்கித் தேரோடுஅவர்ப்புறங் காணேன் ஆயிற் சிறந்தபேரமர் உண்கன் இவளினும் பிரிக! (புறநானூறு, 71 )

என்று அவன் அப்போது பாடிய அருந்தமிழ்ச் செய்யுளால் அறிகின்றேம். இவன் தன் மனையாளைத் தன் ஆருயிரெனக் கொண்டொழுகியவாறு போலவே, இவன்றன் மனையாளான பெருங்கோப்பெண்டும் இவனைத் தன் இன்னுயிராய்க் காதலித்து, அவன் இறந்துபட்டஞான்று அவனைப் பிரிந்து உயிர்வாழமாட்டாளாய்த் தீப்பாய முனைந்துழி, அருகிருந்த சான்றோர் அவளைத் தடுத்தும், அவள் அவரை நோக்கிப்,

பல் சான்றீரே! பல் சான்றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்டகாழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாதுஅடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்டவேளை வெந்தை வல்சி யாகப்பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ!
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்நுமக்கரி தாகுக தில்ல, எமக்கு எம்பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பறவள்ளிதழ் அவிழ்ந்த தாமரைநள்ளிரும் பொய்கையுஞ் தீயும் ஓரற்றே

(புறநானூறு. 246)

என்று இவ்வருமருந்தன்ன செய்யுளைச் சொல்லித், தீப்பாய்ந்து உயிர்நீத்தனள். கல்வியிலும் அரச வாழ்க்கையிலும் நிகரின்றிக் கலித்த இவ்விருவரும் ஒருவரையொருவர் பிரியலாற்றாது மாய்ந்த காதற் கற்பின் மாட்சியினை யுள்ளுதொறும் உள்ளம் உருகாதார் யார்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!