வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

30. சுரர், அசுரர், மனிதர்

சுரர் என்பவர்கள் ஓர் இனத்தினர்; அசுரர்கள் என்பவர்கள் வேறு இனத்தினர்; மனிதர்கள் வேறு இனத்தினர் என்று கதைகளில் படிக்கின்றோம்.

சுரர் என்பவர்கள் தேவர்கள். அவர்கள் வாழ்வதற்குத் தனி உலகம் உண்டு; அவர்கள் நியாய வழி நடப்பவர்கள். மக்களிலே புண்ணியம் செய்தவர்கள்தான் தேவர்களாகப் பிறக்க முடியும். தேவர்கள் அதாவது சுரர்கள் வாழும் உலகம் தேவலோகம். அங்கே எல்லாச் செல்வங்களும் உண்டு. தேவர்களுக்கு அரசன் தேவேந்திரன்.

அசுரர்கள் என்பவர்கள் தேவர்களுக்கு அதாவது சுரர்களுக்குப் பங்காளிகள்; இவர்கள் அக்கிரமக்காரர்கள்; தேவர்களைத் துன்புறுத்தி அவர்களின் செல்வங்களைப் பறித்துக் கொள்ளுபவர்கள்; பல சமயங்களில் தேவலோகத்தைக் கைப்பற்றினர்; தேவ மாதர்களை வசப்படுத்திக் கொண்டனர் என்று கதைகள் கூறப்படுகின்றன. இவர்களைப் போன்றவர்களே அசுரர்கள் அதாவது இராட்சதர்கள் என்பவர்களும்.

ஆனால், இக்கதைகள் போதிக்கும் உண்மைகளை உணர்ந்தவர்கள், தேவர்கள் என்ற ஒரு தனியினமோ, அரக்கர்கள் அல்லது அசுரர்கள் என்ற ஒரு தனியினமோ இல்லையென் பதைக் காண்பார்கள்.

தற்பெருமை பாராட்டித் தந்நலத்துக்காகவே பாடுபவர்களை அசுரர்களாக உருவகம் செய்யப்பட்டிருக்கிறது. மற்றவர் களைத் தமக்கு அடிமையாக்கி அவர்கள் உழைப்பைக் கொள்ளை கொள்ளுகின்றவர்களை அசுரர்களாகக் கூறப் பட்டிருக்கிறது. மற்றவர்கள் வருந்தி பாடுபட்டுச் சேர்த்து வைத்திருக்கும் செல்வங்களை முரட்டுத்தனமாகப் பறித்துக் கொள்ளுகின்றவர்களை அரக்கர்களாக உருவகம் செய்யப் பட்டிருக்கிறது.

அசுரர்களைப் பற்றியோ, அரக்கர்களைப் பற்றியோ எழுதப்பட்டிருக்கும் கதைகளைப் பாருங்கள்! அவர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையுடையவர்கள்; மற்றவன் மனைவி அழகாயிருந்தால் அவளை வலியத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்; புலன் அடக்கம் அற்றவர்கள்; குடிகாரர்கள்; ஒழுக்கமில்லாதவர்கள், ஒழுக்கமுள்ளவர்களைத் தங்கள் விரோதிகளாகக் கருதுபவர்கள்; தம் விருப்பபடியே சர்வாதிகாரம் செலுத்துவதில் ஆர்வம் உடையவர்கள்; அவர்களிடையிலே தோன்றிய அரக்கர்கள் சர்வாதிகாரிகள்; குடிகளைக் காப்பாற்றுவது அரசன் கடமை என்பதை மறந்து அரசனுடைய தனிப்பட்ட சுக வாழ்க்காகவே குடிகள் எல்லோரும் உழைக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்கள்.

இந்த அசுரர்களும் அரக்கர்களும், தம்முடைய சுயநலத் திற்காக எதுவும் செய்வார்கள்; கொலை செய்யப் பின்வாங்க மாட்டார்கள்; திருட்டைத் தாராளமாகக் கையாளுவார்கள்; வஞ்சனை செய்வதில் தலைசிறந்து நிற்பார்கள்; இரக்கம் என்பது எள்ளத்தனையும் இல்லாதவர்கள்; வறண்ட உள்ளம் படைத்தவர்கள்.

இத்தகையவர்களைத்தான் அரக்கர்கள், அசுரர்கள் என்று புனைந்து கூறியிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மனித இனத்திலேயே கலந்து கிடப்பதைக் காண்கிறோம்.

தேவர்களைப் பற்றிக் கூறும் கதைகளைக் கவனிப்போர் எத்தகைய குணமுடையவர்கள் தேவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிப்போம்.

பகுத்தறிவுடன் நடந்து கொள்ளுபவர்கள் தேவர்கள். தெய்வம் என்பதற்கு அறிவுடைமை என்பது பொருள்; அறிவை யுடையவர்கள் தேவர்கள். தேவர் அனையர் புலவரும் என்பது நீதிநூல். அறிவுடையவர்கள் தேவரைப் போன்றவர்கள் என்பதே இதன் பொருள்.

தேவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள்; தம்மைப் போலவே பிறரும் இன்புற்று வாழ வேண்டும் என்று நினைப் பவர்கள்; பிறருக்கு நேரும் துன்பத்தைத் தொலைக்க முன்வருபவர்கள்; நாடு செழிக்க வேண்டும், நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்னும் நாட்ட முள்ளவர்கள்.

கதைகளிலே, புராணங்களிலே கற்பனை செய்யப்பட்டிருக்கும் தேவர்களிடம் இச் சிறந்த குணங்களைக் காணலாம். இச் சிறந்த நோக்கமுள்ளவர்களையும், செய்கையுள்ளவர் களையும் மக்கட் சமூகத்திலே பார்க்கின்றோம்.

குற்றமற்ற அறிவுடைய மக்களை அகில உலகமும் கொண்டாடுகிறது; அவர்களிடம் மக்கள் அன்பு செலுத்து கின்றனர்; அவர்களை வணங்கவும் செய்கின்றனர். இவர்கள் மக்களில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்; இந்த உயர்ந்த தன்மையுடையவர்களையே உம்பர் என்று அழைத்தனர்; வானவர் என்றும் வழங்கினர்.

இவ்வுண்மையை வள்ளலார் விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் தரும் விளக்கத்தைப் பாருங்கள்.

சுரர், அசுரர் என்பதற்குப் பொருள்:

சுரர் என்பது அறிவுடைய ஜீவர்கள் என்பது முதல் வாசனாதி வதுக்கள் எல்லாம் சுரர்.

அகங்காரி முதல் துர்க்கந்த வதுக்களெல்லாம் பூமிக்குள் தோன்றும் கந்தமூலம், அழுக்குடைய வது, இவைகள் அசுரர்.

அறிவுடையவர்களையும், மக்களுக்கு நன்மை தரும் நல்ல பண்டங்களையும் சுரர்கள் அதாவது தேவர்கள் என்று வள்ளலாரின் இந்த வாசகங்கள் குறிப்பிடுகின்றன.

அகங்காரிகளான அறிவிலிகளையும், மனிதர்க்குத் தீங்கு தரும் பண்டங்களையும், ஆபாசப் பொருள்களையும் அசுரர்கள் என்று குறிப்பிடுகின்றன.

இதைப்போலவே தேவர்கள் வேறல்லர், மனிதர்கள் வேறல்லர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால் தேவர் என்றும், மனிதர் என்றும் சொல்லப்பட்டதே தவிர வேறு எந்தக் காரணத் தாலும் அல்ல.

மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர்
வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது;
பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்;
நலம்பெறும் அருட்பெறும் சோதியா நண்ணவே.

இவைகள் தேவர்கள் யார், மனிதர்கள் யார் என்பதை விளக்குகின்ற வள்ளலார் வாய்மொழி.

ஆகவே, அசுரர் அல்லது அரக்கர்; தேவர் அல்லது சுரர்; மக்கள்; இவர்கள் தனித்தனி இனத்தினர் அல்லர்; தனித்தனி உலகில் வசிப்பவர்களும் அல்லர்; எல்லோரும் மனித சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.

அக்கிரமத்திலே தலைநின்று அகங்காரிகளாகத் திரிவோர் அரக்கர்கள்; அசுரர்கள்.

தந்நலமற்று, அறிவுடையவர்களாய், பிறர்நலங் கருதி வாழ்வோர் தேவர்கள்.

இரண்டுமின்றிச் சாதாரணமாக வாழும் மக்கள் மனிதர்கள்.

மனிதர்களே குணத்திலும் தேவர்களாக வாழ்கின்றனர்; அரக்கர் அசுரர்களாகவும் வாழ்கின்றனர். இவ்வுண்மையை அறிந்து எல்லோரும் அமரர்களாய், அன்புடையவர்களாய், அறிவுடையவர்களாய் வாழவேண்டும்.

இந்த உண்மையை உணராதவர்களே தேவர்கள் வேறு அசுரர்கள் வேறு, மனிதர்கள் வேறு; இவர்கள் தனித்தனி இனத்தவர் என்று நினைக்கின்றனர். இன்று மனிதர்களிலே ஒரு சிலர், தங்களே அரக்கர் இனம் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமைப்படுகின்றனர். இது வெறுப்பினாலும் அறியாமையாலும் தோன்றும் பேச்சாகும். இத்தகைய மனிதர்கள் வடலூரார் வாழ்ந்த காலத்திலும் இருந்தனர் போலும். ஆதலால் தான் அவர் இதைப் பற்றியும் கூறினார் என்று கொள்ள வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *