
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
18. வட்டிச் சுரண்டல்
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். – இது பழமொழி. பழமொழியாயினும், என்றும் புதுமொழியாகவே விளங்குகின்றது. இந்தப் பணத்திற்கு இவ்வளவு மகிமை எப்படி வந்தது? எப்படி நிலைத்திருக்கிறது? பணத்தால் ஆகாத செயல் எதுவும் இல்லை. பணத்தால் எப்பொருளையும் பெறலாம்.
பணம் இல்லாதார் பிணம் என்பது ஒரு பழமொழி. இதுவும் பண்டு தொட்டு வழங்கிவருகிறது. இன்றும் இப்பழ மொழி வழக்கில் -அநுபவத்தில் உள்ள புதுமொழியாகவே விளங்குகின்றது. பணமில்லாதவரை ஒருவரும் மதிப்பதில்லை. பணமில்லாதவர்களுக்கு எப்பொருளும் கிடைப்பதில்லை. அவர்கள் விரும்பிய சுகங்களை அடைய முடியவதில்லை. அவர்கள் உயிருடன் இருப்பினும் – நடப்பினும் பேசினும்-நடமாடும் பிணங்கள்தாம்.
வாழ்க்கையானது பணமில்லாவிட்டால் நடக்காது. பணமில்லாதவர்கள் உலகில் உயிர் வாழ வேண்டுமானால் பணமுள்ளவரிடம் அடிமையாக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வயிறு கழுவ வேண்டும். தனது எண்ணம், சொல், செயல் இவைகளுக்குச் சுதந்திரமின்றி மாடு போல உழைக்க வேண்டும்; அல்லது தெருத் தெருவாய் அலைந்து பிச்சையெடுக்க வேண்டும்; அல்லது தற்கொலை செய்துகொண்டு உலக வாழ்க்கையைத் துறக்க வேண்டும்.
ஒரு சிலரிடம் பணம் அகப்பட்டுக் கொண்டது. பலரிடம் பணம் இல்லை. அந்த ஒரு சிலரே பண்டங்களை உற்பத்தி யாவதற்குக் காரணமான பல கருவிகளையும் தம் வசப்படுத்திக் கொண்டனர்.
அவைகளைக் கொண்டு பணத்தைத் திரட்டுகின்றனர். ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையும் பாயும் என்பதை இவர்கள் உண்மையாக்கிவிட்டனர்.
வேலை செய்யும் தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கைச் செலவுக்கு வருவாய் போதாமையினால் லேவாதேவிக்காரர் களிடம் கடன் வாங்குகின்றனர். வாங்குகின்ற கடனுக்கு வட்டி கொடுக்கின்றனர். குறித்த காலத்தில் கடனையும் வட்டியையும் கட்ட முடியாவிட்டால் வட்டிக்கு வட்டி கொடுக்கின்றனர். இந்த முறையில் உழைப்பாளிகளின் பணத்தில் பெரும்பகுதி வட்டியின் பேரால் பணக்காரர்களிடமே திரும்பிப் போய்விடுகிறது.
சிறிய விவசாயிகளின் நிலையும் இதுதான். குறைந்த நிலம் உள்ளவர்கள் தங்கள் வருவாய் போதாமையால் நிலத்தை தாங்கள் வசிக்கும் வீட்டை-லேவாதேவிக்காரர்களிடம் அடமானம் வைத்துக் கடன் வாங்குகின்றனர்; அதிக வட்டிக்குக் கடன் வாங்குகின்றனர். குறித்த காலத்தில் கடனைக் கொடுக்க முடியாமல் வட்டிக்கு வட்டி சேர்த்துக் கொடுக்கின்றனர். கடைசியில் தங்கள் வாழ்க்கைச் சாதனமாகிய நிலத்தையே இழக்கின்றனர்; வீட்டையும் இழக்கின்றனர். பிறகு பிறரிடம் வேலை செய்யும் தொழிலாளிகளாகி விடுகின்றனர்.
வியாபாரிகளில் பலருடைய நிலையும் இப்படித்தான். வட்டி கொடுத்துக் கடன் வாங்கியே பலர் வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் வியாபாரத்தின் மூலம் பெறும் லாபத்தில் ஒரு பகுதியை வட்டிக்காக இழந்து விடுகின்றனர். வியாபாரத்தில் லாபம் வந்தாலும் சரி, நஷ்டம் வந்தாலும் சரி, வாங்கின கடனுக்கு வட்டிகொடுத்துத் தான் தீர வேண்டும். இந்த முறையில் பார்த்தால் பல வியாபாரிகள் லேவாதேவிக் காரர்களின் கைப்பாவைகளாகவே வாழ்கின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள், சிறிய வியாபாரிகள் முன்னுக்கு வராமைக்குக் காரணம் முதலில் போதுமான வருவாய் இல்லாமை; இரண்டாவது வட்டிக்குக் கடன் வாங்குவது; மூன்றாவது வட்டிக்குமேல் வட்டி கொடுப்பது.
லேவாதேவி இல்லாவிட்டால் – பாங்கிகள் கடன்கொடுக்க விட்டால் நாட்டில் வியாபாரம் பெருகாது. கைத் தொழிற்சாலைகள் உண்டாக வழியில்லை. தொழில்கள் வளர்ச்சியடைய மாட்டா என்று சிலர் கூறுவார்கள். இப்பொழுதுள்ள அரசியல் அமைப்பு முறையில்-சமூக அமைப்பு நிலைமையில் இது உண்மைதான். ஆனால் இந்த அரசியலமைப்பும், சமூகம் அமைப்பு என்றும் சிரஞ்சீவியாக வாழவேண்டும் என்று ஏழை மக்கள் விரும்பவில்லை. இவை மாறவேண்டும்; மாறாவிட்டால் மாற்ற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
பணம் கடன்கொடுப்பது, அதற்கு வட்டி வாங்குவது என்ற முறை இருக்கும் வரையில் உலகத்தில் கொடுமைதான் தாண்டவமாடும். வட்டி பெறுகின்றவர்களைக் காட்டிலும் வட்டிக்கு வட்டி வாங்குகிறவர்களைக் காட்டிலும் கடின சித்தம் உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. தாட்சண்யம் தனநாசம் என்பது பழமொழியல்லவா? இப்பழமொழி வட்டிக் கடைக்காரர்களுக்காகவே அதாவது லேவாதேவி செய்பவர்க்காகவே ஏற்பட்டிருக்கலாம் என்பதில் ஐயமில்லை. லேவாதேவிக் காரர்களிடம் தாட்சண்யம் இருந்தால் வட்டியை இழக்க வேண்டியது தான்; முதலையும் இழக்க வேண்டியது தான்.
உலகை அடிமைப்படுத்துவது, ஏழைகளைக் கொடுமைப் படுத்துவது, மனித சமூகத்தில் பொருளாதார உயர்வு தாழ்வு ஏற்படுத்துவது, மக்கள் மனத்தை இரக்கமற்றதாக்குவது இந்த வட்டித் தொழில்தான்; பணத்திற்கு வட்டி வாங்கும் முறைதான்.
இதனால் தான் முன்னோர், பணத்திற்கு வட்டி வாங்குவோன் நரகத்தையடைவான் என்று கூறினர். பணத்திற்கு வட்டி வாங்குவது பாவம் என்பதே இந்துமதக் கொள்கை. இந்தக் கொள்கையை வட்டிக் கடைக்காரர்கள் மறந்து விடுவதில்லை. அநியாய வட்டி வாங்குவது பாவம் என்றே அவர்களும் நினைக்கின்றனர். ஆயினும் வட்டி வாங்குவதில் தவறுவதில்லை. அந்தப் பாவத்தை ஏதேனும் தருமம் செய்வதன் மூலம் பரிகரித்துக் கொள்ளலாம் என்று நினைத்து விடுகின்றனர். பாவத்திற்குப் பிராயச்சித்தம் உண்டு என்ற கொள்கையே, இவ்வாறு பலரை நீதியற்ற-நெறியிலே நடக்கச் செய்கிறது. முஸ்லீம் மதத்திலும் பணத்திற்கு வட்டி வாங்குவது பாவம் என்ற வற்புறுத்தப்படு கின்றது. ஆனால் இன்று யாரும் மதக் கோட்பாட்டைப் பின்பற்றுவதில்லை. பணக் கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர். இந்தக் கொடுமையான நிலைமையைக் கண்டுதான் வள்ளலார் கண்ணீர் விடுகின்றார்.
வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்.
பெட்டிமேல் பெட்டிவைத்து ஆள்கின்றீர், வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டிஉள் ளிருந்தீர்.
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்,
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்.
எட்டிபோல் வாழ்கின்றீர்! கொட்டிபோல் கிளைத்தீர்!
எத்துணை கொள்கின்றீர் ? பித்துல கீரே!
ஏ, உலக மக்களே ! நீங்கள் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வாங்குகிறீர்கள் ! பணத்தைப் பெருக்குகிறீர்கள்! உண்மையாக இந்த உடலைப் பெற்றதற்கான லாபத்தை வளர்க்கின்ற வழியை அறியாமல் இருக்கின்றீர்கள்.
பணப் பெட்டியின் மேல் பணப் பெட்டியை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய வயிற்றுப் பெட்டியை மாத்திரம் சோற்றால் நிரப்பிக் கொண்டு வீட்டுக்குள் இருக்கின்றீர்கள்.
பட்டினி கிடப்பார் முகத்தைப் பார்ப்பதற்குக் கூடச் சம்மதப் பட மாட்டீர்கள். சாப்பிட முடியாமல் புளித்துப் பான பழங் கஞ்சியைக் கூட அவர்களுக்கு ஊற்றச் சம்மதிக்க மாட்டீர்கள். எட்டி மரம்போலப் பிறர்க்கு உதவாமல் தீமை செய்து வாழ்கின்றீர்கள்; கொட்டிச் செடிபோல் பெருகியிருக் கின்றீர்கள்; எவ்வளவு பாவத்தைக் கட்டிக் கொள்ளுகின்றார்கள்? பைத்தியம் பிடித்த உலகமக்களே! இப்படிச் செய்யலாமா?
இவ்வாறு கதறுகிறார் வள்ளலார். வட்டித் தொழில் மனிதனுக்கு எவ்வளவு ஆசையை உண்டாக்குகிறது? அவனை எவ்வளவு சுயநலமுடையவனாக்குகிறது? எவ்வளவு பச்சாதாபம் அற்றவனாக்குகிறது ? என்பதை இதனால் அறியலாம்.
வட்டிக்கொடுமை ஒழியவேண்டுமானால் அரசாங்கமே மக்களுக்குப் பண உதவி செய்ய முன் வரவேண்டும். தனிப்பட்டவர்களின் பாங்கிகள்-லேவாதேவிகள் ஒழிய வேண்டும்.



