வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

20. நில உரிமை

நிலத்திலே யாருக்கு உரிமை? என்ற பேச்சே இன்று எங்கும் நிலவுகிறது. ஏழை விவசாயிகள் எங்களுக்கே நிலம் சொந்தம் என்கின்றனர். உழைப்பின் அருமை அறியாமல் உண்டு உறங்கி உல்லாசமாக வாழும் நிலச்சுவான்தாரர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். இந்தப் பண்ணையாட்களுக்கு இவ்வளவு அகங்காரமா? இந்தக் குத்தகைதாரருக்கு இவ்வளவு தைரியமா? என் பணத்தைக் கொட்டி வாங்கிய நிலத்தை இந்தப் பஞ்சைகள் ஆக்கிரமிப்பதா? நானா விட்டு விடுகிறவன்? பார்க்கிறேன் இவர்களை ஒருகை? என்று சண்டப் பிரசண்டமாகப் பேசுகிறார் பெரிய நிலக்காரர்.

ஆம்; ஆசை யாரைவிட்டது? நிலத்திலே பாடுபட்டுப் பலன் உண்டாக்க முடியாதவர்கள் நிலத்தைப் பிறர் கையில் கொடுக்க விரும்ப மாட்டார்கள்தான். பணத்தை எப்படிச் செலவு செய்வது? பணம் பெற்றிருப்பதற்குப் பயன் என்ன? பொன்காத்த பூதமாய் விளங்குவதால் யாருக்கு நன்மை? என்று எண்ணிப் பார்க்கும் இயல்பற்றவர்களும் பணத்தில் உள்ள பற்றை விட மாட்டார்கள். வயதேறி விட்டது. தலையாடுகின்றது. நடந்தால் கைகால்கள் நடுங்குகின்றன. கோலின் துணையின்றிக் கொஞ்ச தூரங்கூட நடக்க முடியாது. நரம்புகள் எல்லாம் முறுக்கின்றி நலிவடைந்து விட்டன. இந்த நிலையில் உள்ள கிழவர்களுக்கும் இளமை உணர்ச்சி இல்லாமல் போய் விடுவதில்லை. அழகுள்ள பெண்ணென்றால் ஆ வென்று அண்ணாந்து பார்க்கின்றனர். ஆகவே நிலத்தாசை, பணத்தாசை நீள்விழி மடவார் மேல் ஆசை மூன்றும் மனிதனை விட்டுவிடுவதில்லை. சாகும் வரையிலும் ஆடவர்களின் அகத்திலே குடி கொண்டிருக்கின்றன.

நிலத்தினும், பணத்தும், நீள்விழி மடவார்
நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்.

இது வள்ளலார் வாக்கு மனத்திலே தோன்றும் மூவகை ஆசைகள் மண், பொன், பெண். இவற்றுள் முதன்மையானது மண்ணாசை.

மண்ணிலேதான் உணவுக்கான தானியங்கள் விளைகின்றன; பழங்கள், பருப்பு வகைள், கிழங்குகள், காய்கறிகள் எல்லாம் தோன்றுகின்றன. இவைகள் இல்லாவிட்டால் எவ்வுயிரும் இவ்வுலகில் இயங்கமுடியாது. உணவின்றேல் யார்தான் உயிர் வாழமுடியும்.

நமது வாழ்க்கைக்கு உதவும் மற்றைய பொருள்களையும் நிலமே தருகின்றது. பொன்னைத் தருகிறது. வெள்ளியைத் தருகிறது. இரும்பைத் தருகிறது. ஈயத்தைத் தருகிறது. எண்ணெயைத் தருகிறது. நிலக்கரியைத் தருகிறது. இன்றும் வைரம், வைடூரியம், கோமேதகம் முதலிய நவரத்தினங்களையும் நமக்குக் கொடுப்பது பூமியே.

நிலமே முதன்மையான செல்வம்; அடிப்படையான செல்வம். இந்த நிலம் பாழாக தரிசாக பயிர் செய்யாமல் வீணாகக் கிடப்பது நாட்டுக்கு நட்டம். உலகத்திற்கு வறுமை. மக்களுக்குத் தொல்லை. ஆதலால் நிலங்கள் சும்மா கிடப்பதை அறிவுள்ள எவரும் அனுமதிக்க முடியாது.

உணவுப் பொருள் உற்பத்தியாகும் நிலங்கள் நமது நாட்டில் ஏராளமாக இருக்கின்றன. இருந்தும் நமது நிலை மானக் கேடானது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய் கிடைக்கவில்லையே என்று நெஞ்சங் குமுறி அழுகிற வனுக்கும் நமக்கும் வேற்றுமையில்லை.

விளைநிலங்கள் இருந்தும் பசி தீர்க்கும் பண்டங்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை. காரணம் என்ன? பெரிய நிலச்சுவான்தாரர்களது நிலங்களின் பல பாகம் பாழாய்க் கிடக்கின்றன. உழுது பயிரிடப்படும் நிலங்களும் உரம் போதாமல், ஒழுங்கான பாதுகாப்பில்லாமல் விளைவதில்லை. குறைந்த பலனையே கொடுக்கின்றன.

நிலங்களில் இறங்கிவேலை செய்கின்றனர் கோடிக் கணக்கான மக்கள். அவர்களுக்கு அந்த நிலத்தில் உரிமை யில்லை. இன்னும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாடுபட்டுப் பயிர் செய்வதற்கு நிலமே கிடைப்பதில்லை. பாடுபட்டால் பலன் கிடைக்கும். அந்தப் பலனை நாம் அனுபவிப்போம். இன்றைய கஷ்டம், நாளைக்க நன்மை தரும் என்ற நம்பிக்கை யிருந்தால் தானே உழைப்பாளிகள் ஊக்கத்தோடு உழைப்பார்கள்.

நேரடியாக நிலத்தில் இறங்கி உழைக்கும் ஆற்றல் அற்றவர்களிடம் அதிகமான நிலங்கள் அடங்கிக் கிடக்கின்றன. நிலம் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாதவர்களுக்கு எவ் வளவோ நிலம் சொந்தம். நிலத்தில் எப்படிப் பயிர் செய்வது? எந்த நிலத்தில் என்ன பயிர் செய்யலாம்? என்று எண்ணிப் பார்க்கும் திறமையற்றவர்கள் பலர் நிலச்சுவான் தாரர்களாயிருக்கின்றனர்.

பண்டைநாளில் நிலம், பாடுபடுவனுக்குச் சொந்தம், ஒவ்வொருவரும் தமது உழைப்புச் சக்திக்கேற்ற அளவு நிலத்தைப் பயிர்செய்து வந்தனர். மக்களின் தேவைக்கேற்ற பயிர்களைச் செய்து வந்தனர். இதனால் அந்நாளில் உணவுப் பஞ்சம் ஏற்பட வேயில்லை.

இந்நாளில் உழைப்பவனுக்கு உரியது நிலம் என்ற கொள்கை மாறிவிட்டது. பாடுபடாத பணக்காரனுக்கு நிலத்தில் உரிமை ஏற்பட்டது. அந்நாளில் உழவர்களே நிலத்தலைவர்கள்; இந்நாளில் பணக்காரர்கள் நிலக் கிழவர்கள். இந்த முறை மாறினாலன்றி நாட்டில் உணவுப்பொருள் உற்பத்தி பெருக முடியாது.

வறிஞன் ஓம்பும் ஓர் செய்யெனக் காத்து
இனிது அரசு செய்தான்.

என்று கம்பர் தசரதனைப் பற்றிக் கூறுகிறார். நேரடியாக நிலத்தில் உழைக்கும் ஏழை விவசாயி தன்னுடைய நிலத்தை எவ்வாறு பாதுகாத்து அதிக விளைவை உற்பத்தி செய்கிறானோ அது போல் தசரதன் தனது நாட்டைப் பாதுகாத்தான் என்கிறார் கம்பர். இதிலிருந்து, நிலம் உழுகிறவனுக்கு உரிமையாயிருந்தால் தான் உற்பத்தி குறையாது என்பது கம்பன் கருத்தென்பதைக் காணலாம்.

இதே கருத்தைத்தான் வள்ளலாரும் வற்புறுத்தியிருக்கிறார்.

எளியவர் வளைத்த நிலமெலாம் கவரும்

எண்ணமே பெரிதுளேன்.

ஏழைகள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு பாடுபடுவதற்கு வைத்துக் கொண்டிருக்கும் நிலத்தைப் பணத்தால் கவரு கின்றனர் பலர். இந்த எண்ணம் மனித சமுதாயத்தில் வளர்ந்து வந்தால் பெரும் பாதகம் விளையும்! இதனால் நிலத்தில் விளையும் பலன் குறைந்துவிடும். நிலத்தில் பாடுபடுவோர் குறைவர். பாடுபடுவோர்க்கும் ஊக்கம் இராது. உற்பத்தி குறையும். இவ் வுண்மையை இன்றைய உலகம் உணர்ந்து விட்டது. நமது நாடும் அறிந்துவிட்டது. உழவர்க்கு நிலத்தில் உரிமை வேண்டும் என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் இன்று ஒருவரும் இல்லை. வள்ளலார் கருத்து நிறைவேறும் காலம் இன்று வந்துவிட்டது. ஆதலால் உழவர்களின் நிலம் பணக்காரர்கள் வசம் ஆகாமல் தடுக்க வேண்டும். இதுவே வள்ளலார் உள்ளக்கிடக்கை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *