
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
9. தன்னைப்பற்றி
தன்னையறிந்து இன்பம்உற வெண்ணிலாவே-ஒரு
தந்திரம்நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே
இது இராமலிங்கர் பாட்டு. தன்னை அறிதல் என்பதை வேதாந்தத்தில் மிக வற்புறுத்திச் சொல்லுவார்கள். தன்னை அறிந்து கொண்டவனே ஜீவன்முக்தனாவான் என்பது வேதாந்த தத்துவம்.
தன்னை இன்னார் என்று அறிந்து கொண்ட மனிதன் உலக பந்தங்களை உதறித் தள்ளுவான். உயர்ந்த ஞானமுடைய வனாய் உய்யும் வழி அறிவான். ஆகையால் ஒவ்வொருவனும் தன்னை அறிந்து கொள்ள முயல்வது – தன்னை அறிந்து கொள்வது – அவசியம்.
தான் வேறல்ல; பிரமத்தின் பிரிவு; தானும் பிரமமும் ஒன்று; என்று உணர்ந்து கொண்டவன் வேதாந்தி. இதை வேதாந்த பாஷையில் சிவோகம் பாவனை என்பர்.
இந்த வேதாந்தக் கருத்தில் ஒரு உண்மையிருக்கிறது. தனக்கு எல்லாச் சக்தியும் உண்டு; உலகை மாற்றவும், திருத்தவும், குழப்பத்தில் ஆழ்த்தவும் மூலம் ஏற்படுமாயின் அது வரவேற்கத் தக்கது. இந்த உணர்ச்சி பெற்றவன் உலகை மறக்க மாட்டான்; உலகைத் துறக்கமாட்டான்; தன்னலத்தை மாத்திரம் கூறிக் கொண்டு மூலையிலே கண்மூடி உட்கார்ந்திருக்க மாட்டான். உலகம் ஒன்றுபட, மக்கள் நலம்பெற, விவேகானந்தர் போல, ராமதீர்த்தர் போல, புத்தர் போல, லெனின் போல உழைப்பான்.
ஆனால் நமது வள்ளலார் கூறிய தன்னை யறிதல் என்பதும் இதே கருத்தை ஒட்டியதுதான். அவர் உலகப்போக்கை உலக நிலைமையை உற்று நோக்கி, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கை நிலையை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்; அப்படி அறிந்து கொண்டால்தான் உலகத்தில் மக்களுக்குள் அன்பு வளரும்; சமாதானம் நிலைக்கும் என்று கூறுகின்றார்.
உலகில் இன்றுள்ள உயர்வு-தாழ்வு, ஆண்டாள்-அடிமை இவைகள் இரண்டு காரணங்களால்தான் நிலைத்திருக்கின்றன. ஒன்று பணம், பணமில்லாமை-மற்றொன்று பிறப்பினால் உயர்வு தாழ்வு. இந்த இரண்டும் அழிந்துவிட்டால் உலகில் அடிமை வாழ்வுக்கு வழியில்லை. அன்பும் அமைதியும் வேரோடித் தழைக்கும்.
இந்த இரண்டும் நீங்குவதற்கு வழியென்ன? ஒவ்வொருவரும் தன்னையும், தன் செய்கையையும், தன் செய்கையின் பலனையும், தான் அடையும் நன்மையையும் உணர்ந்து கொள்வது தான்.
பணம் படைத்த ஒருவன் முதலில் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தனக்குப் பணம் எப்படிவந்தது? தன் உழைப்பு எவ்வளவு? தனக்காக மற்றவர்கள் உழைக்கும் உழைப்பு எவ்வளவு? மற்றவர்களின் உதவியில்லா விட்டால்-கூட்டுறவு இல்லாவிட்டால்-மற்றவர்கள் உழைப்பின் பயனால் உண்டாகும் செல்வத்தில் பெரும் பாகத்தைத்தான் கவர்ந்து கொள்ளா விட்டால் – தான் செல்வமுடையவனாக வாழ முடியுமா? என்று சிந்திக்க வேண்டும்.
நடுநிலைமையோடு, நல்ல இரக்க சிந்தையோடு சிந்திக்கும் ஒருவனுக்கு உண்மை தெரியாமல் போகாது. மற்றவர்களின் உழைப்பே தனது செல்வம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், அவன் உழைப்பாளரை, வறியவரை நசுக்க, கொடுமைக்குள்ளாக்கத் துணியமாட்டான்; அன்பு காட்டுவான்.
இதைப் போலவே வறியவனாக வாழும் ஒருவனும் தன்னைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நம்முடைய உழைப்பு எவ்வளவு? அனால் கிடைக்கும் பயன் எவ்வளவு? அந்தப் பயனில் நமக்குக் கிடைப்பது எத்தனையில் ஒரு பாகம்? நம்முடைய உழைப்பின் பயனில் மற்றவர் சுரண்டிக்கொள்வது எத்தனை பாகம்? நாம் ஏன் இப்படிச் சுரண்டப்படுகிறோம்? என்று சிந்தித்தால் அவனுக்கு உண்மை தோன்றும்; உணர்ச்சியுண்டாகும்.
இவ்வுணர்ச்சியின் பயனாக, பணக்காரனும், வறியவனும் சமாதானம் செய்து கொள்ளுவர். அவர்களுக்குள் ஒற்றுமை நிலவும். எல்லோரும் எல்லாச் செல்வமும் பெற்று இன்புறுவர். இதன்மூலம் பணத்தால் நிலவும் உயர்வு தாழ்வு ஒழியும்.
இரண்டாவது, பிறப்பினால் நிலவும் உயர்வு தாழ்வு. இது ஆண்-பெண் அடிமையிலேயே தொடங்குகிறது. ஆண் தன்னை உயர்வாகக் கருதிக் கொள்ளுகிறான். பெண்ணைப் பேதையாக்கி இழிவு செய்கின்றான். இந்த உயர்வு தாழ்வு ஒழிந்தால், மற்றைய உயர்வுதாழ்வு ஒரு சிறிதும் நிலைக்காது.
ஆண்மகன் தன்னைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். பெண்ணில்லாமல் தான் பிறந்திருக்க முடியுமா? பெண்ணில்லாமல் வாழ்க்கையிலே இன்புற முடியுமா? அறிவிலோ, ஆற்றலிலோ, செயல்கள் செய்வதிலோ அவர்களுக்கும் நமக்கும் என்ன வேற்றுமை? என்று சிந்திக்க வேண்டும். ஆண்கள் செய்யும் தொழில்கள் அத்தனையும் செய்யும் திறமை பெண்களுக்கும் உண்டு என்பதை ஆண்கள் அறிய வேண்டும். இச்சிந்தனையின் மூலம் பெண்களை இழிவாக நினைக்கும் குணம் ஒழியும். பெண்களிடம் சமத்துவம் பாராட்டுவர்.
இதுபோலவே பெண்களும் நாம் ஏன் அடிமையாக நடத்தப்படுகிறோம்? நாம் ஆண்களை விட எந்தக் காரியத்தைக் குறைவாகச் செய்கிறோம்? நாம் ஏன் அடிமையாக வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இச்சிந்தனையில் ஈடுபட்ட பெண்கள் அடிமையாக வாழமாட்டார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இத்தகைய சிந்தனை வளருமாயின் இருபாலாரும் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்வர், அவர்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் வளரும் அடிமையும், அடக்குமுறையும் தலைகாட்டாமல் அழியும். இதன்மூலம் பிறவியில் உயர்வு தாழ்வு பாராட்டப்படும். ஆண்-பெண் அடிமை மனப்பான்மை அழியும்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தம்மைப்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுவதையே தன்னை அறிதல் என்று இராம லிங்கர் கூறுகின்றார். இத்தகைய தன்னுணர்ச்சியில் அவர் தலைசிறந்தவர். இத்தன்னுணர்ச்சியே அவரை உலகம் ஒன்று படுவதற்கான உயர்ந்த பல கொள்கைகளை அஞ்சாது எடுத் துரைக்கத் தூண்டிற்று. மற்றவர்கள் யாரும் கூறாத அரசியல், பொருளாதார, மத, சமூகச் சீர்திருத்தக் கொள்கைளை அவர் உலகத்துக்குக் கூறிச் சென்றார்.
அன்னையே! அப்பா! திருச்சிற்றம் பலத்துஎன்
ஐயனே! இவ்வுல கதிலே
பொன்னையே உடையார், வறியவர், மடவார்,
புகலும் ஆடவர் இவர்களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி
தளர்கின்றார் தருணம்ஈது எனவே
சொன்னபோது எல்லாம் பயந்துநான் அடைந்த
சோபத்தை நீ அறி யாயோ!
இவ்வுலகில் பொன் படைத்த பணக்காரர்கள், ஏழைகள், பெண்கள் தம்மை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆண்கள், இவர்களுக்கு ஒரு நோய் உண்டு; இந்த நோய் காரணமாகவே இவர்களெல்லாம் வாழ்க்கையில் ஒற்றுமை யடையவில்லை; அன்பு கொள்ளவில்லை; இன்பம் அடைய வில்லை. வாழ்க்கைத் துன்பத்தால் உயிர் துடிக்கின்றார்கள். அந்த நோய் தன்னை அறியாமை என்னும் நோய்தான், இது வள்ளலார் தெளிவாகக் கூறியிருக்கும் கருத்து.
தம்மைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். தம்மைப் பற்றித் தெரிந்து கொள்ளாதவர்களே அடிக்கடி தவறு செய்வார்கள்; வாழ்க்கையில் துன்பம் அடைவார்கள்; செயலில் தோல்வியடைவார்கள். இந்த உண்மையை நாம் யாரிடத்திலும் காணலாம். ஆகவே, தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளும் அறிவு வேண்டும்; எவருக்கும் இது இன்றி யமையாத அறிவாகும்.



