வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

1. இராமலிங்கர் வரலாறு

தமிழகத்திலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே பல பெரும்புலவர்கள் வாழ்ந்தனர். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர், காஞ்சி சபாபதி முதலியார், மயிலை சண்முகம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, முன்சீப் வேதநாயகம் பிள்ளை, சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை இவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இன்னும் பல புலவர்களும் வாழ்ந்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தமிழ் மறுமலர்ச்சியின் ஆரம்ப காலம் என்று கூறலாம். இக்காலத்துப் புலவர் பெரு மக்களிலே இன்று பொது மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் புலவர் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

வடலூரார், வள்ளலார், இராமலிங்க சுவாமிகள், இராமலிங்க அடிகள், அருட்பெருஞ்சோதி அடிகள், சமரச சுத்த சன்மார்க்க ஞானி என்ற பல பெயர்களால் இன்று இவர் அழைக்கப்படுகிறார். இவரை இன்று பல மக்கள், அவதார புருஷராகக் கருதுகின்றனர்; இவர் படத்தை வைத்துப் பூசிக்கின்றனர்; இவர் பாடிய செய்யுட்களைப் பாடி ஆனந்தமாக ஆடுகின்றனர்; இவருடைய பாடல் தொகுதியை வைத்து மலரிட்டுத் தூபதீபங் காட்டிப் போற்றுகின்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களிலே நூலாசிரியர்கள் உண்டு; உரையாசிரியர்கள் உண்டு; ஆராய்ச்சியாசிரியர்கள் உண்டு; பதிப்பாசிரியர்கள் உண்டு; பலருக்குத் தமிழ் நூல்களைப் பாடஞ் சொல்லிய போதகாசிரியர்கள் உண்டு. இவர்கள் எல்லோரினும், தெய்வத் தன்மை பொருந்திய பெரியராகத் தமிழ் மக்களால் போற்றப்படுகின்றவர் வடலூர் வள்ளலார் ஒருவர்தான்.

இப் பெரியார்1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரிலே பிறந்தார்.

இவர் தந்தையார் பெயர் இராமய்யா பிள்ளை. கருணீகர் குலத்தவர். கிராமக் கணக்கர்; நல்ல தமிழ்ப் பயிற்சியுள்ளவர்; சிவபக்தியிலே சிறந்தவர். முதல் ஐந்து மனைவிகளை முறையே மணந்து இழந்தவர்; ஆறாவது மனைவியாகச் சின்னம்மை என்பவரை மணந்தார். அம்மையார் பிறந்த ஊர் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி.

இராமலிங்கம், கடைசிப்பிள்ளையாக இராமய்யா-சின்னம்மை தம்பதிகளுக்குப் பிறந்தார். சபாபதி பிள்ளை, பரசுராமபிள்ளை என்போர் இராமலிங்கத்தின் மூத்த சகோதரர்கள். சுந்தரம்மாள், உண்ணாமலை அம்மாள் இருவரும் மூத்த சகோதரிகள்.

ஐந்தாவது பிள்ளையாக இராமலிங்கத்தை அனைவரும் அன்புடன் வளர்த்து வந்தனர். அக்காலத்தில்-இராமலிங்கம் குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே தந்தையார் இராமய்ய பிள்ளை மண்ணுலகை விட்டு மறைந்தார்.

அன்னை சின்னம்மையார், மருதூரை விட்டுப் புறப்பட்டார். குழந்தைகளுடன், பிறந்தகமாகிய பொன்னேரியை அடைந்து சில காலம் வாழ்ந்தார். பிறந்த 1824-ல் சென்னையிலேயே தமது மக்களுடன் குடியேறினார்.

இராமலிங்கத்தின் மூத்த சகோதரர் சபாபதி பிள்ளை காஞ்சி சபாபதி முதலியாரிடம் முறையாகத் தமிழ்க் கல்வி பயின்றார்; பிரசங்கம் செய்யும் திறமைப் பெற்றார்; புராணப் பரிசங்கத்தில் வல்லுநரானார்; இதன் மூலமே குடும்ப வாழ்க்கை நடைபெற்று வந்தது. சபாபதி பிள்ளை சிறந்த பிரசங்கியராகப் போற்றப்பட்டார்.

சபாபதி பிள்ளை, தம்பி இராமலிங்கத்திடம் அன்பு பாராட்டினார்; அவரைச் சிறந்த தமிழ்ப் புலவராக்க எண்ணினார்; தாமே அவருக்குத் தமிழ் நூல்களைப் போதித்து வந்தார். இராமலிங்கமும் தமிழ்க் கல்வியிலே தேர்ந்தார்; பிரசங்கம் செய்யவும் வல்லுநரானார்; செய்யுள் பாடும் திறமையும் பெற்றார். இவரைப் பொது மக்கள் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை என்று அழைத்து வந்தனர்.

இராமலிங்கம் பிள்ளை தமது ஏழாவது வயதிலேயே அறிவிலே சிறந்து விளங்கினார்; இறைவனிடம் அன்பு செலுத்து வதிலே ஈடுபட்டிருந்தார்; ஒழுக்கத்திலே ஒப்பற்ற வராயிருந்தார். அனைவரும் அவருடைய அறிவையும் ஒழுக்கத்தையும் பாராட்டு வராயினர்.

இராமலிங்கம் பிள்ளை தமது ஒன்பதாம் வயதிலேயே சிறந்த செய்யுட்களை இயற்றும் திறமை பெற்றிருந்தார்.

இவர் சென்னையிலிருந்து நாள்தோறும் திருவொற்றியூருக்குப் போவார்; ஒற்றியூரனை உள்ளத்திலே வைத்துக் கனிந்துருகிக் கவிகள் பாடுவார். இறைவனை வணங்குவது, இன்சுவைக் கவிகள் புனைவது, தமிழ் கற்க விரும்புவோர்க்குத் தமிழ் கற்பிப்பது, ஐயமுற்றுக் கேள்விகள் கேட்போர்க்குத் தக்க விடையளித்து ஐயந் தீர்ப்பது இவை போன்ற செயல்களிலேயே அவர் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார்.

சென்னைக் கந்தசாமிக் கோயிலுக்கும் செல்வார்; முருகனைக் கண்டு உருகிப் பாடுவார். இவ்வாறு அன்பு நெறியிலேயே காலங்கடத்தி வந்தார். பணத்தைப் பற்றி இவர் சிறிதும் கவலைப்பட்டதேயில்லை. குடும்ப வாழ்விலே இவருக்குப் பற்றும் உண்டாகவில்லை; மணம் புரிந்துகொண்டு இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் எழவே யில்லை.

இந்நிலையில், அண்ணனும், அன்னையும் இவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்; அக்காள் பெண்ணையே மணம் புரிந்து வைத்தனர். பெயருக்குத்தான் திருமணம்; மணவாழ்க்கையில் இவர் ஈடுபடவே இல்லை.

இதன்பிறகு இவர் தனியாகச் சிதம்பரத்திற்குச் சென்று வாழ்ந்தார். அங்கிருக்கும் போது பல ஊர்களுக்கும் சென்று திரும்புவது வழக்கம். பல அறிஞர்களும் இராமலிங்கம் பிள்ளையிடம் வருவார்கள்; அவருடன் உரையாடிச் செல்வார்கள். இக்காலத்தில் தான் இவர் இராமலிங்க சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் வெளிவரத் தொடங்கின. அவற்றை அறிஞர்கள் பலர் போற்றினர்; பக்தர்கள் பலர் பராட்டினார்கள்.

இராமலிங்க சுவாமிகள் 1858-ம் ஆண்டில் வடலூருக்கு வந்து சேர்ந்தார். வடலூரை அடுத்த கருங்குழியை உறைவிடமாகக் கொண்டார். அப்பொழுது அவருக்கு வயது 45. அக் காலத்தில் வடலூரின் பெயர் பார்வதிபுரம் என்பது. அங்கு நின்று பார்த்தால் சிதம்பரத்தின் நான்கு கோபுரங்களும் நன்றாகத் தெரியும். தில்லைக்கு வடக்கே இவ்வூர் அமைந்திருப்பதால் வடலூர் என்று பெயர் பெற்றது.

இராமலிங்க சுவாமிகள் என்னும் வடலூர் அடிகள் 1865-ல் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அதுவரையில் அவரால் பாடப்பட்டிருந்த பாடல்கள் அருட்பா என்னும் பெயரால் வெளிவந்தன. அவை நான்கு திருமுறைகளாக அமைந்திந்தன. 1867-ஆம் ஆண்டிலே வடலூரில் சத்திய ஞான சபையைத் தொடங்கினார்.

சாதி பேதம் இல்மல் எல்லோரும் ஒன்றுபட்டு இறைவனை வழிபட வேண்டும் என்பதே இச் சபையின் நோக்கம்.

வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்ற இடத்திலே சித்திவளாகத் திருமாளிகையிலே வள்ளலார் வீற்றிருந்தார். மக்களுக்குச் சன்மார்க்கத்தை உணர்த்தி வந்தார். எல்லா மக்களும், எல்லா மதத்தினரும், எல்லா இனத்தினரும், எல்லா நாட்டினரும் வேற்றுமையின்றி வாழ வேண்டும்; அறிவே ஆண்டவன் என்ற உண்மையை உணர வேண்டும்; அறிவையே இறைவனாக எண்ணி வழிபாடு செய்ய வேண்டும். இறைவன் அருட்பெரும் சோதி, தனிப்பெருங் கருணை என்ற உண்மையை உணர்வது சன்மார்க்கம்; இவ்வுமையை அறிந்தவர்கள் ஒன்று பட்டு வாழ்வது சன்மார்க்க சங்கம் என்பதே வள்ளலார் கொள்கை.

இறுதியாக 1874 ஜனவரியில் இவர் மறைந்தார்; தாம் இருந்த அறையின் வெளிக்கதவைப் பூட்டிக்கொள்ளும்படி தமது மாணவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் அவ்வறைக் கதவைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நான் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவேன் என்று கூறி மறைந்தார்.

அடிகளின் ஆணைப்படியே அவரை அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். அடிகள் குறித்தக் காலத்திற்குப்பின் அதைத் திறந்து பார்த்தனர்; அடிகளைக் காணவில்லை. அனைவரும் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். அடிகள் எங்குச் சென்றார்? எப்படி மறைந்தார்? என்ற உண்மை இன்னும் ஒருவருக்கும் தெரியாது.

நான் மீண்டும் தோன்றுவேன் என்று அடிகள் கூறியது மட்டும் இன்று உண்மையாகி விட்டது. அவர் பூத உடம்புடன் காணப்படவில்லை; ஆனால், புகழுடம்புடன் பிறந்து வளர்ந்து வருகிறார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவருடைய சமரச சன்மார்க்கத்தைப் பலர் எதிர்த்தனர். அவருடைய பாடல்கள் அருட்பா அல்ல என்றனர். அவரைப் பற்றியும் வசை மொழிகள் கூறினர். இன்றே, வடலூர் அடிகளை அனைவரும் போற்றுகின்றனர். தமிழ் மக்கள் உள்ளங்களில் வடலூரார் குடிபுகுந்து வருகின்றார்; உலக மக்கள் உள்ளங்களிலும் அவருடைய சமரச சன்மார்க்க கொள்கைகள் குடியேறி நிலைத்து வருகின்றன.

இன்று உலகிலே வளர்ந்து வரும் கருத்துக்களையும், வடலூர் அடிகளின் வாய்மொழிகளையும் ஒத்திட்டுப் பார்ப் போர்க்கு இவ்வுண்மை விளங்கும்.

அருட்பெரும் சோதி ! தனிப்பெரும் கருணை! என்பதே வள்ளலாரின் முழக்கம். இம்முழக்கம் இன்று தமிழகம் எங்கும் ஒலிக்கிறது. இறைவன் எல்லையற்ற சோதி வடிவானவன்; ஒளியே அவன் உருவம்; ஒப்பற்ற கருணையே அவனுடைய பண்பு; அறிவும் கருணையுமே இறைவன் என்பதுதான் இம் முழக்கத்தின் பொருள்.

1823 அக்டோபர் மாதத்திலே தோன்றிய தமிழகத்தின் அறிவுச் சுடர்-வடலூர் வள்ளலார்-இராமலிங்க அடிகள்-1874 ஜனவரி மாத இறுதியிலே மறைந்தது! வடலூரார் இவ்வுலகில் வாழ்ந்த காலம் 51 ஆண்டுகள்தான். இந்த ஆண்டுகளிலே இவர் தமிழகத்திற்கு-தமிழ் மக்களுக்கு தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் பணி அளவற்றது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *