
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
19. வீட்டுப் பஞ்சம்
எவருக்கும் இன்ப வாழ்க்கையில் ஆசையுண்டு. துன்புற்று வாழத் துணிவார் யாரும் இல்லை. இன்பமாக வாழ்வதற்கு வேண்டுவன பல. அவற்றுள் அடிப்படையானவை சில. அந்த அடிப்படைக் கருவிகள் மூன்று இடம், பொருள், ஏவல் என்பன. இந்த இடம், பொருள், ஏவலைப் பொறுத்ததே ஒரு மனிதனுடைய வாழ்க்கை.
இந்த மூன்றுள் முதலில் நிற்பது இடம். சுவர் இல்லா விட்டால் சித்திரம் எங்கே? உடம்பில்லா விட்டால், உடம்பு நோயுற்று நடக்கப் பலமற்று நலிவடையுமாயின் நாம் என்ன செய்யமுடியும்? உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்று திருமூலர் கூறியிருப்பது உண்மையன்றோ? ஆதலால் எதற்கும் இடமே ஆதரவு. ஒரு இடத்தின் மேல்தான் எந்தப்பொருளும் வாழவேண்டும். ஆதலால்தான் மனிதன் வாழ்வதற்கு அடிப்படைச் சாதனங்களாகிய மூன்றினுள் முதலில் இடத்தைக் கூறினர்.
முதலில் மக்கள் வாழ்வதற்கு இடம் வேண்டும். அந்த இடத்தில், காற்றோட்டம், போதுமான வெளிச்சம், தேவையான நல்ல தண்ணீர், சுற்றுப்புறம், உட்புறம் சுகாதாரம் எல்லாம் அமைந்திருக்க வேண்டும்.
நாள் முழுவதும் உடம்பு நோகப் பாடுபடுகின்ற மக்கள் பலர். பகல் முழுவதும் தலைவலிக்கச் சிந்தனையில் ஈடுபட்டுச் செயல்புரிவோர் பலர். அவர்களுக்கெல்லாம் உழைப்புக்கேற்ற ஓய்வு வேண்டும். ஓய்வு பெறுவதற்கு இடம் தேவை. அந்த இடம், இவர்களுக்கும் இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் போதுமானதாக இருக்க வேண்டும்.
உழைத்த நேரம் போக ஓய்ந்த நேரத்தில் ஓரிடத்தில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து ஓய்வு பெற்றுக் கொள்ளுபவரே மீண்டும் தம்முடைய உழைப்பைத் திறமையுடன் செய்ய முடியும். அமைதியாகத் தூங்குவதற்கு கவலையின்றி மகிழ்ந்திருப்பதற்கு வழியற்றவர்கள் தமது உழைப்பில் வெற்றி பெற முடியாது; உள்ளத்தோடு உழைக்கவும் முடியாது. கடனுக்கு உழைத்துக் காலம் கழிப்பவராகி விடுவர். இதனால் அவருடைய உள்ளமும் நலியும்; உடலும் மெலியும்; வாழ்க்கையில் விருப்பம் கொள்ள மாட்டார்; வெறுப்பே கொள்வர்; ஆகையால்தான் எல்லோரும் முதலில் இருப்பதற்கு இடம் தேடுகின்றனர். இது இயற்கை.
உலகில் உறைவிடம் தேடாத உயிர்களே இல்லை. பாம்புக்கும் புற்றுண்டு. நரிக்கும், எறும்புக்கும் வளையுண்டு. சில பறவைகளும் அழகிய வேலைப்பாடமைந்த கூடுகள் கட்டி வாழ்கின்றன. எல்லா உயிரும் இன்புறுதற்கு இடந்தேடிக் கொள்கின்றன.
மக்களும் பண்டைக் காலத்திலிருந்தே, பருவ காலக் கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வீடுகள் கட்டிக் கொண்டனர். உழைத்த நேரம் போக ஒழிந்த நேரத்தில் ஓய்வு பெறுவதற்கு இடம் தேடிக் கொண்டனர்.
பண்டை நாளில் மக்களிடையில் பண்டமாற்றுதல் முறையே வழங்கி வந்தது. நெல்லைக் கொடுத்துத் துணி வாங்கிக் கொள்வது; துணியைக் கொடுத்து துவரை வாங்கிக்கொள்வது. இதுபோல் தன்னிடம் உள்ள பண்டத்தைக் கொடுத்துத் தனக்கு வேண்டிய பண்டத்தை வாங்கிக் கொள்வது. இதற்கே பண்ட மாற்றுதல் என்ற பெயர்.
இந்த முறை மாறி, நாணயத்தைக் கொடுத்துப் பண்டத்தை வாங்குவது என்ற முறை ஏற்பட்டது. இந்த முறை ஏற்பட்ட பிறகுதான் சமூகத்தில் சோம்பேரிகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது. தந்திரசாலிகளுக்குத் தகுந்த வசதி கிடைத்தது. ஏமாற்றும், தந்திரமும், கள்ளங்கபடமற்ற உழைப்பாளர்களைக் கட்டிப் பிணைத்து அடிமையாக்கின.
தமது பண்டத்தை விற்றதனால் பெற்ற பொருளைக் கொண்டு தமக்குத் தேவையானவைகளைப் பெற முடியாதவ களாயினர் பலர். இதனால் அவர்கள் கடன் வாங்கத் தொடங்கினர். கடனுக்கு வட்டி கொடுத்தனர். கடன் கொடுத்து வட்டி வாங்கினவர்கள் செல்வர்களாயினர் கடன் பெற்று வட்டி கட்டினவர்கள் ஏழைகளாயினர்; தங்கள் வாழ்க்கைச் சாதனங் களையிழந்தனர்; ஓட்டாண்டிகளாயினர்.
கடன் வாங்கினவர்கள் பலர் தங்கள் இடத்தை வீட்டை யிழந்தனர். இதனால் ஒருசிலருக்குத் தேவைக்கு மேல் வீடுகள், பலருக்கு இருக்க இடமே இல்லை. இருக்க இடமில்லாமல் பலர் பரிதவிப்பது இயற்கைக்கு விரோதம். ஏராளமான வீடுகளைத் தேவைக்கு மேற்பட்டதாக ஒருசிலர் வைத்துக் கொண்டிருப்பது அநீதி.
பணக்காரனுக்கு வீடுகள் சேர்வது விந்தை. பணமில்லாதவன் தன் வீட்டின்மேல் கடன் வாங்குகின்றான். வாங்கின கடனை அவனால் கொடுக்க முடிவதில்லை; வட்டியையும் கட்ட முடிவதில்லை. இதனால் வாங்கின கடன் வளருகிறது. கடைசியில் கடன் கொடுத்தோன் வீட்டைப் பிடுங்கிக் கொள்கிறான். இம் முறையிலேயே பலர் தங்கள் பரம்பரைச் சொத்தான வீட்டையிழந்து பரிதவிக்கின்றனர்.
ஏழை வீட்டைப் பணக்காரன் கவர்ந்து கொள்ளும் இந்த முறை பல நூற்றாண்டுகளாகவே வழக்கத்தில் இருந்து வருகின்றதுபோலும். வீட்டைக் கவரும் நோக்கத்துடனேயே பணக்காரர்களும் வீட்டின் மேல் கடன் கொடுத்துவந்தனர்; இன்றும் கொடுத்து வருகின்றனர். இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்பதே இராமலிங்கர் கருத்து.
வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை
மனைகவர் கருத்தினேன்.
வட்டிக்குக் கொடுத்து, அந்த வட்டிக்கு வட்டி சேர்த்து, பணத்தை அதிகமாக்கி வீட்டைக் கவர்ந்து கொள்ளும் வழக்கம் கொடுமையானது. எல்லா மக்களுக்கும் இடம் இன்றியமையாதது. இந்த இடத்தைப் பிடுங்கும் செய்கை கொடுமை ஒழிய வேண்டும் என்பதே அவர் கருத்து.
எல்லா மக்களுக்கும் இடவசதி வேண்டும். இருப்பதற்கு இடமில்லாவிட்டால் எவரும் இன்புற முடியாது.
வீடற்றோர் தொகை பெருகிக்கொண்டே போகுமானால் அது ஆபத்தாகும். சமுதாயம் பாதிக்கப்படும் வீடற்றவர்கள் அமைதியாக வாழ்வதற்கு வழியில்லை. நல்ல உணவு பெறு வதற்கும் ஓய்வு பெறுவதற்கும் வழியில்லை. இதனால் உழைப்பின் திறமை குறையும். உழைக்கும் திறமை குறைந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் புரையோடும். ஆட்சிமுறையில் அசைவு காணும். நாட்டிலே போதுமான இடமுண்டு; வீடமைப்பதற்குக் கருவிகளும் ஏராளம். உழைப்போரும் உண்டு. ஆளுவோர் உள்ளம் விரிவடைந்தால் எல்லோரும் இன்புறுவர்.



