வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

23. அதிகார வெறி

நம்முடைய உடம்பை நடத்துவன எவை ? நமது வெளி உறுப்புக்களும் உள் உறுப்புக்களுமே. இந்த உறுப்புகள் இல்லா விட்டால் நம் உடம்பு வெறும் மாமிசப் பிண்டந்தான். இந்த இருவகை அவயங்களும் பழுதற்றனவாக இருத்தல் வேண்டும். கைகால்கள் நொண்டி முடமாக இருந்தால் கண்கள் குருடாக, காதுகள் செவிடாக இருந்தால், உடம்பால் நல்ல காரியங்களைத் திறம்படச் செய்ய முடியாது. இதுபோலவே நமது எண்ணம், சிந்தனை, பேச்சு முதலியன தெளிவற்றனவாக ஆராய்ச்சி யற்றனவாக இருந்தால் நாம் எந்தக் காரியத்திலும் வெற்றி பெறமாட்டோம். இந்த நிலை ஒரு அரசாங்கத்துக்கும் பொருந்தும்.

அரசாங்கம் என்பது வெறும் உடல்தான். அதற்கு உள்ளுறுப்புக்களாகவும் வெளியுறுப்புக்களாகவும் விளங்குவன ஆலோசனை சபையும், அதிகார வர்க்கமும்தான். அரசியல் ஆலோசனை சபையில் உள்ளவர்கள் எந்தக் காரியங்களைப் பற்றியும் நன்றாக யோசிக்க வேண்டும். அதன் பின்பே முடிவு செய்ய வேண்டும். அவசரப்பட்டு இப்பொழுது இப்படிச் செய்து விடுவோம்; பிறகு யோசித்து முடிவு செய்து கொள்ளுவோம் என்று கூறுகின்றவர்கள் அரசியல் நிபுணர்கள் ஆகமாட்டார்கள்.

அரசியல் ஆலோசகர்கள் செய்யும் முடிவு தேசத்தின் முற்போக்குக்கு அணை போடுவதாக இருத்தல் கூடாது. பொது மக்களின் உணர்ச்சிக்கு மதில் சுவராக அமையக்கூடாது. ஆலோசனை சபையில் அங்கம் வகிப்போர், தங்களுடைய சொத்து சுதந்தரத்துக்கு மாத்திரம் பாதுகாப்பு அளித்துக் கொண்டு பொதுமக்களின் நலன்களைக் காற்றில் பறக்க விடுபவர்களாக இருக்கக்கூடாது.

ஒரு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் உண்மையான அரசியல் சபை சட்டசபை தான். நகரசபைகள், பஞ்சாயத்து சபைகள் கூட அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் சபைகள் தாம். ஆகையால் இவைகளுக்கு உறுப்பினராகச் செல்வோர் அதிகாரத்திற்கு ஆசைப்படாதவர்களாக இருக்க வேண்டும். தந்நலமற்றறவர்களாக, பொது ஜன முன்னேற்றத்தில், நன்மையில் கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். சாதி மத இனவெறுப் பற்றவர்களாகவும், எல்லா மக்களையும் உடன்பிறந்தாராக எண்ணும் சமரச உள்ளம் படைத்தவராகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய தியாக சிந்தை உள்ளவர்கள் நிறைந்த ஆலோசனை சபைகளால்தான் நாட்டை உயர்வாக உருவாக்கி வைக்க முடியும்.

ஆலோசனை சபைகளைக் காட்டிலும் முக்கியமானது அதிகார வர்க்கம். ஆலோசனை சபைகள் வரையறுக்கும் சட்ட திட்டங்கள் நடத்தி வைப்பது அதிகாரவர்க்கம்.

நெருப்பு, மக்களுக்கு – உலகத்திற்கு இன்றியமையாத ஒரு இயற்கைப் பொருள். நெருப்பின்றேல் உஷ்ணமில்லா அதே நெருப்பைக் கொண்டு உலகத்தை அழித்துவிடலாம்; மக்கள் வாழ்க்கையைச் சிதைத்து விடலாம். மின்சாரம் நம்முடைய நன்மைக்காக ஏற்பட்டது. இதையே நம்முடைய அழிவுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுகிறோம். இதைப்போலவே நாட்டின் நன்மைக்காகவே மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற் காகவே இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைக் கொண்டே நாட்டில் தீமையைப் பெருக்கி விடலாம். மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை அடிமைச் சேற்றில் பலவந்தமாக அமிழ்த்தி வைக்கலாம். சட்டதிட்டங்களைக் கையாளும் அதிகார வர்க்கத்தின் போக்கைப் பொறுத்தது இவ்விஷயம்.

ஒரு நாட்டில் அமைதி நிலவுவதற்குக் காரணம் அதிகார வர்க்கமே. ஒரு நாட்டில் கலகமும் குழப்பமும், பஞ்சமும் பிணியும், கொள்ளையும் கொலையும் குடியேறுவதற்குக் காரணமும் அதிகாரவர்க்கமே.

அரசாங்கத்தின் வெளி அங்கங்களாக இருக்கின்றன அதிகார வர்க்கம் தங்களை மக்களுக்கு அதிகாரிகளாக நினைத்துக் கொண்டால் வந்தது ஆபத்து. அவர்கள் உண்மையாகவே தங்களை அரசாங்கமென்னும் உடலின் கண்களாக, கால்களாக, கைகளாக, காதுகளாக நினைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அரசாங்கத்தை அரசாங்க காரியங்களைத் திறம்பட ஒழுங்காக நடத்தும் நல்லெண்ணம் அவர்களிடம் குடிகொள்ளும்.

உண்மையில் ஒரு நாட்டை நாடாக ஆக்கி வைத்திருப்பவர்கள் வேளாண்மை செய்வோரும், பண்டங்களை உற்பத்தி செய்வோரும் ஆகிய தொழிலாளர்களேயாவர். உடல் வருந்த உழைக்கும் தொழிலாளர்கள் இல்லாவிட்டால் எந்த நாடும் சுடுகாடாகத் தான் கிடக்கும். இவ்வுண்மையை அதிகார வர்க்கம் அறிந்தால்தான் அவர்கள் தங்களை நாட்டின் ஊழியர்கள் என்று உணர்வார்கள்; நாட்டுப் பொதுமக்களே தங்களுக்குத் தலைவர்கள் என்று காண்பார்கள்.

அதிகார வர்க்கத்திற்கு மனித சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் நாட்டின் மக்களின் அரசாங்கத்திள் ஊழியராக இருப்பதற்கு விரதம் பூண்டவர்களையே அதிகார பீடங்களில் அமர்த்த வேண்டும்.

மக்களுக்குத் தொண்டு செய்வதே நமது கடமை; நாட்டிலே பஞ்சம் பிணி வராமல் பாதுகாப்பதே நமது கடமை; கட்டுப் பாட்டோடும், ஒழுங்கோடும் நடப்பதற்குப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவதே நமது செய்கை; மக்களுக்குள் அன்பும், சகோதரத் தன்மையும் வளரச் செய்து நாட்டின் உற்பத்திப் பெருக்கில் எல்லோர் உள்ளத்தையும் ஈடுபடச் செய்வதே நமது வேலை என்று கருதும் உயர்ந்த மனப்பான்மை அரசாங்க ஊழியர்களுக்கு அவசியமானதாகும்.

சுரண்டும் கூட்டத்தாருக்கு பதுக்கல் கொள்ளைக்காரர் களுக்குக் கால்கொடுக்கும் அதிகார வர்க்கமே ஒரு நாட்டின் புல்லுருவி; அந்த அதிகாரவர்க்கமே அந்த நாட்டில் பொது ஜனப் புரட்சியை உருவாக்கி அரசாங்கத்தைத் தகர்க்கும் சதிகாரக் கும்பல்.

தந்நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அரசாங்கத்தின் சட்ட திட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகார வர்க்கம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் காவல்காரனே திருடத் தொடங்கிவிட்டால் பிறகு யார்தான் திருடமாட்டார்கள்? சட்டத்தை அமுல் நடத்தும் அதிகாரியே அதை மீறினால், பொதுமக்கள் எப்படி சட்டத்திற்கு மதிப்புக் கொடுப்பார்கள்.

தமக்கு என்ன ஆபத்து வருவதாயிருந்தாலும் சரி, அல்லது எவ்வளவு லாபம் வருவதாயிருந்தாலும் சரி, அவற்றைப் பொருட் படுத்தாமல் நடுநிலைமையோடு நடந்து கொள்ளும் தன்மை அதிகாரவர்க்கத்துக்கு வேண்டும். கல்நெஞ்சம் இன்றி இளகும் இருதயம் படைத்திருக்க வேண்டும். தன்னுடைய சிறு அதிகாரத்தைப் பெரிதாகக் கருதக் கூடாது. மக்களுக்குத் தீங்கு செய்யாத தூய மனம் படைத்திருக்க வேண்டும். பொய்யை வெறுத்து, மெய் பேசி, உண்மை இத்தகைய பண்புடையவர்களே அரசாங்கத்தின் அங்கங்களாக – அதிகாரிகளாக ஊழியர்களாக இருக்கத் தகுதியுடையவர்கள். இக்குணங்களுக்கு மாறான குணங்களைப் பெற்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பார்களானால் நாடு பாழாகும். அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை அச்சமும் அவலமும், பசியும் பிணியும், கலகமும் குழப்பமும் புகுந்து பாழ்படுத்தும்.

நடுநிலை யில்லாக் கூட்டத்தைக் கருனை
நண்ணிடா அரையரை, நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக்
கேடரைப் பொய்யல்லால் கிளத்தாப்
படுநிலை யவரைப், பார்த்தபோ தெல்லாம்
பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடையெலாம் கண்டே
வெருவினேன்! வெருவினேன் எந்தாய் !

என்பது வள்ளலார் வாசகம். அதிகார வர்க்கமும் அரசும் எப்படி இருக்கவேண்டும் என்பதை இதனால் விளக்கிக் கூறினார்.

பணத்திற்கு ஆசைப்பட்டுக் கையுறை வாங்கிக் கொள்வது; நீதியை அழிப்பது; நடுநிலைமை தவறி நடப்பது; இச்செயல்களைக் கொண்ட அதிகாரிகளைப் பார்க்கவே நான் அஞ்சு கின்றேன்.

கருணையற்ற ஆட்சியாளரை அரசரைப் பார்த்தாலே பயமாயிருக்கின்றது.

கையிலே சிறு அதிகாரம் கிடைத்துவிட்டாலே போதும்; அதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும், பிறருக்கு தீமை செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றவர்கள் மகா கொடியவர்கள்; கேடு செய்பவர்கள். இவர்களைக் காணவும் அஞ்சுகின்றேன்.

மறந்தும்கூட மெய் பேசுவதேயில்லை; பொய்யையே எப்பொழுதும் பேச்சாகக் கொண்டிருப்பவர்கள்; இவர்கள் படுமோசக்காரர்கள். இவர்களைக் காணும்போதும் நான் அஞ்சுகின்றேன்.

இவ்வாறு சுத்த சன்மார்க்கத்தைக் கைவிடுகின்ற நிலையிலே செல்லும் உலக நடையைக் கண்டு அஞ்சினேன்! எந்தையே! மிகவும் பயந்து போனேன்!

இதுவே மேற்காட்டிய செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். இதனால் அநீதியிழைக்கும் அதிகாரவர்கத்தை வள்ளலார் எவ்வளவு வெறுக்கிறார் என்பதைக் காணலாம்.

வள்ளலார் காலத்திலே இந்நாட்டில் வெள்ளையர் ஆட்சி வேரூன்றியிருந்தது. அவர்கள் அதிகாரச் செருக்குடன் மக்கள் மேல் ஆணை செலுத்திவந்தனர்; அக்காலத்தில், அரசாங்கத்தைப் பற்றி மக்கள் ஒரு வார்த்தை பேச முடியாது. அதிகார வர்க்கம் வைத்ததே சட்டமாக இருந்தது. மக்கள் அதிகார தேவதைகளைக் கண்டு அஞ்சி நடுங்கி அடங்கி வாழ்ந்தனர். இந்த நிலையை நேரில் கண்டே இவ்வாறு கூறினார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *