வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

13. ஒரே இனம்

எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் இவ்வுலக மக்கள். இது உண்மை. நாம் இவ்வுலக மக்களின் ஒரு பகுதி. நமது நாடு இவ்வுலகில் ஒரு பாகம். நம்மை இவ்வுலக மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. நமது நாட்டை இவ்வுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்க முடியாது. நம்மை அறிந்தோ அறியாமலோ, நாம் உலக மக்களுடன் இணைந்திருக்கின்றோம்; நமக்குத் தெரிந்தாலும் சரி, தெரியா விட்டாலும் சரி, நமது நாடு உலகத்துடன் இணைந்துதான் இருக்கின்றது.

இந்த உண்மையை மறவாதவர்கள்தான் எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம், எல்லாரும் இவ்வுலக மக்கள் என்ற கொள்கையை ஒப்புக் கொள்ளுவார்கள்.

எல்லா உயிர்களும் ஒன்றே. உயிர்களுக்குள் வேறுபாடே இல்லை. எல்லாவற்றையும் ஒன்றே என நினை, வேற்றுமை பாராட்டாதே என்பதுதான் நமது வேதாந்தம்.

ஒரு காலத்தில் வேதாந்தம் என்றால் அது திண்ணைத் தூங்கிகளின் பாடம்; சோம்பேரிகளின் வாய்ப்பேச்சு; உலக வாழ்க்கைக்குப் பொருந்தாத உருப்படாத கொள்கை; குடும்ப வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் கொள்வோர்க்குச் சாதகமான ஊன்றுகோல்; என்றெல்லாம் பரிகசிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சுமார் நூறாண்டுகளுக்கு முன்தான் இந்திய வேதாந்தத்தின் உண்மை உலக முழுவதும் பரவிற்று. இன்று உலக மக்களுடைய சமாதான வாழ்வுக்குச் சாதனம் என்று பேசப்படுவது பொதுவுடைமைத் தத்துவம். அபேதவாதம், சமதர்மம் போன்ற நவீன அரசியல் கொள்கைகள். இந்த அரசியல் தத்துவங்கள் மேலோங்க மேலோங்க, இந்திய வேதாந்தத்தின் உயர்வும் மேலோங்கி வருகின்றது.

எல்லா மக்களும் ஒன்று என்னும் வேதாந்தத்தை ஒப்புக் கொண்டவர்கள் உலகம் ஒரு சமுதாயம் என்ற முடிவை ஒப்புக் கொள்ளப் பின்வாங்க மாட்டார்கள். இவர்கள் சமுதாய வேற்றுமைகளைப் பாராட்ட மாட்டார்கள். மக்களைப் பல வகையில் உயர்வாகவும், தாழ்வாகவும் பாகுபாடு செய்யும் அரசியல் சூழ்ச்சிகளையும் வெறுப்பார்கள்.

உலகம் ஒன்று, மக்கள் ஒன்று எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்னும் உயர்ந்த வேதாந்த விளக்கை நமது நாடு தான் உலகில் முதலில் ஏற்றிவைத்தது. இன்று இவ்விளக்கின் ஒளி உலக முழுவதும் சுடர்விடுகின்றது. இவ்வொளியே எல்லா மக்களும் ஒரே சமுதாயமாக இணைந்து வாழ வேண்டும் என்னும் அரசியல் தத்துவத்தை உலகத்திற்குக் காட்டிக் கொடுத்தது.

நமது வேதாந்தத்தின் உண்மையையும் அவ்வுண்மையி லிருந்து தோன்றிய புதிய-சமுதாய வேறுபாடற்ற -அரசியலையும் பின்பற்றினால்தான் உலக சமாதானம் உண்டாகும்.

ஒரு ஊரில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அவ்வூருக்குப் பெருமையுண்டு. எல்லா மக்களுக்கும் இருக்கச் சுகாதார வசதியுள்ள இடம், உண்ணப் போதுமான உணவு, உடுத்துவதற்கு ஆடை, படிப்பதற்குப் பள்ளிக்கூடம், வைத்திய வசதிகள், பொழுது போக்குவதற்கான கலைக்கூடங்கள் வேண்டும். இந்த வசதிகள் ஒரு ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் கிடைக்குமானால் அவ்வூரில் திருட்டுக்கு வேலை யில்லை; பொய்க்கு இடமில்லை; அடிபிடி சண்டைக்கு ஆதரவில்லை; கொலை தலைகாட்டாது; தந்நலங்கருதிய தீச்செயல்கள் மக்களிடம் தோழமைகொள்ள அஞ்சும். இது ஒரு ஊருக்கும் பொருந்தும்; ஒரு நாட்டுக்கும் பொருந்தும். இந்த உலகுக்கே பொருந்தும்.

ஒரு ஊரில் உள்ள தந்நலங் கொண்ட ஒரு மனிதன் இவ் வுண்மையை மறந்து தான்மாத்திரம் வாழ்ந்தால் போதுமென்று நினைத்தால் இறுதியில் அவன் கதி அதோகதிதான். அவன் வாழும் ஊரில் உள்ள ஒவ்வொரு வீடும் இடிந்து குட்டிச் சுவராகி விட்டால்-ஒவ்வொரு குடும்பத்தினரும், உணவுக்கும் உடைக்கும் வழியின்றி வெளியேறி விட்டால்- மிஞ்சியிருக்கும் ஒரு மனிதன் கதியென்ன? அவன் ஒருவசதியும் பெற முடியாமல் அவ்வூரிலேயே கிடந்து சாகவேண்டும்; அல்லது மற்ற மக்களைப் போல் எல்லா வசதிகளையும் துறந்து வெளியேற வேண்டும். தான்மாத்திரம் சுகமாக வாழ்ந்தால் போதும் என்ற அவனுடைய கோரிக்கையும் பாழடைந்து போகின்றது.

இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். மற்றவர்க்குத் தீமை செய்து தன்னுடைய சுகத்திற்கு மாத்திரம் இடந் தேடிக் கொள்ளும் மனிதன் தன்னையறியாமலே தனக்கே அழிவைத்தேடிக் கொள்ளுகின்றான். இவ்வுண்மையை நமது நாட்டினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். அதனால்தான் அவர்கள், உனக்கென வாழ்க்கை நடத்தாதே; பிறர்க்கென வாழ்க்கை நடத்துக; பிறர் நலத்துக்காகவே எப்பொழுதும் பணி செய்க ; பிறர் நலத்திற்கு உழைப்பதே மக்கள் கடமை என்றெல்லாம் கூறிவைத்தனர்.

பரந்த நோக்கமுள்ளவர்கள் தந்நலத் தியாகத்தையே பெரிதாகப் போற்றினர். தந்நலத் தியாகிகளாலேயே உலகம் அமைதி பெறமுடியும். மக்கள் இன்புற்று மகிழ்ந்து வாழ முடியும். தந்நலத் தியாகமுடையவர்களையே, உலகம் அவதார புருஷர்களாகப் போற்றுகின்றது; பெரியோர்களாகக் கொண்டாடுகின்றது. ஞானிகளாக – தீர்க்கதரிசிகளாக – சீர் திருத்தவாதிகளாகப் பாராட்டுகின்றது.

இத்தகைய தந்நலத் தியாகம் உலகம் உய்யப் பணிபுரியும் தன்மை- ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்யும் அருங்குணம் மக்களிடம் வளரவேண்டும் என்பதே வள்ளலார் உள்ளம்.

பார் உய்யப் புரிக எனப் பணித்துஎனக்கு அருளிஎன்
ஆருயிர்க் குள் ஒளிர் அருட்பெரும் சோதி.

உலகம் முன்னேறும்படியான செயல்களைச் செய் என்று கட்டளையிட்டு எனக்கு அருள்செய்து, என் உயிரோடு இணைந்து நிற்கும் இரக்கமாகிய பேரொளியே!

எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே
எண்ணிநல் இன்புறச் செயவும்.

இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்க் கூட்டங்களும், என்னுடைய உயிரும் ஒன்றுதான்: மற்ற உயிர்களுக்கும் என்னுடைய உயிருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்ற உண்மையை எண்ணி, எல்லாவுயிர்களும் இன்பம் அடையும் படியான செயல்களைச் செய்யவேண்டும்.

அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்.

அப்பனே, நான் பலநாளும், பலமுறையும் வேண்டுகின்ற வேண்டுகோளைக் கேட்டு, எனது வேண்டுகோளின்படி நான் நடப்பதற்கு இடங்கொடுக்க வேண்டும். அந்த வேண்டுகோள் என்ன? உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும், அவைகள் நன்மை பெறும்படி, நான் அன்போடு பணிசெய்ய வேண்டும். இதுதான் எனது வேண்டுகோள்.

மன்னுயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியடையும் வகையில்; தந்நலமின்றிப் பணிபுரிவதே தமிழர் பண்பாடு; உலகம் போற்றும் உயர்ந்த கொள்கை; வேதாந்தத்தின் சாரம்; நவீன அரசியலின் முடிவு. உலகம் ஒன்றுபட்டு அமைதியோடு வாழ்வதற்கு வழி காட்டும் சிறந்த சாலை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *