
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
14. உலகம் ஒன்றாகும்
உலகம் ஒன்றுபட்டு வாழவேண்டும் சாதிபேதம், இன பேதம், சமயபேதம், மொழிபேதம் தேசபேதம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அடியற்றுச் சாய வேண்டும் இவ்வாறு பலர் சொல்லுகின்றனர். இதைச் சொல்பவர்களைப் பார்த்து இன்று சிலர் ஏளனம் செய்யலாம்.
சாதிபேதம் பேசிச் சமூகத்தைச் சுரண்டுகின்றனர் சிலர். இனவெறியைக் கிளப்பிவிட்டுப் பொருளாதாரப் சமத்துவக் கிளர்ச்சிக்குத் தடை விதிக்கின்றனர் சிலர். சமய பேதங்கள் பேசிச் சதி செய்து மக்களைச் சுரண்டுகின்றனர் சிலர் மொழி பேதம் பேசி மக்களை மூடர்களாக்கப் பார்க்கின்றனர் சிலர். தேச பேதத்தைப் பலப்படுத்தித் தங்கள் ஏகபோக வாழ்வுக்கு இடையூறு நேராமல் சமாளிக்கப் பார்க்கின்றனர் சிலர்.
இத்தகைய பேதங்கள் இனி நிலைத்து நிற்க முடியாது. மக்கள் விழித்துக் கொண்டனர். பேதங்களால் வரும் தீமைகளைக் கண்டறிந்தனர். பேதங்களால் ஒருசில சூதர்களே உயர்ந்த வாழ்க்கை நடத்துகின்றனர் என்ற உண்மையை உணர்ந்து விட்டனர். ஆதலால் இனி அவைகள் அழிந்துபோக வேண்டியது தான். அழிந்துபோகும் காலமும் நெருங்கிவிட்டது.
இவ்வுண்மையைக் கூறுவோரைப் பார்த்து, பேதம் பேசிப் பாமர மக்களைச் சூறையாடும் சூதர்கள் பரிகசிக்கலாம். பைத்தியக்காரர்கள் என்று வசை கூறலாம். வாய்வேதாந்திகள் என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.
ஆனால், இன்று உண்மையிலே உலகம் ஒன்றாகிக் கொண்டு வருகிறது. இதை இவர்கள் கண்கள் பார்க்க மறுக்கின்றன. இன்று எந்தச் சமூகமும் தங்கள் பழமையான தனி நாகரிகத்துடன் வாழவேயில்லை. ஆண் பெண்கள் அனைவரும் நடை உடை பாவனைகளில் ஒத்த நாகரிகமுடையவர்களாக ஒன்று பட்டுக் கொண்டே வருகின்றனர்.
இன்று எந்த ஒரு மொழியும், பிறமொழி கலவாத தனி மொழியாக வழங்கவில்லை. பேச்சு வழக்கிலே உள்ள ஒவ்வொரு மொழியிலும் பேச்சு வழக்கிலே உள்ள பிற மொழிகளின் சொற்கள் கலந்து வருகின்றன! இது இயற்கை.
கல்வி காரணமாக -பலநாட்டு மக்கள் ஒன்றாகப் பழகுவதன் காரணமாக-சாதி, இனம் மடிந்து வருகிறது பல சாதிக்காரர் களுக்குள்ளும், பல இனத்தினர்க்குள்ளும், பல நாட்டினர்க் குள்ளும் கலப்பு மணங்கள் நடைபெறத் தொடங்கி யிருக்கின்றன.
இனியும் சமய பேதங்களை நிலைநாட்டிச் சமூகத்தை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால், கண்டிப்பாக, அவர்களை விடப் பிறபோக்காளர்கள் யாரும் இருக்க முடியாது.
இனியும் மக்களிடையிலே சாதி பேதத்தைப் பரப்பிச் சமூகத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று முயற்சிப்போரின் வஞ்சகம் அதிக நாளைக்கு நிலைத்து நிற்காது. அவர்களுடைய சூழ்ச்சியை வெகுவிரைவில் மக்கள் உணர்ந்து கொள்ளுவார்கள்.
இன்று உலகபோக்கைப் பாருங்கள்; எல்லா நாட்டிலும் உலகம் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கின்றது. ஒருசில சுயநலவாதிகளைத் தவிர எல்லா நாட்டுப் பொதுமக்களும் வேற்றுமையை வெறுக்கின்றனர்.
எல்லா நாடுகளிலும் சாதி வித்தியாசத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் சட்டங்கள் செய்யப்படுகின்றன. ஒருசில வெறியர்களின் ஆட்சி நடைபெறுகின்ற சில சிறு நாடுகளிலே சாதி வேற்றுமைக்கு உயிர்க்கொடுக்கும் வகையிலே சட்டங்கள் கொண்டுவர முயற்சி செய்யப்படுகின்றன. அந்த முயற்சியை அந்தநாட்டு மக்களே எதிர்க்கின்றனர்; வெறுக்கின்றனர்; அநாகரிகமான ஆபாசச்செயல் என்று ஆத்திரப்படுகின்றனர்.
எந்த நாட்டிலும், நாகரிகத்தை மாற்றிக் கொள்வதைத் தடுக்கச் சட்டம் இல்லை. புதிய நாகரிகத்தை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கச் சட்டம் இல்லை. அநாகரிகமாகக் கருதப்படும் பழைய நாகரிகத்தை ஒழிப்பதைத் தடை செய்யச் சட்டம் இல்லை. எந்த நாட்டு மக்களும் எந்த நாகரிகத்தையும் மேற்கொள்ளலாம்; எந்த நாட்டு மக்களும் எந்த நாகரிகத்தையும் உதறித் தள்ளி விடலாம்.
இந்த நிலையிலே ஒருசில சுயநலக்கார வெறியர்கள் ஜாதி, மதம், நாகரிக வித்தியாசங்களைக் காப்பாற்ற முனைவது வீண் முயற்சி; பயன்தராத பாடு. இந்த உண்மையை 1872-ம் ஆண்டிலேயே வள்ளலார் கூறிவிட்டார். அவர் கூறியிருப்பது இன்று நடைமுறையில் வளர்ந்து வருவதைக் காணலாம்.
பலவகைப்பட்ட, சமயபேதங்களும், ஜாதி பேதங்களும் ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 வருஷத்திற்கு மேல்.
இது வள்ளலார் எழுதியது; 1872-ஆம் ஆண்டிலே இதை எழுதினார். இதன்படி பார்த்தால் 1901-ஆம் ஆண்டு முதல் ஜாதி, மத, ஆச்சார பேதங்கள் ஒழியும் என்பது அவருடைய நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
1901-ஆம் ஆண்டு முதல் உலக சரித்திரத்தை ஆராய்ந்து பாருங்கள். 1901-லிருந்து இன்று வரையிலும் உலகத்திலே பல நாடுகளிலும் பல அரசியல் புரட்சிகள் நடந்திருக்கின்றன; பல சமூகப் புரட்சிகள் நடந்திருக்கின்றன; பல நாகரிகப் புரட்சிகள் நடந்திருக்கின்றன.
இந்தப் புரட்சிகளால் மத ஆதிக்கக் கோட்டைகள் பல இடிந்து பாழாயின: ஜாதீய வலைகள் சுக்குநூறாக அறுந்து போய்விட்டன: பல நாகரிகங்களும் ஒன்றுபட்டுக் கலந்து விட்டன.
1901-ஆம் ஆண்டு முதல்தான் உலகிலே பல பாகங்களிலும் பகுத்தறிவு இயக்கங்கள் தோன்றி வேலை செய்து வருகின்றன இன்று ஒவ்வொரு நாடுகளிலும் பல பெயர்களிலே, பல உருவங்களிலே பகுத்தறிவு இயக்கங்கள் வேலை செய்கின்றன. இந்த இயக்கங்கள் சில சில்லரைக் கொள்கைகளிலே ஒன்றோடு ஒன்று முரண்பட்டுத் தனித்தனியாக வேலை செய்து கொண்டிருந் தாலும் வள்ளலார் கூறிய மூன்று விஷயங்களிலே முரண்படு வதில்லை.
சமய பேதங்கள் தொலைய வேண்டும் என்பதிலே, ஜாதி பேதங்கள் ஒழிய வேண்டும் என்பதிலே, ஆச்சார பேதங்கள் அழிய வேண்டும் என்பதிலே எல்லாச் சீர்திருத்த இயக்கங்களும் ஒத்துழைக்கின்றன. இது ஒன்றே வள்ளலாரின் தீர்க்க திருஷ்டி நிறைவேறிக்கொண்டு வருகிறது என்பதைக் காட்டுவதாகும்.
உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களும் ஒன்றாகப் போய்விடும். உலகத்தவர்களே, நான் கூறுவது வெறுங்கனவு என்று நினைக்காதீர்கள்! இது உண்மை. உங்களுடைய சோம் பேரித்தனத்தை விட்டுத் துணிவு கொள்ளுங்கள்! இன்று மக்களைத் தனித்தனியே பிரித்து வைத்துத் துன்புறுத்தும் பேதங்களெல்லாம் என்று ஒழியுமோ என ஏக்கமடையாதீர்கள்! சன்மார்க்க சங்கமாகிய உண்மை நெறிக் கழகத்தைச் சேருங்கள்! உண்மையாகவே நீங்கள் இன்பமைடயும் நல்வழியைக் கண்டு கொள்வீர்கள்! ஆதலால் இப்பொழுது இதைச் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார்.
மார்க்கஎலாம் ஒன்றாகும், மாநிலத்தீர் வாய்மையிது;
தூக்கம்எலாம் நீக்கித், துணிந்து, உளத்தே-ஏக்கம்விட்டுச்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின்! சத்தியம், நீர்
நன்மார்க்கம் சேர்வீர் இந் நாள்.
என்ற வெண்பாவால் உலகம் ஒன்றாகும் என்ற உண்மையைக் காணலாம். மேலும் வடலூரார் இக்கொள்கையை,
பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே
என்று வலியுறுத்திக் கூறுவதையும் காணலாம்.
ஆகவே, உலக ஒற்றுமையை விரும்புவோர் வேற்றுமையைக் கூச்சல்களைக் கண்டு வெருளவேண்டியதில்லை.



