வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

24. மாறுபடும் மதங்கள்

மதம் மக்களுக்கு அபின் என்பது இன்றைய பகுத்திறிவாளர் கூற்று. இது குருட்டுத்தனமாகக் கூறியதன்று. உலகப் போக்கைப் பார்த்து, உளம் வருந்திக் கூறியது; மதவெறி கொண்ட மக்கள் மண்டைகளை உடைத்துக் கொண்டு மனிதத் தன்மையை இழந்ததைக் கண்டு கூறியது. மக்களுக்கு மதவெறியை உண்டாக்கி அவர்களைச் சின்னா பின்னமாக்கித் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் சுயநலக் கும்பல்களின் அக்கிரமத்தைக் கண்டு கூறியது.

சரித்திரம் படித்தவர்கள் மதச் சண்டைகளை அறிவார்கள். அவ்வளவு தூரம் போக வேண்டாம். மதவெறிதான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சகோதரர்களாக வாழ்ந்த மக்களை ஆவேசத்துடன் அடித்துக் கொண்டு சாகும்படி செய்தது; மதவெறிதான் உலகத்திற்கு அகிம்சையைப் போதித்த மகாத்மாவின் உடலைக் கொள்ளை கொண்டது. இவை நாம் நமது காலத்திலேயே கண்கூடாகக் கண்ட காட்சி; நமது சந்ததியினர் சரித்திரத்தில் படித்து நம்மை என்றும் ஏளனம் செய்து கொண்டிருப்பதற்கு வழி செய்த அழியாத வடு.

அறிவுடன், பொறுமையுடன் சிந்திப்போர்க்கு மதவெறியால் விளைந்த கொடுமைகள் தெரியும். மதங்களின் உண்மைக் கொள்கைகளை அறிந்தவர்கள் ஒரு சிலர்தான். அவர்கள்தாம் எம்மதமும் சம்மதம் என்றிருப்பர். இத்தகைய உத்தமர்களால் உலகிற்கு ஒரு தீங்கும் இல்லை.

மதப் பற்றுத்தான் மனிதனை நல்ல வழியில் நடக்கச் செய்யும், மதப்பற்றுத்தான் நன்மை செய்யத் தூண்டும், தீய வழிகளில் செல்லாமல் தடுக்கும்; மதப் பற்றுடையவன் தான் புண்ணிய பாவங்களுக்கு அஞ்சுவான்; மதப் பற்றுடையவன் தான் சீவகாருண்யம் உள்ளவனாயிருப்பான். மதப்பற்றில்லாதவன் கெட்டுப் போய்விடுவான்; நன்மை தீமைகளுக்கு அஞ்ச மாட்டான்; புண்ணிய பாவங்களுக்குப் பயப்பட மாட்டான்; கண்டதே காட்சி, கொண்டதே கோலமென்று திரிவான். ஆதலால், மதப்பற்று இன்றியமையாதது; ஒவ்வொரு சமூகத்திற்கும் தேவையானது என்பார்கள்.

இந்த விவாதம் நமது நாட்டிலே பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதற்கு முடிவில்லை. ஆனால் நாம் ஒன்றை மாத்திரம் நினைவூட்டுகிறோம். மதப் பற்று வேறு, ஆத்திகம் வேறு; மதப்பற்றின்மை வேறு, நாத்திகம் வேறு. மதப் பற்றுடையவர்கள்தாம் ஆத்திகர்கள், மதப் பற்றில்லாதவர்களெல்லாம் நாத்திகர்கள் என்று கூறுவதை ஒப்புக் கொள்ள வேண்டாம். மதவெறி – மதப்பெற்று உள்ளவர்களிலும் நாத்திகர் உண்டு; ஆத்திகரும் உண்டு. மதப் பற்று மதவெறி இல்லாதவர் களிலும் ஆத்திகர் உண்டு, நாத்திகரும் உண்டு.

மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன்;
வாட்டமே செய்யும் கூட்டத்தில் பயில்வேன்.

மதத்திலே பற்றுக் கொண்டு திரிகின்றேன். ஆனால் பிறர்க்குத் துன்பங்களையே செய்து கொண்டிருக்கும் கூட்டத்திலேயே வாழ்கின்றேன் என்கிறார் வடலூரார். இன்றைய உலகைப் பாருங்கள். பெண்களைப் கற்பழிப்பவர்கள் எல்லாம் மதப் பற்றுடையவர்கள்தாம். குழந்தைகளையும், மாதர்களையும், முதியவர்களையும் ஈவிரக்கமின்றிக் கொல்லுகிறவர்கள் எல்லாம் மதப் பற்றுடையவர்கள்தாம். இவ்வாறு மதப் பற்றுடையோர் கொடுமை செய்து வருவதை இன்றும் பார்க்கிறோம்.

வெறிக்கும் சமயக் குழியில் விழ
விரைந்தேன் தன்னை விழாதவகை
மறிக்கும் ஒருபேர் அறிவளித்த
வள்ளல் கொடியே.

வெறியை உண்டாக்கும் மதம் என்னும் படுகுழியில் விழுவதற்கு விரைந்து சென்று கொண்டிருந்த என்னை அப்படி விழாமல் தடுக்கத் தகுந்த ஒரு பேரறிவை அளித்த கருணா மூர்த்தியே! என்று கூறுகிறார் வள்ளலார். வெறிக்கும் சமயக் குழி என்பது குறிப்பிடத் தகுந்தது. வெறி குடியினால் வருவது; போதையினால் வருவது. அறிவில்லார்க்கு மதமும், சமயமும் இத்தகைய வெறியை உண்டாக்கும் என்றே உரைக்கின்றார்.

ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்.

மதம் மக்களுக்கு ஊடலை உண்டாக்குவது; மக்களை ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொள்ளச் செய்வது. மதத்தில் சொல்லப்படுவன கற்பனைகள்; மதங்கள் கூறுவனவெல்லாம் உண்மையென்று நம்பி மோசம் போகவேண்டாம் என்பதை இவ்வாறு விளக்கினார்.

மதமெனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றார் எல்லாம்
மன்றிடத்தே வள்ளல் செய்யும் மாநடம் காண்குவரோ?

மதமென்னும் பேயால் பீடிக்கப்பட்டு ஆடுகின்றவர்கள் உண்மையை அறியமாட்டார்கள். அவர்கள் உள்ளமாகிய சபையிலே அறிவு நடனமிடுவதைக் காணமாட்டார்கள்.

இது உண்மை. மதப்பேய் பிடித்து வெறியாட்டம் ஆடு கின்றவர்களுக்கு அறிவேது? ஆலோசிக்கும் திறமையேது? பொறுமைதான் ஏது? அவர்கள் தங்கள் உள்ளொளியைக் காணமாட்டார்கள். உள்ளொளியாகிய பகுத்தறிவைக் கண்டவர்கள்தான் உண்மை வழியில் நடக்க முடியும்.

இதுமட்டும் அல்ல; மதங்கள் எல்லாம் பொய்! ஏட்டிலே பாடல்களிலே எழுதப்பட்டிருக்கும் மதங்கள், சமயங்கள் எல்லாம் பொய்: பொய்! நம்பாதீர்கள்! உங்கள் அறிவைத் துணையாகக்கொண்டு உண்மை நெறியுணர்ந்து நடவுங்கள் என்று வள்ளலார் கூறுகின்றார்.

குறித்துரைக்கின் றேன்இதனைக்
கேண்மின்! இங்கே வம்மின்!
கோணும்மனக் குரங்காலே
நாணுகின்ற உலகீர்!
வெறித்த உம்மால் ஒரு பயனும்
வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய்
வேறுநினை யாதீர்!
பொறித்தமதம் சமயம் எலாம்
பொய்! பொய்யே! அவற்றில்
புகுதாதீர்! சிவம் ஒன்றே
பொருள்எனக்கண்டு அறிமின்!
தெரிந்துதுதித் திடுமின்!
சித்தியெல்லாம் இத்தினமே
செறித்திடுசிற் சபை நடத்தைத்
சத்தியம்சேர்ந் திடுமே!

என்பது வள்ளலார் கூற்று. மதவெறி கொள்ள வேண்டாம்; அதனால் பயன் ஒன்றும் இல்லை. ஏட்டிலே எழுதப் பட்டிருக்கும் மதங்கள் எல்லாம் பொய்கள்! அவைகளில் புகுந்து வீணாக வேண்டாம். சிவம் என்னும் மங்களத்தையே உண்மையென்று கொள்ளுங்கள். அறிவுச் சபையில் உள்ள பகுத்தறிவைக் கண்டறியுங்கள். நீங்கள் நினைத்தவைகளை யெல்லாம் இப்பொழுதே பெறலாம் என்பதே இச் செய்யுளின் கருத்து.

சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்தற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கின்ற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற பாடலையும், மற்றவர்களுடைய பாடல்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்த தென்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

இது வள்ளலார் எழுதிய வசனநடை. இன்று இராமலிங்க பக்தர்களில் சிலர் இதை ஒப்புக்கொள்வதில்லை. இது வள்ளலாரால் எழுதப்பட்டதல்ல. பிற்காலத்தில் மதவெறுப்புக் கொண்டவர்களால் எழுதப்பட்டு, வள்ளலார் பெயரால் வெளியிடப்பட்டது என்று கூறுகின்றனர். இதன் உண்மையைப் பற்றிய ஆராய்ச்சி இங்க வேண்டுவதில்லை. இவ்வெழுத்தில் உள்ள கருத்துக்கள் வள்ளலார்க்கு உண்டா? இல்லையா? என்பதுதான் நமது கேள்வி. அவருடைய பாடல்களையும், ஆறாந் திருமுறையில் அவர் கூறியிருக்கும் புரட்சிகரமான கருத்துக்களையும் காணும் போது இக்கருத்து வள்ளலார்க்கு உண்டு என்றுதான் முடிவு கட்ட வேண்டும். அவர் உள்ளம் அவர் எண்ணம் உயர்வானது என்பதில் ஐயமில்லை. கொடுமை செய்வதற்கு வெறியூட்டும் மதச் சேற்றில் மூழ்க வேண்டாம் என்பதே அவர் கூறும் அறிவுரை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *