வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

5. இவ்வுலகில் இன்பம்

மக்கள்வாழப்பிறந்தவர்கள்; இன்பத்திலே இணைந்து நின்று மகிழப் பிறந்தவர்கள். எல்லா இன்பங்களையும் அடைவதற்கு எல்லா மக்களுக்கும் உரிமையுண்டு.

மக்கள் மாண்டு போகப் பிறக்கவில்லை. மாண்டுபோக வேண்டுமானால் ஏன் பிறக்க வேண்டும்? மக்கள் வாழ்க்கையே துன்பத்திற்கு ஊற்றாக இருப்பது என்பது கையாலாகாத பேச்சு; வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ள முடியாது என்ற நம்பிக்கையுள்ளவர்களின் சொல். இது இயற்கைக்கு மாறானது; உண்மைக்கு ஒவ்வாதது.

இவ்வுலகிலே பிறந்த எல்லா மக்களும் துன்பத்தைத் துரத்தியடிக்க முடியும்; இன்பக் கடலிலே குதித்து நீந்திக் குதூகலமாக வாழமுடியும். இதுவே மக்கள்பால் அன்பு கொண்ட அறிஞர்கள் கருத்து. இவர்கள்தாம் மனிதாபி மானிகள். இக் கருத்துள்ளார்களின் முயற்சியினால்தான் உலகம் முன்னேற முடியும்.

மனித சக்தியிலே-மக்களுடைய அறிவாற்றல்களிலே நம்பிக்கையற்றவர் கள்தாம் வேறுவிதமாகச் சொல்லுவார்கள். நம்மால் ஒன்றும் நடக்காது; எல்லாம் இறைவன் செயல்; அவனன்றி அணுவும் அசையாது; ஒன்றை நினைக்க அது ஒழிந்திட்டு ஒன்றாகும் என்றெல்லாம் வாய்வேதாந்தம் பேசுவார்கள்.

எல்லாம் இறைவன் செயல் என்பதிலே அழுத்தமான நம்பிக்கை யுள்ளவர்களுங்கூட இதை அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். முயற்சியுள்ளவர்களுக்குத்தான் இறைவனும் துணை செய்வான்; கைகட்டிக்கொண்டு, சும்மா காலாட்டிக் கொண்டிருப்பவைனக் கடவுளும் வெறுப்பார்; இதுவே கடவுள் நம்பிக்கையுள்ளவர்களின் கருத்துமாகும்.

இறந்தபின் அடையும் உலகம் ஒன்றுண்டு. அந்த உலகத்தில் தான் இன்பங்கள் அத்தனையையும் அடைய முடியும். இந்த உலகத்தில் என்னதான் செய்தாலும், எவ்வளவு தான் பாடு பட்டாலும் துன்பமும் தொல்லையும்தான் கிடைக்கும் பலன். இவ்வாறு பிடிவாதமாகப் பேசுவோர் சிலர் உண்டு.

இதைப் பெரும்பாலான இறையன்பர்களும் அதாவது கடவுள் பக்தர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்; நாத்திகர்கள் அடியோடு மறுப்பார்கள்; பகுத்தறிவுவாதிகள் காது கொடுத்துக் கேட்கவே மாட்டார்கள்.

பரலோகம் சென்று அடையக்கூடிய செல்வத்தை வாழ்க்கையை இவ்வுலகிலேயே பெறமுடியும் என்பதிலே ஆத்திகர்க்கும் நாத்திகர்க்கும் கருத்து வேற்றுமையில்லை. இராமலிங்க அடிகள் நாத்திகர் அல்லர்; கடவுள் நம்பிக்கை யுள்ள பகுத்தறிவுவாதி. அவரும் இகலோகத்திலேயே, பரலோக இன்பங்களை அடைய முடியும் என்பதை எடுத்துக் காட்டு கின்றார்.

அகத்தே கறுத்துப் புறத்தேவெளுத்
திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்து அடைவித் திட, அவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
திடுதற் கென்றே, எனையிந்த
யுகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன்; அருளைப் பெற்றேனே.

இந்தப் பாடல் மிகவும் உற்றுநோக்கி ஆராயவேண்டிய ஒரு உயர்ந்த பாடல். பொதுப் பணியிலே உண்மையாகத் தலை யிட்டிருக்கும் ஒவ்வொருவரும் உள்ளத்திலே எழுதி வைத்துக் கொள்ள வேண்டிய பாடல்.

இவ்வுலகில் உள்ளவர்கள் வெறும் ஆடம்பரக்காரர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றவர்கள். உள்ளத்தில் கறுத்தவர்கள்; கறை படிந்தவர்கள்; குற்றங்கள் நிறைந்தவர்கள், வெளியில் மட்டும் வெள்ளை சள்ளையாகக் காட்சியளிக்கும் வேடதாரிகள்.

இத்தகைய போலிகள் அனைவரையும் இவ்வுலகில் திருத்திச் சன்மார்க்க சங்கத்திலே சேர்ப்பேன் அவர்கள் இவ்வுலகிலேயே மறுவுலகம்-அதாவது பரலோகத்தில் உண்டென்று உரைக்கப் படும் நன்மைகளையெல்லாம் பெற்று மகிழ்வார்கள்.

இதைச் செய்வதற்காகவே நான் இவ்வுலகிலே பிறந்திருக்கின்றேன், இதற்காகவே என்னை இந்த யுகத்திலே இறைவன் படைத்தான். நானும் இந்த நோக்கத்துடனேயே அன்பையும் இரக்கத்தையும் துணையாகக் கொண்டு உழைக்கின்றேன்.

இதுவே மேலே காட்டியுள்ள செய்யுளின் பொருள். இவ்வுலகிலேயே பரலோக நன்மையை அனைவரும் அடைய முடியும் என்ற கருத்தைக் காணலாம் இச்செய்யுளிலே

இவ்வுலக மக்களுடைய குற்றங்களைத் திருத்த முடியும். உள்ளத்திலே கறுத்த ஆடம்பரக்காரர்கள் தான் உலக மக்களை ஆட்டிப் படைக்கின்றார்கள். அந்தத் துன்மார்க்கர்களை யெல்லாம் சன்மார்க்கர்களாக்கி விட்டால் போதும்; எல்லா மக்களும் இகத்தே பரத்தைப் பெறலாம். இக்கருத்தையும் இச்செய்யுள் வலியுறுத்துகின்றது.

பொதுமக்களின் நன்மைக்காக – வாழ்வுக்காக உழைக்கும் அனைவரும் இத்தகைய உறுதியுள்ளம் பெறவேண்டும். என் கடன் பணி செய்வது; மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழச் செய்யமுடியும்; அவர்களுடைய இன்பவாழ்வுக்குத் தடைகளாக இருக்கும் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் வல்லமை எனக்குண்டு; பொதுமக்கள் ஆதரவின் மூலம் இத்தகைய வல்லமையைப் பெறுவேன் என்ற துணிவு ஒவ்வொருவருக்கும் வேண்டும். இத்துணிவே வெற்றி தரும். இந்த உயர்ந்த உண்மையை நமக்கு அறிவுறுத்தினார் அருட்பிரகாச வள்ளலார்.

அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்தவர்கள் திருந்துவது எப்படி? அவர்கள் சன்மார்க்கர்களாவது எவ்வாறு? என்பதை மற்றொரு செய்யுளிலே விளக்கமாகப் பாடியிருக்கின்றார்.

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதி, என் உளத்தே
நீதியுள் கலந்து நிறைந்தது; நானும்
நித்தியன் ஆயினேன்; உலகீர்!

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே 
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே

தான் அழியாத புகழுடம்பு பெற்றுச் சிரஞ்சீவியான வகையையும், மற்றவர்களும் இகத்தே பரத்தைப் பெறுவதற்கான வழியையும் இச்செய்யுளிலே சொல்லிவிட்டார்.

ஆதி, நடுவு, அந்தம் என்று மூன்றுமற்ற அழியாத இரக்கத்தோடு கூடிய பேரறிவு என் உள்ளத்தே புகுந்தது. அது நீதியோடு இணைந்து என் உள்ளமெல்லாம் நிரம்பிவிட்டது. ஆதலால் நான் நித்தியமும் எல்லோர் உள்ளத்திலும் அழியாமல் இயங்குகின்றவனாக ஆனேன்.

உலகில் உள்ளவர்களே! சாதிகள், மதங்கள், மதங்களின் உட்பிரிவுகள் எல்லாவற்றிலிருந்தும் உங்களை விடுதலை செய்வேன். உண்மையான குற்றமற்ற சன்மார்க்க சங்கப் பெரு வீதியிலே உங்களை நடமாடவைப்பேன். இதுதான் இகத்திலே பரத்தைப் பெறும் மார்க்கம். நான் சொல்லுவது உண்மை. விரைந்து என்னிடம் வாருங்கள்! உலகத்தினரே ! எல்லோரும் வாருங்கள்.

சாதி மத சமய பேதமின்றிச் சன்மார்க்க நெறியிலே வாழ்வதுதான் இகத்திலே பரத்தைப் பெறுவதாகும். இதுவே வள்ளலாரின் கருத்து.

சாதி மத சமய பேதமற்ற சமுதாயத்தை அமைக்கப் பாடுபட வேண்டியதே மனிதாபிமானிகளின் கடமை இத்தகைய சன்மார்க்கச் சமூகத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். இந்த நம்பிக்கையுடன் உறுதியாக உழைத்தால் வெற்றி கிடைப்பது திண்ணம். இக்கருத்து இராமலிங்கருடைய பாடல்களிலே வெளிப்படையாக அமைந்து கிடக்கின்றது.

இவ்வுலகிலே இன்பம் இல்லை என்று கூறும் நயவஞ்சகரின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதே வள்ளலார் நோக்கம். ஆருக்கும் அஞ்சாமல், உறுதியுடன் வஞ்சகர்களின் மாயத்திரைகளை அருந்தமிழ்ப் பாடல்களால் இவ்வாறு சுக்குநூறாகக் கிழித்தெறிகிறார் வள்ளலார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *