வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

35. ஜீவகாருண்யம்

நமது நாட்டிலே ஜீவகாருண்யத்தைப் பற்றிச் சிறப்பித்துப் பேசாத பெரியோர்கள் எவருமேயில்லை. மதத்தை மாற்றி அமைக்க முயன்றவர்கள் பலர்: புதிய கொள்கைகளை ஜன சமூகத்திலே புகுந்த முயன்றவர்கள் பலர். இவர்கள் நோக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். மக்கள் அனைவரும் துன்பம் இன்றி இவ்வுலகத்தில் இன்பத்துடன் வாழவேண்டும் என்பது தான் இந்த நோக்கத்திற்கு மாறுபட்ட பெரியோர்கள் எவரும் இல்லை. ஆனால் இன்று ஜீவகாருண்யம் பேசுவோர்களில் பலர் உண்மையான ஜீவகாருண்யம் இன்னதென்று உணராமல் இருக்கிறார்கள். ஜீவகாருண்யத்தின் சிறந்த பகுதியை மறந்து விடுகின்றனர். மனித சமூகத்தைப் பற்றி மனதில் கொள்ளாமல் பெருமைக்காக ஜீவகாருண்யம் பேசுவோர் பலர்.

மத பக்தியிலே தலைசிறந்து நிற்போர்களில் பலர் எறும்புகளிடம் ஜீவகாருண்யம் காட்டுகின்றனர்; காக்கைகளிடம் கருணை காடுகின்றனர்; ஆடு கோழிகளிடம் அனுதாபம் காட்டு கின்றனர்; மாடு, குதிரைகளிடம் மனவிரக்கம் காட்டுகின்றனர்.

நோயினால் வருந்தும் மாடு ஆடுகளிடம் கருணை காட்டும் பலர். நோய்த்துயர் தாங்கமாட்டாமல், ஆண்டவனே! ஆண்டவனே! என்று அலறும் ஏழை மக்களிடம் இரக்கம் காட்டவில்லை. எறும்புக்கும் காக்கைக்கும் இரைபோடும் கருணையாளர்களிலே பலர், நாள்தோறும் உழைத்து உழைத்து ஒரு வேளைச் சோற்றுக்குக் கூட வழியில்லாமல் வறுமையால் வாடிச் சாகும் ஏழைகளிடம் எள்ளளவும் இரக்கம் காட்டுவ தில்லை.

முரட்டு ஜீவகாருண்யவாதிகளிலே சிலர் மாமிசம் சாப்பிடுவது ஜீவஹிம்சை, மாமிசம் சாப்பிடாமை ஜீவகாருண்யம் என்ற அளவோடு நின்று விடுகின்றனர்.

மாமிசம் உண்ணாமை ஜீவகாருண்யத்தின் ஒரு பகுதி என்பதில் ஏதும் தவறில்லை. அது ஒன்றேதான் ஜீவகாருண்யம் என்று வாதிடுவதுதான் தவறு.

ஜீவகாருண்யத்திலே தலைசிறந்து நின்றவர் இராமலிங்கர் அவர் தமது பாடல்களில் ஜீவகாருண்யத்தைப் பற்றியே சிறப்பித்துப் பாடியிருக்கிறார். ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற ஒரு தனி நூலும் எழுதியிருக்கிறார். அவற்றை ஊன்றிப் படிப்போர் வள்ளலாரின் உள்ளக் கருத்தை உணரலாம்.

மக்களிடம் உயிர்க் கருணையில்லாவிட்டால், அவர்களுடைய அறிவு வளர்ச்சியடையாது; அன்பு வளர்ச்சியடையாது; அவர்கள் ஒன்றுபட்டு வாழமாட்டார்கள். இதுவே வள்ளலாரின் கருத்து. இக்கருத்தையே அவர் தமது பாடல்களில் வற்புறுத்துகிறார். ஜீவகாருண்ய ஒழுக்கத்திலும் எடுத்துக் காட்டுகிறார்.

ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். ஜீவகாருண்யம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்.

இது வள்ளலாரின் வாக்கு. மக்களிடம் ஜீவகாருண்யம் இருந்தால்தான் அவர்கள் இவ்வுலகின் இன்பங்களை யெல்லாம் பெறுவார்கள். நாகரிகம் பெற்ற சிறந்த சமூகத்தினராய் வாழ்வார்கள் ஜீவகாருண்யம் அற்ற மனிதர்களின் வாழ்க்கைக்கும் மிருகங்களின் வாழ்க்கைக்கும் மாற்றமிருக்க முடியாது; விலங்குகளின் வாழ்வும், ஜீவகாருண்யமற்ற மக்களின் வாழ்வும் ஒன்றுதான். இக்கருத்தை வள்ளலார் வலியுறுத்திக் கூறுகிறார்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் சிறிதும் இல்லாத புலி, சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவே இல்லை. அதுபோல் ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாத மனிதர்கள் வழங்கும் இடத்திலும் இகலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென்று அறியவேண்டும்.

இது வள்ளலார் வாய்மொழி. இன்னும் அவர் ஜீவகாருண் யத்தைப்பற்றி விளக்கமாகக் கூறியிருப்பதைக் கவனியுங்கள்:

செல்வம் உடையவர்கள் நிறைய உண்ணுகிறார்கள். அளவுக்கு மேல் உண்ணுகிறார்கள். வறியவர்கள் மிகுந்த பசியினால் உடல் வருந்துகிறார்கள்; மனம் வேகின்றார்கள்; நெஞ்சங் கொதிக்கின்றார்கள்; இதைப் பற்றி நினைக்கவே என்னால் முடியவில்லை. இதை நினைக்கும் தோறும் யாரையும் இகழ மனம் வரவில்லை. என் மனம் எரிகின்றது. என் உடம்பும் எரிகின்றது. ஐயோ! நான் இக்கொடுமைக்கு என்ன தான் செய்வேன் ! என்று இவ்வாறு மனம் கசிந்து பாடுகின்றார்.

உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியர்
உறுபசி யுழந்துவெந் துயரால்
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
மற்றிதை நினைந்திடுந் தோறும்
எள்ளலேன், உள்ளம் எரிகின்றது, உடம்பும்
எரிகின்றது என்செய்வேன் அந்தோ!
கொள்ளலேன் உணவும்; தரிக்கிலேன் இந்தக்
குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்!

இது வள்ளலார் பாடல். இக்கருத்தே வள்ளலாருடைய ஜீவகாருண்யத்தைப் பற்றிய சிறந்த கருத்து.

வள்ளலார் வலியுறுத்தும் முதன்மையான ஜீவகாருண்யம், வறியோர்க்கு உதவி செய்தல், பசிப்பிணியால் வருந்தும் ஏழை மக்களின் பரம்பரையை மாற்றுதல். மக்களிடம் பேதம் பாராட்டாமல் எல்லோரும் ஒன்றெனக் கொள்ளல் இவைகளேயாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *