

வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
இராமலிங்க அடிகளைத் தமிழர்கள் பலர் ஒரு அவதார புருஷராகவே நினைக்கின்றனர்; ஒரு தீர்க்கதரிசியாகப் போற்றுகின்றனர். அவருக்குப் பல இடங்களிலே கோவில்கள்; பல இடங்களிலே உருவச்சிலைகள்; பல இடங்களிலே பஜனை மடங்கள்; பல இடங்களிலே அவர் படத்திற்குக் கற்பூர தீபாரதனைகள்; பூஜை நைவேத்தியங்கள் அவர் பெயரால் பல சங்கங்கள், பல புத்தக சாலைகள், பல வியாபார தலங்கள் இன்று விளங்குகின்றன.
ஆண்டாண்டு தோறும் வடலூருக்குச் செல்லும் அடியார் களின் கூட்டம் வளர்ந்து வருகின்றது. அவருடைய அருட் பாவைப் பாராயணம் செய்வோர் பெருகி வருகின்றனர். எங்கும் அருட்பெரும் ஜோதி ! தனிப்பெரும் கருணை என்ற முழக்கம் கேட்கின்றது.
சாதிவெறி கொண்டவர்கள் பலர்; சமயவெறி கொண்டவர்கள் பலர்; ஆச்சாரவெறி பிடித்தவர்கள் பலர்; வகுப்புவாதம் பேசும் அரசியல்வாதிகள் பலர்; பொதுமக்களிடம் ஏமாற்றிப் பொருள் பறிப்போர் பலர்; தமது கடமையை மறந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் பலர்; உழைப்பவர்களிடம் கருணை காட்டாதவர்கள் பலர் இன்று இராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக விளங்குகின்றனர்.
இராமலிங்கர் தன்னை யாரும் வணங்கவேண்டும் என்று விரும்பவே இல்லை. தன்னை இராமலிங்க சுவாமிகள் என்று அழைப்பதைக்கூட அவர் வெறுத்தார் அவரைத் தெய்வமாகக் கொண்டாடுவதை அவர் வெறுத்தார். அவரைத் தெய்வம் என்று கூறிய வணங்கிய மக்களின் அறியாமைக்காக அவர் பரிதாபப்பட்டடார்.
உலகம் எல்லாம் அவரைப் பெரியவர் என்று கொண்டாட வேண்டும் என்ற ஆசையும் அவருக்கில்லை. அவர் தன்னைச் சாதாரண மனிதராகவே கருதினார் மற்ற மனிதர்களும் தன்னைச் சாதாரண மனிதராகக் கருதவேண்டும் என்பதே அவருடைய ஆசை. அவருடைய வாசகமே இவற்றைக் காட்டுகின்றன.
இராமலிங்க சுவாமி என்று வழங்குவிப்பது என் சம்மதம் அன்று என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்று தலின், இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்.
தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வம் எனச் சுற்றுகிறார்கள். ஐயோ! நம் சதோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததனாலே யல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன்; இருக்கின்றேன்; இருப்பேன்.
உலகெலாம் பெரியவர் பெரியவர் எனவே சிறக்கவும் ஆசையில்லை.
இவைகள் அவராலேயே சொல்லப்பட்டவை. சாதாரண மனிதர்களும் கூட இந்தக் காலத்தில் தம்மைப் பலர் போற்றுவதையும், புகழ்வதையும் விரும்புகின்றனர். இதற்காகவே தம்முடைய கைப்பணத்தைச் செலவு செய்வேர்கள்கூடச் சிலர் உண்டு. பொதுவாழ்விலே ஈடுபட்ட பலரிடம் இக்குணந்தான் குடி கொண்டிருக்கின்றது.
ஆனால் இராமலிங்கர் தன்னைத் தெய்வமாகக் கொண்டாடுவதை வெறுத்ததற்கு ஒரு உண்மைக் காரணம் உண்டு. உலகத்தைச் சீர்திருத்தவேண்டும்; மக்களைச் சீர்திருத்த வேண்டும்; மக்கள் சமுதாய அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்புகின்ற எவனும் தற்புகழ்ச்சிக்கு ஆசைப்பட மாட்டான்; தன்னை மற்ற மக்கள் வணங்க வேண்டும். புகழவேண்டும் என்று எண்ணமாட்டான். மற்ற மக்களுடன் சமமாக ஒன்றுபட்டு தோழமை கொண்டு வாழவேண்டும் என்றே நினைப்பான். மற்ற மக்களும் தன்னைத் தங்களுடைய தலைவனாக எண்ணாமல் கூட்டாளியாக தோழனாக எண்ணவேண்டும் என்றே ஆசைப் படுவான். இதுவே உண்மையான சீர்திருத்தவாதியின் இயல்பு. புரட்சிக் காரனுடைய தன்மை.
மக்கள் ஒரு சீர்திருத்தக்காரனைத் தெய்வமாக அல்லது அவதார புருஷனாகக் கொண்டாடத் தொடங்கி விட்டார் களானால் வந்தது ஆபத்து. அன்றே அவனுடைய கொள்கைகளுக்கு மக்கள் குழிதோண்டி விட்டவர்கள் ஆவார்கள்.
ஒருவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், பிறகு அவருடைய ஆராய்ச்சியைப் பற்றி எண்ணமாட்டார்கள். அவருடைய சொற்களைப் பற்றிச் சிந்தனை செய்யவே மாட்டார்கள். அவரை வணங்குவதனாலே தாங்கள் செய்த பாவங்கள் தீர்ந்து விடும்; தங்களுக்குப் புண்ணியம் கிடைத்து விடும் என்று நினைத்து விடுவார்கள்.
இந்த உண்மையை வள்ளலார் நன்றாக உணர்ந் திருந்தார். ஆதலால்தான் என்னை வணங்க வேண்டாம்! நான் கூறியவைகளைப் படியுங்கள்! அதன்படி நடவுங்கள் என்றே கூறினார். இராமலிங்க அடிகள் இருக்கும் காலத்தில் அவருடைய மாணவர்கள் அவரை சுவாமிகள் என்று அழைப்பதில்லை. ‘ஐயா!’ என்றே அழைத்து வந்தனர் இது குறிப்பிடத்தக்கது.
இன்று புத்தரைப் போற்றும் மக்கள் பலர் அவருடைய கொள்கைகளை ஊறுகாய் போட்டு விட்டனர்! ஏசு கிறிஸ்துவை வணங்கும் மக்கள் பலர் அவருடைய அகிம்சா தர்மத்தை அடியோடு மறந்துவிட்டனர்; முகம்மது நபியைக் கொண்டாடும் மக்களிலே பலர் அவருடைய கொள்கையை வாயளவிலே மட்டும் பேசிக் கொண்டிருக்கின்றனர்! இதே கதி நமது இராமலிங்கருக்கும் நேர்ந்து விடக்கூடாது.
இராமலிங்கரின் பாடல்களிலே புதிய கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். அவருடைய பாடல்கள் திரு அருட்பா என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. அவைகள் ஆறு திருமுறை களாக வகுக்கப்பட்டுள்ளன. ஆறாந் திருமுறையில் தான் முற்போக கான கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் மிகுந்திருக்கின்றன. உலக மக்கள் ஒன்றுபட்ட ஒரே சமுதாயமாக வாழவேண்டும் என்பதே இராமலிங்கரின் கருத்து.
முதல் ஐந்து திருமுறைகளில் எவ்வளவு பாடல்கள் அடங்கி யிருக்கின்றனவோ அவைகளை விட அதிகமான பாடல்கள் ஆறாம் திருமுறை ஒன்றில் மட்டும் அடங்கியிருக்கின்றன.
உலகைச் சீர்திருத்தவே என்னைக் கடவுள் அனுப்பினார் அவரே எனக்குப் பல உண்மைகளை அறிவுறுத்தினார்; நான் பசித்திருக்கும் போது உணவளித்துக் காப்பாற்றினார்; அவருடைய திருவருத் துணைக் கொண்டே நான் மக்களைச் சீர்திருத்த எண்ணுகின்றேன் என்றெல்லாம் அவர் பாடல்களில் காணப் படுகின்றன அவர் இருந்த காலத்தில் மக்கள் கடவுள் அருள் பெற்றவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களிடந் தான் மதிப்பும் மரியாதையும் காட்டிவந்தனர். ஆதலால் தன் சொல்லுக்கு மக்களிடம் மதிப்பு ஏற்படவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறினார் என்றுதான் கொள்ளவேண்டும்.
பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்போர். தமிழர்கள் காலத்துக்குக் காலம் எவ்வாறு முன்னேறி வந்திருக்கின்றனர். என்பதைக் காண்பார்கள். அரசியல், சமுதாயம், பழக்க வழக்கங்கள், கொள்கைகள், வாழ்க்கை முறைகள் இவைகளிலே மக்கள் முன்னேறி வருவதுதான் இயல்பு இந்த இயல்பைப் பண்டை இலக்கியங்கள் காட்டுகின்றன இத்தகைய இயற்கை முன்னேற்றத்தை ஒட்டியே இராமலிங்கரின் கருத்துக்களும் கொள்கைகளும் வளர்ந்திருக்கின்றன. இவ்வுண்மையை அவரது ஆறாந்திருமுறைப் பாடல்களைப் படிப்போர் அறியலாம். அவைகளை எடுத்துக் காட்டுவதே வடலூரார் வாய்மொழி என்னும் இப்புத்தகத்தின் நோக்கமாகும்.
சாமி.சிதம்பானார்



