வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

39. கோபத்தின் கொடுமை

குற்றங்களை ஐவகையாகப் பகுத்துக் கூறுவர். அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்பன இவை உள்ளத்தோடும் உடலோடும் இணைந்தவை. இவற்றை முறையே ஆசை; கோபம், கருமித்தனம், செருக்கு, பகை என்று சொல்லி விடலாம்.

இந்த ஐந்து வகைக் குற்றங்களுக்கும் அகப்படாதவர்கள் உயர்ந்தவர்கள் உத்தமமானவர்கள் ஒருவருக்கும் தீங்கிழைக் காதவர்கள்; இவர்கள் எல்லோராலும் போற்றப்படும் புகழுடன் வாழ்வார்கள்.

இந்தக் குற்றங்களிலே கோபத்தையே முதன்மையான குற்றம் என்று குறிப்பிடுகிறார் இராமலிங்க அடிகள். இதற்குக் காரணம் உண்டு. எல்லாக் குற்றங்களுக்கும் நாற்றங்கால் கோபந்தான். முன்கோபமோ, பின்கோபமோ – எதுவாயினும் சரி; அது தீமைக்கே வழிகாட்டும்.

கோபம், பாவம், சண்டாளம் என்று எல்லோரும் கோபத்தைப் பற்றிப் பேசுவதுண்டு. இது உலக வழக்கு. கற்றவர்களும் கல்லாதவர்களும் எடுத்துரைக்கும் அறவுரை, கோபமானது பாபத்தைச் செய்யத் தூண்டும்; அதாவது நீதி நெறி பார்க்காமல் எதையும் செய்வதற்கு ஏவும். கண்மூடித்தனமாகக் காரியத்திலே குதிப்பவன் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டான். சண்டாளன் செயலாகிய கொலையையும் துணிந்து செய்வான். ஆகையால் தான், கோபம், பாபம், சண்டாளம் மூன்றையும் ஒரே அடுக்காகச் சொல்லுகிறார்கள்.

இந்த உலக வழக்கை உள்ளத்திற்கொண்டே இராமலிங்க அடிகள் பாடுகிறார். கோபத்தின்மேல் கனகோபம் வருகிறது அவருக்கு. தன் வாயில் வந்த கடுஞ் சொல்லைக் கோபத்தின் முகத்திலே வாரி வீசுகின்றார். எவ்வளவு கடுமையாக அதைத் தாக்க முடியுமோ அவ்வளவு கடுமையாகத் தாக்குகிறார்.

கோபமெனும் புலைப்பயலே! என்று அழைக்கின்றார். இதைவிட இன்னும் கடுமையான வார்த்தையைச் சொல்ல முடியாது.

கோபத்தை மட்டும் தாக்குவதோடு விட்டுவிடவில்லை. அதன் துணைவர்களையும் தோழர்களையும் சாடுகிறார். காமமாகிய மோகத்தையும், கர்வமாகிய மதத்தையும், உலோபத் தையும், மாற்சரியத்தையும் பிடித்து இழுத்துச் சரியான அறை கொடுக்கின்றார். எத்தகைய கடுஞ் சொற்களால் அவர் தாக்குகிறார் என்பதைப் பாருங்கள்!

கோபம்எனும் புலைப்பயலே! காமவலைப் பயலே!
கொடுபோகக் கடைப்பயலே! குறும்புமதப் பயலே! காண்!
தாபஉலோ பப்பயலே! மாற்சரியப் பயலே!
தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்!
தீபமெலாம் கடந்துஇருள்சேர் நிலம்சாரப் போவீர்!
சிறிதுபொழுது இருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்!
சாபம்உறு முன்னம் அறிந்து ஓடுமினோ! என்னைத்
தான் அறியீர்! தனித்தலைவன் தலைப்பிள்ளை தானே!

இந்தப் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள். துப்பாக்கி யிலிருந்து வெடிக்கும் குண்டுகள் போல் சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன. சிறிதும் தட்டுத் தடங்கலின்றி வன் சொற்கள் வந்து குவிந்திருக்கின்றன. இச்செய்யுளில் அமைந் திருக்கும் சொற்களாலேயே கோபம், காமம் மதம், லோபம், மாற்சரியங்கள் எவ்வளவு கொடுமையானவை என்பதை உணரலாம்.

இவற்றை இராமலிங்கர் கடிந்ததோடு மற்றவர்களையும் கடியும்படி அறைகூவி அழைக்கின்றார். இவ்வளவு கடுஞ் சொற்கள், இளகிய உள்ளம் படைத்த அவர் நாவில் விளையாடியிருக்கின்றன. இப்பாட்டு நமக்கு எவ்வளவு உணர்ச்சி யூட்டுகின்றது என்பதைக் காண்போம்.

கோபம் என்று சொல்லப்படும் அற்பப் பயலே! அற்பத் தன்மையுள்ள செயல்களைச் செய்பவன் புல்லன் – புலையன் – அற்பன்!

காமவலையை வீசுகின்ற பயலாகிய கொடிய மோகம் என்னுங் கீழ்த்தரமான பயலே! கடைப்பயலே!

குறும்புத்தனம் – அடாதசெயல்கள் – வெறுக்கத்தக்க வினைகள் – எல்லாவற்றுக்கும் வரிந்து கட்டிக்கொண்டு முன்னிற் கின்ற ஆணவப் பயலே! மதப் பயலே!

தீமைக்கெல்லாம் அடிகோலும் உலோபம் என்னும் கஞ்சப் பயலே!

பகையை மூட்டும் மாற்சரியப் பயலே!

தயவுடன் உங்களிடம் ஒன்று சொல்லுகின்றேன். இன்னும் நீங்கள் இங்கே என்னிடம் தங்கியிருக்க வேண்டாம்! ஆமாம்! கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். என்னை விட்டு ஓட்டம் பிடியுங்கள்!

இன்னும் சொல்லுகின்றேன். எங்கே ஒளியிருக்கின்றதோ அங்கே நீங்கள் தலைகாட்டக் கூடாது! ஒளியென்பது அறிவு. அதுதான் தீபம்; ஒளிவிளக்கு. ஆதலால் ஒளியுள்ள இடத்தில் தங்கவேண்டாம். இருட்டு நிலம் எங்கேயிருக்கின்றதோ அங்கே ஓடுங்கள். அதாவது அறியாமை – மூடத்தனம் – எங்கே குடிபு குந்திருக்கின்றதோ அந்த இடந்தான் நீங்கள் வாழ்வதற்குத் தகுந்த இடம்!

என்னிடம் அறிவு விளக்குச் சுடர்விட்டு எரிகின்றது. சிறிது நேரம் நீங்கள் இங்கே இருந்தாலும் உங்களுக்கு நாசகாலந்தான். நீங்கள் அழிந்து போவது உறுதி!

சாபம் கிடைப்பதற்கு முன் புறப்பட்டு ஓடுங்கள்! உம் நிற்க வேண்டாம்! உங்கள் நிலையைத் தெரிந்து கொண்டு ஓட்டம் பிடியுங்கள்! அகங்காரத்தை முதற்பொருளாக வைத்துப் பேசி யிருக்கின்றார்கள்; பாடியிருக்கின்றார்கள். அகங்காரத்தை விட்டவன் தான் அறிவைப் பெறமுடியும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். தத்துவ நூல்களில் இதுபற்றி விரிவாகக் காணலாம்.

பொது மக்களும் அகங்காரம் பிடித்தவனைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்று பாருங்கள்; மண்டைக் கிறுக்குப் பிடித்தவன்! தலைக்கனம் பிடித்தவன்! பெரிய கர்வி! தான் என்ற ஆணவம் பிடித்தவன்! தான்தோன்றித் தம்பிரான்! என்று பட்டப்பெயர் சூட்டிக் கூப்பிடுகின்றனர். பொது மக்களும் அகங்காரத்தின் தீமையை அறிந்திருக்கின்றனர் என்பதை இந்தப் பட்டப் பெயர்கள் காட்டுகின்றன. பொருத்தமான பட்டங்கள்,

எனக்கு ஒன்றுமே தெரியாது; எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியாது; சோறுண்டு உறக்கம் உண்டு, சுகம் உண்டு என்று நினைப்பவனும் முன்னேற முடியாது. சமுதாயத்திலே அடிமையாகத்தான் வாழ்வான்.

எனக்கு எல்லாம் தெரியும்! என்னைப்போலச் சர்வ கலாநிதி யாருமே இல்லை! நான் இனி யாரிடமும் எதையும் தெரிந்து கொள்ள வேண்டியதே இல்லை! என்று நினைப்பவனும் அழிந்து போவான். அவன் எவ்வளவு உச்சநிலையி லிருந்தாலும் சரசரவென்று படுபாதாளத்திலே சரிந்து வீழ்ந்து விடுவான்.

எனக்குத் தெரிந்தது கொஞ்சம்தான்; தெரியாதவை எவ்வளவோ உண்டு; மேலும் மேலும் பல பொருள்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்; படித்துணர்ந்து கொள்ள வேண்டியவை பல உண்டு. கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை எவ்வளவோ உண்டு; அனுபவத்தால் அறிந்து கொள்ள வேண்டியவை அளவற்றவை என்று நினைக்கிறவனே முன்னுக்கு வருவான். ஒவ்வொரு நாளும் அவன் முன்னேற்றப் பாதையிலே அடிவைத்து ஏறிக் கொண்டேயிருப்பான்.

இந்த உண்மைகளைத் தமிழர்கள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே அறிந்தவர்கள். இவற்றை அவர்கள் நீதி நூல்களிலே, வணக்கப் பாடல்களிலே புராணங்களிலே இதிகாசங்களிலே, சமய நூல்களிலே எடுத்துக்காட்டியிருக் கின்றனர்.

இந்த அகங்காரத்தைப் பற்றி வடலூர் வள்ளலார் இரா மலிங்க அடிகள் எவ்வளவு வெறுத்துப் பேசுகிறார்; பாடுகிறார் என்பதைப் பாருங்கள்.

கலை அறியாச் சித்தம்எனும்
கனமோசப் பயலே!
கால்அறியாய்! தலை அறியாய்!
காண்பனகண்டறியாய்!
நிலை அறியாய்! ஒன்றைஒன்றாய்
நிச்சயித்துஇவ் வுலகை
நெறிமயங்க மயக்குகின்றாய்!
நீயோ இங்கு உறுவாய்
அலைஅறியாக் கடல்போலே
அசைவறநின் றிடுநீ,
அசைவாயேல் அரைக்கணத்தே
அடக்கிடுவேன் உன்னைத்தான்
அலைவுஅறிவாய்! என்றனைநீ
அறிவாயோ! நான்தான்
ஆண்டவன்தன் தாண்டவம்கண்டு
அமர்ந்தபிள்ளை காணே!

இந்தச் செந்தமிழ்ப் பாட்டு, செருக்கின் கொடுமையைக் கூறுவது ஆணவத்தை எவ்வளவு ஆவேசமாகத் தாக்குகிறார் இராமலிங்கர் என்பதை இதனால் காணலாம்.

கலையுணர்ச்சி உள்ளத்திலே அமைதியையும் அறிவையும் உண்டாக்கும்; பொறுமையை வளர்க்கும். கலையென்றாலும், இலக்கியம் என்றாலும் ஒன்றுதான். கலையென்பது கற்றுக் கொள்ளப்படுவது. இலக்கியங்கள் தாம் பல உண்மைகளை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. ஆதலால், உண்மையான கலையறிவுள்ளவர்கள் தலைக் கனம் கொள்ளமாட்டார்கள். கலையுணர்ச்சியற்ற அறிவைப் பார்த்து எப்படி அழைக்கிறார் வள்ளலார் என்பதைப் பாருங்கள்; கலை அறியாச் சித்தம் எனும் கனமோசப் பயலே என்று கேட்பதுடன் கூப்பிடுகிறார்.

கொடியவனைக் கண்டால் கோபம் வராமல் இருக்குமா? நம்மைக் கழுத்தறுக்கும் கயவனைக் கண்டால் கைகொடுத்து வரவேற்கவா தோன்றும்? அயோக்கியப் பயலே! எங்கே வந்தாய்? என் முகத்தில் விழிக்காதே! ஒடிப்போ! என்று சீறிவிழாதவர்கள் சிலர் தான் இருக்கலாம்.

இந்தச் செய்யுளிலே அகங்காரத்தைப்பற்றி அருட்சுடர் வள்ளலார் சொரிந்திருக்கும் அனல்கக்கும் சொற்களைப் பாருங்கள்.

கலைப் பண்பை அறியாதவனே! அறிவு என்று பெயர் வைத்துக்கொண்டிருக் கின்றவனே! பெரிய மோசக்காரப் பயலே! உனக்குத் தலைகால் தெரியாது; எவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அவற்றைத் தெரிந்து கொள்ள மாட்டாய்! இவை மட்டுமா?

உண்மை நிலையை உணரமாட்டாய்! ஒன்றை வேறொன்றாக நிச்சயித்துக் கொள்வாய். இந்த விபரீத அறிவு காரணமாக இவ்வுலகை மயக்குகின்றாய். உண்மை நெறியில் செல்லுகின்றவர்களையும் தீயநெறியிலே செலுத்துகின்றாய்; நீயோ இங்கு என்னிடம் வருகின்றாய்!

என்னிடம் நெருங்காதே! அலையற்ற கடல் போல அசையாமல் அப்படியே நில்! நீ அப்படி இப்படி அடியெடுத்து வைத்தால் விடமாட்டேன்! அரைவிநாடியில் உன்னை அடக்கி விடுவேன்!

துன்பம் ஒன்றைத்தான் நீ அறிவாய்! என்னை நீ அறிவாயோ? அறிய மாட்டாய்!

நான் யார் என்று தெரிந்து கொள்! ஆண்டவனுடைய உண்மை நடனத்தைக் கண்டவன் நான்! அவன் சித்தப்படி, உலகத்திற்கு நன்மை செய்ய முடிவு செய்து கொண்டிருப்பவன் யான்!

ஆதலால் என் கிட்டத்தில் வராதே! ஏ, அகங்காரப் பயலே! விலகிப்போ! என்று ஆணவத்தை வெறுக்கின்றார். இவ்வாறு ஆணவத்தைத் தான் வெறுப்பதன் மூலம் மற்றவர்களையும் ஆணவத்திலிருந்து தப்பிக்க வழிகாட்டியுள்ளார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *