
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
36. சாவாத வாழ்வு
இவ்வுலகில் என்றும் அழியாமல் வாழ்வதே சாவற்ற வாழ்வு. இதைச் சிரஞ்சீவி என்றும் கூறுவர். முதியோர் இளைஞர் களுக்கு வாழ்த்துக் கூறும் போது என்றும் சிரஞ்சீவியாக இனிது வாழ்க! என்று கூறுவர்.
சித்தர்கள் என்பவர்கள் தங்கள் உடலை அப்படியே வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றவர்கள் என்று நம்புகின்றனர் உடலை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளும் வித்தையில் சித்தி பெற்றவர்களைச் சித்தர்கள் இன்னும் காடுகளிலும் மலைகளிலும் வாழ்வதாக நம்புகின்றனர். இத்தகைய நிலையை அடைய வேண்டும் என்று முயல்பவர்கள் சிலர் உண்டு.
அனுமான், விபீஷணன் போன்றவர்கள் சிரஞ்சீவிகள்; அவர்கள் இறக்கவில்லை; இன்னும் உயிர் வாழ்கின்றனர் என்று நம் நாட்டு இலக்கியங்கள் கூறுகின்றன. இதை உண்மையென்று நம்பியிருப்போர் பலர்.
மக்கள் சாகாமல் வாழ முடியுமா? என்றால் வாழ முடியும் என்பதே நாம் கூறும் விடை. எப்படிச் சாகாமல் வாழ முடியும்? சாதாரண மக்கள் நினைப்பது போல் இந்த உடலோடு சாகாமல் வாழ முடியும் என்று நாம் சொல்லவில்லை.
தன்னுடைய உடல் அழிந்தாலும் தன் பெயர் இவ்வுலகில் நிலைத்திருப்பதே சாகாத வரம். பல வீரர்களைப் பற்றி மக்கள் பேசுகின்றனர்; கொண்டாடுகின்றனர். பல புலவர்களைப் பற்றி பல அரசியல் வாதிகளைப் பற்றி, பல சீர்திருத்தக்காரர்களைப் பற்றி, பல வள்ளல்களைப் பற்றி, பல அரசியல் வாதிகளைப் பற்றி, பல சீர்திருத்தக்காரர்களைப் பற்றி, பல வள்ளல்களைப் பற்றி இன்னும் மக்கள் கதைகள் கூறுகின்றனர்; பாராட்டுகின்றனர். இவர்களில் பலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே மறைந்தவர்கள். ஆனால் அவர்கள் புகழ் மறையவில்லை; பெயர் மறையவில்லை. இவர்களை என்னென்று கூறுவது? இவர்கள் தான் சாகா வரம் பெற்றவர்கள்; சிரஞ்சீவிகள் என்று சொல்ல வேண்டும்.
சித்தர்கள் என்பதற்குப் பொருள், அறிவுடையவர்கள் என்பதுதான். சித்தம் என்பது அறிவு. இதிலிருந்துதான் சிந்தை தோன்றியது; சிந்தையிலிருந்து சிந்தனை அல்லது ஆராய்ச்சி பிறக்கும். ஆராய்ச்சியின் மூலம் உண்மைகள் வெளிப்படும். ஆகவே, சிந்தனா சக்தியுடையவர்கள் சித்தர்கள்; சிந்தனா சக்தியின் மூலம் சிறந்த ஆராய்ச்சி வல்லமையைப் பெற்றிருப்பவர்கள் சித்தர்கள்; ஆராய்ச்சி வல்லமையின் மூலம் உண்மைகளைக் கண்டறிந்து, அவைகளை உலக முன்னேற்றத்திற்கு உதவும் படி செய்பவர்கள் சித்தர்கள். இத்தகைய சித்தர்கள்தான் உடலழிந்தாலும், உலக மக்களின் உள்ளத்திலே என்றும் உயிர் வாழ்பவர்கள்.
அந்தக் காலத்தில தமிழ்நாட்டில் பதினெட்டுச் சித்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் ஒற்றுமைக்காக உழைத்தவர்கள்; மக்கள் சமுதாயத்தில் குடிகொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளைப் போக்க முயன்றார்கள்; மக்களை ஒன்றுபடுத்த முயன்றார்கள். அவர்கள் பெரிய சமுதாயப் புரட்சிக்காரர்கள். அவர்கள் பெயரால் இன்று வழங்கும் நூல்களிலே அவர் களுடைய கருத்துக்களைக் காணலாம்.
நமது முதற்பெரும் புலவர் திருவள்ளுவரும் புகழுடன் வாழ்வதுதான் மனித வாழ்க்கை என்று கூறியுள்ளார்.
தோன்றில் புகழொடு தோன்றுக அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
மனிதனாகப் பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்; இன்றேல் பிறப்பதை விடப் பிறக்காமல் இருத்தலே நல்லது என்பதே திருவள்ளுவர் கூற்று.
இதுதான் சாகா வரம் என்பது, நமது வள்ளலார் இராமலிங்கர் இத்தகைய சாகா வரம் பெற்றதாகக் கூறுகிறார். அவர் பெற்ற சாகா வரம் புகழுடம்பு.
உள்ளம் தளிர்த்திடச் சாகா வரம்கொடுத்து, என்றும்,
தடைபடாச் சக்திகள் எல்லாம் அளித்தனை.
எனது மனம் மகிழ்ச்சியடையும்படி, என் பெயர் என்றும் அழியாதிருக்கும் படியான வரத்தைக் கொடுத்தாய் ! என்றும் அழியாமல் நிற்கும்படியான அறிவுடைய காரியங்களைச் செய்யும் ஆற்றலையும் அளித்தாய் !
என் மார்க்கம் எனக்களித்து என்னையும் மேலேற்றி
இறவாத பெருவரம் ஈந்தமெய்ப் பொருளே !
நான் எண்ணிய உண்மைநெறியில் செல்லும் படியான சக்தியை எனக்களித்தாய்! என்னையும் உயர்ந்தவனாக்கினாய்! நான் என்றும் இறவாமல் புகழுடன் வாழும்படியான வரத்தையும் எனக்களித்தாய்!
கருணைநெறி உற்றேன் எக் காலமும் சாகாமல்
ஓங்கும் ஒளிவடிவம் பெற்றேன்
எல்லா மக்களையும் ஒன்றெனக் கருதி, அவர்களையெல்லாம் ஒரே சமுதாயமாகச் செய்யும் ஜீவகாருண்ய மார்க்கத்தை அடைந்தேன். இதனால் எக்காலமும் சாகாமல் மேலும் மேலும் என் பெயர் உலக முழுவதும் பரவும்படியான புகழ் உடம்பைப் பெற்றுவிட்டேன்!
சித்தாடு கின்றனன்; சாகா வரமும் சிறக்கப் பெற்றேன்.
இத்தாரணியில் எனக்கு இணையார் என்ற இயம்புவனே
என் அறிவால் ஆராய்ந்து கண்ட உண்மையைப் பின்பற்றி நடக்கின்றேன். இதனால் என்றும் அழியாத புகழ் பெற்று வாழும் நிலையை அடைந்துவிட்டேன். இந்த உலகில் இனி எனக்கு யார்தான் இணையாவார்கள் ? ஒருவரையும் எனக்கிணையாகச் சொல்ல முடியாது !.
வள்ளலார் பெற்ற சாகா வரத்தைப் பற்றி அவரே கூறியவைகள் இவை. ஆகவே சாகா வரம் என்பது, மக்களுக்கான நன்மைகளைச் செய்தல்; அவர்கள் மனத்திலே குடிபுகுதல்; பலரும் தன்னைப் பற்றி, தன் கொள்கைகளைப் பற்றிப் பேசும்படி கொண்டாடும்படி செய்தல். இவ்வாறு செய்கின்றவர்கள் தாம் சாகா வரம்பெற்றவர்கள் ; புகழுடம்பு பெற்றவர்கள்.



