
ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்
8. உத்தியோகத் தாழ்வு
வேங்கடாசலத்துக்குப் பண விஷயத்தில் ஏராளமாகவே அதிருஷ்டம் இருந்தது. அவர் தொட்டதெல்லாம் அவரைப் பற்றிய வரையில் துலங்கிற்று. ஆனால், அவரிடம் கடன் வாங்கியவர்கள் யாருக்கும் அவர் தந்த பணம் சரியான படிப் பயன்படவில்லையென்று ஒரு ‘புகழும்’பரவியிருந்தது. அதற்காக அவசியமானபோது யாருமே அவரிடம் பணம் கேட்டுக் கொண்டு வராமல் இல்லை. நூறு ரூபாயாகக் கொடுத்துவிட்டு உரியதற்கு மேல் அதிகமாக எப்படியோ, நியாயமாகவோ நியாயமில்லாமலோ, பெற்றுக் கொள்ளும் சாமர்த்தியம் இருந்தது அவருக்கு. அதைச் சாமர்த்தியம் என்று சொல்வதா, அதிருஷ்டம் என்று சொல்வதா, அல்லது வேளை என்று சொல்வதா? என்ன சொன்னால் என்ன அவருக்கு டயாபடீஸ் முற்ற முற்ற அவரிடம் பாங்கில் பணமும் ஏறிக் கொண்டிருந்தது. அவர் மனைவிக்கு ஒரு குறைப் பிரஷவத்திற்கு இத்தனை ஆயிரம் என்று கணக்கு வைத்துக்கொண்டு லக்ஷ்மி தேவியே அள்ளிக் கொடுப்பது போல இருந்தது.
“என்ன இருந்தால் என்ன? அநுபவிக்க உடல் நலம் இல்லையே”என்றும், “பின்னர் அநுபவிக்க பிள்ளை யில்லையே” என்றும் அவர்கள் காதில் படவே வேண்டாதவர்கள் பேசுகிற நிலைமை வந்து கொண்டிருந்தது.
அது ஒரு பக்கம், உத்தியோகத்தில் மாமாவுக்கு நல்ல பெயரில்லை என்று சொன்னால் அது விஷயத்தை மிகவும் குறைத்துச் சொல்வதாகும். உண்மையில் மிகவும் கெட்ட பெயர் அவருக்கு.
மாமாவுடைய தொழில் திறமையின்மையை விளக்கப் பிற்காலத்தில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. அப்போது நான் இண்டர் மீடியட்டில் கோயம்புத்தூரில் படித்துக் கொண்டிருந்தேன், மாமா வீட்டிலிருந்து கொண்டுதான். அந்தக் காலத்தில் இண்டர் மீடியட் காலேஜும் உயர்நிலைப் பள்ளியும் அங்கு ஒன்றாக இருந்தன. மாமா பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர், நான் காலேஜில் மாணவன். மாமாவுடைய இஷ்டப் பாடம் எம்.ஏ.யில் சரித்திரம். அதுவரை சரித்திரப் பாடம் சொல்லிக் கொண்டி ரந்த வேங்கடாசலத்தைத் தூக்கி – வேறு ஒரு உபாத்தியாயர் நிரந்தரமாக சீக்காகப் படுத்துவிட்டார் என்பதற்காக, வருஷ முடிவு வரையில் ஐந்தாவது பாரத்துக்கு ஆங்கிலப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
வேங்கடாசலத்துக்கு ஆங்கிலத்தில் சுயமாக ஒரு அறிவுண்டு. மணிமணியான எழுத்துக்களில் மிகவும் எளிய வாக்கியங்களாகக் கொடுத்து அற்புதமாக எழுதிவிடுவார். அவ்வளவுதான். அவருக்கு இலக்கணமோ, வார்த்தைக் கூட்டுப் பிரிப்பதோ சேர்ப்பதோ, வாக்கிய அமைப்பை எடுத்து பிரித்துச் சொல்வதோ வராது. இப்போதுள்ளது போல அந்த நாட்களில் நான் சொல்லுகிற காலத்தில் பையன்கள் பகிரங்க உபயோகத்துக்கும், உபாத்தியாயர்கள் அந்தரங்க உபயோகத்துக்கும் என்று, நோட்ஸ் என்று சொல்லப்படுகிற புஸ்தகங்கள் கிடையாது. இருந்த நோட்ஸ்களுக்கும் பத்திரிகைகளில் படாடோபமாக விளம்பரம் செய்து கொண்டு தெருவில் பவனி வருவது கிடையாது. ஏதோ தகாத காரியம் செய்ய முற்படுபவர்கள் போல, திருட்டுத் தனமாகத்தான், பதுங்கிப் பதுங்கித்தான் நோட்ஸ் காரர்கள் வெளி வருவார்கள்.
வேங்கடாசலத்துக்கு நோட்ஸ் ஒன்றும் சமயத்தில் சிக்கவில்லை. அப்பொழுதுதான், எஸ்.எஸ்.எல்.சி. பரீக்ஷையில், அதுவும் ஆங்கிலத்தில் நல்ல மார்க்குகளுடன் நான் பாஸ் செய்திருந்தேன். லேசாக சொல்லிச் சிரித்துக் கொண்டே மாமா ஒரு ஆங்கில வாக்கிய அமைப்புப் பிரிவுக்கு என் உதவியை நாடினார். அன்று எனக்கு மாமாவிடமும் மாமியிடமும் ஏதோ கோபம். என்ன கோபமாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கும் போது அந்த இரண்டு வருஷங்களும் வளருகிற பையனான எனக்குப் போதிய உணவு கிடைக்காத கோபம்தான் என்று தோன்றுகிறது. அவர்கள் பேரில் வஞ்சனை ஒன்றுமில்லை. அவர்கள் சாப்பிட்டதைத்தான் எனக்கும் போட்டார்கள். மட்ட அரிசிச் சோறும், வற்றல் குழம்பும், சுட்ட அப்பளமும் மூணு பங்கு நீரும் ஒரு பங்கு மோரும் கலந்த நீர்மோரும் போட்டார்கள். ஒரு நாள் போதும், இரண்டு நாள் போதும், ஆறு மாதங்கள் தினமும் இதையே சாப்பிட்டால் எப்படிப் போதும்? நான் ரகசியத்தில் ஹோட்டலில் கணக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அப்போது ஆரம்பித்த ஹோட்டல் பழக்கம் முப்பது வருஷங்களுக்குப் பிறகும், இப்போதும், என்னை விட்டபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் வயிறாரச் சாப்பிட்ட பிறகும், உடனேயும் ஹோட்டலைத் தேடிக் கொண்டு போகிற பழக்கம் எனக்கு ஏற்பட்டது அந்த நாட்களில்தான்.
அன்று எனக்குக் கடன் தந்த ஹோட்டலில், ஏதோ சண்டை என்று எனக்கு ஞாபகம்.. “கணக்கு ஏறிவிட்டது. இன்று பணத்தைக் கொடுத்து விட்டு இட்லியோ தோசையோ சாப்பிடு”என்றிருப்பான் ஹோட்டல் முதலாளி, வேறு என்ன? அப்பாவிடமிருந்து எனக்குப் பணம் வர இரண்டு நாட்கள் இருந்தன.
இதெல்லாமாகச் சேர்ந்து எனக்கு மாமாவிடம் பிரமாதமான கோபம். அவர் தந்த வாக்கியத்தைக் கொஞ்சம் பிரித்துக் கொடுத்தேன். சற்று நிரடான வாக்கியம்தான். சொல்ல வேண்டியது இன்னதென்று தெரிந்திருந்தும், வேண்டுமென்றே விஷயம் தெரியாத மாமாவுக்குப் புரியாதபடி லேசாக மாற்றித் தப்பாகச் சொன்னேன். அதை மனசில் கெட்டியாக உருவேற்றிக் கொண்டு மாமா பள்ளிக்
கூடத்துக்குப் போனார்.
அத்துடன் நான் நின்றிருந்தால் பாதகமில்லை. ஐந்தாவது பார மாணவன் ஒருவன், அவன் பெயர் எஸ். எஸ்.ஆர். முத்தையன் என்று ஞாபகம் இருக்கிறது எனக்கு. அவனிடம் போய் மாமா வகுப்பில் வாக்கியத்தை பிரித்துக் காட்டும் போது இது ஏன் இப்படி என்று கேட்கும்படியும், இந்தப் பிரிவு தப்பு இதுதான் சரி என்று அழுத்தமாகச் சொல்லும் படியும் தூண்டி விட்டேன். வகுப்பில் என்ன அமர்க்களம் நடந்ததோ எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு வேங்கடாசலம் என்னிடம் எவ்வித சந்தேகமும் கேட்பதில்லை. அன்று நடந்ததைப் பற்றி நேரடியாக என்னிடம் பேசியதில்லை. பல வருஷங்களுக்குப் பிறகு மாமி ஒரு தரம் சொல்லித்தான் எனக்குத் தெரியும், நான்தான் விஷமமாகச் செய்தேன் என்று மாமா அன்றே புரிந்து கொண்டிருந்தார் என்று. ஆனால் அதுபற்றி அவர் என்னிடம் கோபித்துக் கொண்டது இல்லை. ஐந்து ரூபாயாவது வரவு வருவதானால் கோபித்துக் கொண்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். லாபமில்லாமல் அல்பத்தனமாகக் காரியம் எதுவும் செய்யமாட்டார் அவர். என்னைக் கோபித்துக் கொண்டு லாபம் என்ன?
திருவாரூரில் சர்க்கார் உயர்நிலைப் பள்ளியில் என் மாமா உபாத்தியாயராகச் சேர்ந்த வருஷமே அந்தப் பள்ளிக் கூடத்துக்கே ஆபத்து வந்துவிட்டது என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. பள்ளிக் கூடத்தை ஒட்டியிருந்த கீற்றுக் கொட்டகைகளில் தீ பிடித்துக் கொண்டு திகுதிகு வென்று ஒரு நாள் பூராவும் எரிந்தது. நாங்கள் எல்லோரும் போய் வேடிக்கை பார்த்தோம் என்று ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு இரண்டு மூன்று மாசங்களுக்கெல்லாம் வேறு ஏதோ ஒரு இலாகா சௌகரியம் காரணமாகப் பள்ளிக் கூடத்தையே சர்க்கார் கைவிட்டுப் போய்விட்டது. அது ஜில்லா போர்டு பள்ளியாகி விட்டது. அப்போது வாங்கிக் கொண்டிருந்த தொண்ணூற்றி மூணே முக்கால் ரூபாய் சம்பளத்தை எவ்வித உயர்வு மில்லாமல் மாமா ஒரு ஏழெட்டு வருஷங்களுக்கும் அதிகமாக வாங்கினார். வேறு யாராவதாக இருந்தால், வேலையை ராஜிநாமாச் செய்துவிட்டுப் போயிருப்பார்கள். அப்படியில்லை. மாமா விட்டு விடத் தீர்மானித்திருந்தாலும் மாமி குறுக்கே நின்றிருப்பாள். அவள் இஷ்டம் அது. சம்பளம் வந்தாலும் வராவிட்டாலும் சர்க்கார் உத்தியோகம்தான் வேண்டும் என்பது அவள் இஷ்டம், அவள் இஷ்டத்துக்கு வேங்கடாசலம் எதிர் சொல்ல, அவர்… யார்?
சைதாப்பேட்டையில் மாமா எல்.டி.க்குப் படித்துக் கொண்டிருக்கும் போது, நானும் சைதாப்பேட்டை மாடல் ஸ்கூலில் முதல் பாரம் போனேன். அங்குள்ள படித்தேன் என்று ஞாபகம். அங்கு இருக்கும்போதுதான் எனக்கு அம்மை போட்டிருந்தது. என் நல்ல பாட்டி இறந்ததும் அங்கேதான். பெரியம்மை போட்டியதால், நான் பள்ளிக் கூடம் போகாமல் பல நாள் இருந்து விட்டேன். உடல் தேறிப் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த அன்று சாயங்காலம் என் மாமா என்னைக் கூப்பிட்டு “ஏண்டா ராஜா? பள்ளிக் கூடத்தில் பல பாடங்கள் நடந்திருக்குமே எப்படிப் படித்துப் பாஸ் பண்ண முடியும்?”என்று கேட்டார்.
“முடியலாம். பார்க்கிறேன் மாமா”என்றேன்.
“நன்றாகப் படி, உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் படி”என்றார் மாமா.
“படிக்கிறேன் மாமா” என்றேன். பிறகு பள்ளிக் கூடத்தில் அன்று கேள்விப்பட்ட ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. “இங்கே வாழைக்காய் வாத்தியார் என்று ஒரு வாத்தியார் இருக்காராமே. அவருக்கு ஒரு சீப்பு வாழைக்காய் வாங்கித் தந்துவிட்டால் தானாகப் பாஸ் போட்டு விடுவாராம், பையன்கள் சொல்கிறார்கள்”என்றேன்.
மாமா பதில் சொல்லவில்லை. ஆனால் அவர் முகம் கறுத்துச் சிறுத்தது என்று நினைவு வருகிறது எனக்கு. அப்போது பக்கத்திலிருந்த மாமி கூட ஒன்றும் வார்த்தை சொல்லாமல் முகத்தை வலித்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள். இதற்கெல்லாம் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. வேங்கடாசலத்தையே தான் வாழைக்காய் வாத்தியார் என்று என் சக மாணவர்கள் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும். சைதாப்பேட்டையிலிருந்த வரையில் சீரக ரஸம் அல்லது வற்றல் குழம்புடன் காய்ச்சிய அப்பளத்துக்குப் பதில், வாழைக்காய் கறியே நாங்கள் அதிகமாகச் சாப்பிட்டோம்.
வாழைக்காய் வாத்தியாராக எல்.டி. பட்டம் பெற்ற வேங்கடாசலம் உத்தியோகத்தில் அடைந்த அடை மொழிகள், பட்டப் பெயர்கள், சொல்ப ஏற்றங்கள், ஏராளமான தாழ்வுகள் எல்லாவற்றையும் சொல்லப்போனால் ஒரு பிரம்மாண்ட புராணமே எழுத வேண்டியதாக இருக்கும். தவிரவும் அவருடைய அந்தப் பக்கம் எனக்குச் சரியாகத் தெரியவும் தெரியாது என்றே சொல்லவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக வேண்டாதவர்கள் சொல்லி ஒன்றிரண்டு விஷயங்கள் காதில் விழுந்ததுண்டு. ஒன்றிரண்டு விஷயங்கள் நானே நேரில் கண்டு “ஓஹோ இப்படியா?”என்று அனுமானித்துக் கொண்டவை. பல சமயங்களில் வேங்கடாசலம் அவசரம் அவசரமாகப் பட்டணத்துக்கு வந்து உரிய அதிகாரிகளைப் பார்த்துத் தாழ்வுகள் ஏற்படுமுன் நிரவிச் சரி செய்யப் பார்த்ததுண்டு என்பதும் எனக்குத் தெரியும். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் சிலவற்றில் நான் சென்னையிலிருந்த போது என் வீட்டிலேயே வந்து தங்கியிருந்திருக்கிறார் அவர்.
பல தடவைகள் உயர்நிலைப் பள்ளியிலிருந்து, உபாத்தியாய மாணவப் பள்ளிக்கும், பயிற்சிப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குமாக அவரை மாற்றியிருக்கிறார்கள். பயிற்சிப் பள்ளி மாணவர்கள், குருகுலவாசம் செய்ய வந்த அந்தக் காலத்து சிஷ்ய கோடிகள் போல, அவர் வீட்டில் வேட்டி துவைப்பது முதல், சைக்கிள் துடைத்து, கறிகாய் வாங்கிக் கொண்டு வருவது வரையில் எல்லாக் காரியங்களையும் பக்தி சிரத்தையுடன் செய்து தங்களுடைய ஆறு ரூபாயா? ஏழு ரூபாயா? மாந்திர ஸ்டைபண்டுகளை என் மாமாவுடைய தயவால் பெற்றுப் போவதை நான் பார்த்திருக்கிறேன். நான் காலேஜ் படிப்பையெல்லாம் முடித்துக் கொண்டு பட்டணத்தில் இருக்கும் போது ஒரு சமயம் ஏதோ ஒரு சிறிய ஊரில் ஊர் பெயர் இப்போது ஞாபகமில்லை மாமா டெபுடி இன்ஸ்பெக்டராக இருந்தார். நான் போய் வீட்டில் ஒரு நாள் பூராவும் தங்கினேன். யார் யாரோ வந்து ஏதோ கல்யாணத்துக்குத் தருவது போல எதெதையோ கொடுத்துவிட்டுப் போனார்கள். ஒருவன் ஒரு வாழையிலைக் கட்டுக் கொணர்ந்தான். வேறு ஒருவன் வீடெல்லாம் நாற்றம் பரப்பின ஒரு பலாப் பழத்தைக் கொண்டு வந்து தந்தான். ஒருவன் ஒரு ஈயச் சொம்பில் நெய் கொண்டு வந்து தந்தான் அவன் செம்பையுமே விட்டு விட்டுப் போய்விட்டான் என்று கவனிக்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வந்து போனவர்கள் எல்லோருமே சுற்று வட்டத்து எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார்கள் என்று விசாரித்து அறிந்து கொண்டேன் நான். அதற்கு மேல் விசாரிக்க எதுவும் அவசியமிருந்ததாக எனக்குத் தெரியவில்லை. பலாப்பழம் மட்டுமல்ல; நெய் மட்டுமல்ல; அங்கிருந்த காற்றே நாற்றமடித்தது என்றுதான் எனக்குத் தோன்றிற்று.
இன்று கூட நான் இதெல்லாம் ஏன், எப்படி என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன், எனக்குப் பதில் கிடைக்கவில்லை.
என் மாமா வேங்கடாசலம், ஏன் என்றோ எப்படி என்றோ, கேட்டுக் கொண்டதேயில்லை.
கேட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவராலும் அதற்குப் பதில் எதுவும் கூறியிருக்க முடியாது. அவர் அப்படி ஒன்றும் பிரமாதமான அறிவாளி அல்ல என்று நான் ஏற்கெனவே குறிப்பாகச் சொல்லிவிட்டேனே !
என் மாமி மட்டும் ஏன் என்று கேட்டு, எப்படி என்று விசாரிக்கத் தொடங்கியிருந்தாளானால், உலகுக்கே வழி காட்டக்கூடிய அளவில் ஒரு புதிய தத்துவ தரிசனம் உண்டாகியிருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு விஷயத்தைப் பூரணமாக அலசி அறிவதில், அலசாமலேயே சில சமயம் அறிந்து கொண்டு விடுவதில் மாமிக்கு ஈடு வேறு யாரும் கிடையாது என்பது என் அநுபவம். ஆனால், ஏன் எப்படி என்பதிலோ, மனித குலத்துக்கு ஒரு தத்துவம் வகுத்துத் தரவேண்டும் என்பதிலோ அவளுக்கு ஆர்வம் கிடையாது. எலிமெண்டரி ஸ்கூல் உபாத்தியாயர்கள் வாசல் வழியாக வந்து தைரியமாகத் தந்ததையும், தைரியமில்லாமல் கொல்லை வழியாகப் பதுங்கி வந்து தந்ததையும் எடுத்துப் பத்திரப்படுத்துவதற்கும், வீட்டுக் காரியங்களைக் கவனிக்கவும், சமையலுக்கான கடுகை எண்ணிப் போடுவதிலும், கொடுக்கல் வாங்கலில் சிக்கலானவற்றைத் தனக்கும் தன் கணவனுக்கும் ஞாபகப்படுத்திச் செய்ய வேண்டியதைத் தீர்மானிப்பதற்குமே மாமிக்குப் பொழுது சரியாக இருந்தது.
நெய்யல்லாத நெய்யும், பழைய ஈயச் செம்பும், அழுகிய பலாப் பழமுமாக வந்து கொண்டிருந்த நாளிலேயே மாமாவிடம் ஏராளமாகப் பணம் சேர்ந்து விட்டது. மாமியின் இடுப்பில் கனமான சாவிகள் பத்திருபதுடன் ஒரு கொத்து, வெள்ளிக் கிளிப்புடன் ஏறிக் கொண்டிருந்தது. சாவிக் கொத்தின் கனத்தைத் தாங்கக் கூடிய இடுப்புத்தான் அது, தங்கம் வெள்ளியையும், பச்சை சிவப்பையும் நகைகளாக அணிந்த மாதிரி, மாமி அந்தச் சாவிக் கொத்தை நகையாகத் தான் அணிந்து கொண்டிருந்தாள் என்று நான் நினைப்பதுண்டு. சிலபேருக்கு புல்லாக்கு பொருத்தமாக இருக்கும். சில பேருக்குக் காதில் அணியும் மாட்டல் பொருத்தமாக இருக்கும். சில பேருக்குக் கையில் நெளி பாந்தமாக இருக்கும்.
அதேபோல அந்தச் சாவிக்கொத்து என் மாமிக்குப் பொருத்த மாகவே இருந்தது.
“மாமி… அந்தக் கொத்திலே கல் வைத்திழைத்தால் நன்றாக இருக்குமே!” என்றேன் நான் ஒரு சமயம்.
நான் கிண்டலாகச் சொல்கிறேனோ என்கிற நினைப்பே தோன்றவில்லை மாமிக்கு. பாங்கிலே நூறு ரூபாய்
கணக்குக் கூட இல்லாத நான் ஒரு சாவிக் கொத்துக்கூட அவசியமில்லாத நான் சாவிக் கொத்துப் போன்ற தெய்வீகமான விஷயங்களைக் கிண்டல் செய்வேன் என்று மாமி எப்படி எதிர்பார்த்திருக்க முடியும். “செய்ய வேண்டியது தான்”என்றாள் மாமி சுருக்கமாக அடுத்த தடவை நான் அந்தச் சாவிக் கொத்தைப் பார்த்தபோது அதன் வெள்ளிக்கிளிப்பில் கண்கள் போல இரண்டு பொடிப் பச்சைக் கற்களும் இருந்தன, பொருத்தமாக. அழகாகத்தான் இருந்தது அதுவும்.
“ஏராளமாகத்தான் இருக்கிறதே! இந்த நெய்யும் வாழைக்காயும், பலாப்பழமும் இல்லாதவர்களிடமிருந்து உனக்கு எதற்கு மாமி ?”என்று நேரடியாக நான் கேட்டிருந்தால் மாமி என்ன பதில் சொல்லியிருப்பாள் என்று யோசித்துப் பார்க்கிறேன். “அவர்களிடம் இருக்கிறது. தரட்டுமே”என்பாள். அல்லது “இதுவும் சேர்த்துதான் லட்சம் ஆக வேண்டும்”என்பாள். அல்லது “கொடுத்ததை, அதுவும் பிரியமாகக் கொடுத்ததை வாங்கிக் கொள்ளாவிட்டால் பாவம்”என்பாள். ஏதாவது பொருத்தமாகத்தான் சொல்லுவாள். மாமிக்கு இந்த மாதிரி விஷயங்களில் பேச்சுக்கு விவாதத்துக்கு முடிவு சொல்லிவிடும் திறமையுண்டு என்றுதான் சொல்லவேண்டும்.
மாமாதான் அப்பாவி. பணத்தை சேர்ப்பது தவிர அவருக்கு வேறு எதுவும் கைவரவில்லை, பாவம்!



