வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

6. இயற்கையும் அறிவுமே இறைவன்

கடவுள் என்பது எங்கேயோ ஒரு தனி உலகத்தில் வாழ்கின்றது; அதற்கும் நம்மைப் போல் கால், கை, மூக்கு, வாய் முதலிய உறுப்புகள் உண்டு; நம்மைப் போல் எண்ணம், செயல்கள் எல்லாம் உண்டு என்று நம்புகின்றனர் பலர்.

இதுமட்டும் அல்ல; கடவுள் மக்களைப் போலவே கோப தாபங்கள் உடையவர்; விருப்பு வெறுப்பு உள்ளவர்; பெண்டு பிள்ளைகள் உள்ளவர்; கட்டின மனைவியைத் தவிர வேறு பல பெண்களையும் காதலிக்கும் தன்மையுள்ளவர் என்று கதை கட்டி வைத்திருக்கின்றனர்.

மக்கள் எந்தெந்த நிலையில் வாழ்கின்றனரோ அந்தந்த நிலையிலே இறைவனையும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். இவற்றை உண்மையென்று மெய்ப்பிக்கக் காரணம் காட்டுவோரும் உண்டு. உண்மையென்று ஒப்புக் கொள்ளாதவர்களுக்குப் பல தத்துவார்த்தங்கள் சொல்லி, அக்கதைகள் எல்லாம் வேண்டியதுதான் என்று வாதாடுவோரும் உண்டு. இந்த விவாதங்கள் எல்லாம் இப்பொழுது நமக்கு வேண்டாம்.

கடவுள் உண்டா இல்லையா? என்ற வாதத்தைத் தொடங்கினால், அது எரிந்த கட்சி, எரியாத கட்சி விவாதத்தைப்போல் வளர்ந்து கொண்டே போகும்.

மன்மதன் என்பவன் மக்களிடையிலே காம உணர்ச்சியை எழுப்புகின்றவன். அவன் மனைவி ரதிதேவி. அவன் பரமசிவன் செய்த தவத்தைக் கலைக்க முயன்றான், உடனே அவர் நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தார். மன்மதன் சாம்பலானான் என்பது புராணக் கதை.

ரதிதேவி பரமசிவனிடம் தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்கும்படி வேண்டிக் கொண்டாள். பரமசிவனும் அவளுடைய வேண்டுகோளுக்கு இசைந்தார். உனக்கு மட்டும் மன்மதன் உருவாகக் காணப்படுவான்; மற்றவர்களின் கண்களுக்குக் காணப்பட மாட்டான் என்று வரங்கொடுத்தார். இது கதையின் முடிவு.

இக்கதையை வைத்துக்கொண்டு இரண்டு கட்சிகள் வாதம் புரியும். ஒரு கட்சி, மன்மதன் எரிந்து போனது உண்மை என்று சொல்லும் மற்றொரு கட்சி, அவன் எரியவில்லை; உயிருடன் தான் இருக்கின்றான்; உருவத்தோடுதான் வாழ்கின்றான் என்று கூறும். இந்த இரண்டு கட்சியின் வாதமும் இன்னும் தீரவில்லை.

இதுபோன்றதுதான் கடவுளைப் பற்றிய வாதமும் தீராத வாதம். ஆகையால், அந்த வாதத்தில் குதித்துப் புரளுவது வீண்காலம் போக்குவதாகும். இதுவே அறிஞர்கள் கருத்து. ஆகையால் நாமும் இதில் தலையிட வேண்டாம்; முடியாத வழக்கில் தலையிட்டுக் கொண்டு முட்டுப்படுவது வேண்டவே வேண்டாம்.

கடவுள் இல்லையென்று விவாதிப்போரும், உண்டு என்று நம்புவோரும் இரண்டு உண்மைகளை மறுப்பதில்லை; அப்படியே ஒப்புக் கொள்ளுகின்றனர். இயற்கை நிகழ்ச்சி ஒன்று; அறிவு ஒன்று. இந்த இரண்டையும் நாத்திகர், ஆத்திகர் அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.

இயற்கை நிகழ்ச்சியென்பது நம்மால் உண்டாக்கப்படுவது அன்று; தானே தோன்றி இயங்குவது. அது யாரால் இயக்கப்படுவது என்பதும் நமக்குத் தெரியாது. இயற்கை நிகழ்ச்சிகளிலே ஆபத்தை உண்டாக்கும் பயங்கரமான நிகழ்ச்சிகளும் உண்டு; மக்களுக்கு இன்பத்தை உண்டாக்கும் நல்ல நிகழ்ச்சிகளும் உண்டு.

இந்த இயற்கை நிகழ்ச்சிகள் யாவும் கடவுளால் நடத்தப்படும் திருவிளையாடல்கள் என்று கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கூறுவர்; கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை. ஆனால் இயற்கையே கடவுள்தான் என்று சொன்னால் நாத்திகர்கள் அதை மறுப்பதில்லை. நாங்கள் இயற்கையென்று சொல்லுகின்றோம்; நீங்கள் கடவுள் என்று சொல்லுகிறீர்கள்; சொல்லிக் கொண்டு போங்கள். இயற்கையென்றாலும் கடவுள் என்றாலும் ஒன்றுதான் என்றால் அதை எப்படி மறுப்பது? என்று பெருந் தன்மையுடன் ஒப்புக் கொள்ளும் நாத்திகர்கள் பலர் உண்டு.

ஆகவே, இயற்கையென்பது நாத்திகராலும் ஆத்திகராலும் ஒப்புக் கொள்ளப்படும் ஒரு பொருளாகும். இது போலவே அறிவைப் பற்றியும் யாருக்கும் ஐயம் இல்லை; அறிவுக்குத் தனிவலிமை உண்டு அறிவினால் எதையும் சாதிக்கலாம். அறிவே எல்லாவற்றுக்கும் ஆதாரமாகும். அறிவுள்ளவர்கள் தான் எல்லாம் வல்ல இறைவனுடைய சக்தியை அறிந்து துன்பமின்றி இன்புற்று வாழ்வதற்கு வழிகாண முடியும் என்பது கடவுள் பக்தர்களின் கொள்கை.

அறிவுள்ளவனுக்குக் கடவுளும் வேண்டாம்; கடவுள் பிராத்தனையும் வேண்டாம். கையாலாகாதவன் தான் கடவுளையும் தலைவிதியையும் நம்பிக்கொண்டு கிடப்பான். அறிவுள்ளவனுக்கு எல்லாத் திறமையும் உண்டு. ஆதலால் அறிவைத் துணைக்கொண்டு அனைவரும் வாழ வேண்டும் என்று கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூறுவார்கள்.

அறிவுதான் கடவுள்; அதுதான் ஆக்கமும் அழிக்கவும் வல்லது; அதைத்தான் கடவுள் என்று சொல்லுகிறோம் என்றால் இதை ஆத்திகரும் நாத்திகரும் மறக்க மாட்டார்கள்.

ஆகவே, இயற்கையையும், அறிவையும் உயர்ந்தவை என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் எவரும் இல்லை. இயற்கை தான் கடவுள்; அறிவுதான் கடவுள் என்றால் அது அனைவருக்கும் உடன்பாடு. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் இயற்கையையும் அறிவையுமே கடவுள் என்று கூறுகிறார் இறைவன் என்று பாடுகின்றார்.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த
குளிர்தருவே! தருநிழலே! நிழல்கனிந்த கனியே!
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தன் ணீரே!
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே!
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே!
ஆடையிலே எனைமணந்த மணவாளா! பொதுவில்
ஆடுகின்ற அரசே! என் அலங்கல் அணிந் தருளே!

இது, படிப்பர் உள்ளத்தை உருக்கும் பண்புள்ள பாட்டு; எத்தனை தரம் படித்தாலும் பாடினாலும் இன்பம் சுரக்கும் இனிய பாட்டு.

இந்தப் பாடலை இன்று எத்தனையோ பேர் பாடிப்பாடிப் பரவசம் அடைகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் இப்பாடலின் உண்மைப் பொருளை அறிந்தவர்கள் தானா என்பதில்தான் சந்தேகம். இறைவன் இயற்கையாகவும் அறிவாகவும் கூறுவதுதான் இப்பாடல். இயற்கைதான் இறைவன். அறிவு தான் இறைவன் என்று இப்பாடல் கூறுகின்றது என்றாலும் பொருந்தும். இப்பாடலின் இனிய பொருளைப் பார்ப்போம்.

வெயிற் கொடுமையால் உள்ளமும் உடலும் சோர்ந்த கோடை காலத்திலே, ஓய்வாக உட்கார்ந்து இளைப்பாறும்படி கிடைத்த குளிர்ச்சியான தழைத்த மரமே!

அந்தக் குளிர்ந்த மரந் தருகின்ற நல்ல நிழலே!

அந்த நிழலிலே, அந்த மரத்திலிருந்து பழுத்து விழுந்த இனிய கனியே!

நல்ல கோடை காலத்திலே, நீரோடையிலே ஊற்றெடுத்து ஓடிவருகின்ற இனிய சுவையுள்ள தண்ணீரே!

எல்லோரும் விரும்புகின்ற அந்தத் தண்ணீரின் இடையிலே கண்ணுக்கு அழகாக மலர்ந்து அழகாக மலர்ந்து மூக்குக்கு நறுமணமும் மனத்திற்கு மகிழ்ச்சியும் தரும் வாசனையுள்ள மலரே!

மேடையிலே உட்கார்ந்திருக்கின்ற போது, வேனிலின் வெப்பம் தீரும்படி வீசுகின்ற மென்மையான நறுமணமுள்ள காற்றே!

அந்தக் காற்றினால் உள்ளத்திற்கும் உடம்புக்கும் உண்டா கின்ற இன்பமே!

அந்த இன்பத்தால் உண்டாகும் பயனே!

நான் விளையாடிக்கொண்டிருக்கும் பருவத்திலே என்னை மணந்துகொண்ட அறிவென்னும் தலைவனே!

என் உள்ளமாகிய அம்பலத்தில் எப்பொழுதும் நடனமாடிக் கொண்டிருக்கும் என் தலைவனாகிய அறிவே! என்னுடைய தமிழ் மலர்மாலையை ஏற்று அணிந்து கொள்ளுவாயாக!

இதுவே அந்த இனிய பாட்டில் அமைந்துள்ள பொருள். குளிர்ந்த நிழல் தரும் மரம்! அம்மரத்தின் நிழல், அம்மரத்திலே பழுத்தகனி, தாகந் தீர்க்கும் இனிய தண்ணீர், நறுமணம் வீசும் மலர், மெல்லிய தென்றற் காற்று, இளமைப் பருவத்திலே வளர்ந்து நிலைத்த அறிவு-இவையே இப்பாடலில் கூறப்பட்டவை.

இந்த இயற்கை நிகழ்ச்சிகளும், அறிவும் எல்லோருக்கும் பொது. இவை இன்னாருக்குச் சொந்தம், இன்னாருக்குச் சொந்தம் அல்ல என்று கூறிவிட முடியாது.

இப்பாடலிலிருந்து வள்ளலாரின் உள்ளக் கருத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை உணர்ந்து கொண்டால் எல்லா மக்களும் ஒரே குலமாய் இன்புற்று வாழ முடியும்.

இயற்கையும், இயற்கை இன்பமும் எல்லோர்க்கும் பொது, அறிவும் எல்லோர்க்கும் பொது; ஆயினும் ஒரு சிலர்தான் நல்ல நிழலும், நல்ல தண்ணீரும், நல்ல மேடை வீடும், நல்ல காற்றும், நல்ல இன்பமும் பெற்று வாழ்கின்றனர். பலருக்கு இந்த இயற்கை இன்பம் கிடைப்பதில்லை. எல்லோர்க்கும் இந்த இயற்கை இன்பம் கிடைக்கும்படி செய்யவேண்டும்.

இதுதான் இரக்கம் உள்ளவர்களின் கடமை, அறிவுள்ளவர்கள் ஆற்ற வேண்டிய அருந்தொண்டு. அனைவரும் இதை அறிந்து இந்த நெறியிலே பணிசெய்ய முயன்றால் மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ முடியும்; துன்பக் கடலிலிருந்து கரையேறி இன்பவூர்தியிலே ஏறிக் கவலையற்றுத் திரிய முடியும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *