
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
4. சமரச சன்மார்க்கம்
இரக்கமே சன்மார்க்கத்திற்கு வழிகாட்டும்; சன்மார்க்கத்தில் நடக்கச் செய்யும்: துன்மார்க்கத்திலே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தும் என்பது இராமலிங்க அடிகள் கருத்து.
சத் என்பதற்கு உண்மையென்பது பொருள். மார்க்கம் என்பதற்கு வழி அல்லது நெறியென்பது பொருள். சத் மார்க்கம் என்பதற்கு உண்மைநெறி என்று பொருள். சத் மார்க்கம் என்ற வடமொழித் தொடர் சன்மார்க்கம் என்று தமிழுருவாகி நின்றது. இதனுடன் சமரசம் சேர்ந்து சமரச சன்மார்க்கம் ஆயிற்று.
சன்மார்க்க நெறி என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதற்குச் சாதி, சமய, இன, நிற பேதங்கள் ஒன்றும் இல்லை எந்தச் சாதியினரும், எந்த இனத்தினரும், எந்த மதத்தினரும் சன்மார்க்க நெறியை அடைய முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனைதான் அதற்குண்டு. அந்த நிபந்தனை என்ன?
யாராயிருந்தாலும் சரி, உள்ளம் குழைவுடையவராய் இருக்க வேண்டும்; நெஞ்சிலே இரக்கம் நிரம்பியவராயிருக்க வேண்டும். மற்ற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டால் மனம் இரங்க வேண்டும்; உள்ளம் உருக வேண்டும்; தம்மையறியாமலே கண்ணீர்த் தாரை வெளிப்பட வேண்டும், இதுவே இரக்கத்தின் இயல்பு.
இந்த அநுதாபத்தோடு அந்த இரக்கம் தேங்கித் திகைத்து நின்றுவிடக் கூடாது. துன்பப்படும் உயிர்களின் துக்கத்தைத் துடைக்க முந்த வேண்டும். தம்மால் முடிந்த வரையிலும் முயன்று அவ்வுயிர்களின் துக்கத்தைப் போக்க வேண்டும். அவை மகிழ்ந்து வாழும்படி செய்ய வேண்டும். இதுவே இரக்கத்தின் செய்கை; நடத்தை; முயற்சியாகும்.
உண்மையான இரக்கம் ஒருவகை வேற்றுமையும் பாராட்டாது. மனத்திலே மட்டற்ற கருணையுள்ளவர்கள் யார் துன்புற்றாலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மரஞ் செடி கொடிகள் துன்புறுவதாகத் தோன்றினாலும் உதவி செய்யத் துடிதுடிப்பார்கள்; பறவை விலங்குகள் பதைபதைத்தாலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; பரிந்து சென்று உதவி புரிவார்கள்.
பழந்தமிழகர்கள் இரக்கத்தை உயிரினும் சிறந்ததாகப் போற்றிவந்தனர். அவர்களுடைய உள்ளத்தின் உயர்வை விளக்கும் வரலாறுகள் பல உண்டு.
பாரி என்னும் வள்ளல் வரலாறு பலருக்குத் தெரியும். படர்வதற்குக் கொம்பில்லாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு முல்லைக் கொடியைக் கண்டான்; அவன் மனம் பரிதவித்தது. உடனே அதன் தளர்ச்சியைப் போக்க எண்ணினான். உடனே தான் ஏறிவந்த தேரை அதன் பக்கத்திலே நிறுத்திப் படர விட்டான். நடமாடாத கொடிக்கும் நலிவு வராமல் காக்க வேண்டும் என்று எண்ணிய அவன் எண்ணமும் அவன் செய்கையும், அவன் இரக்கமே உருவானவன் என்பதைக் காட்டுகின்றது.
பேகன் என்பவன் மற்றொரு வள்ளல். இவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று கூறுவர். குளிர்காலத்திலே ஒரு மயில் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். குளிரால் தான் அந்த மயில் நடுங்குகிறது என்று நினைத்து விட்டான். அது துன்புறுவதாகத் தன் உள்ளத்திலே துணிந்து விட்டான். அவ்வளவுதான்; உடனே தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அம்மயிலின் மீது போத்தினான்.
பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததும், பேகன் மயிலுக்குப் போர்வையளித்ததும் தமிழ் நூல்களிலே பாராட்டப்படுகின்றன; தமிழ்ப் புலவர்களால் போற்றிப் பாராட்டிப் பாடப் பட்டிருக்கின்றன.
இவர்கள் செய்கையைப் பரிகசிக்கும் பகுத்தறிவுவாதிகள் இக்காலத்தில் உண்டு.
முல்லைக்கொடி தவித்தால் பக்கத்தில் உள்ள ஒரு மரக்கிளையை ஒடித்து அதன் அண்டையிலே நடக்கூடாதா? விலையுயர்ந்த தேரைத்தானா அதன் பக்கத்திலே நிறுத்த வேண்டும்?
மயிலுக்குக் குளிரைத் தாங்கும் வல்லமை இயற்கையாகவே உண்டு. அதன் உடம்பில் சிறகுகள் அடர்ந்திருப்பது தட்ப வெப்பப் பாதுகாப்புக்காகத்தான். எல்லாப் பறவைகளும் குளிரையும், வெப்பத்தையும் தாங்கிக்கொள்ளும் இயல்புடையன. ஆதலால், மயில் குளிரால் நடுங்குவதாக எண்ணியதே மடமை என்று வாதாடுவோர் உண்டு.
இரக்கத்தின் சிறப்பை அறிந்தவர்கள் இவ்வாறு வழக்கிட மாட்டார்கள். முல்லைக் கொடி வருந்துவதாக எண்ணினான் பாரி. உடனே உதவிசெய்ய அவன் உள்ளம் விரைந்தது. மரக்கிளையை ஒடிப்பதற்கோ, வெட்டுவதற்கோ, நடுவதற்கோ காலதாமதமாகும். காலதாமதம் இன்றி உடனே செய்யக்கூடிய உதவி தன் தேரை அந்தக் கொடியின் அண்டையில் நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை; ஆதலால்தான் அப்படிச் செய்தான்.
இவனைப் போலவேதான் பேகனும், மயில் குளிரால் நடுங்குவதாக எண்ணியவுடன் அவன் சிந்தனை வேறு ஒன்றிலும் ஒடவில்லை. அதன் நடுக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற ஒன்றில்தான் நிலைத்தது. ஆதலால், உடனே அவன் தன் போர்வையை அந்த மயிலின் மேல் போர்த்தினான்.
மட்டில்லாத மனவிரக்கமுள்ளவர்களின் செயலுக்குப் பாரியும் பேகனும் உச்சத்தில் ஒளிரும் விளக்குகளாகக் காட்சி யளிக்கின்றனர். ஆதலால்தான் அருந்தமிழ்ப் புலவர்கள் அவர்களைப் பாராட்டினார்கள்.
இரக்கமுள்ளவர்கள் இவ்வாறு கொடி செடிகளிடமும், பறவை விலங்குகளிடமும் பரிவுகாட்டும் போது மக்களிடம் எப்படி நடந்துகொள்ளுவார்கள் என்பதைப் பற்றி நாம் கூற வேண்டியதேயில்லை.
இரக்கமே உருவாகியுள்ளவர்கள், வாழ்க்கையை ஓட்ட முடியாமல் வறுமைச் சேற்றிலே அகப்பட்டுத் தவித்தாலும் சரி, பிறருக்கு உதவிசெய்யப் பின்வாங்க மாட்டார்கள். துன்புறுகின்றவர்கள் என்ன சாதி? என்ன இனம்? என்ன மதம்? என்ன நிறம் என்று எண்ணிப் பார்க்கவே மாட்டார்கள். இவை அவர்கள் கண்களுக்கும் தெரியமாட்டா; இவற்றைப் பற்றி அவர்கள் உள்ளமும் நினைக்காது; அவர்களுடைய துன்பத்தை மட்டுமே உள்ளம் உணரும்; கண்கள் காணும். ஆதலால், உடனே விரைந்து உதவி செய்வார்கள்.
இதுதான் இரக்கத்தின் உயர்ந்த தன்மை. இத்தகைய இரக்கம் உள்ளவர்கள் எல்லாரும் அவர்கள் யாராயிருந்தாலும் சரி அவர்கள் சன்மார்க்கர்கள்; சமரசசன்மார்க்க வாதிகளாவர்.
இத்தகைய சன்மார்க்கர்களுடன் சேர்ந்து வாழவேண்டும். அவர்களுடைய சேர்க்கையால் மகிழ்ச்சியடையலாம்; அன்புடையவர், அறிவுடையவர் என்று அனைவரும் போற்றும் படி வாழலாம்; அறியாமை நீங்கி அறிவுடையவர்களாகவும் வாழலாம், இந்த உண்மையை இராமலிங்க அடிகள் பல பாடல களிலே பாடியிருக்கின்றார்.
தயையுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
சார்ந்தவரே! இங்கவர்கள் தம்மோடும் கூடி
நயமுறுதல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
நண்ணுகவென்று எனக்கிசைத்த நண்புருசற் குருவே!
உயல்உறும்என் உயிர்க்கினிய உறவே! என் அறிவில்
ஓங்கியபே ரன்பே! என் அன்பில் ஊறும் ஒளியே!
மயல்உறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
மாநடத்துஎன் அரசே! என் மாலை அணிந் தருளே!
கருணையுள்ளவர்கள் அனைவரும் சமரச சன்மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தாம். இவ்வுலகிலே அவர்களுடன் சேர்ந்து சிறந்த நல்ல அருள்நெறியிலே வாழ்ந்து, மகிழ்ந்து விளையாடுவாயாக என்று எனக்குக் கூறிய உண்மையான குருவே! சாகாத என் உயிரோடு இணைந்திருக்கும் உறவே! என் அறிவிலே உயர்ந்து நிற்கும் பேரன்பே ! என் அன்பிலே அமைந்து நிற்கும் பகுத்தறிவே! தவத்திலே ஈடுபட்டவர்கள் சூழ்ந்து நின்று போற்றும் மெய்ப்பொருளே! அழகிய பொது மன்றத்திலே நடனமாடும் அரசே! எனது பாமாலையை அணிந்தருள்ளவாய்!
இதுவே இப்பாடலின் பொருள். சன்மார்க்கத்தைச் சமரச சன்மார்க்கம் என்றே வள்ளலார் குறிப்பிடுகின்றார். சமரசம் என்பது பொது; எல்லோர்க்கும் ஒப்ப முடிந்தது; எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆதலால்தான், சன்மார்க்கம் எல்லோர்க்கும் பொதுவானது என்ற பொருளிலே சமரசசன் மார்க்கம் என்று குறிப்பிடுகிறார். இக்கருத்தடங்கிய மற்றொரு பாட்டையும் பார்ப்போம்.
அருளுடையார் எல்லாரும் சமரசசன் மாக்கம்
அடைந்தவரே! ஆதலினால் அவருடனே கூடித்
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
செழித்திடுக! வாழ்க! எனச் செப்பியசற்குருவே!
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே!
போதாந்தம் முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே!
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
வயங்குநடத் தரசே! என் மாலையும் ஏற் றருளே!
இப்பாடலிலும் சன்மார்க்கம் என்பது சமரச சன்மார்க்கம் என்றே குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் சமரச சன்மார்க்க உணர்ச்சிக்கு அடிப்படை இரக்கம் ஒன்றேதான் என்பதை இவ்விரு பாடல்களாலும் அறியலாம்.



