வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

27. மூட நம்பிக்கை

சிலர் தாம் செய்யும் காரியங்கள் பற்றி நாம் ஏன் இவற்றைச் செய்கிறோம்? இவற்றைச் செய்தால் என்ன பயன்? செய்யாவிட்டால் என்ன? செய்யாமல் விட்டு விட்டால் குடி முழுகிப் போய்விடுமா? என்று யோசிப்பதேயில்லை. யோசிக்காமல் சில காரியங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய தகப்பனார் செய்த காரியம்; நம்முடைய பாட்டனார் செய்த காரியம்; வழக்கமாகச் செய்து வந்த காரியம்; நாம் நிறுத்தக் கூடாது. நம்முடைய பிள்ளைகள். பெயரன்கள் எப்படி யாவது போகட்டும். நாமுள்ள வரையிலும் புதிய மாறுதல் எதுவும் வேண்டாம்; முன்னோர் முறையையே பின்பற்றிச் செல்வோம். இவ்வாறு சமாதானம் சொல்லி விடுகின்றனர். அர்த்தமில்லாத காரியங்களைச் செய்பவர்கள் சொல்லும் சமாதானம் இது.

தென்னாட்டில் சில வகுப்பினர்கள் கிறிஸ்துவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய குடும்பப் பழக்க வழக்கங்களை எடுத்துக் கொண்டால் இன்னும் இந்துக்கள் போலவே நடந்து வருகின்றனர். அவர்கள் கிறிஸ்துவ மத வழக்கப்படி மாதா கோவிலில் பாதிரியார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளுவார்கள். மீண்டும் வீட்டுக்கு வந்ததும், தங்கள் பழைய மதக்கொள்கைப்படி புரோகிதரை வைத்துத் திருமணம் செய்து கொள்ளுவார்கள். சிலர் அமாவாசை விரதங்கூட இருக்கிறார்கள். இந்த வழக்கம் கிறிஸ்துவராக மாறினவர்களிடமும் இருந்து வருகின்றது. இதற்குப் பெயர்தான் மூடநம்பிக்கை.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மணம் செய்து கொள்ள வேண்டுமானால் அவர்களுக்குள் உடன்பாடு வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர் களுக்குள் திருமணம் நடைபெற வேண்டும்; நடத்தி வைக்கவும் வேண்டும். இதுவே பண்டைத் தமிழர்களின் கொள்கை.

பெற்றோர்கள் அறியாதபடி ஒரு பெண்ணும், ஒரு ஆணும் காதலித்தலுக்குக் களவு என்று பெயர். இருவரும் மணம் புரிந்து கொண்டு ஊரார் அறியக் குடித்தனம் பண்ணுவதற்குக் கற்பு என்று பெயர். களவு இல்லாமல் கற்பு நிகழாது. இது தமிழர் மரபு. பெரும்பாலும் உலகமெங்கும் திருமணம், இந்த முறையில் தான் நடைபெற்று வந்தது. இன்றும் பெரும்பாலான நாடுகளில் இம்மாதிரியான திருமணம் நடைபெறுகின்றது. இதுதான் இயற்கையுமாகும்.

ஆனால் நமது நாட்டில் பல குடும்பங்களில் இந்த முறைக்கு மாறாகத் திருமணங்கள் நடைபெறுவதைக் காணுகின்றோம். மணமக்கள் சம்மதத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுதேயில்லை.

நோய்க்கு மருந்துண்டு, உடலில் இரத்தக் குறைவால் பல நோய்கள் உண்டாகின்றன. தாய் தந்தையர்கள் காரணமாகப் பலர் நோயாளிகளாக இருக்கின்றனர். சீதோஷ்ண மாறுபாடுகளால் பல தொத்துநோய்கள் தோன்றுகின்றன; இவற்றால் பீடிக்கப்படும் மக்களைக் காப்பாற்றவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருந்து கொடுக்கும் முறை வழக்கத்தில் இருந்து வருகிறது. மருந்தினால் தான் நோய் தணிய முடியும். அது இயற்கையான காற்று, சூரிய வெளிச்சம் போன்ற மருந்தாகவும் இருக்கலாம்; அல்லது இயற்கை மருந்தாகவும் இருக்கலாம்.

அறியாத மக்களில் பலர் அறிந்தவர்களிலும் கூட ஒரு சிலர் நோய்க்குக் காரணம் பேய் பிசாசுகள் என்று கருதுகின்றனர். மருந்துண்ணாமல், மந்திரத்தால் உயிர் பிழைக்கலாம் என்று எண்ணுகின்றனர்; மந்திரவாதிகளிடம் சிக்கி மாளுகின்றனர். இது மூட நம்பிக்கையின் விளைவு.

நகை அணியும் ஒரு வர்க்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது காட்டுமிராண்டித்தனமான வழக்கம். மக்கள் நாகரிகமின்றி, காடு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில், காட்டுப் பூக்களைக் கழுத்திலும், காதிலும், மூக்கிலும் அணிந்து கொண்டனர். சிறிய கொட்டைகளையும் விதைகளையும் மாலையாகக் கோத்துக் கழுத்திலே போட்டுக் கொண்டனர். அதே வழக்கம் இன்றைய நாகரிகத்திலும் ஆட்சி புரிகின்றது. மலர் வடிவாகவும், கொட்டைகள், விதைகள் வடிவாகவும் தங்கத்தைச் செய்து, காதில், மூக்கில், கழுத்தில், தலையில் அணிகின்றனர்.

பாவம்! இந்தத் தங்கத்தையும் கல்லையும் சுமப்பதற்காக மூக்கையும் காதையும் துளைத்துக் கொள்ளுகின்றனர்! இது இயற்கையா? ஆராய்ந்தால் அறிவீனம் என்று விளங்கு மல்லவா? ஏன் இம்மாதிரி செய்கின்றனர்? முன்னோர் வழக்கம் என்ற மூடத்தனம் அல்லவா? இத்தகைய பொருளற்ற மூடத்தனங்கள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று இராமலிங்கர் வற்புறுத்துகிறார்.

சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமம் ஆச்சாரம்
சமயமதாச் சாரம்எனச் சண்டையிட்ட கலக
வழக்கு வெளுத்தது
கலையுரைத்த கற்பனைகள் நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெற, மெய்யுலகம்
வாழ்ந்து ஓங்கக் கருதி அருள் வழங்கினை என் தனக்கே

என்று இவ்வாறு பாடியிருக்கின்றார். இக்கருத்தை இன்னும் தெளிவாக உரைநடையிலும் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார்.

காதில் இரண்டு பொத்தல் செய்துவர விடுத்தவர் ஆணுக்குக் கடுக்கன் இடுதலும், பெண்ணுக்கு மூக்குத்தி முதலியன போடுதலும், தமக்குச் சம்மதமானால், காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தலிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா? என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பட்சத்தில் காதில் கடுக்கன் இடவும், மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா ?

இதுவே அவர் சொல்லியிருக்கும் உரைநடை. ஆண்களும், பெண்களும் நகை அணிவது இயற்கைக்கு விரோதமானது என்பதை இவ்வாறு வலியுறுத்தி யிருக்கின்றார்.

மேலே காட்டியவைகள் வள்ளலாரின் வாய்மொழிகள். மூட நம்பிக்கையிலிருந்து முதலில் விடுபட்ட மக்கள்தான், அரசியலிலும் சமுதாய வாழ்விலும் உயர்வடைய முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர் நமது வடலூரார். அதனாலேயே அவர் அச்சமின்றி மூட நம்பிக்கைகளைக் கண்டிக்கிறார். வெறுக்கிறார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *