
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
25. மதச் சண்டை
மத நம்பிக்கை வேறு; மதப்பற்று வேறு. மத நம்பிக்கை யுள்ளவர்கள் மதத்தின் கொள்கைகளை அறிந்திருப்பார்கள். மதப் பற்றுள்ளவர்கள் எல்லோரும் மதத்தின் கொள்கைகளை அறிந்தவர்கள் என்று கூறிவிட முடியாது. அறிந்தவர்களும் உண்டு. பெரும்பாலானவர்கள் மூடப் பற்றும், முரட்டுப் பிடிவாதமும் கொண்டவர்களே. மதப் பற்றுக்கும் மத வெறிக்கும் இடைவெளி சிறிதுதான். பற்று, வெறியாக மாறிவிட்டால், அது வேறு மதத்தினர்பால் வெறுப்பை வளர்க்கும்; பகைமையை உண்டாக்கும்; கலகத்தை மூட்டி விடும்.
மதத்திலே நம்பிக்கையுள்ளவர்கள் மனித வர்க்கத்தை வெறுக்க மாட்டார்கள்; எம்மதமும் சம்மதம் எனக் கொள்வர். எவரையும் உடன்பிறந்தாராகக் கருதுவர். மதத்தின் தத்துவங்களை உண்மைக் கருத்துக்களை உள்ளத்தில் கொண்டு உறுதியாக நடப்பர்.
பொதுவாக மதங்களின் தத்துவம் ஒன்றுதான். மக்கள் எல்லோரும் சகோதரர்கள். மக்கள் பிறர் நன்மைக்காக உழைக்க வேண்டும். பணம் சேர்ப்போர் பிறரைக் கொடுமைப் படுத்தியோ, பட்டினி போட்டோ, ஏமாற்றியோ சேர்த்தல் கூடாது. சேர்த்த பணத்தையும் தன்னுடைய இன்பத்திற்கு மட்டிலும் பயன்படுத்தக் கூடாது. எல்லோர் நன்மைக்கும் பணத்தைப் பயன்படுத்த வேண்டும். சுருங்கக் கூறினால் செல்வம் படைத்தவர்கள் அந்தச் செல்வத்தைத் தம்முடைய தாகக் கருதாமல், நாட்டின் மக்களின் பொதுப் பொருளாகக் கருதவேண்டும். செல்வம் உடையவன், தன்னைச் செல்வத்தின் சொந்தக்காரனாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தன்னை தர்மகர்த்தாவாக பாதுகாப்பாளனாக சம்பளமில்லாத கௌரவப் பாதுகாப்பாளனாக நினைத்துக் கொள்ள வேண்டும் இதுவே உண்மையான மதக் கொள்கை. இதையே மகாத்மா காந்தியும் வலியுறுத்தினார். இதையே ருஷிய ஞானியான டால்டாயும் வலியுறுத்தினார்.
மதத்தில் உண்மையான நம்பிக்கையுள்ள செல்வர்கள் தான் தர்மகர்த்தாக்களைப் போல நடக்க முடியும். மதப் பற்றுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்வோரில் பலருக்கு இவ்வுண்மை தெரியாது. தெரிந்தாலும் நம்பமாட்டார்கள். நம்பினாலும் செயலில் காட்டமாட்டார்கள்.
மதம், பண்டைக் காலத்தில் மக்களின் ஒற்றுமைக்காக ஏற்பட்டது. மக்களின் நல்லொழுக்கத்தை வளர்க்கவே தோன்றிற்று. மக்களின் வறுமை, பிணி இவற்றைப் போக்கவே ஏற்பட்டது. மக்களை இவ்வுலகத்தில் அல்லல் இன்றி அன்புடன் இணைந்து வாழச் செய்வதற்காக ஏற்பட்டது. இதனால்தான் ஒவ்வொரு மதமும், அரசியலும், சுகாதாரமும் பொருளாதாரமும், சமூகச் சீர்திருத்தமும் கலந்து பின்னி, மதம் என்ற பெயரால் காட்சி யளிக்கின்றது.
ஆனால் நாளடைவில் மதக் கொள்கைகளை மக்கள் மறந்தனர். மதத்தின் மூலம் உண்டான வெளிவேஷங்களையும், ஆடம்பரங்களையும் ஆர்ப்பாட்டங்களையுமே மதமாகக் கருதினர். சுயநலவாதிகள் மதத்தின் பெயரால் மக்களைக் கலக நெறியில் செல்லத் தூண்டிவிட்டுத் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டனர்.மத நம்பிக்கை மாறி, மதவெறி மிகுந்து மக்களுக்குள் வெறுப்பும், கலகமும் மிகுந்தன. மதச் சண்டையும், சாதிச் சண்டையும் அண்ணன் தம்பிகள்தான். ஆதலால் வகுப்புச் சண்டைகளை மதச் சண்டையில் முளைத்தெழுந்த கிளைப் பயிர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மதவெறி கொண்ட அரசாங்கங்களின் மூலம் உலக மக்கள் எய்திய இன்னலுக்கு எல்லையில்லை. இந்தப் படிப்பினையின் காரணமாக அரசாங்கமும் மதமும் ஒன்றாக இருத்தல் கூடாது. அரசியல், நாட்டில் உள்ள பல திறப்பட்ட மக்களுக்கும் சொந்தம்; மதம் ஒவ்வொரு மனிதனுடைய தனி உடைமை என்ற கொள்கை தோன்றிற்று. இக்கொள்கையே மதச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்று கூறலாம்.
இதன் பிறகு மதங்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனி தாபனங்கள் ஏற்பட்டன. அவைகள் மதப் பிரசாரம் செய்து வருகின்றன. இன்றளவும் அந்த தாபனங்கள் மதப் பிரசாரங்கள் செய்வதில் தவறுவதில்லை. ஆனால் மதப் பிரசாரத்தின் பயன் மட்டும் பூரண சந்திரவடிவந்தான்.
ஒட்டகம் ஊசியின் காது வழியிலே நுழைந்து சென்றாலும் செல்லலாம். ஆனால் பணக்காரன் சுவர்க்கத்தை அடைய முடியாது என்பது கிறிஸ்துநாதர் போதனை. கிறிஸ்துவர் களுக்குள்தான் முதலாளி தொழிலாளி சண்டை தொடங்கிற்று.
இஸ்லாம் என்றாலே சமாதானம் என்று பொருள். இதன் பொருளையே முஸ்லீம் தோழர்கள் மறந்துவிட்டனர். பெண்ணுரி மையை முஸ்லீம் மதம் வலியுறுத்தும் அளவு வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை. ஆனால்?
சீவகாருணண்யத்தையே உருவாகக் கொண்டது ஜைன மதம். பாட்டாளிகளைச் சுரண்டுவதில் இன்று ஜைனர்களே முதலில் நிற்கின்றனர். பெரும்பாலான லேவாதேவிக்காரர்கள் அவர்களே என்பதை நினைவுறுத்துகிறோம்.
அஹிம்சையையும், சகோதரத்துவத்தையும், உண்மை ஒழுக்கங்களையும் வலியுறுத்த வந்தது புத்த மதம். அந்த மதம் வளரும் நாடுகளைப் பார்த்தால், புத்தமதக் கொள்கையில் எந்த அளவு நிலைத்திருக்கின்றது என்பது விளங்கும்.
தனக்கென்று வாழாமல் பிறர் நன்மைக்காகவே உயிர் வாழவேண்டும். தொழில் செய்யவேண்டும், வாழ்நாள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என்று போதிப்பது காலங் குறிப்பிட முடியாத இந்து மதம். இன்று எத்தனை இந்துக்கள் இந் நெறியைப் பின்பற்றுகின்றனர் ?
மதம் போதிக்கும் நல்லொழுக்கங்கள் மக்கள் மனத்தில் ஏறவில்லை. பெயருக்காக மதத்தைச் சொல்லிக் கொள்கிறார்கள்; செயலிலோ அதன் கொள்கைகளுக்கு நேர்மாறாக நடக்கின்றனர்.
மதங்களின் இந்த நிலையை பல்லாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தார் நமது வள்ளலார். பழைய மதங்களை இனிச் சீர் திருத்த முடியாது. புதுமதம் வேண்டுமென எண்ணினார். பழைய மதங்களில் பிழிந்தெடுத்த சாரந்தான் ராமலிங்கர் கூறும் சமரச சுத்த சன்மார்க்கம். ஒற்றுமையான பரிசுத்தமுள்ள உண்மை நெறிதான் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது. அந்த உண்மை நெறிதான் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்பது. எல்லா மக்களும் அன்போடு ஒன்றுபட்டு வாழ்தல் தான் ஆன்மநேய ஒருமைப்பாடு.
பழைய மதங்களின் இன்றைய நிலைமையைப் பற்றி வள்ளலார் கூறுவது இதுதான் :
கூறுகின்ற சமயமெலாம் மதங்களளெலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார்; வீணே
நீறுகின்றார்; மண்ணாகி நாறுகின்றார்; அவர்பால்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ ! நிலைமேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ; ஏற்றுவித்தாய் ! ஆங்கே
இலங்குதிருக் கதவுதிறந்து இன் அமுதம் அளித்தே
தேறுகின்ற மெஞ்ஞான சித்திஉறப் புரிவாய் !
சித்தசிகா மணியே ! என் திருநடநா யகனே !
சுயநலவாதிகள் மக்களிடம் அபிமானவற்றவர்கள் பொய்ந் நூல்கள் சொல்லுகின்ற சமயங்களையும், மதங்களையும் உண்மையென்று பிடித்துக் கொள்ளுகின்றனர். அர்த்தமின்றி வீண் கூச்சலிடுகின்றனர். அவைகளால் அவர்கள் ஒரு பயனையும் அடையவேயில்லை. வீணாக ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு சாம்பலாகின்றனர். மண்ணோடு மண்ணாகி மடிகின்றனர். அவர்களைப் போல் நானும் இந்தப் பெரிய உலகத்தில் வீணாக அழிந்துபோக நினைக்க மாட்டேன். உயர்ந்த நிலையை அடைகின்ற தன்மையை விரும்புகின்றேன்; அவ்வாறே ஏற்றம் அளித்தாய் ! விளங்குகின்ற அறிவுக் கதவைக் திறந்து இனிய அமுதம் அளிப்பாய்! அறிவினால் பல காரியங்களையும் சாதிக்கும்படி செய்வாய் என் உள்ளத்தில் நடமாடும் ஒப்பற்ற அறிவொளியே!.
வள்ளலாரின் இக்கருத்தை இவ்வுலகம் மேற்கொள்ளும் காலத்தில்தான் மக்களுக்குள் உண்மையான சமாதானம் நிலவ முடியும். மக்களிடையில் இன்று நிலவும் வெறுப்பும், பிளவும் ஒழியும்; உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ்வார்கள்.



