வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

22. கருணையிலா ஆட்சி

கொடுங்கோல் மன்னன் வாழும்நாட்டில் கடும்புலி வாழும் காடு நன்றே. இது நமது இளமைப் பாடம். எல்லோரும் இன்றும் சொல்லிக்கொண்டிருப்பது. மக்கள் இன்புற்று வாழ்வதற்கே அரசாட்சி. மக்கள் சிறுசிறு கூட்டமாக வாழ்ந்த காலத்தில், தங்கள் உணவுக்கு, உடைக்கு, உறையுளுக்கு, கூட்டுறவுக்குத் துணை செய்கின்றவனைத் தலைவனாகக் கொண்டனர். அவனை மன்னனாக, இறைவனாக ஆண்டவனாக, ஆண்டவன் பிரதிநிதியாக எண்ணினார்.

மக்கள் கூட்டம் பெருகப் பெருகத் தனிப்பட்டவன் ஆட்சி குறைந்தது. ஒருவனால் மக்கள் வாழ்வுக்கான எல்லாக் காரியங் களையும் இயற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. பல துறைகளையும் கவனிக்கத் தலைவனுக்கு மன்னனுக்குப் பலர் துணை அவசியமாயிற்று. இவ்வகையில் மன்னனுக்குத் துணைசெய்யும் கூட்டத்தாருக்கே மந்திரிகள் என்றும், குருமார்கள் என்றும், சேனைத் தலைவர்கள் என்றும் பெயர்கள் வழங்கின.

மன்னனுக்குத் துணையாயிருந்தவர்கள் பெரும்பாலும் நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவேயிருந்தனர். பொதுமக்களின் மதிப்பைப் பெற்றவர்களையே அரசனும் தனக்குத் துணையாகக் கொண்டான். அவர்களும் பொது மக்களின் குறைகளை அறிந்து, அக்குறைகளை நீக்குவதற்கான சட்ட திட்டங்களைச் செய்தனர்; ஆட்சி நடத்தினர்.

ஆரம்பத்தில் மக்களின் விருப்பப்படியே சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அதாவது மன்னன் ஆட்சி தோன்றியது. அது நாளடைவில் ஜனநாயக ஆட்சியாக மாறியது. மன்னனைத் தலைவனாகக் கொண்ட மக்கள் ஆட்சியாக மாறியது. இன்று பொதுமக்கள் மதிப்பைப் பெற்றவர்களே, அதாவது மக்களின் பிரதிநிதிகளே ஆண்டால் போதும்; ஒரு வேலையும் இல்லாத மன்னன் ஒருவன் எதற்காக? என்ற எண்ணம் நாட்டுப் பற்றுள்ளவர்களிடம் குடிகொண்டு விட்டது.

இவ்வெண்ணம் சரியானதுதான். இயற்கையும்கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் குழு நாட்டின் நலத்தைக் கவனிக்கும் போது மக்களின் நன்மையைப் பாதுகாப்பதற்கான எல்லாக் காரியங்களையும் கவனிக்கும் போது மன்னன் என்னும் ஒரு பதுமை எதற்காக? வேண்டியதே இல்லைதான்.

தமிழ் இலக்கியங்களில் அரசாட்சியே உயிர் எனப் போற்றப் படுகின்றது. மன்னன் என்று தமிழ் இலக்கியங்களில் வரும் இடங்களில் எல்லாம் அரசாட்சி என்று மாற்றிக் கொண்டால் போதும், இவ்வாறு மாற்றிக்கொண்டு எந்தத் தமிழ் இலக்கியப் பாடலைப் பார்த்தாலும் அது ஜனநாயக குடி அரசு பொதுஜன ஆட்சியைக் குறிப்பதாகவே காணப்படும்.

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.

இது மோசிகீரனார் என்னும் ஒரு பழந்தமிழ்ப் புலவர் பாட்டு.

ஒரு நாட்டுக்கு அரசாட்சியே உயிர். அரசாட்சி சரியாக நடந்தால்தான் ஒரு நாடு வாழமுடியும். அந்த நாட்டு மக்கள் நாகரிகத்துடன் பட்டினி பசியில்லாமல் வாழ்வர். ஒற்றுமை யாக வாழ்வர். செல்வத்துடன் சிறப்புற்று வாழ்வர். அடிமை யின்றிச் சுதந்தரமாக வாழ்வர். ஒழுங்கான, திறமையான மக்களின் விருப்பத்திற்கேற்ற ஆட்சியினாலேயே ஒரு நாட்டின் செல்வம் வளர்ச்சியடையும்; கல்வி வளரும்; கைத்தொழில் வளரும்; வாணிகம் வளரும்; கலைகள் வளரும். இவை மறுக்க முடியாத உண்மை.

ஒரு நாட்டிற்கு நெல்லும் உயிர் அல்ல. தண்ணீரும் உயிர் அல்ல. இந்த விரிந்த உலகமானது அரசாட்சியையே உயிராகக் கொண்டிருக்கின்றது. ஆதலால் நாம் தாம் இந்த நாட்டிற்கு உயிர் என்பதை உணர்ந்திருந்தால் அரசாட்சியின் கடமையாகும்.

மக்களைப் பசியில்லாமல் காக்க வேண்டியது அரசின் கடமை. மக்களுக்கு நோய் வராமல் காக்க வேண்டியது அரசின் கடமை. மக்களுக்குள் சாதிச் சண்டையோ மதச் சண்டையோ வராமல் காக்க வேண்டியது அரசின் கடமை. இக்கடமையைச் செய்வதற்குத் திறமையற்ற அரசாங்கம் மக்களிடம் துன்புறுத்தி வரி வாங்குமானால் அது கொடுங்கோல் அரசுதான்; மக்களிடையே தாங்காத அடக்கு முறையை அவிழ்த்து விடுமானால் அது அக்கிரம அரசுதான்.

ஆட்சியிலிருப்போர் பொதுமக்களின் துன்பங்களை நீக்க வழியறியாமல் தங்கள் நலத்தில் மாத்திரம் கருத்துக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் கண்டிப்பாக மக்களால் வெறுக்கப்படுவார்கள். பழிக்கப்படுவார்கள்; பதவியிலிருந்து ஒழிக்கப்படுவார்கள். இத்தகைய அரசாங்கப் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கொடுங் கோலர்கள் தாம்.

ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தப்ப ஒரு மனிதனைப் பலிகொடுக்க வேண்டுமானால் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதுதான் நீதி. ஒரு மனிதன் வாழ ஆயிரக்கணக்கான மக்களைப் பலிகொடுப்பது அநீதி; அக்கிரமம்; பலாத்காரம்; கொடுங் கோன்மை. இத்தகைய அக்கிரம ஆட்சியே கருணையிலா ஆட்சி.

தமிழர்கள் குடிகளின் விருப்பப்படி அரசாண்ட மன்னனையே போற்றி வந்தனர். குடிகளின் குறைகளைப் போக்கும் திறமையுள்ள அரசாட்சியையே ஆதரித்து வந்தனர். தமிழ் இலக்கியங்களில் இத்தகைய அரசாட்சியே போற்றப்படுகின்றது.

குடிதரீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

குடிகளின் விருப்பம் போல் ஆளுகின்ற மன்னனுடைய அடிச்சுவட்டையே உலகம் பின்பற்றும். குடிகளின் விருப்பத் திற்கு மாறாக நடைபெறும் அரசாட்சியை நாடு பின்பற்றாது. குடிகளின் துன்பங்களுக்குப் பரிகாரந் தேடாத வெறும் பதவிப் பித்துக் கொண்ட அரசாங்கம் தானாகவே கவிழ்ந்து விடும் அல்லது துன்பத்தைப் பொறுக்க முடியாமல் ஆத்திரங் கொண்ட பொதுமக்கள் எழுச்சியால் கிளர்ச்சியால் கவிழ்க்கப் படும். இந்த உண்மையை அரசியல்வாதிகள் அறிந்திருத்தல் வேண்டும். அறிந்திருந்தால் மட்டிலும் போதாது; மறவா திருத்தல் வேண்டும்.

மக்களிடம் கருணைகாட்டாத ஆட்சி, இரக்கங்காட்டாத ஆட்சி நீடிப்பதற்குத் தகுதியற்றது. மக்களை ஆள்வதற்கு உரிமை யற்றது. அவ்வாட்சி நீடித்தால் மக்களின் துன்பமும் நீடிக்கும்; நாட்டிலே குழப்பமும் நீடிக்கும். வறுமையும் நீடிக்கும், ஆதலால் அத்தகைய கருணையற்ற திறமையற்ற கொடுங்கோல் ஆட்சி விரைவில் ஒழிய வேண்டும்.

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!

அள்நயந்த சன்மார்க்கர் ஆள்க.

என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் வள்ளலார். திறமையற்ற ஆட்சி ஒழிந்து போகவேண்டும்; இரக்கமுள்ளவர்கள் ஆட்சி உண்மை நெறியை அறிந்தவர்களின் ஆட்சி தோன்ற வேண்டும். பெரும்பாலான மக்களின் குறைகளைப் போக்கு வதற்கு வழி தெரிந்தவர்களின் ஆட்சி ஏற்பட வேண்டும். வஞ்சகர்களின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாதவர்களின் ஆட்சி நிலைக்க வேண்டும். தயவோ தாட்சண்யமோ காட்டாத நடுவு நிலைமையும் திறமையும் படைத்த உண்மையான பொது ஜனப் பிரதிநிதிகளின் ஆட்சி நீடித்திருக்க வேண்டும். இத்தகைய அருள் நயந்த ஆட்சியே உலகை ஆளவேண்டுமென்பது வள்ளலார் கருத்து.

மனுமறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூல் வள்ளலாரால் எழுதப்பட்டது. அதில் அரசன் கடமையை வலியுறுத்தும் வாசகங்கள் காணப்படுகின்றன. அவ்வாசகங்கள் அரசாட்சியில் ஆதிக்கம் பெற்றிருப்போர் அறியத்தக்கவை.

தேர்க்காலில் பசுங்கன்று அரைபட்டு இறந்ததைக் கேட்ட மனுச்சோழன் துக்கம் தாங்காமல் வருந்துகின்றான். அப்பொழுது அவன் கூறுவதாக அமைந்துள்ள சொற்றொடர்கள் ஆட்சியாளர் உள்ளத்தில் அப்படியே பதிய வேண்டியவை.

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ? தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ? கலந்த சிநேகிதரைக் கலகம் செய்தேனோ? மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் செய் தேனோ? குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ? ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ? தருமம் பாராது தண்டம் செய்தேனோ? களவு செய்வோர்க்கு உளவு சொன்னே னோ? வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ? பசித்தோர் முகத்தைப் பாராது இருந்தேனோ? கோள் சொல்லிக் குடும்பம் கலைத் தேனோ? கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ? அன்புடையவர்க்குத் துன்பு செய்தேனோ?

இவைகள் மனுநீதி கண்ட சோழன் சொற்கள். இதில் அரச நீதி வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். கருணையற்ற ஆட்சி எது? கருணை நிறைந்த ஆட்சி எது என்பதை இவ்வாக்கி யங்களாலும் அறியலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *