
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
10. போர் வெறி
போர்க் கொடுமையைப் பற்றி இந்த நாளில் நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இதைப் பற்றி இன்று உலக மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்கின்றனர். உணர்ந்திருப்பது மட்டும் அல்ல; அக்கொடுமையை அனுபவித்தும் விட்டனர். ஆதலால் இன்னும் ஒரு போர் வேண்டுமா என்று உலக மக்களைக் கேட்டால் எல்லோரும் வேண்டாம் என்றுதான் ஒரே குரலில் கூறுவார்கள். அவ்வளவு தூரம் உலகமக்களை ஆட்டிவைத்து விட்டது சென்ற போர்.
பண்டைக்காலத்தில் ஒரு அரசன் தன் குடிகளைக் கொடுமைப்படுத்துவானாயின் அதை மற்றொரு அரசன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனே அக்கொடுங் கோல் அரசன் மீது படையெடுத்துச் சென்று, அவனை ஒழித்து, அந்த நாட்டிலே நல்ல அரசு பெறும்படி செய்ய வேண்டும்; துன்பமின்றி அந்நாட்டுக் குடிகள் வாழும்படி செய்ய வேண்டும். இது பழங்காலத்திய அரசநீதி.
இக்காலத்திலோ, ஒரு நாட்டின் உள்நாட்டு ஆட்சியில் மற்றொரு அரசாங்கம் தலையிடக் கூடாது என்று கூறப்படுகின்றது. இன்றைய ஐக்கிய நாடுகள் சங்கத்தில் இதை முக்கிய கொள்கையாகவும் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பண்டைய அரசநீதி, கொடுங்கோல் ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை நிறுவப் பிற நாட்டின் மீது படையெடுக்கலாம் என்ற கொள்கையை ஆதரித்து வந்துள்ளது. மக்கள் சார்பிலே நின்று நீதியை நினைத்துப் பார்தால் இது மிகமிகச் சிறந்தது என்பதில் ஐயமில்லை. இந்தப் பண்டைய நீதி இந்த நாளில் நேரடியாக நடைமுறைக்கு வரமுடியாது. ஆயினும் நாளடைவில் -இனி எதிர்காலத்தில் கொடுமை செய்யும் அரசாங்கத்தின் உள்நாட்டு ஆட்சியில் ஐ.நா. சங்கமாகிய சர்வதேச சங்கம் தலையிட்டு முடிவு செய்துதான் ஆகவேண்டும். இத்தகைய நீதி வரத்தான் போகின்றது. அப்போதுதான் உலகில் ஒற்றுமை நிலவமுடியும்.
பண்டைக்காலத்தில் நாடு பிடிக்கும் ஆசையுடன் போர்க் களத்தில் புகக்கூடாது என்று இருந்தாலும், மண்ணாசை கொண்டோர் அதை மதிப்பதில்லை. ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி நாடு பிடிக்கும் ஆசையுடன் தான் போர் செய்து வந்தார்கள். அரசர்கள் தங்கள் வீரத்தை நிலைநாட்ட தங்கள் நாட்டின் பரப்பை விரிவாக்கப் போர் செய்தார்கள். அந்தப் போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் வீரர்களானார்கள்; சக்கர வர்த்திகளானார்கள்; அவர்களுடைய சொந்த சுகபோகங்களை அதிகப்படுத்திக் கொண்டார்கள். இவைகளையே நாம் பழைய சரித்திரங்களில் இதிகாசங்களில், புராணங்களில் காணுகின்றோம்.
ஆனால் அந்தப் போர்களினால் அன்று துன்புற்றவர்கள் ஒரு குற்றமும் அறியாத பாமர மக்கள்தான். வெற்றி பெற்ற படையினர் தோல்வியடைந்த நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தனர்; நகரங்களைத் தீக்கிரையாக்கினர்: பயிர் பச்சைகளை நாசமாக்கினர். கால்நடைகளைக் கவர்ந்தனர்; பெண்களையும் சிறைபிடித்தனர். இவைகள் பழைய கால தருமயுத்தத்திலேயே நடந்த அக்கிரமங்கள். தோல்வியுற்ற நாடு துன்புறுவது போல வெற்றிபெற்ற நாடுகளில் உள்ள குடிமக்களும் தங்கள் உழைப்பின் பயனை யுத்தச் செலவுக்காக அரசனுக்குக் கொடுத்து அவதியுற்றனர்.
இந்தக் காலத்தில்-இயந்திரத் தொழில்கள் மிகுந்துள்ள இந்த காலத்தில்-போர் உண்டாவதற்குக் காரணம் பேராசை பிடித்த முதலாளிகளின் தூண்டுதல்; முதலாளிகளின் போட்டி. முதலாளிகள் தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பண்டங்களை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்கவே போருக்கு ஊக்கம் ஊட்டுகின்றனர். இவ்வுண்மை, முதல் மகாயுத் தத்தினாலும் வெளியாயிற்று; இரண்டாவது மகாயுத்தத்தினாலும் வெளிப்பட்டது.
ஆனால் ஒரு சிலருடைய தந்நலத்திற்காகச் செய்யப்படும் இந்த யுத்தத்தினால், உலக மக்களுக்கு உண்டாகும் துன்பத்தை யார் தான் அளவிட்டுக் கூறமுடியும்? உணவுப் பொருளை விளைவிக்கும் உழவர்களுக்கு சாப்பாடு கிடைப்பதில்லை; அவர்களுடைய தானியங்கள் போர்முனைக்குச் செல்லுகின்றன; உடைகளை நெய்யும் நெசவாளர்களுக்குத் துணி கிடைப்பதில்லை; அவர்கள் நெய்யும் உடைகள் போர்முனைக்கு மற்றும் வாழ்க்கைக்கான பல பண்டங்களையும், உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு அப்பண்டங்கள் கிடைப்பதில்லை; அவைகளெல்லாம் போர்முனைக்குச் செல்லும் போது அவை முற்றும் அங்கு போய்ச் சேர்வதில்லை. கொள்ளை லாபக்காரர்களிடம் சிக்குவது, வழியில் எதிரிகளால் சேதமடைவது, நீராலும், நெருப்பாலும் அழிந்துபோவது; இவை போக மீதம்தான் போர் முனைக்குப் போகின்றன.
உயிர் துறப்பதும், போர்முனையில் வீரர்கள் மாத்திரம் அல்ல; உழவர்கள், தொழிலாளர்கள், நடுத்தர வகுப்பினர் அனைவரும் உயிர் துறக்கின்றனர். போரினால் எவ்வளவு செல்வம் பாழ்! எவ்வளவு உழைப்பு பாழ்! எவ்வளவு உயர்கள் பாழ்! போர் நின்ற பின்பும் பல ஆண்டுகள் மக்கள் பஞ்சத்தினால், நோயால் துன்புறுவதைக் காண்கிறோம். சரித்திரங்களிலும் இவ்வுண்மையைக் கண்டோம்.
இதனாலேயே உலக அறிவாளிகள் போரை வெறுக்கின்றனர். ஒவ்வொரு போர் முடிந்த பின்பும், இனி உலகில் போர் நிகழாதவாறு தடுக்கவேண்டும் என்று அறிவாளிகள் முயன்றனர்; முயல்கின்றனர்.
போர் உண்டாவதற்குக் காரணமாயிருப்பவர்கள் உயிர்க் கொலைபுரியும் வெறியர்கள்; கடைப்பட்ட மக்களிலும் கடைப்பட்ட கயவர்கள்! போர் புரிவதிலே வெறி கொண்டவர்கள், புகழ் மீது ஆசை கொண்டவர்கள்.
இத்தகைய கயவர்களின் பிடிப்பிலிருந்து உலகம் விடுபட வேண்டும். இத்தகைய போர் வெறியர்களிடம் அரசாங்க ஆதிக்கம் இருத்தல் கூடாது. போர் வெறியர்களைக் கொண்ட அரசாங்கம் எப்படியோ போரில் தலையிட்டுத்தான் தீரும். இந்தப்போர்க் கொடுமையைப் பற்றித் தமிழ்ப் பெருந்தகையார் இராமலிங்கர்,
அரங்கினில் படைகொண்டு உயிர்க்கொலை புரியும்
அறக்கடை யவரினும் கடையேன்
என்று படைகொண்டு போர் புரிபவர்களைக் கயவர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
வீணில்போர் இழைவெறியர் புகழ்பெறு வெறியேன்.
வெறிகொண்டு புகழ்பெறுவதற்காகப் போர்புரிகின்றார்கள்; அவர்கள் திமிர்பிடித்தவர்கள், கொழுப்பெடுத்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். இன்னும் போரை அவர் எவ்வளவு வெறுக்கிறார். எவ்வளவு கண்டிக்கிறார் என்பதைக் கீழ்வரும் அடிகளாலும் அறியலாம்.
உலகரசு ஆள்வோர்
உறைமுடி வாள்கொண்டு ஒருவரைஒருவர்
உயிர்அறச் செகுத்தனர் எனவே
தரையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்
தளர்ந்துளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்.
ஆகவே போரினால் உண்டாகும் கொடுமையை அறிந்து நமது வள்ளலார் வருந்தியதை இன்று உலகம் உணர்ந்து விட்டது. இனி உலகில் வள்ளலார் யுகம் நிலைபெறும் என்பதில் ஐயமில்லை. பொதுமக்கள் அறிவாளிகளாகி விட்டால் தந்நலம் கொண்டவர்கள் அவர்களை ஏமாற்ற முடியா தல்லவா?



