
ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்
9. புத்திரப் பேறு
அநித்தியமான மனிதன் நித்தியத்துவத்தை விரும்புகிறான். இந்த நித்தியத்துவ ஆசை எத்தனையோ விதங்களாக உருவெடுக்கிறது. தான் நிலைக்க முடியாது; ஆனால் தனக்குப் பின் ஏதாவது தன்னுடையது என்று நிலைக்க வேண்டும் என்று சாதாரண மனிதன் எண்ணுகிறான். அந்த எண்ணம் காரணமாகத்தான் மனிதர்களிடையே புத்திர தாகம் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம் என்று எனக்குத் தோன்றுகிறது..
வேதாந்த மனப் பக்குவம் பெற்றவன் உலகில் தான் இருந்த சுவடு தெரியாமல் தான் இருந்த இடத்தில் கறை படியாமல் போய்விட வேண்டும் என்றே எண்ணுகிறான். ஆனால் உலகில் ஆட்சி செலுத்துகிற தத்துவங்களிலே வேதாந்த தத்துவம் சிறந்தது என்று ஒப்புக் கொள்கிறவர்களில் லக்ஷத்தில் ஒருவர்தான் அதைப் பயனுறப் பின்பற்றத் தயாராக இருப்பார்கள். சமாதி கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், போட்டோ படங்கள் எடுத்தோ, சிலைகள் நிர்மாணித்தோ தான் போன பின்னரும் தன் ஞாபகத்தை உலகில் நிலவச் செய்ய வேண்டும் என்றும், தனக்குப் பின் தன் புகழ் நிலைக்க வேண்டும் என்றும், தன் வீடு தன் நிலங்கள், தன் குடும்பம் என்று விஷேமாகப் பெருமையுடனும் புகழுடனும் பலவிதத்தில் உலகில் நினைவுச் சின்னங்கள் இருக்க வேண்டும் என்றும் எண்ணாதவர் யார்?
என் மாமா அரைப் பைசா விடாமல் கணக்கெழுதிச் சேர்த்தார். வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி ஏராளமாகவே சேர்த்து விட்டார். அவர் கொடுத்த இடங்களில் எது எப்படியானாலும், அவருடைய பணம் ஒன்றுக்குப் பத்தாகவே கிடைத்தது. தொண்ணூற்றி மூணேமுக்கால் ரூபாய்ச் சம்பளத்தை, வாழைக்காயும் நெய்யும் புடலங்காயும் தருகிறவர்களிடம் வாங்கிய சிறிய அளவில் பெருக்கிக் கொள்ளவே முயன்றார் அவர். எனக்குத் தெரிந்து அவர் ருசியாகச் சாப்பிட்டதில்லை. ஆரம்ப காலத்தில் மாமிக்கு வயிறாரத் தன் வீட்டில் உணவருந்தியதில்லை; வாய்க்கு உடம்பு சரியாக இல்லை. சமைக்கக் கொள்ள முடியவில்லை என்று கண் துடைப்புக்காக ஒரு காரணம் சொல்வதுண்டு. அதுகூட நாளடைவில் நின்று விட்டது. “சாப்பிட்டு என்ன கண்டது? ருசி என்று சொல்லப்படுவதெல்லாம் தொண்டை வரையில்தானே?” என்பாள் மாமி அடிக்கடி. “பணம் என்றால் அது பாங்கி வரையிலும்தான்”என்று ஏன் திருப்பிச் சொல்லக் கூடாது என்று எனக்குத் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல என்பது பணம் படைக்காத எனக்கே தெரிந்ததே!
சாத்தனூர் வேங்கடாசலம், சாத்தனூர் வேங்கடாசலம் என்று மாமாவுக்கு பெயரும் பெருமையும் இருந்த தெல்லாம் அவர் பணத்தால் விளைந்ததுதானே? பணக்காரனாகத் தன் முயற்சிகளால் ஆகிவிட்டவனை உலகம் பார்க்கிற பார்வை தனியான பார்வைதான். எவ்வளவு பொறாமையுடன் பார்க்கிறது உலகம். தானும் ஏன் இப்படியாகவில்லை, இனியாவது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாமே என்று எண்ணுகிற மாதிரிக் கவனிக்கிறது, உலகம். எம்.ஏ. படித்தால் என்ன, அதற்கப்புறம் தினமும் ஒரு புஸ்தகமாக உலகிலுள்ள அறிவு நூல்களை யெல்லாம் கரைத்துக் குடித்திருந்தால்தான் என்ன? வெறும் அறிவையும், அறிஞனையும் கண்டு உலகம் சற்றுப் பயந்து ஒதுங்கிப் போகிற மாதிரித்தான் எனக்குத் தோன்றுகிறது. பணம் படைத்தவனைச் சுற்றி வளைய வந்து புகழ்ந்து போற்றி அநுபவிக்கிறது உலகம்.
“இத்தனை சொத்தும் சேர்த்து என்ன பயன்? பிள்ளை குட்டி கூட இல்லையே.. வேறு யாரோ தானே அநுபவிக்கப் போகிறார்கள்?”என்று மாமாவைப் பற்றிச் சொன்னவர்கள் கூடப் பொறாமையுடன்தான் சொன்னார்கள். ‘இன்னும் இரண்டு லட்சம்தான் சேர்க்கட்டுமே? யாருக்குப் பிரீதி’
என்றார்கள்.
“காலாகாலத்தில் யாரையாவது ஸ்வீகாரமாக, தத்து எடுத்துக் கொண்டு விடேன்”என்று என் மாமாவுக்குப் புத்தி சொன்னவர்களும் உண்டு. இப்படிச் சொன்னவர்களில் மாமாவுக்கு மாமா, அவருக்கு கடன் கொடுத்துவிட்டு அவதிப்பட்டு, பின்னர் இறந்து போனாரே, அவரும் ஒருவர். அவர் மனத்தில் என்ன இருந்ததோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவருக்குப் பிள்ளை குட்டிகள் டஜன் கணக்கில் இருந்தன. “அவர் அசட்டுப் பிள்ளைகளில் ஏதாவதொன்றை நாம் ஸ்வீகாரம் எடுப்போம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாரோ அவர்…?”என்று மாமி ஒருதரம் தன் கணவனைக் கேட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது. “ராஜா ஆத்திலே இருக்கிறவரைக்கும் நமக்குப் பிள்ளையில்லாக் குறை தெரியாது”என்றாள் மாமி ஒரு தரம், என் காதில் விழும்படியாக.
அப்போது நான் கோவையில் இண்டர்மீடியட் வகுப்பில் முதல் வருஷத்தில் சேர்ந்திருந்தேன்.
வேங்கடாசலம் சொன்னார்; “இப்பவே உன் மருமானுக்கு உன் வாழ்க்கை பிடிக்கவில்லை. மனசில் இருப்பதைக் கெட்டிக்காரத்தனமாகச் சொல்லாமல் இருக்கிறான் அவன். இந்த இரண்டு வருஷப் படிப்புக்குள்ளேயே அவன் இங்கிருந்து மிகவும் சிரமப்பட்டுப் போயிடுவான்.”
அடேடே! மாமா இவ்வளவு தூரம் விஷயங்களைக் கவனித்து வைத்திருக்கிறாரா என்றிருந்தது எனக்கு. வேறு விதமாகவும் வாழலாம் என்பது அவருக்கும் தெரிந்துதான் இருந்தது என்று தானே ஏற்பட்டது? ஆனால், மாமாவை அசடு என்றோ அறியாதவர் என்றோ சொல்வது தப்பு என்று எனக்கே நான் கூறிக்கொண்டேன். அவர் தெரிந்தேதான் இந்த காரியங்களை லாவகமாகச் சாதித்து விடுகிறார் என்று வாழ்வு வாழ்கிறார். அதனால்தான் அவர் பல சிரமமான எண்ணினேன் நான். தீர யோசித்து, உணர்ந்து இந்த வாழ்வுதான் நான் வாழப்போகிறேன் என்று திட்டமான வாழ்வு வாழ்பவன்தான் வாழ்க்கையிலே பல காரியங்களைச் சாதிக்க முடியும் என்று உலகத்துப் பாட புஸ்தகங்களிளெல்லாம், நீதி நூல்களிளெல்லாம் அறிஞர்கள் அலறியிருக்கின்றனர். வாழ்க்கையோடு ஒட்டாத ஒரு காரியம் அல்ல அது என்றுதான் சொல்ல வேண்டும்.
நானும் திட்டமான, முன்கூட்டியே தீர்மானம் செய்து கொண்ட ஒரு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறேன் என்று எனக்கு நானே சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன். என் திட்டங்களும் தீர்மானங்களும் வெற்றி பெறுகின்றன. ஆனால், ஏனோ வாழ்க்கை வெற்றி பெற மாட்டேன் என்கிறது. அது ஏன் என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். என் மாமா வேங்கடாசலம் என்ன சொல்லியிருப்பார்? “எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படைத்திட்டம், எல்லாவித லட்சியங்களுக்கும் அடிப்படை லட்சியம், எல்லாத் தத்துவங்களுக்கும் ஆதாரமான தத்துவம் ‘பணம்’தான் ராஜா, பணம் என்கிற லக்ஷ்யத்தை அடைந்து விட்டவனுக்கு மற்ற எல்லாமே வளைந்து கொடுக்கின்றன….”என்பார் அவர்.
அது உண்மையல்ல என்று சொல்ல நான் யார்? வேறு எந்தக் காலத்தில்தான், வேறு எந்தவிதமான அடிப்படைத் தத்துவம், அடிப்படைக் கொள்கை ஆட்சி செலுத்தியது? இன்றைய உலகில் இன்றைய உலகில் என்று சொன்னால், ஒரு நூற்றாண்டாக இரண்டு நூற்றாண்டாக என்று அர்த்தமில்லை, மனித நாகரிகம் என்று இன்று நாம் எண்ணுவது தெரிந்த காலம் முதலாக – பணம்தான் தனியாட்சி செலுத்தி வந்திருக்கிறது. கூடக்கூட ஏதோ சில தத்துவங்களும் கொள்கைகளும் அவ்வப்போது கலந்து கொண்டிருக்கலாம். இல்லையென்று சொல்ல முடியாது. இருந்தாலும் பணம்தான் காலம் பூராவும் ஆட்சி செலுத்தி வந்திருக்கிறது. அதில்லாத் வரையில் வாழ்க்கையில், யார் எவ்வளவு அழகான திட்டம் வகுத்துக் கொண்டிருந்தாலும், அது வெற்றி காணாத விஷயம் தான் என்பார் மாமா. அது உண்மை போலத்தான் இருக்கிறது.
மாமா பணம் என்கிற லக்ஷ்யத்தை எதிர்பார்த்ததை யிலே விட அதிகமாகவே அடைந்துவிட்டார். அந்த லக்ஷ்ய பூர்த்தி அவரைப் பற்றிய வரையில் ஒரு உள்ள நிறைவிருந்தது. மாமிக்கு வேண்டுமானால் நிறைவு ஒன்றும் ஏற்படவில்லை என்று சொல்லலாம். மாமாவுக்கு கோவையிலிருக்கும் போதே பணத்தைப் பற்றிய வரையில் நிறைவு ஏற்பட்டு விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது. அதுவரையில் பணம் என்பது ஒரு லக்ஷ்யம் என்றும், கிடைக்காத பொருளாகி விடலாம் என்றும் அவருக்கு உள்ளூற பயம் இருந்திருக்கலாம். அதற்குப் பிறகு ‘கை’வந்த ஒரு வித்தையாகிவிட்டது அது. என்ன செய்தாலும் பணம் என்கிற விஷயம் கை நழுவி விடாது என்று தைரியம் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அநித்தியமான மனிதன் நித்தியத்துவத்துக்கு ஆசைப்படுகிற கதையைச் சொல்ல வந்த நான் சுற்றி வளைத்து எதை எதையோ சொல்லி விட்டேன். ஆனால், அநித்தியமான மனிதன் சேர்க்கும் பணமும் ஈட்டுகிற பொருளும் அநித்திய மானதுதான். அதை உபயோகப்படுத்த ஒரு வாழ்க்கை ஏற்படுகிற வரைக்கும் அதுவும் அநித்தியமானது என்று நினைப்பது நியாயம் தானே!
“இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்க்கிறயே பணத்தை உனக்கு ஒரு பிள்ளை பிறந்து அதை தாம் தூம் என்று வாரி இறைத்து விடுவான்” என்றார் மாமாவுக்கு மாமா ஒரு சமயம்.
‘இறைக்கட்டுமே, அதற்காகத்தானே சேர்த்து வைக்கிறேன்” என்றார் மாமா. “எனக்குத்தான் செய்யத் தெரியவில்லை ‘செலவு.’வருபவன் செலவழிப்பது எனக்குச் சந்தோஷம்தான்” என்றார்.
ஆனால் மாமி அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. “நீங்கள் சொல்கிற மாதிரி இறைப்பவனாக வர மாட்டான். எப்படி வருவான்?” என்றாள்.
இருந்தாலும் மாமிக்கிருந்த சாமர்த்தியமோ சாதுர்யமோ மாமாவுக்கில்லை என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியத்தானில்லை. வாழ்க்கையில் லக்ஷ்யமோ, நிறைவோ, நிறைவுக்கான வழிகளோ, மாமா தானாக வகுத்துக் கொண்டவை அல்ல. மாமி அவருக்குக் கொடுத்தவை என்று நான் நிச்சயப்படுத்திக் கொண்டேன். அவருக்குத் தானாக இவ்வளவு தூரதிருஷ்டியும், அழுத்தமான பாதையும் வகுத்துக் கொள்ளத் தெரியாது. தலைமைப் பதவி மாமியுடையதுதான் என்ற நினைப்பு ஏற்கெனவே எனக்கு உள்ளதுதான் என்றாலும், இப்போது ஊர்ஜிதமாயிற்று.
தனக்குப் பிள்ளையில்லாத குறையைப் பற்றி மாமா சில சமயம் யாரிடமாவது பேசுவார். ஆனால், மாமி பேசி நான் பார்த்ததில்லை. மாமா பேசியதைக் கூடக் கண்டிப்பாள் அவள்.
தனக்குப் பிள்ளையுண்டு, பிறந்து விடுவான் என்பதில் அவளுக்குத் திடமான நம்பிக்கை. குடும்பத்தின் ஒரு அஸ்திவார ஆதாரமான பணத்தைப் படைத்தாகி விட்டது. இன்னொரு ஆதாரமான புத்திர சம்பத்தும் உண்டாகிவிடும் என்றுதான் மாமி திடமாக இருந்தாள். மாமா ராமேச்வரம் போகலாமா என்பார், மாமி சம்மதிக்க மாட்டாள். “எதுக்கு? இருநூறு ரூபாய் செலவு செய்வதில் லாபமென்ன? அந்த இருநூறில் ஒரு ஐம்பதை டாக்டரிடம் கொடுப்போம்”என்பாள் மாமி. மருந்துகள் சாப்பிடுவதிலும், டாக்டர்களைத் தேடிப் போவதிலும் மாமிக்கிணை மாமியேதான். ஒரு மருந்தை இன்ன வேளையில் இப்படிச் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் சொன்னாரானால், அதைப் பிசாகமல் செய்வாள் மாமி.
அது தவிர சனிக்கிழமை விரதம் முதல் செவ்வாய்க் கிழமை ஜபதபங்கள் வரையில், செலவில்லாத காரியங்கள் பலவும் மாமி தவறாமல் செய்து வந்தாள். “பிறருக்கு நாம் கெடுதி செய்ததோ, நினைத்ததோ இல்லை. நமக்குக் கடவுள் கெடுதி செய்யவே மாட்டார்”என்பாள் மாமி தினம் ஒருதரம்.
அடிக்கடி தான் பிறருக்குக் கெடுதி செய்ததோ, நினைத்ததோ இல்லை என்று சகல விஷயங்களையும் அறிந்த கடவுளுக்கு அவள் தினமும் ஞாபகப்படுத்த வேண்டியிருந்ததும் விந்தை தான் என்று நான் எண்ணிப் பார்ப்பேன். இப்படி அடிக்கடி சொல்வதற்கு ஏதாவது காரணம் இருந்துதானே தீர வேண்டும்?
“கெடுதி, நல்லது, செய்வது, நினைத்தது”என்றெல்லாம் சொல்லுகிறோமே? இதற்கு அர்த்தம் என்ன என்று பின்னால் நான் பல தடவைகளில் சிந்தித்துப் பார்த்ததுண்டு தான். நல்லதும் கெடுதியும் அப்படி ஒன்றும் சுலபமாகத் தீர்மானித்து விடக்கூடிய விஷயங்கள் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. வட்டிக்குப் பணத்தை விட்டு, வட்டியையும் முதலையும் சிறிதும் தள்ளாமல் வாங்குகிறவர்களைக் கெடுதி செய்கிறவர்களாக உலகம் கருதுகிறது. உண்மையில் அது அப்படித்தானா என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
வட்டிக்கு கடன் வாங்குபவன் யார்? ஏதோ ஒன்றிரண்டு ஏழைகள் வேறு வழியில்லாமல் கடன் வாங்க முன் வரலாம். ஆனால் பரம ஏழைகளுக்கு யார் கடன் தரச் சம்மதிக்கிறார்கள். சொத்துள்ளவன், கடன் வாங்க வேண்டிய நிலை வந்தது என்றால், நிர்வாகத் திறமையற்றவன் என்றுதானே அர்த்தம். ஒரு விதத்தில் இல்லாவிட்டால் இன்னொரு விதத்தில் தன் சொத்தை இழக்க வேண்டியவன் தான் அவன் என்பதும் வெளிப்படைதானே? நிர்வாகத் திறமையற்றவன் எத்தனை நாள் சொத்துக்குடையவனாகவும் இருக்க முடியும் ? என் மாமாவைப் போன்றவர்களிடம், கடன் வாங்குகிறவன் அதிருஷ்டசாலிதான் அவசியமே இல்லை. “இதோ தீர்ந்தது”என்று அவன் மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டிருக்க வேண்டிய சொத்துப் பூராவும் மாமா நாலைந்து வருஷங்களில் பற்றிக் கொண்டு விடுவார். அதற்குப் பிறகு அவன் கடன் வாங்க விரும்பினாலும், சொத்துப் போன பிறகு யார் கடன் தருவார்கள்? கடன் வாங்காமல், ஏழை வாழ்வு வாழ அவனுக்கு உதவி விட்ட என் மாமா அவனுக்கு நல்லது செய்தாரா, கெடுதி செய்தாரா என்பது விசாரித்துப் பார்க்க வேண்டிய விஷயம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது.
நல்லது கெடுதி என்பதை அப்படிச் சுலபமாக முடிவு கட்டிவிட முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
உலகத்தின் பாவச்சுமையை ஏற்றுக் கொள்ள முன் வருபவர்களை மஹான்கள், பரமபிதாவின் மகன் என்று உலகம் போற்றுகிறது. உலகத்தின் பாபங்களுக்கெல்லாம் ஆதி காரணமாக நிற்கும் பொருளையும் பணத்தையும் சுமையாக ஏற்றுக் கொள்ளுகிற தைரியம் படைத்த மனிதர்களையும் ஏன் மஹான்களாகச் சொல்லக் கூடாது? உலகில் ஏழைகள் தான் நல்லவர்கள் என்று எல்லோரும் ஒருமுகமாக அபிப் பிராயம் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட நல்லவர்கள் அதிகரிக்க பணக்காரர்களைப் போல உதவி செய்பவர்கள் யார்? என் மாமா வேங்கடாசலம் காரணமாக உலகிலே பலர் ஏழைகளாகி, இப்போது நல்லவர்களாகயிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
இவ்வளவு புண்ணியமும் சேர்ந்துதான் போலும் மாமிக்குப் புத்திரப்பேறு உண்டாயிற்று. கோவையில் இண்டர் மீடியட் செலக்ஷன் பரீட்சை நான் எழுதிய போது, மாமிக்கு அருமைப் புதல்வன் –வந்து அவதரித்தான். அவனுக்கு அவர்கள் ஸ்ரீனிவாசன் என்று பெயரிட்டார்கள் என்று சொல்வது பிசகு. நான்தான் ஸ்ரீனிவாசன் என்று பெயர் வைக்க வேண்டுமென்று சொன்னேன் என்று நினைவு வருகிறது எனக்கிப்போது.
ஸ்ரீனிவாசன் பிறப்பதற்குமுன் ஒரு ஏழு மாத காலம் டாக்டர் எங்கள் வீட்டிலேயேதான் குடியிருந்தார் என்று சொல்ல வேண்டும். வழக்கமான அபார்ஷன் காலம் நெருங்க நெருங்க ஒரு புது மாமியையே கண்டேன் நான். பிறருக்கு நல்லது கெடுதி என்றோ, கடவுள் என்றோ, பணம் என்றோ, கணவன் தப்பாக ஏதாவது செய்துவிடப் போகிறாரே விஷயங்களில் என்றோ, கவலையேயில்லாத ஒரு தத்துவத்துக்கு மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கும் சக்தியிருக்கிறது? ஆசை என்று அடிமைப்பட்டு விட்டால் எப்படியெல்லாம் இருந்து மீளுகிறார்கள் மனிதர்கள்?
எப்படியோ மாறிவிட்டாள் மாமி என்கிற நினைப்பு எனக்கு அப்போதே ஏற்பட்டது. பழைய மாமியல்ல இவள் இப்போது ஸ்ரீனிவாஸனின் தாய். அவனைப் பற்றிய வரையில் பணம், கணவன் என்கிற விஷயங்கள் கூடப் பின்னடைந்து விட்டன. இப்போது முதல் விஷயம், முதல் இடம் ஸ்ரீனிவாஸ னுடையதுதான், அவளைப் பற்றிய வரையில்.



