வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

40. உண்மைக்கு வெற்றி

உலகில் இன்றுள்ள சாதி, மத, சமய வேற்றுமைகள் எல்லாம் தவிடு பொடியாகித்தான் போகும். அவை இனிமேல் புத்தகங்களிலே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திரமாகப் போய்விடு. நடைமுறையிலே நிலைத்து வாழ்வதற்கு முடியாமல் நாசமாகிவிடும். இதைத்தான் இன்றுள்ள அறிஞர்களும் கூறுகின்றார்கள். புதிய சமுதாய அமைப்புக்குப் பாடுபடுவோர் நம்பிக்கை இதுதான்.

இந்த உறுதியான நம்பிக்கை சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்த இராமலிங்க அடிகளிடம் இருந்தது. இந்த உறுதியுள்ளம் காரணமாகவே புரட்சிக் கருத்துக் கொண்ட புதிய செய்யுட்கள் பலவற்றை அவர் பாடிச் சென்றார். அப்பாடல்களைப் படிப்போர் அனைவரும் அவரைப் போலவே இவ்வுலகம் மாறவேண்டும் என்றே மனத்தில் நினைக்கின்றனர். இவ்வாறு படிப்போர் உள்ளத்தை அள்ளிக் கொள்ளும் பாடல்களாக அமைந்திருக்கின்றன அவை.

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்;
சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்;
நித்திய ஞான நிறை அமுது உண்டனன்;
நிந்தை உலகியல் சந்தையை விண்டனன்.

உண்மையான அறிவுச் சபையென்பது வெளியில் எங்கும் இல்லை. என் உள்ளத்திலேயேதான் இருக்கின்றது அதை நான் கண்டுகொண்டேன்.

என் உள்ளத்திலே உள்ள அறிவுச் சபையில் நடனமாடும் பகுத்தறிவின் மூலம் சன்மார்க்கத்தை அடையும் வெற்றியை நான் பெற்றேன்.

சன்மார்க்க சித்தியைப் பெற்றதனால் தினந்தோறும் அறிவென்னும் நிறைந்த அமுதத்தை உண்டேன்; அதாவது நாள்தோறும் அறிவு நெறியிலேயே நடந்து கொண்டிருக் கின்றேன்.

இதனால் பழிக்கத்தக்க செய்கைகளை யெல்லாம் விட்டேன். நிந்தைக்கு இடமான உலகியல் என்னும் சந்தையைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அதை அகற்றிவிட்டேன்.

இதிலே, உண்மையறிவு உள்ளத்தில் இருக்கின்றது; அதை அறிவது தான் சத்திய சபையைக் காண்பதாகும் என்று எடுத்துக் காட்டினார். அதைக் கண்டவர்களே சன்மார்க்க நெறியைப் பின்பற்ற முடியும் என்றும் இயம்பினார். மேலும் அவர் பாடுவதைப் பாருங்கள்

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது;
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது;
மேதினியில் சாகாத வித்தையைக் கற்றது;
மெய்அருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது.

சன்மார்க்கம் – உலக சன்மார்க்க சமுதாயம் – எப்பொழுது நிலைபெற முடியும்? அழியாமல் வாழ முடியும்? என்பதை இச்செய்யுளிலே கூறியிருக்கின்றார்.

சாதி மதக் கோளாறுகள் – குற்றங்கள் எல்லாம் அடியோடு அழிந்தன. அதன் பிறகுதான் சன்மார்க்கத்தைக் காட்டும் அறிவுச் சபை அழியாமல் நிலைபெற்றது.

சாதிமதச் சழக்கற்று உண்மை நெறியைப் போதிக்கும் அறிவுச் சபை நிலைத்த பிறகு, இவ்வுலகம், என்றும் அடிமைச் சாவுக்கு ஆளாகாமல் இன்பத் தோடும், உரிமையோடும் வாழும் கலையைக் கற்றுக் கொண்டது.

என் உள்ளத்திலும் உண்மையான இரக்கத்தோடு பேரறிவு நிலைத்து நின்றது. சாதி சமயச் சழக்குகள் எல்லாம் ஒழிந்தால் தான் உலகிலே சன்மார்க்கம் பரவும்; அறிவுச் செயல்கள் நிலைத்து நிற்கும்; மக்கள் சமுதாயம் அடிமைச் சாவுக்கு இரையாகாமல் வாழும். உரிமையும் இன்பமும் பெற்று உன்னதமாக வாழும். இந்த உண்மையை இச்செய்யுளால் உரைத்தார்.

உலக சமுதாயம் ஒன்றாகக் கூடாது என்று நினைப்பவர்கள் தந்நலக்காரர்கள்; வஞ்சகர்கள். அவர்கள் சாதி, மத, சமய பேதமற்ற சன்மார்க்க நெறி பரவாமலிக்க முட்டுக் கட்டைகள் போடுவார்கள். அவர்கள் போடும் முட்டுக்கட்டைகளால் சன்மார்க்க நெறியை அடைத்துவிட முடியாது. சன்மார்க்க வெள்ளம் எல்லாக் குப்பை கூளங்களையும் அடித்துக் கொண்டு முன்னேறித்தான் செல்லும், வஞ்சகர்கள் வாய் மூடிக் கொண்டு ஓடிப் போவார்கள். அவர்கள் தாமாகவே சன்மார்க்க சங்கத்தைச் சரணாகதியடைவார்கள். சன்மார்க்க சங்கத்தவர் களுக்குத்தான் இறுதி வெற்றி.

இவ்வாறு வெற்றிக்களிப்புடன் ஆனந்தமாகப் பாடுகிறார் வள்ளலார். அந்தச் செய்யுளைப் பாருங்கள்.

வஞ்சகர் அஞ்சினர்; வாய்மூடிச் சென்றனர்;
வந்து திரும்பவும் வாயிலின் நின்றனர்;
தஞ்சம்! எமக்கருள்! சாமிநீ என்றனர்;
சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர்.

சன்மார்க்க நெறியை அடக்க முயன்ற வஞ்சகர்கள் தம் செயலில் தோல்வி கண்டு பயந்து போனார்கள். ஒன்றும் சொல்ல முடியாமல் வெட்கத்தால் வாய் மூடிப் போனார்கள்.

அவர்கள் தாமாகவே உண்மையுணர்ந்து, உள்ளந் திருந்தி மீண்டும் சன்மார்க்க சங்கத்தின் வாசலிலே வந்து நின்றனர். சாமி நாங்கள் சரணமடைந்தோம்! எமக்கு அருள் செய்வாய்! என்று கெஞ்சினார்கள்.

இதனால் சன்மார்க்கத்தவர்களுக்கே இறுதி வெற்றி கிடைத்தது. உலக மக்களை ஒன்று சேர வொட்டாமல் பிரித்து வைக்க நினைத்தவர்கள் தோற்றார்கள். ஒன்றுபட்ட சன்மார்க்க சமுதாயமாக்க முயன்றவர்களே வெற்றி பெற்றார்கள்!

எதிர்காலத்திலே சாதி, மத, சமய பேதமற்ற உலக சமுதாயந் தோன்றுவதை – உருவாவதை – யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய திடநம்பிக்கை இராமலிங்கரிடம் குடி கொண்டிருந்தது.

பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே;
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே

என்று மேலும் தனது திடநம்பிக்கையைக் கூறியிருக்கிறார். சன்மார்க்கத்திற்கு எதிரான பல மார்க்கங்களும் சிறிதும் பசையில்லாமல் ஒழிந்து போய்விட்டன. இவ்வுலகத்திலே இல்லாமல் மறைந்து விட்டன. உண்மை நெறியாகிய சன்மார்க்கம் ஒன்றுதான் தழைத்து வளர்ந்தது என்று உறுதியோடு உரைத்திருக்கிறார்.

உலகத்திலே ஒன்றுபட்ட சமுதாயம் தோன்றுவது உறுதி என்பது அவர் நம்பிக்கை, அவர் உலகத்தாரை சாதி, மதபேத மற்றபுதிய சமுதாயத்திலே சேரும்படி அழைக்கிறார்.

ஆடாதீர்! சற்றும் அசையாதீர்! வேறு ஒன்றை
நாடாதீர் பொய்உலகை நம்பாதீர்! – வாடாதீர்!
சன்மார்க்க சங்கத்தைச் சார்விர்! விரைந்தினியிங்கு
என்மார்க்க மும்ஒன் றாகுமே.

வஞ்சகர் வார்த்தை கேட்டு நடுங்காதீர்கள்! சிறிதும் அசைய வேண்டாம்; சன்மார்க்கத்தைத் தவிர வேறு ஒன்றையும் தேடாதீர்கள்! உலகில் உள்ள பொய்மைகளை நம்பாதீர்கள்! எதற்கும் துன்பமடையாதீர்கள்! சன்மார்க்க சங்கத்தைச் சேருங்கள்; விரைவிலே இங்குள்ள எல்லா மார்க்கங்களும் சன்மார்க்க மென்னும் ஒரே மார்க்கமாகிவிடும் இதை நம்புங்கள்.

இறுதியாக வடலூரார் முழங்கும் வீர முழக்கத்தைக் கேளுங்கள்.

மார்க்கம்எல்லாம் ஒன்றாகும் மாநிலத்தீர்! வாய்மையிது;
தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே – ஏக்கம்விட்டு
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின்! சத்தியம்நீர்
நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.

இதைவிட உறுதியாக வேறு சொற்களை அமைத்துப் பாட முடியாது. எதிர்காலத்திலே உலகிலே சன்மார்க்கம் ஒன்று தான் ஓங்கும் என்ற கருத்தை மிகுந்த நம்பிக்கையுடன் பறைசாற்றியிருக்கிறார்.

மாநிலத்தவர்களே! கேளுங்கள்! உலகில் உள்ள எல்லா நெறிகளும் ஒரே நெறியாகத்தான் போகின்றது; நான் கூறுவது பொய்யன்று; உண்மையாகும் ஆகையால், உங்கள் தூக்கத்தை விட்டுத் தொலையுங்கள்! உள்ளத்திலே துணிவு கொள்ளுங்கள்! கவலையையும் களைந்து வீசுங்கள்! சன்மார்க்க சங்கத்தைச் சேருங்கள்! சத்தியமாகச் சொல்லுகின்றேன்! நீங்கள் அனைவரும் இப்பொழுதே நன்னெறியை அடைவீர்கள்! இதுவே இப் பாடலின் பொருள்.

வள்ளலாரின் இந்தக் கருத்த முழுவதும் உண்மையென்பதை இக்காலப் போக்கை உற்று நோக்குவார் உணர்ந்து கொள்ளுவார்கள். உலக மக்கள் அன்போடு ஒன்றுபட்டுச் சன்மார்க்க நெறியிலே வாழும் காலம் நெருங்கி வந்து கொண்டே யிருக்கின்றது. விரைவிலே இது நிறைவேற உழைப்பதே அறிஞர் கடமை.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *