வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

8. அறிவுச் சுடர்

மக்களுக்கு அறிவு வேண்டும். எல்லா மக்களுக்கும் அறிவு வேண்டும். அறிவில்லாதவர்கள் யாரும் இருத்தல் கூடாது. மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாக இருந்தால் தான் சமூகத்திலே அமைதி நிலவும். கொலை, கொள்ளை, வஞ்சகம், சூது முதலிய தீமைகள் தலைகாட்டமாட்டா. ஆதலால் நாடெங்கும் மக்களின் அறிவை வளர்க்கக் கூடிய சாதனங்களை அமைக்க வேண்டும். இது அரசாங்கத்தின் முதற்கடமை. குடிமக்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அரசும் ஆடி அசைந்து விழுந்து விடாமல் நன்றாக இயங்கும்.

ஆம்; இது உண்மை. மக்கள் அறிவுடையவர்கள் என்பதற்கு அடையாளம் என்ன? அறிவு வளர்ந்திருப்பதன் பயன் என்ன? அறிவு வளர்ந்திருந்தால் நாடு எப்படியிருக்கும்? மக்கள் சமூகம் எப்படியிருக்கும்? இவைகளைச் சிந்திப்பது பகுத்தறிவுடையார் கடமை.

நமது வள்ளலார் அறிவின் பயன் இதுவென விளக்கி யிருக்கின்றார். துன்புறும் உயிர்களிடம் இரக்கம் காட்டுவதே அறிவின் பயன். மனித சமூகம் எப்பொழுதும் தனித்து வாழ முடியாது. பல மக்கள் பலதிறப்பட்ட வேலைகளைச் செய்கின்றனர். பலதிறப்பட்ட தொழில்களே உலகை உருவாக்கி வருகின்றன; மக்களை வாழும்படி செய்து வருகின்றன; மக்கள் சமூகத்தை மேலும் மேலும் நாகரிகம் அடையச் செய்து வருகின்றன. இந்த உண்மையை உணராதவர்கள், மதம், சமூகம், வகுப்பு, இனம் என்ற பேதம் பாராட்டுவர். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொடுமைப்படுத்தும் நிலை மாறவேண்டும். இந்த மாற்றம் எப்பொழுது மனித சமூகத்தில் ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் அறிவு பரிமளிப்பதாக எண்ண முடியும். மனித சமூகத்தை ஒன்றாக நினைக்காத அறிவு அறிவல்ல; அது அறியாமைதான்.

அருள் அறிவு, ஒன்றே அறிவு மற்றெல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்தமெய்ச் சிவமே

இவ்வடிகளை ஊன்றி நோக்குங்கள்; எது அறிவு, எது அறிவின்மை என்பது புலப்படும். இரக்கத்தோடு கூடிய அறிவு ஒன்றுதான் அறிவு. மற்ற-அறிவு என்று சொல்லப்படுவன வெல்லாம் அறிவல்ல; அறியாமைதான்.

அறிவின் பயனை அறிந்தால் உலகம் தூங்காது; சோம்பிக் கிடக்காது. உலக மக்கள் உண்மை உணர்வார்கள். ஏமாந்திருக்கும் மக்கள் கூட்டம் விழித்தெழும். சுரண்டுவோர்க்கு இடங்கொடுக்க மாட்டார்கள். எல்லா மக்களும் ஏக்கம் இன்றி வாழ்வர்.

தூக்கம் தொலைந்தது, சூரியன் தோன்றினன்,
ஏக்கம் தொலைத்தேன்.

அறிவுபெற்ற ஒவ்வொரு மகனும் சொல்லிக் கொள்ள வேண்டியது இது:

என்னுடைய உறக்கம் ஒழிந்தது; விழிப்படைந்தேன்; அறிவுச் சூரியன் உதயமாகி விட்டான்; அவனுடைய வெளிச்சத்தால் என்னை அடிமையாக்கிய தளைகளைக் கண்டறிந்தேன்; அவைகளை அறுத்தெறிந்தேன்; துன்பத்தைக் தொலைத்தேன்; விடுதலை பெற்றேன்; இன்பத்தை நுகர்கின்றேன் என்று ஒவ்வொருவரும் உறுதிகொள்ள வேண்டும்.

கொடுமை செய்தல் கூடாது; எல்லார்க்கும் நலம் செய்தல் வேண்டும் என்று பேசாதார் இல்லை. ஆனால், செய்கையோ வேறு. சீவகாருண்யம் என்று சொல்லிக் கொண்டு எறும்புக்கு அரிசி போடுகிறார்கள்; காக்கைக்குச் சோறு போடுகின்றனர்; பாம்புக்குப் பால் வார்க்கின்றனர்; சோம்பித் திரியும் பிச்சைக் காரர்களுக்குச் சோறு போடுகின்றனர். ஆனால், அல்லும் பகலும் உழைக்கும் மக்களிடம் இரக்கம் காட்டுவதில்லை. நாள் முழுதும் வயல்களிலும், தோட்டங்களிலும் உழைக்கின்றனர்; பண்டங்களைப் பெருக்குகின்றனர். அவர்கள் உழைப்பின்றேல் உலகம் இயங்காது. இத்தகைய உழைப்பாளிகளிடம் இரக்கம் காட்டாதவர்கள் எவ்வளவோ பேர். ஆனால் அவர்கள் வெளி ஆடம்பரத்திற்காகச் செய்யும் தருமம் பல. அவைகள் தருமம் ஆகுமா?

மக்கள் மனத்தில் உள்ள மயக்கம் ஒழியவேண்டும். மயக்கத்தை உண்டாக்கக்கூடிய கருவிகள் ஒழியவேண்டும். மது மயக்கமாவது சிலமணி நேரம் இருந்து பிறகு மறைந்துவிடும்; மடமையால் ஏற்பட்ட மயக்கம் எளிதில் தெளியாது. மடமைக்குக் காரணமாக இருக்கும் கருவிகள் பல. இக்கருவிகள் மதத்தின் பேரால் – சட்டங்களின் பெயரால்- சாத்திரங்களின் பெயரால் பழக்க வழக்கங்களின் பெயரால் இருக்கின்றன. இவைகளெல்லாம் ஒழிந்தால்தான் உண்மை ஞானம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்; மக்கள் அனைவரும் இன்பத்தை அடைவார்கள்.

வெவ்வினைக் காடெலாம் வேரோடு வெந்தது;
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது;
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது;
சித்திகள் யாவும் செய்திடத் தந்தது,

இவ்வுலகில், கொடுமைகள்-தீவினைகள்-காடுபோல் மண்டிக் கிடந்தன; அந்தக் கொடுவினைக் காடுகள் இன்று வேரோடு வெந்து சாம்பலாயின. கொடிய பெரிய வஞ்சனைகள் வளர்ந்து கொண்டிருந்தன; அந்த வஞ்சனைகள் இனி வளர்ச்சியடைய முடியாது அழிந்தன. இப்பொழுது உண்மையான அறிவு வந்து விட்டது. அதுவும் நன்றாக-அழிக்க முடியாததாக உறுதியாக வளர்ந்துவிட்டது. நினைக்கும் செயல்களை யெல்லாம் செய்து வெற்றியடையும் வல்லமையைத் தந்து விட்டது இது வள்ளலார் வாய்மொழி. இதுவே அறிவின் பயன்.

முதலிலே மனதிலே இரக்கம் ; இரண்டாவது சோம்பல் இன்மை; மூன்றாவது கொடுமைகளை அழிப்பது; நான்காவது மூடநம்பிக்கைகளை ஒழிப்பது; ஐந்தாவது உண்மையான அறிவுடன் எண்ணிய இன்பங்களைப் பெற்று எல்லா மக்களும் ஒன்றுபட்டு இனிது வாழ்தல். இவையே அறிவின் பயன். இத்தகைய அறிவின் பயனை மனித சமூகம் பெறவேண்டும் என்பதே வள்ளலார் உள்ளம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *