
ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்
11. பொருளாதாரம்
“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று சொன்ன அறிஞன் அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை” என்று சேர்த்துக் கொண்டான். அருளையும் அவ்வுலகத்தை யும் பற்றி அவனுக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் ஒன்றும் தெரியாது. பொருளையும், அதுதான் இவ்வுலகுக்கு ஆதாரம் என்பதையும் அவன் நன்கறிந்துதான் இருக்க வேண்டும். உலகத்தில் பொருளாதாரம் என்கிற விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது முடிவில்லாத சிந்தனையாகவே தோன்றுகிறது. கொடுங்கோலோ, செங்கோலோ அவரவர் இஷ்டப்படி சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பொருள் தான் ஆட்சி செலுத்துகிறது எங்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியதாக இருக்கிறது. சரித்திரம் அறியாத ஒரு காலத்தில் மனித சுபாவம் வேறு விதமாக இருந்ததோ என்னவோ. சரித்திரம் அறிந்த பண்டைய எகிப்திலிருந்து இன்றைய ஐரோப்பா வரையில் எங்கும் எக்காலத்திலும் பொருள் என்கிற அதிகாரம்தான் எதிர்ப் பில்லாத ஆட்சி நடத்தி வந்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இருந்தும், மனிதன் ஏன் அருள் என்றும், உண்மை என்றும். தாழ்மை என்றும், நல்லதென்றும், பிறருக்குதவி என்றும் பல பல விதமான தத்துவங்களையும் அவ்வப்போது பொருளைப் போற்றுவதை மறைப்பதற்காக, அன்பு என்றும், போற்றி வருவதாகச் சொல்லி வரவேண்டும்? தான் சகோதரத்துவம் என்றும் என்னவெல்லாமோ கதைகள் பேசுகிறான். சம்பளத்தில் மாதம் மூன்று ரூபாய் உயர்வு கிடைக்க வேண்டும் என்று கூட்டம் கூட்டிப் பிரமாதமாக இயக்கங்கள் நடத்தி வருகிற உபாத்தியாயர்கள், அசாதாரணமாகப் பள்ளிக் கூடப் பையன்களுக்குப் புத்தர் தன் ராஜ்யத்தையும், மாளிகையையும், சுகபோகங்களையும் துறந்து போய் கையில் ஓடுடன் வந்ததைப் பற்றிப் பிரமாதமாகக் கவிதை ததும்பப் பேசுகிறார்கள்; ‘அழகும் செல்வமும் நிலையாது’. என்ற நாலடியார்ப் பாட்டைப் பற்றி நாலு மணி நேரம் வாய் ஓயாமல் பேசுகிறார்கள்.
உள்ளூற அந்தரங்கத்தில் பொருளைத் தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் யாரும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதில்லை என்பது மனித சுபாவத்தின் விபரீதப் போக்கு. வாய்ச் சொல்லளவில் அவர்கள் வாழ்க்கைக்கு என்னவெல்லாமோ ஆதாரங்கள் உண்டு என்பது போலப் பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் மனதாற வேறு ஒரு ஆதாரத்தையும் அங்கீகரிப்பதில்லை; ஏற்றுக் கொள்வதில்லை. மற்றதெல்லாம் பற்றிப் பேசினால் போதும், பணம் மட்டும் இருந்து விட்டாதனால் போதும் என்கிற மனப்பான்மையுடன் செயலாற்றுகிற மக்கள் அவர்கள். பொருளாதாரம் இங்கு இன்று ஆட்சி செலுத்துவது மட்டுமில்லை; நல்லதனமாகத் தன் ஆட்சியை மறைக்க முயலுகிறது என்பதும் மனித சுபாவத்தில் ஒரு விசேஷம்தான்.
இப்படி நான் சிந்திப்பதை மாமா வேங்கடாசலம் பற்றி ஒன்றும் சொல்லிவிட மாட்டார். பணத்தையோ கேட்டால் என்ன சொல்லுவார் தெரியுமா? விஷயத்தைப் பொருளையோ பற்றி அவருக்கு சிந்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அதுபற்றி அவர் வெகு காலத்துக்கு பண்ணாதவனின், பொருளற்றவனின் சிந்தனைகள் முன்னரே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
இதெல்லாம் அவ்வளவுதான் என்று சொல்லிவிடுவார். அதுவும் உண்மை தான் என்று ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? பணத்தையும் பொருளையும் பற்றி உள்ளவர்கள் சிந்திப்பதில்லைதான். இது சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
நான் படித்துப் பாஸ் செய்துவிட்டுப் பட்டணத்தில் பணத்துக்குத் திண்டாடிக் கொண்டிருந்த ஒரு மாமாங்கத்தில் என் மாமாவை இரண்டொரு சந்தர்ப்பங்களில்தான் சந்தித்தேன். ஒரு சந்திப்பு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நானும் என் மனைவியும் சிதம்பரத்துக்குப் போய்க் கொண்டிருந்தோம். முந்திய இரவு ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டாம் வகுப்பு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆகவே பகல் ரெயிலில் போய்க் கொண்டிருந்தோம். மாமாவும் அம்மாமியும் பட்டணத்திலிருந்து அதே ரெயிலில் வந்து கொண்டிருந்தார்கள் போலும். அது எனக்குத் தெரியாது. மாமா கூஜாவில் காபி வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்ததும், தேடிப் போய்ப் பார்த்தேன். மாமாவும் அம்மாமியும் முப்பத்திரண்டு பேர் வண்டியில் எழுபது பேர் ஏறியிருந்த ஒரு பெட்டியில் அடைபட்டுத் திணறிக் கொண்டிருந்தார்கள். இரண்டு லக்ஷத்துக்கு மேல் சொத்து சேர்த்து விட்டவர் எங்கே போக வேண்டுமானாலும் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் சௌகரியமாகப் பிரயாணம் செய்யலாகாதா? என்ன பணத்தாசை?” என்று என் மனைவியிடம் அசட்டுத் தனமாக வந்து சொல்லி விட்டேன்.
“இல்லாவிட்டால் உங்கள் மாதிரி கையில் இருக்கிற பணத்தை இப்படி செலவழித்துவிட்டு பிறகு பணமில்லை, பணமில்லை என்று கஷ்டப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமாக்கும்?” என்றாள் என் மனைவி.
“உன் சௌகரியத்துக்காகத்தானே..”என்று ஆரம்பித்தேன்.
“ஆறு மணிநேரம் கும்பலில் கஷ்டப்பட்டால் என்ன தப்பு? கோயிலில் உத்ஸவமென்றால் தேடிக் கொண்டு போவதில்லையா? அதுமாதிரி”என்றாள் என் மனைவி.
என் கையில் பணமிருந்தால் அது சௌகரியத்துக்காகத்தான் இருக்கிறது என்று எண்ணுபவன் நான். மாமாவும் அம்மாமியும் பணத்தைச் சேர்த்து வைப்பது தவிர என்ன பண்ணுவதாக உத்தேசித்திருந்தனர்? அது எனக்குப் புரியத் தானில்லை. சேர்த்து வைத்து என்ன பண்ணுவது? பணத்தை முகர்ந்து பார்க்க முடியுமா, ரோஜாப்பூ மாதிரி? தினம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாதபடி பாங்கியில் அன்றோ போட்டிருந்தார்கள். பணத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வதில் ஒரு சக்தியிருந்தது, அந்த சக்திக்குப் பணிய மனிதர்கள் தயாராக இருந்தார்கள். சகோதர மனிதர்களின் பணிவுதான் பணத்தால் விளையக்கூடிய லாபம் என்றால் புரிந்து கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆனாலுங்கூட இரண்டு லக்ஷக்காரனுக்கு இரண்டாயிரம் பேர் பணிந்தால், இருபது லக்ஷக்காரனுக்குப் பணிய இந்த இரண்டாயிரத் தோடு இன்னொரு இருபதினாயிரம் பேரும் தயராக இருந்தார்களே அதற்கென்ன செய்வது?
அதுபற்றி என் மாமாவுக்குச் சந்தேகம் எதுவும் இராது என்றே எனக்குத் தோன்றுகிறது. இரண்டு லக்ஷத்தை இருபது லக்ஷமாக்க முயல வேண்டும் என்று சொல்லுவார். அதற்குப் பிறகு, இருபது லக்ஷத்தை ஒரு கோடியாக்கப் பாடுபட வேண்டும். இதற்கு முடிவு எப்போது, எங்கே என்றால் “முடிவு எதற்கு?”என்றுதான் அவர் கேட்பார்.
அந்த ஒரு மாமாங்கத்தில் மாமாவுக்குச் சம்பளம் நூற்றியைந்து ரூபாயிலிருந்து வருஷம் ஐந்து ரூபாயாக ஏறி நூற்றியறுபதாயிற்று. அதிகமாக உத்தியோகத் தாழ்வு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவருடைய ஆரம்பகாலத் திருவிளையாடல்கள் காரணமாக, அவருக்கு அடிக்கடி மாற்றலாகிக் கொண்டிருந்தது என்றும் நான் கேள்விப் பட்டேன். சென்னை கல்வியிலாகாவில் வேங்கடாசலத்துக்கு வேண்டியவர் ஒருவர் இருந்தார்; அவரும் காலக் கிரமத்தில் ரிடையராகிவிடவே, வேங்கடாசலம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வருஷத்தில் ரொக்கமாக ஒரு ஐயாயிரம் ஆறாயிரம், நிலமாக இரண்டு மூன்று ஏக்கர் இப்படியாக மாமாவுக்குச் சொத்துச் சேர்ந்து கொண்டிருந்தது. எப்படி என்று என்னை விசாரித்துப் பயனில்லை. ஏனெனில் எனக்குத் தெரியாது.
தெரியாத ஒரு விஷயத்தை மறைப்பதற்காக “சில பேருக்கு அப்படித்தான் சேரும். தொட்டதெல்லாம் பொன்னாகும் ஜாகதம்” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான். பர்ஸைத் தொட்டால் தொட்ட மாத்திரத்திலேயே பர்ஸைக் காலியாக்கிவிடுகிற ஜாதகம் என்னுடையது. அதற்கென்ன செய்வது?
பட்டணத்தில் என்னைத் தேடிக் கொண்டு மாமாவுடைய அந்தரங்கக் காரியஸ்தர் உலகநாதன் ஒரு நாள் வந்தார். இரண்டு நாள் தங்கியிருந்தார். “மாமா விஷய மெல்லாம் எனக்குப் பத்துப் பதினைந்து வருஷங்களாகத் தெரியாது” என்று நான் உலகநாதனிடம் சொன்னேன்.
“என்ன தெரிய வேண்டும். நான் சொல்றேன் ராஜா. உன் மாமா எத்தனை குடியைக் கெடுத்துச் சொத்தைப் பறித்துக் கொண்டார் என்று நான் சொல்றேன்”என்றார் உலகநாதன்.
“உமக்கு வேலை போயிடும்…”என்றேன் நான்.
“பிரமாத வேலை…”என்று உலகநாதன் சொன்ன திலிருந்து மாமாவுக்கும் அவர் அந்தரங்க காரியதரிசிக்கும் சண்டை வந்துவிட்டது என்றும், வேலை போய்விட்டது உலகநாதனுக்கு என்றும், எனக்குப் புரிந்துவிட்டது. வாயைக் கிண்டினால் பொய்யும் புளூகுமாக எதையாவது அளந்து விடுவார்; அதையும் உண்மையென்று நம்பிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி நம்புவது என் சுபாவம்! அதனால், பேசாதிருந்து விட முயன்றேன்.
ஆனால் உலகநாதனுக்கு இருந்த கோபத்தில் அவர் என்னுடன் தங்கியிருந்த நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் தூங்கிய நேரம், சாப்பாட்டு நேரம், வெளியே போய் வந்தது என்று இருபது மணி நேரம் போக, மற்ற இருபத்தியெட்டு மணி நேரமும் என் காதிலே வேங்கடாசலத்தைத்தான் எடுத்து ஓதிக் கொண்டிருந்தார். முடிக்கும் தருவாயில் பலஸ்ருதி சொல்லி, வெற்றிலை பாக்குடன் கதாகாலக்ஷேபம் செய்கிறவர்கள் மாதிரி சம்பாவனையும் கேட்க ஆரம்பித்து விடப்போகிறாரே, என்று பயம்தான் எனக்கு. என் கையில் அப்போதும், வழக்கம் போல பணமில்லை.
நான் மாமாவுடன் தங்கியிருக்கும்போது சிறுவன், பல விஷயங்களை நேரில் பார்த்தாலும் அறிந்து கொள்ளப் போதிய அனுபவமில்லாதவன். இண்டர்மீடியட்டில் கோவையில் படிக்கும்போது, எனக்கு இந்த விஷயங்களில் ஈடுபாடில்லை. வயிறு நிரம்பச் சாப்பாடு போடவில்லை என்று மட்டும் எனக்கு மாமாவிடமும் அம்மாமியிடமும் கோபம். என்னிடம் மாமா எழுதித் தந்த இரண்டு வருஷச் செலவுக் கணக்கு என்னிடம்தான் இருந்தது. இன்னமும், அம்மாமி அப்போது சொன்னது; “நீ எங்கேயடா ராஜா சம்பாதித்துத் தரப் போகிறாய்?”என்று சொன்னது ஞாபகம் இருந்தது மட்டுமில்லை
அம்மாமிக்கு உண்மை இப்படி நிதர்சனமாகத் தெரிந்தது எப்படி, என்று இப்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மாமா கொடுத்த பணத்தில் வீணானது என்று அந்த நானூத்திச் சொச்சம் ரூபாயைத் தான் சொல்ல வேண்டும். வேறு எந்த இடத்திலும் மாமா பணத்தை இந்தமாதிரி விட்டதில்லை என்பது எனக்கே தெரியும்.
அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே உலகநாதன் சொன்ன கதைகளை அரையும் குறையுமாகக் காதில் வாங்கிக் கொண்டேன். பதினேழு பதினெட்டு வருஷங்களாக வேங்கடாசலத்திடம் காரியம் பார்த்தவர் உலகநாதன். சாத்தனூரில் கொடுக்கல் வாங்கல் எல்லாம் அவர் மூலமாகத் தான் நடக்கும். ஆகவே, சொல்வதற்கு உலகநாதனிடம் விஷயம் நிறையத்தான் இருந்தது. மேலத்தெரு சதாசிவன் பெண்டாட்டி செத்துக் கிடக்கும் போது காரியம் செய்வதற் கென்று ஒன்றரை வட்டியில் வேங்கடாசலத்திடம் ஐநூறு ரூபாய் கடன் வாங்கினான். ஆறு வருஷத்தில் வட்டியோ முதலோ திருப்பித் தரப்படாமல் ஆயிரத்துக்கு இரண்டு வட்டிக்குச் சீட்டு எழுதி தரப்படவே இன்னொரு நாலு வருஷத்தில் சதாசிவத்தின் நார்த்தங்கால் செக்குமேடு நிலம் பூராவும் மாமாவுடையதாகி விட்டது. சாதாரணமாக மூவாயிரத்துக்கு குறைவில்லாமல் விலை போகும். மாமா தந்த ஐநூறுக்கு ஈடாகிவிட்டது.
கீழத்தெரு மைனாப் பிள்ளையை வாரண்டில் பிடிக்க ஒரு எதிரி வந்து விட்டான். மூவாயிரம் தேவை என்று வந்தான். மாளிகை போன்ற எட்டாயிரம் பெறக்கூடிய வீட்டை எழுதித் தந்தால் தருகிறேன் என்றார் மாமா. வேறு என்ன செய்வான்? எழுதித் தந்தான். மூன்று வருஷங்களில் வீடு மீட்கப்படாமல் மாமாவுடையதாகி விட்டது. யாரோ ஒரு வியாபாரியிடம் அந்த வீட்டைப் பதினாறாயிரத்துக்கு விற்று விட்டார் மாமா.
இப்படியாக உலகநாதன் கதைகதையாகச் சொன்னார் “சாத்தனூரிலே நல்ல நிலமாக இப்போது பதினேழு வேலிக்கு வந்து விட்டது. அது மட்டும் எத்தனை பெறும் தெரியுமா?”என்றார்.
“எனக்கென்ன தெரியும்? எனக்கு நிலமா நீச்சா?”என்றேன் நான்.
“ஒரு வேலி குறைந்த பட்சம் இருபத்தையாயிரம் பெறும் தெரியுமா? கண்ணை மூடிக் கொண்டு கொடுப்பான்கள். மண் என்றால் சாத்தனூர் மண்ணாக்கும்?”என்றார் வீரா வேசத்துடன். என்ன சொன்னாலும் வேறு ஒருவருக்கே யென்றாலும் வாங்கிச் சேர்த்து வைக்கப் பாடுபட்டவர் தானே அவரும்? ஆவேசமாகப் பேசியதில் தவறு என்ன?
“அடேயப்பா, அதுவே நாலேகால் லட்சமாச்சே?” என்று கணக்குப் போட்டேன் நான்.
“பக்கத்துப் புளியஞ்சேரியிலே ஒரு நாலுவேலி அனாமத்தாக வந்து சேர்ந்தது. அது வேறே..”என்றார், உலகநாதன். எல்லாம் தன் சாமர்த்தியம் என்று நான் நினைக்க வேண்டு மென்று அவர் விரும்புகிறார், என்று எனக்குத் தோன்றியது.
“எல்லாம் உம்முடைய சாமர்த்தியம் தானே…”என்றேன் நான். எனக்கென்ன நஷ்டம் இதில்?
“எனக்கு என்ன சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார் தெரியுமா?”என்றார் உலகநாதன் கோபமாக.
“சொன்னால்தானே தெரியும்?”என்றேன்.
“மாதம் இருபத்தைந்து ரூபாய்; வருஷத்தில் ஒரு வண்டி நெல்; இருப்பதற்கு கொல்லைத் தாழ்வாரத்தில் தட்டி போட்டு அடைத்துக் கொடுத்த ஒரு அறை” என்றார் உலகநாதன்.
“இது தெரிந்து கொடுத்தது. தெரியாமல்..”என்று இழுத்து நிறுத்தினேன் நான்,
“இடம் தெரியாமல் சொல்கிறாயே ராஜா. வேறு யாரிடமாவது பலிக்கும் இது. தெரியாமல் எடுப்பது என்பதெல்லாம் வேங்கடாசலம் கூட ஒவ்வொரு சமயம் ஏமாந்துவிடுவார். அவர் மனைவி இருக்கிறாளே அடேயப்பா, எத்தனையோ பெண்களைத் தெரியும் ஆனால் உன் அம்மாமியைப் போன்றவளைப் பார்ப்பது சிரமம். தெரியாத விஷயம் என்று அவளுக்கு ஒன்றுமே கிடையாது ராஜா. அது ஏதோ வரப்பிரஸாதம்தான்!” என்று பெருமையுடன் முடித்தார் உலகநாதன்.
கூடத்துக்கு அப்போது வந்த என் மனைவியைப் பார்த்து “கேட்டுக்கோ ராஜி, நீயும் அப்படியிருந்தால் நமக்குப் பணம் சேரும்”என்றேன் நான். என் மனைவி பதில் சொல்லாமலே உள்ளே போய்விட்டாள்.
“பிறத்தியாரிடம் மட்டும்தான் இதெல்லாம் என்று நீ எண்ணி விடக்கூடாது ராஜா” என்றார் உலகநாதன். “உறவுக் காரர்கள் என்று உன் மாமாவை அண்டி வந்தவர்களில் யார் முழுசாக இருக்கிறார்கள் சொல்?”
“நான் முழுசாகத்தான் இருக்கிறேன்” என்றேன் விளையாட்டாக.
“உன்னிடம் பற்றிக் கொள்ள சொத்து என்று ஒன்றும் இல்லை. இருந்தால் தெரியும்”என்றார் உலகநாதன். “உன் சிறு தாயார் குடும்பம் அப்படியே போய்விட்டது. கண்ணப்பன் எங்கேயோ ஹோட்டலில் வேலை செய்து காலங்கழிக்கிறான். வேங்கடாசலத்தின் மாமா குடும்ப சங்கதி உனக்குத் தெரிந்ததுதான். எவ்வளவு பெரிய இடம். அது அந்தக் காலம். இப்போது அவர் பிள்ளை குட்டிகள் எங்கேயோ குமாஸ்தா வேலைகளில் அமர்ந்து அவஸ்தைப் படுகின்றன. சரி வேங்கடாசலத்தின் மைத்துனர் எவ்வளவு செல்வாக்காக இருந்த குடும்பம் அது! அதுவும் இருந்த இடம் புல்லு முளைத்துப் போய்விட்டது. பிள்ளைகள் நாலுபேரும் எங்கெங்கேயோ லாட்டரி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சொத்து, வீடு, எல்லாம் வேங்கடாசலத்தை வந்தடைந்து விட்டன. ஒண்ணா, இரண்டா, பத்தா நூறா..? இன்னும் இப்படியே உறவினர்கள் அல்லாதவர் பலரையும் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்”என்றார் உலகநாதன்.
“உமக்கும் அவருக்கும் சண்டை வந்தது எப்படி சொல்லும்?”என்றேன்.
“அதுவா?” என்று மழுப்பினார் உலகநாதன். பிறகு சொன்னார், “உன்னிடம் சொல்வதில் ஒன்றும் தவறில்லை ராஜா.
போன வருஷம் நான் என் பெண்ணுக்குக் கலியாணம் செய்தேன். அதில் இரண்டாயிரம் ரூபாய் மாமா பணத்தை எடுத்துச் செலவு செய்து விட்டேன் மாமாவுக்கும் தெரிந்திருக்காது. அவள், கண்டுபிடித்து விட்டாள் அவ்வளவு தான்”என்றார் சுருக்கமாக. மேலும் தொடர்ந்து சொன்னார். “காளகண்டி! இவ்வளவு அமர்க்களம் செய்யாதிருந்தால் இந்த வருஷம் மேக் அப் செய்து போட்டிருப்பேன் சரியாகப் போயிருக்கும்.”
“உம்….”எனக்குப் புரிந்தது என்ன நடந்திருக்குமென்று. “… பையன் எப்படி யிருக்கிறான்? அவனை நான் பார்த்தே வருஷம் பத்துக்குமேல் ஆகிறது..”
“சீநிவாசனா? சும்மா சொல்லக் கூடாது? பையன் நல்லவன். தங்கக் கம்பிதான் அவன். அவனுக்கு சொத்துச் சேர இருக்கிற அதிர்ஷ்டத்தால் தான் வேங்கடாசலத்தின் காரியம் பலிக்கிறது. இல்லாவிட்டால் அப்பவே வண்டி குடை சாய்ந்திருக்கும். பையன் எல்லா விஷயங்களிலும் உன்னைப் போலவேதான் இருக்கிறான். பி.எஸ்.ஸி. ஹானர்ஸ் படித்து விட்டான். கலியாணத்துக்கு ஏற்படாக வேண்டும். நல்ல இடமாகப் பார்க்கிறார் உன் மாமா…”என்றார் உலகநாதன்.
“புது உறவு ஏற்பட்டால் இன்னும் சொத்துச் சேரும்?”என்றேன் நான்.
உலகநாதன் தன் கவலைகளை மறந்து விட்டுச் சிரித்தார்.



