வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

31. ஆண், பெண் சமத்துவம்

இப்பொழுது பெண்கள் சமுதாயம் வீறுகொண்டு எழுந்து விட்டது. தங்கள் உரிமையை அவர்கள் உணர்ந்து விட்டனர். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று முழங்குகின்றனர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே! என்று ஆர்வத்தோடு பாடுகின்றனர்.

பெண்களை வற்புறுத்திக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் என்பது இன்றைய பெண்ணுலகப் பேச்சு. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்பவர்கள் விந்தையான மனிதர்களாகி விட்டனர். அவர்களுக்கு இந்த நாட்டிலே வேலை இல்லை.

கற்பு, கற்பென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்றார் பாரதியார். கற்பென்னும் திண்மை என்றார் திருவள்ளுவர். கற்பு என்றால் கற்றுக் கொள்ளுதல் என்றே பொருள். உலக ஞானத்தை, குடும்பக் கலையை, அரசியல் சமூக பொருளாதாரக் கலைகளைக் கற்றுக் கொள்ளாத பெண்கள் எப்படித் திறமையுடன் ஆண்களின் மாய்மால மொழிகளில் மயங்காமல் வாழமுடியும்?

பெண்களின் குணம், மனம், செயல்கள் வேறு; ஆண்களின் குணம், மனம் செயல்கள் வேறு என்பர். இதுவும் கலைக்கு நிற்காத வாதம்.

இளகிய மனம்; அன்பில் மாறாதிருப்பது; துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வது அவசரமற்ற தன்மை இவைகளையெல்லாம் பெண் தன்மையென்று கூறலாம்.

கல் நெஞ்சம், காரியம் முடியும் வரையிலும் அன்பு காட்டுவது, துன்பங்களைத் தாங்க முடியாமல் சீறி விழுதல், எதிலும் ஆத்திரமும் அவசரமும் கொள்ளுதல் இவைகளை ஆண் தன்மையென்று கூறலாம்.

இத்தகைய குணங்கள் பெண்களிடமும் உண்டு; ஆண்களிடமும் உண்டு. ஒருவருடைய குணம், மனப்பான்மை, நடத்தை இவைகளுக்குக் காரணம் அவர்களின் தொட்டில் பழக்கந்தான் இளமையிலிருந்து, அதாவது, குழந்தைப் பருவத்திலிருந்து பழகும் சுற்றுச் சார்பே ஒருவருடைய குணத்தையும், மனப்பான்மையையும், நடத்தையையும், உருவாக்குவது.

இவ்வுண்மையைக் கொண்டு பார்த்தால், ஒவ்வொரு ஆணிடமும் ஆண் தன்மையும் உண்டு; பெண் தன்மையும் உண்டு. ஒவ்வொரு பெண்ணிடமும் பெண் தன்மையும் உண்டு; ஆண் தன்மையும் உண்டு. இதை உணர்ந்தவர்கள் பெண் ஆண்பேதம் பாராட்ட மாட்டார்கள். பெண்கள் உரிமை வேறு; கடமை வேறு. ஆண்கள் உரிமை வேறு; கடமை வேறு; என்று வழக்கிட மாட்டார்கள்.

ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதைப் பற்றி வள்ளலார் கூறும் உண்மைகள் மிகச் சிறந்தவை.

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி!

பெண்ணுருவத்தில் ஆண்தன்மைகளும், ஆண் உருவத்துள் பெண் தன்மைகளும் ஒன்றுபட்டிருக்கும் படி செய்த அருட் பெரும் சோதியே !

பெண்ணியல் மனமும் ஆண்இயல் அறிவும்
அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி!

ஆண் பெண் இருபாலாரிடமும், பெண் தன்மையான இளகிய மனமும், ஆண் தன்மையான தெளிந்த உறுதியான அறிவும் ஒன்றுபட்டிருக்கும்படி செய்த அருட்பெரும் சோதியே!

தனித்தனி வடிவனும் தக்கஆண் பெண்செயல்
அனைத்துற வகுத்த அருட்பெரும் சோதி!

ஒவ்வொரு ஆண் பெண்களிடமும் சிறந்த ஆண்தன்மைகள், பெண்தன்மைகள் அனைத்தும் அமைந்திருக்கும்படி செய்த அருட்பெரும் சோதியே !

இவ்வாறு, ஆண் பெண்கள் இருவரிடமும், இது தன்மையான குணங்களும் உண்டென்று கூறுகின்றார். இதனால் இருபாலாரும் சமத்துவமுடன் வாழத் தகுதியுடையவர்கள் என்பதே வள்ளலார் உள்ளம். ஆகையால்,

பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப்
பயன்பெற நல்அருள் அளித்தபரம் பரனே

என்று புகல்கின்றார். பெண்களும் ஆண்களும் சன்மார்க்கத்தில் தொண்டாற்றிப் பயன்பெறத்தக்க தகுதியுடையவர்கள்.

பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும், பேதமற்று, அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது.

இது வள்ளலாரின் வாய்மொழி. பெண்களுக்கு உடல் உறுதி வேண்டும். இதற்கு யோகப் பயிற்சி, தேகப் பயிற்சி முதலியன வேண்டும். பெண்கல்வி, ஆண்கல்வி என்ற பிரிவினை யின்றிப் பொதுக்கல்வி பயிலவேண்டும். இருவரும் கூட்டுக்கல்வி பயில்வதே சிறிந்தது.

இந்த முறையைப் பின்பற்றினால் ஆண் பெண் சமத்துவம் வளரும். சாதி, மத, வகுப்பு, வெறிகளும் ஒழியும், ஆண் பெண் அனைவரும் சன்மார்க்கர்களாய் இணைந்து வாழ்வர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *