வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

26. சாத்திரங்களின் உண்மை

இக்காலத்தில் அறிவு நூல்களுக்குச் சாத்திரங்கள் என்ற பெயர். நிலத்தில் விளையும் பண்டங்களைப் பற்றிக் கூறுகின்ற நூல்கள் உண்டு. மரம் செடி கொடி ஆகீய தாவரங்களைப் பற்றிக் கூறும் நூல்கள், நீர்வாழ் பிராணிகளைப் பற்றிக் கூறும் நூல்கள் உள்ளன. வானத்தைப் பற்றி, வானத்தில் வாழும் சூரியன், சந்திரன், நட்சத்திரம், மற்ற கிரகங்களைப் பற்றிக் கூறும் நூல்கள் உண்டு. மக்களுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றிக் கூறும் நூல்கள் உண்டு. உலோகப் பொருள்களைப் பற்றி, மருந்துகளைப் பற்றி, அவைகளைப் பயன்படுத்தும் விதங்களைப்பற்றிக் கூறும் நூல்கள் உண்டு. இத்தகைய ஆராய்ச்சி நூல்களையே இன்று சாத்திரங்கள் என்று வழங்குகிறோம்.

நமது நாட்டில் தமிழ் மொழியில், உடல்நூல், உளநூல், நிலநூல், வானநூல், உயிர்நூல், ரசாயனநூல் முதலிய நூல்கள் தனித்தனியாக இல்லை. இவைகள் நமது பண்டைய இலக்கியங்களில் மத, தத்துவ சாதிரங்களில் கலந்துள்ளன. நமது முன்னோர்கள் உடல், உள்ளம், நிலம், வானம், உயிர். ரசாயனம் முதலியவைகளைப் பற்றி அறியாதவர்கள் அல்லர். ஆனால் அவைகளைப் பற்றி அவர்கள் தனித்தனியாக நூல்கள் எழுதி வைக்கவில்லை. இவைகளைப் பற்றி வைத்திய நூல்களிலும், சோதிட நூல்களிலும் புராண இதிகாசங்களிலும் ஆங்காங்கே கூறிச் சென்றனர்.

ஆதலால் நமது நாட்டினர் புராணம், இதிகாசம், வேதம் ஆகமம் முதலியவைகளையே சாத்திரங்கள் என்று எண்ணி வந்தனர். இத்தகைய நூல்களையே நமது வள்ளலாரும் சாத்திரங்கள் என்று கூறுகின்றார்.

நமது நாட்டில் வழங்கும் வேத புராண இதிகாச ஆகம சாத்திரங்களில் மக்கள் வாழ்க்கைக்குப் பெரும்பயன் விளைவதில்லை. இவைகளை அப்படியே நம்பும் மக்கள் உலக மக்கள் எல்லோரும் ஒன்றென்னும் உண்மையை உணர்வதில்லை. சாதியினால், மதத்தினால், மொழியினால், பழக்க வழக்கங்களால், மூடநம்பிக்கைகளால் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளுகின்றனர்.

உதாரணமாகத் தீர்த்த யாத்திரை போதல், தல யாத்திரை போதல் என்ற வழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இவைகளைப் பற்றிப் பல புராணங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு தலத்தைப் பற்றிக் கூறும்போது, மதுரையைப் பற்றியோ, திருவரங்கத்தைப் பற்றியோ, தில்லையைப் பற்றியோ திருவேங்கடத்தைப் பற்றியோ கூறும்போது, அந்தந்த ஊர்களையே உயர்த்திக் கூறுவர். அந்த ஊர்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கினால் எல்லாப் பாவங்களும் தொலைந்து விடும் என்று கூறப்படும்.

இதைப்போலவே எந்தத் தீர்த்தங்களைப் பற்றிக் கூறினாலும் அதனைக் கங்கையிலும் உயர்ந்ததென்று கூறுவர். அந்தத் தீர்த்தத்தில் மூழ்கினால் பஞ்சமா பாதகங்கள் தொலைந்துவிடும் என்று பகர்வர்.

யாத்திரை என்பது எதற்காகக் கூறப்பட்டது என்பதை உணர்ந்தவர்கள் வெகு சிலரே. பண்டைநாளில் ரயில், மோட்டார், வானூர்தி முதலிய பிரயாண வசதிகள் இல்லாத காலத்தில் மக்கள் நடந்து யாத்திரை செய்து வந்தனர். அவர்கள் போகும் வழியில் பல இயற்கைக் காட்சிகளைக் கண்டறியலாம். பல திறப்பட்ட மக்களின் நாகரிகத்தைக் காணலாம். பலதேச மக்களுடன் ஒன்றாகப் பழகலாம். பல நாடுகளில் நடைபெறும் வியாபாரம், விளைபொருள் உற்பத்தி முதலியவைகளை நேரே கண்டறியலாம். இவைகளை அறிவதன் மூலம், மக்களுடைய அறிவு தெளிவடையும்; பல மக்களின் கூட்டுறவு ஏற்படும்; பல நாட்டினருடன் வாணிகத் தொடர்பு, கலைத் தொடர்பு முதலியன ஏற்படும். இந்த நோக்கத்துடனே தான் யாத்திரை என்பதை மத சம்பந்தமுள்ளதாக வைத்தனர். இவ்வுண்மைகளை உணர்ந்து இந்நாளில் யாத்திரை செய்வோர் எத்தனை பேர்? இவ்வுண்மைகளை எந்தப் புராணமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அடுத்து, தீர்த்தங்களைப் பற்றி எடுத்துக் கொள்ளுவோம். பண்டை நாளில் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்த்தங்கள் பல. அவை ஆறுகள், குளங்கள். ஆறுகள் பெரும்பாலும் மலைகளிலிருந்து வெட்டவெளிகளின் வழியே ஓடி வருவன. மலைகளில் நோய் தீர்க்கும் மூலிகைகள் பல உண்டு. உடலுக்கு நலமளிக்கும் உலோகச் சத்துக்கள் உண்டு. ஆறுகள் ஓடிவரும் வெட்டவெளிகளிலும் சுட்டாந்தரைகளிலும் இத்தகைய உலோகச் சத்துள்ள வெளிகள் உண்டு. அவற்றின் வழியே வரும் நீரில் அச் சத்துக்கள் கலந்துள்ளதால் அந்நீரில் குளிக்கும் மாந்தர்க்குப் பல நோய்கள் தீரலாம். தீர்த்தங்களாக விளங்கும் குளங்களிலும் பல, மலையிலிருந்து வந்த நீர் நிரம்பியதாக இருந்தன. சில தடாகங்கள், கெந்தக பூமியிலோ, இரும்புச் சத்துள்ள நிலத்திலோ, தாமிரச் சத்துள்ள நிலத்திலோ, அப்பிரகச் சத்துள்ள நிலத்திலோ இயல்பைக் கொண்டிருக்கும். நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்றாகும் அன்றோ ? ஆதலால், இந்த நீர் நிலைகளில் முழுகுவோர்க்குச் சில நோய்கள் நீங்கலாம். இந்த நலங்கருதியே தீர்த்த யாத்திரையை நலமென்று கூறினர். இவ்வுண்மை தெரிந்து தீர்த்தமாடுவோர் இன்று எத்தனை பேர்?

இன்று உண்மையறிவற்ற யாத்திரிகர், பாசி பிடித்து, நாற்றம் பிடித்து, பல நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்யும் குட்டை குளங்களிலும் தீர்த்தம் என்று முழுகி நோயடைகின்றனர். இது சாத்திரத்தால் நேர்ந்த கோளாறு.

பண்டை நாளில் இருந்தது போல் இன்று ஆற்றங்கரைகள் சுத்தமாக இல்லை. மக்கள் கழிக்கும் மலங்கள் ஆற்று நீரிலேயே கலந்து வருகின்றன. குளங்களும் அப்படியே. அவற்றின் இயல்பே மாறிவிட்டது.

ஒரு பொருளைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டு மானால், மூன்று வழிகளால் உணர்ந்து கொள்ளலாம் என்றனர் அறிஞர். நேரே பார்த்துத் தெரிந்துகொள்ளுதல்; சில அறிகுறி களைக் கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல்; நூல்களின் மூலம் தெரிந்து கொள்ளுதல். இம்மூன்று வழிகளால் ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இம்மூன்றுள் நேரே கண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்வதே சிறந்தது என்பது வள்ளலார் கருத்து. இவ்வாறு தெரிந்து கொள்ளும் மக்களே பூரண அறிவு பெற்றவராவர்.

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற்காட்ட நேராவே

என்று காட்சியளவையே சிறந்ததெனக் கூறினார்.

சாதிமதம் சமயம் எனும் சங்கம்விட் டறியேன்
சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன்

சாத்திரங்கள் சேற்றுநிலம். அதில் இறங்கினால் அவதியுற வேண்டியதுதான். சஞ்சலத்தையே சாத்திரங்கள் தரும்.

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்;
சாத்திரக் குப்பையும் தணந்தேன்;
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்
அருட்பெரும் சோதிஎன்று அறிந்தேன்;
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
உரைப்பதுஎன்? அடிக்கடி உனக்கே.

சாத்திரம் என்பன குப்பைகள். அவைகளில் உண்மை மணிகள் இல்லை.

வேதா கமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்!
வேதா கமத்தின் விளைவறியீர்! சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைத்தல் இலை;
என்ன பயனோ இவை?

என்றார். ஆதலின் பகுத்தறிவு கொண்டு சாத்திரத்தைப் பார்ப்போர், பகுத்தறிவுக் கண்ணாடி தரித்துப் பழம் புராணங்களை ஆராய்வோர் சேற்றில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்; சஞ்சலத்தில் அகப்பட மாட்டார்கள்; குப்பைக்குள் புகுந்து உடலும் மனமும் அழுக்காகி அல்லற்பட மாட்டார்கள். சூதுகளை உணர்ந்து உண்மைவழி நடப்பார்கள். இக்கருத்துடனேயே சாத்திரங்களைப்பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கின்றார் வடலூர் வள்ளலார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *