
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
3. தமிழும் தமிழ் நூலும்
இராமலிங்க அடிகள் தமது தமையனாரிடம் கல்வி பயின்ற காலம் குறைவுதான். எல்லா நூல்களையும் அவரிடமே கற்றறிந்தார் என்று கூறமுடியாது. மூல நூல்களையும் தாமே தமது நுண்ணறிவைக்கொண்டு கற்றறிந்தார்.
என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே, என் திறத்தில், பயின்று அறிதற்கு அருமை யாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளத்தேயிருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று தனது சத்திய விண்ணப்பத்தில் கூறியிருக்கின்றார். இது அவர் தாமே பல நூல்களையும் பயின்று உண்மை ஞானம் பெற்றார் என்பதை விளக்குவதாகும்.
இராமலிங்க சுவாமிகள் திருக்குறளிலே மிகுந்த பற்றுள்ளவர். திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை அவருடைய பாடல்கள் காட்டுகின்றன.
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனில் தீயது; என்றது எண்ணிலையே! – மல்லல்பெறத்
தன்னைத்தான் காக்கின், சினம்காக்க; என்றதனைப்
பொன்னைப்போல் போற்றிப் புகழ்ந்திலையே! – துன்னி
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னும்
திகழ்வாய்மையும்நீ தெளியாய்!
இவைகள் முதல் திருமுறையிலே நெஞ்சறிவுறுத்தல் என்னும் பகுதியிலே காணப்படுகின்றவை. இவைகள் அப்படியே திருக்குறளை அமைத்துப் பாடிய பாடல்கள்.
செல்லா இடத்தும் சினம்தீது; செல்இடத்தும்
இல்அதனில் தீயபிற.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
என்ற குறட்பாக்களின் சொற்றொடர்களையும், கருத்துக்களையும் அப்படியே இராமலிங்க அடிகள் எடுத்தாண்டுள்ளார்.
உறங்குவதுபோலும் என்ற ஒண்குறளின் வாய்மை,
மறம்கருதி அந்தோ! மறந்தாய்!
நெருநல் உளன்ஒருவன் என்னும் நெடும்சொல்
மருவும் குறட்பா மறந்தாய்!
என்று திருக்குறளின் பெயரையே குறிப்பிட்டுப் பாடுகின்றார். இவையும் நெஞ்சறிவுறுத்தலில் காணப்படுவன.
உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை; என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
என்ற இரண்டு குறள்பாக்களை மேலேகாட்டிய அடிகளில் குறித்திருப்பதைக் காணலாம்.
தாயுமானர் தத்துவங்களை இராமலிங்கர் பாராட்டினார்; பின்பற்றினார் என்று கூடக் கூறலாம். தாயுமானார் பாடல்கள், சித்தர் பாடல்கள் இவைகள் எல்லாம் மத வெறுப்பைக் கண்டிப்பவை; மூடநம்பிக்கைகள் பலவற்றை அகற்றுவன; சமரச மனோபாவத்தை மக்களிடம் பரப்புவன. தாயுமானவர் பாடல்கள், சித்தர் நூல்கள் இவைகளையெல்லாம் வள்ளலார் படித்தறிந்தவர் என்பதிலே ஐயம் இல்லை.
இன்று இருந்தார் நாளைக்கு இருப்பதுபொய் என்று அறவோர்
நன்று இருந்த வார்தைநீ நாடிலையே!
இது தாயுமானவர் பாடலிலே சச்சிதானந்த சிவம் என்ற பகுதியில் உள்ள ஒரு செய்யுளை நினைவூட்டுகின்றது.
இனிஏது எமக்குஉன் அருள்வாருமோ எனக்கருதி
ஏங்குதே நெஞ்சம் ஐயோ!
இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று
எண்ணவோ திடம் இல்லையே;
அநியாய மாய்இந்த உடலைநான் என்றுவரும்
அந்தகற்கு ஆள் ஆக்கவோ;
ஆடிட் திரிந்துநான் கற்றதும் கேட்டதும்
அவலமாய்ப் போதல் நன்றோ!
கனியேனும், வறியசெங் காயேனும், உதிர்சருகு
கந்தமூ லங்க ளேனும்,
கனல்வாதை வந்துஎய்தின், அள்ளிப் புசித்துநான்
கண்மூடி மௌனி யாகித்
தனியே இருப்பதற்கு எண்ணினேன்; எண்ணம் இது
சாமிநீ அறியா ததோ!
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்த சிவமே.
இது தாயுமானவர் பாடல். இராமலிங்கர் கருத்தைக் கவர்ந்த செய்யுள். இந்தச் செய்யுளையே மேலே கண்ட அடிகளில் குறித்துக் காட்டினார்.
இராமலிங்க அடிகள் மூவர் தேவாரத்தை முறையாகப் படித்தவர்; அப்பாடல்களிலே உள்ளத்தைப் பறிகொடுத்தவர் திருவாசகத் தேனைத் தெவிட்டாமல் பருகியவர். இவ்வுண்மை களை அவருடைய பாடல்களை காட்டுகின்றன.
நான்காவது திருமுறையிலே நால்வரைப் பற்றியும் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை என்பது 11 பாடல்களைக் கொண்டது; சம்பந்தர் பெருமையைப் பாடுவது. ஆளுடைய அரசு அருள்மாலை என்பது 10 பாடல்களைக் கொண்டது; நாவுக்கரசரைக் குறித்துப் பாடியது ஆளுடைய அடிகள் அருள்மாலை என்பது சுந்தர மூர்த்தியைக் குறித்தது. 10 பாடல்களைக் கொண்டது இவை களைப் படித்தால் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் மணிவாசகர் நால்வர் பாலும் வள்ளலார் எவ்வளவு ஈடுபாடுள்ளவராயிருந்தார் என்பதைக் காணலாம்.
வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடும்கால், நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே
என்ற பாடல் ஆளுடைய அடிகள் அருள்மாலையுள் ஒன்று. இதனால் திருவாசகத்தில் இவருக்குள்ள அன்பைக் காணலாம்.
தேவார, திருவாசகங்களின் சாரம் எல்லாம், அருட்பாவில் அடங்கியிருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை.
அகப்பொருள் துறைகளை அமைத்துப் பாடிய பாடல்கள் அருட்பாவிலே பல உண்டு. அவைகள் எல்லாம் அடிகளின் பரந்த தமிழ் நூல் பயிற்சியை விளக்குவன.
தமிழ் மொழியிலே பக்தி நூல்கள் ஏராளம்; கடவுள் பெருமையைக் கூறும் நூல்கள் கணக்கில் அடங்கா. சூதவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், திருப்புகழ் இவைகள் எல்லாம் பக்தி நெறியைப் பரப்புவன. இவைகளைத் தவிர எத்தனையோ கலம்பகங்கள், அந்தாதிகள், மாலைகள், பிள்ளைத்தமிழ்கள், கோவைகள், உலாக்கள், புராணங்கள் பக்திச்சுவையை ஊட்டுவனவாக அமைந்திருக்கின்றன. தமிழில் இருக்கின்ற அவ்வளவு பக்தி நூல்கள் வேறு எம்மொழியிலும் இல்லையென்று கூறிவிடலாம்.
இக்காரணத்தால், இவ்வுலக வாழ்வை வெறுத்தவர்கள் துறவறமே சிறந்தது என்று எண்ணுகின்றவர்கள்-பக்தி மார்க்கமே மக்களாய்ப் பிறந்தவர்கள் பயன்பெறும் மார்க்கம் என்று நம்பு கின்றவர்கள்-தமிழ் மொழிதான் எம்மொழியினும் சிறந்தது என்று கூறுகின்றனர். இந்த உண்மையை இராமலிங்க அடிகள் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசையையும் பெருமறைப்பையும், போதுபோக்கையும் உண்டுபண்ணுகிற ஆரியம் முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது. பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் லேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கல்வியை மிகவும் இலேசில் அறிவிப்பதாய் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென் மொழியால் பலவகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித் தருளினீர் என்று சத்திய விண்ணப்பத்தில் வள்ளலார் கூறுகின்றார். இதனால் அவர் தமிழ் மொழியின்மேல் கொண்டிருந்த அன்பையும், ஆர்வத்தையும் காணலாம்.
இராமலிங்க அடிகளின்மேல் அளவு கடந்த பக்தியுள்ளவர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலர் அடிகள் படிக்கவே இல்லை; எல்லாவற்றையும் இறைவன் அருளால் உணர்ந்தார் என்று கூறுகின்றனர். இது உண்மையன்று என்பதை அவருடைய அருட்பாவால் உணரலாம் அவர் தமிழ்நூல் பலவற்றையும் கசடறக் கற்றறிந்து பெரும் புலவர் என்பதை மேலே காட்டிய உதாரணங்களால் அறியலாம்.



