வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

33. மதுவிலக்கு

மதுவைப் பற்றிக் கூறாத பண்டை இலக்கியங்கள் எதையும் காணமுடியாது. பண்டை நாட்களில் நாகரிகம் முற்றும் முதிர்ச்சி பெறாத காலத்தில் பெரும்பாலான மக்கள் மதுபானத்தைப் பாவம் என்று கருதியதில்லை. உலகின்பம் நுகர வசதியுள்ள எல்லா மக்களும் மதுவருந்தி வந்தனர்.

களிப்பு என்னும் சொல் கள்ளிலிருந்து பிறந்தது. கள் இல்லா விட்டால் களிப்பு எனும் சொல் இலக்கியங்களையெல்லாம் ஆட்கொண்டிருப்பதைப் பார்த்தாலே, கள்ளரக்கன் தமிழர் சமூகத்தை எவ்வளவு தூரம் அடக்கி ஆண்டான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தர் சமணர் காலத்திற்குப் பிறகுதான் கள்ளுண்டல் பாவம் என்ற நிலைமை ஏற்பட்டது. புத்தர் சமணர் காலத்திற்கு முன்புள்ள நம்நாட்டு இலக்கியங்களில் மதுவருந்துதல் பாவம், சமூகத் துரோகம். இழிந்த குணம் என்று கூறப்படவே இல்லை. இதற்கு மாறாக, சுப, அசுப காலங்களில் மதுவருந்தி மகிழ்ந்ததாகவே காணப்படுகின்றது.

தமிழ் இலக்கிய ஆசிரியர்களில் முதல் முதலில் மது விலக்குப் பிரசாரத்தைத் தொடங்கியவர் திருவள்ளுவர் தான். திருக்குறளுக்கு முந்திய எந்த நூலிலும் மதுபானம் கண்டிக்கப் படவேயில்லை.

கட்குடியன் கட்குடிக்காமல், நல்ல புத்தித் தெளிவோடு இருக்கும் சமயத்தில் அவனுக்குக் குடித்திருப்பவனைக் காட்ட வேண்டும். அப்பொழுது அவன் மனதில் நாம் குடித்திருக்கும் போதும் இப்படித்தான் பொதுமக்களால் அவமானப்படுத்தப் படுவோம் என்ற உண்மை தோன்றும் இதன்மூலம் அவன் குடிக்காமல் திருந்தக்கூடும்.

கள்ளுண்ணாப் போதில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

என்று வள்ளுவர் கூறுகிறார்.

இந்தியாவில் மதுவிலக்குப் பிரச்சாரம் புத்த சமண மதத்தினரால் தான் முதல்முதல் தொடங்கப்பட்டது. பிறகு இந்து மதத்தினரும், இந்து மதத்தைச் சேர்ந்த பல பிரிவினரும் மதுவிலக்குக் கொள்கையைப் பின்பற்றினர். இதன் பிறகு முலிம் மதமும் மதுவிலக்கை முதன்மையாகக் கொண்டது.

மதுபான மிகுதியால் நாட்டின் சமூக வாழ்க்கை பாழ்பட்டது. சூதாட்டம், விபசாரம், பொய்யுரைத்தல் முதலியவைகள் மதுவின் அரிய புத்திர பௌத்திரிகள். ஆதலால் அறிஞர்களும் சான்றோர்களும் குடியர்களைக் கண்டாலே அருவருக்கத் தொடங்கினர். இந்த நிலையை வள்ளலார் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.

கள் உணும் கொடியேன்!

கள்ளுண்பவர்கள் கொடுமையானவர்கள். அவர்கள் கள்ளுண்டி ருக்கும்போது எதையும் செய்யத் துணிவார்கள்.

களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான்
கடலினும் பெரிதுகண்டாய்

கள்ளுண்டு மயங்கியிருப்பவரைக் கண்டு நான் பயந்த பயத்திற்கு அளவேயில்லை. அந்தப் பயம் கடலைக் காட்டினும் எல்லை காண முடியாதது. கொடுமை செய்வாரைக் கண்டு யார்தான் பயப்பட மாட்டார்கள் ?

கள்ளருந்துதல் சூதாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல்
பொய்யே விள்ளுதல் புரிவார்.

கொடியவர்கள், பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள், கள்ளுண்பவர்கள்! அவர்கள் வேசியர்கள் வீட்டு வாசல்கள் தோறும் புகுந்து மயங்கி நிற்பார்கள் ; பொய் பேசுவார்கள் ; இவைகளின் இனங்களும் அவர்களிடம் குடிகொள்ளும்.

கள், சூது, காமம், பொய் இவைகள் எல்லாம் ஒரு வயிற்றுப் பிள்ளைகள்; தோழர்கள். கள்ளுண்போர் மதுபானம் செய்வார் சூதாடுதற்கும் துணிவார்கள். கள்ளும் சூதும் உள்ளவர்கள் காமவெறியர்களாவதிலும் வியப்பில்லை. கள், சூது, காமம் மூன்றும் உள்ளவர்கள். தங்கள் செல்வத்தை இழந்து விடுவார்கள். இவர்களுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் பேதாது. நித்திய தரித்திரர்களாக நிலைகலங்கித் திரிவார்கள். ஆதலால் பொய் சொல்லப் பின்வாங்க மாட்டார்கள். பொய் சொல்லிக் கடன் வாங்குவார்கள். கடனைக் கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.

மதுபானத்தின் கொடுமையை வடலூரார் நேரில் கண்டறிந்தவர். கட்குடியார்கள் செய்யும் அடாத செயல்களையும், அவர்களுடைய வாழ்வின் அலங்ககோலத்தையும் கண்ணால் கண்டறிந்தவர். ஆதலால்தான் கள்ளுண்பதால் உண்டாகும் கொடுமையை தீமையை உள்ளது உள்ளபடி உரைத்திருக்கின்றார்.

மதுபானம் செய்தது, தீமைகளுக்கெல்லாம் அடிகோலும் என்பதே வடலூரார் கருத்து. சமுதாயம் மேன்மை பெற மக்களிடையே சன்மார்க்கம் வளர்ந்தோங்க மதுவிலக்கு அவசியமாகும் இதுவே வடலூரார் கருத்து.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *