
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
11. மனிதப் பண்பு
மற்ற உயிர்களைக் காட்டிலும் மக்களிடத்திலே ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்தத் தனிச்சிறப்புக் காரணமாகவே மக்கள் தரணியிலே உயர்ந்து வாழ்கின்றனர். மற்றப் பிராணிகளை யெல்லாம் அடக்கி ஆள்கின்றனர்.
எந்த மனிதனும் பிறருடைய உதவியின்றித் தனித்து வாழ முடியாது. மக்கள் எல்லோரும் அறிந்தோ அறியாமலோ வாழ்க்கையிலே ஒன்றாகப் பின்னிக் கிடக்கின்றனர். இந்தப் பின்னலைப் பலர் அறிவதில்லை.
ஒரு கூட்டத்தார் வெயிலிலும், மழையிலும், பனியிலும் நின்று கழனிகளிலும் காடுகளிலும் உழைக்கின்றனர். அவர்கள் உழைப்பின் பலனால் உண்டாகும் விளைபொருள்களை எத்தகைய உழைப்பற்றவர்களும் உண்டுகளித்து உறங்குகின்றனர்.
ஒரு கூட்டத்தார் யந்திரசாலைகளிலே அடைந்து கிடந்து நூல் நூற்றுக் கொடுக்கின்றனர். மற்றொரு கூட்டத்தார் அந்நூலை ஆடையாக்கித் தருகின்றனர் இத்தொழில்களைச் செய்தறியாத கோடிக்கணக்கான மக்கள் அவ்வாடைகளை அலங்காரமாக அணிந்து ஆடம்பரமாக வாழ்வு நடத்துகின்றனர்.
எங்கோ ஒரு தொழிற்சாலையிலே ஒரு சிலரால் செய்யப் படுகின்ற துணி தைக்கும் ஊசி, துணி வாங்கும் சக்தியற்ற ஏழை மக்களின் கிழிந்த ஆடைகளைத் தைக்க உதவுகின்றது.
சில மக்களால் செய்து விற்பனை செய்யப்படுகின்ற தையல் யந்திரம் பல மக்களை அலங்கரிக்க உதவி செய்கின்றது.
இவ்வாறு மனித சமூகம் செய்துவருகின்ற தொழில்களை எண்ணிப் பாருங்கள்; அந்தத் தொழில்களின் பலன்களை அனுபவிக்கும் மக்களை நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் பல மனிதர்களால் செய்யப்பட்ட பல பண்டங்கள் தேவையாகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் பல நாட்டுப் பண்டங்கள் வேண்டப்படுகின்றன.
ஆதலால் ஒரு மனிதனாவது பிறர் உதவியின்றித் தனித்து வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு சமூகம் மற்ற சமூகத்தின் உதவியின்றித் தனித்து வாழமுடியாது. ஒரு மாகாணம் மற்ற மாகாணங்களின் உதவியின்றி ஒதுங்கி வாழமுடியாது. இவை போல ஒரு நாடு மற்றொரு நாட்டின் கூட்டுறவின்றிக் குதூகலமாக வாழமுடியாது.
இந்த உண்மையை உலகமக்கள் அறிவார்களானால் உலகிலே ஒற்றுமை மரம் விழுதூன்றித் தழைக்கும்.
உண்மையான மனிதத் தன்மையென்பது எத்தகைய பேதமும் இன்றி எல்லோரும் ஒத்து வாழ்தல் தான்.
ஆண்மக்கள் பெண்மக்கள் முதலியவர்களிடத்தும் சாதி, சமயம், ஆச்சிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாத்திர சம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி எல்லவர்களும் தம்மவர்களாய் சமத்திற் கொள்ளுதலாம் என்பது வள்ளலார் வாக்கு. மனித சமூக வாழ்வின் உயிர் நாடியை உணர்ந்த மக்கள்தான் இத்தகைய உயர்ந்த மனோபாவத்துடன் வாழமுடியும். இந்த உயர்ந்த மனப்பான்மையுடையவனே உண்மை மனிதன். அவனே பூரண மனிதத்தன்மை உள்ளவனும் ஆவான். இந்த மனிதத்தன்மையைப் பற்றி ஒரு பாடலில் விளக்கமாகக் கூறியிருப்பதைப் பாருங்கள்.
சாதி, மதம், இனம், நிறம், தேசம் பாஷை நாகரிகம் ஆகிய எந்த வகையிலும் பேதம் பாராட்டக் கூடாது. எல்லாவுயிர் களையும் தம்முடைய உயிரைப் போலவே எண்ணவேண்டும். இது வெளிவேஷமாக இருந்தால் பயனில்லை. உள்ளத்திலே இந்த வகையான ஒற்றுமை எண்ணம் அமைந்திருக்க வேண்டும். எல்லா உயிர்களோடும் உறவு கொண்டாடி உவப்படைய வேண்டும்.
இப்படிச் செய்கின்றவர் யாரோ அவருடைய மனந்தான் களங்கமற்ற அறிவு வடிவாகும் அந்த அறிவில்தான் எம்பெருமான் அன்புருவில் நடம் புரிவான். அதுதான் அன்பு நடனம் புரியும் இடம். இந்த உண்மையை நான் உணர்ந்து விட்டேன்.
இத்தகைய அறிவுடையவர்களின் பாதத்திற்குத் தொண்டு செய்யவே என் மனம் விரும்புகின்றது. இத்தகைய மனிதத் தன்மையுடைய பேரறிவாளரைப் பின்பற்றித் தொண்டு செய்யவே ஆசைப்படுகின்றேன்.
எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி, உள்ளே
ஒத்து, உரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்? அவர் உளந்தான் சுத்த
சித்துஉருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்; என, நான் தெரிந்தேன்; அந்த
வித்தகர்தம் அடிக்குஏவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ
இந்த அன்புருவப் பாடலை அகமுருகிப் பாடுகின்றனர் பலர். ஆனால் அவர்கள் உள்ளத்திலே இத்தகைய உயர்ந்த ஞானம் குடிகொண்டிருக்கிறதா? அவர்களுடைய செயல்களிலே இந்தப் பாட்டின் வாடை பரிமளிக்கின்றதா? இத்தகைய மனிதத் தன்மையைக் கொண்ட மக்கள் சமுதாயம் வளர்ந்து தழைப்பதைக் காண்பது எந்நாள்?
இத்தகைய மனிதத்தன்மை வேண்டும் என்பதை நம்முடைய கலைகள் ஒத்துக் கொள்ளுகின்றன; சமயங்கள் எல்லாம் ஒத்துக் கொள்ளுகின்றன; பெரியோர்கள் எல்லோரும் ஒத்துக் கொள்ளுகின்றனர். ஆனால் நடைமுறையிலே ஒன்றும் நடப்பதில்லை: வாயளவிலே சமரசம்பேசி வாழ்கின்ற மக்களே பலர். உள்ளத்திலே சமரசம் கொண்டோர் ஒரு சிலர்தான். ஆனால் இன்றைய தலைமுறையில் இந்தச் சமரச மனப் பான்மை வளர்ந்துவருகிறது. இவ்வளர்ச்சி நிச்சயம் பயன் அளிக்கும் என்பது உறுதி:



