
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
21. எல்லார்க்கும் செல்வம்
சாதி இரண்டொழிய வேறில்லை. கொடுப்போர் ஒரு சாதி, கொடாதவர்கள் ஒரு சாதி. கொடுப்போர் உயர்ந்தவர்கள். கொடாதவர்கள் இழிந்தவர்கள், ஆகையால் சாதிகள் பல சொல்லிச் சண்டையிட்டுச் சாக வேண்டாம் என்றார் ஔவைப் பிராட்டியார். பணம் படைத்தவன் கொடுக்கும் தன்மை யுள்ளவன்; பணமில்லாதவன் வாங்கும் தன்மையுள்ளவன். ஆகவே, பணக்காரன் ஒரு சாதி, ஏழை ஒரு சாதி. இதுவே ஔவையார் கருத்து.
இன்று உலகில் மக்கள் இரு அணியாகப் பிரிந்து நிற்கின்றனர். இல்லாதவர்கள் அதாவது பாடுபகிறவர்களின் அணி ஒன்று; உள்ளவர்கள் அதாவது இல்லாதவர்களை அடக்கியாளுவோர் அணி ஒன்று. ஆக இரண்டே அணிதான்.
இந்தச் செல்வர் படைக்கும், ஏழைகள் படைக்கும் சமாதானம் ஏற்பட வேண்டும் அல்லது இரு படைகளில் எந்தப் படையேனும் தோல்வியடைய வேண்டும். அப்பொழுதுதான் மனித சமுதாயத்தில் சமாதானம் தோன்றும். இந்த இரண்டில் ஒன்று நடைபெறாவிட்டால், சமூகத்தில் சண்டையும் சச்சரவும் குமுறிக்கொண்டுதான் இருக்கும்.
இல்லாதவர்களின் கூட்டத்துக்கும் உள்ளவர்களின் கூட்டத்திற்கும் இடையில் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் இல்லாதவர்களும் அல்லர்; உள்ளவர்களும் அல்லர். இல்லா தவர்கள் கேட்கும் வசதிகள் எல்லாம் தங்களுக்கும் வேண்டும் என்பர்; உள்ளவர்கப்போல நடிப்பர். துன்பப் படாமல் இன்பத்தை நுகரவேண்டும் என்பதே இந்த நடுத்தர வாதிகளின் நோக்கம்.
இவர்கள் உள்ளவர்களின் கைப்பதுமைகள். இல்லாதவர் களிடம் இவர்களுக்கு அனுதாபம் உண்டு; இரக்கம் உண்டு. உள்ளவர்கள் செய்வதில் அநியாயம் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளுவார்கள்; இல்லாதவர்கள் கூறும் குறைகளெல்லாம் உண்மையானவை என்று ஒப்புக் கொள்ளுவார்கள். ஆனால் இவர்கள் தங்கள் சுயநலம் கருதி, உள்ளவர்கள் பக்கத்திலேயே நிற்பார்கள். உள்ளவர்கள் கைகள்தான் பலமுள்ளவை என்பது இவர்கள் கருத்து. உள்ளவர்களின் கோட்டை உடைந்து போய் விடும்; இல்லாதவர்களின் படை வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை நேரும்போது இந்த நடுத்தரவாதிகள், பெரும்பான்மை யினர் பக்கம் சேர்ந்துவிடுவார்கள்.
இந்த முறையில் பார்க்கும்போது, இப்பொழுதுள்ள மனித சமூகத்தை மூன்று பிரிவாகப் பிரித்துவிடலாம். முதலாளிகள், தொழிலாளிகள், நடுத்தர வகுப்பினர் என்ற மூன்றுதான் அப்பிரிவு.
நாட்டில் உள்ள நிலங்களை யெல்லாம் தம் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் ஒருசிலர். பண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை யெல்லாம் தங்களுக்கே உரிமை யென்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர் சிலர். பண்டங்களை யெல்லாம் வாங்குவதற்குக் கருவியான நாணயச் செலாவணி ஒருசிலரின் இரும்புக் பெட்டிகளுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. இவ்வாறு தேசத்தின் செல்வங்களையெல்லாம் தமக்கே உரிமையாக்கிக் கொண்டிருப்போரே முதலாளிகள் ஆவார்கள்; அல்லது உயர்ந்த வர்க்கத்தினர் ஆவார்கள்.
இவர்களுக்கு நேர்மாறாக உள்ள, இல்லாத வகுப்பினருக்கு இவ்வுலகில் எதுவும் சொந்தம் இல்லை. உழைப்பு ஒன்றுதான் அவர்களுக்குச் சொந்தம். நிலங்களில் வேலை செய்வார்கள்; உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வார்கள்; அரை வயிற்றுச் சோற்றுக்குக் கூட வழியில்லாமல் ஆவி துறப்பார்கள். அவர்கள் பெண்டு பிள்ளைகள் எல்லாம் பட்டினி கிடந்து பரிதவிக்கும் நல்ல அழகிய ஆடைகளை நெய்து குவிப்பார்கள்; அவர்களும், அவர்களை அண்டி வாழ்வோரும் கந்தைத் துணியுடன் காட்சியளிப்பார்கள்! எல்லா வசதிகளும் நிறைந்த எழில் வளரும் மாளிகைகளை எழுப்புவார்கள்; அவர்கள் குந்தக் குடிசையின்றிக் குளிரிலும் வெயிலிலும் அகப்பட்டு வருந்தி நெஞ்சு குமுறுவார்கள் ! இம்மாதிரி உள்ளம் வருந்தி, உடல் வற்றி, உயிர் விடுகின்றவர்கள் தாழ்ந்த வகுப்பினர்; கடைசி வர்க்கம் இவர்களே அன்று சூத்திரர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்; இன்று பாட்டாளி மக்கள் தொழிலாளர்கள் என்று வேறு பெயரால் அழைக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு இடையில் உள்ளவர்கள் நடுத்தர வகுப்பினர். இவர்கள் முதலாளிகளிடம் கணக்கப் பிள்ளைகளாக இருப்பர்; காரியதர்களாக இருப்பர்; அவர்கள் இட்ட கட்டளைகளைச் செய்வார்கள். அரசாங்கக் காரியாலயங்களில் பற்றாக்குறைச் சம்பளத்துடன் வேலை பார்ப்பார்கள். இவர்களும் முதலாளி களைப் போல ஆக முயற்சிப்பார்கள். தங்களையும் முதலாளிகளாக நினைத்துக் கொண்டு அவர்களோடு ஒட்டிக் கொண்டே திரிவார்கள். இவர்களுடைய துணை உதவி ஊழியம் இல்லா விட்டால் முதலாளிகள் வாழமுடியாது. இவர்கள்தாம் நடுத்தர வகுப்பினர்.
ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
ஒருமையுளர் ஆகிஉல கியல்நடத்த வேண்டும்.
இது வள்ளலார் வாக்கு, நடுத்தர வகுப்பினரும், பாட்டாளி மக்களும், முதலாளி வர்க்கமும் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒரு மனத்தினர் ஆகி, உலகத்திலே இன்புற்று வாழவேண்டும்; உலகக் காரியங்களைத் திறம் பெற நடத்தவேண்டும்.
ஒத்தார் என்பவர்கள் நடுத்தர வகுப்பினர். தாழ்ந்தார் என்பவர்கள் பாட்டாளி வர்க்கத்தினர். உயர்ந்தார் என்பவர்கள் முதலாளி வர்க்கம். இம்மூவரும் இல்லாத உலகமே உயர்ந்த உலகம், இம்மூன்று வர்க்கமும் ஒழிந்து விட்டால் மக்கள் எல்லாரும் ஒருமையுளர் ஆகிவிடுவார்கள்.
இந்த நடுத்தர வகுப்பினர் இல்லாவிட்டால் முதலாளித்துவம் ஒழிந்துவிடும். முதலாளிகள் சிறுபான்மையினர்; பாட்டாளிகள் பெரும்பான்மையினர். இருவருக்கும் நேரடியான சச்சரவு நேர்ந்தால், முதலாளித்துவம் சடசட எனச் சாய்ந்துவிடும். தொழிலாளர்களின் மோதுதல் முதலாளித் துவத்தைக் தாக்காதபடி இடைநின்று தடுத்து நிற்கும் குட்டிச் சுவர் இந்த நடுத்தர வர்க்கந்தான்.
இந்த நடுத்தர வர்க்கம் மறைந்து விட்டால் முதலாளி தொழிலாளி சண்டைமயும் மறைந்துவிடும். சமூகம் ஒன்றாகி விடும். முதலாளித்துவம் அளவுக்குமேல் வலுக்க வலுக்க நடுத்தர வர்க்கம் நசித்துக் கொண்டே வரும். முதலாளித்துவமும் வலுத்து, நடுத்தர வர்க்கமும் நசிந்து விட்டால், உடனே பாட்டாளி வர்க்கமும், முதலாளி வர்க்கமும் சண்டையின் மூலமோ, சமாதானத்தின் மூலமோ ஒன்றுபடுவிடுவார்கள். இவ்வாறு ஒன்றுபடும் காலமே உலகில் அமைதி நிலவும் காலம்.
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி ஆங்கு.
என்று திருவள்ளுவர் கூறினார். பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகில் இன்பம், புகழ் பெருமை இல்லாததைப் போல, அருள் இல்லாதவர்க்கு மறுவுலகில் இன்பம் இல்லை. இவ்வுலக இன்பத்திற்கு முதற்காரணம் பொருள்தான்; துன்பத்திற்கு முதற் காரணம் வறுமைதான்.
வடுவிலா வையத்து மன்னிய மூன்றின்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
என்பது நாலடி. அறம், பொருள், இன்பம் இம்மூன்றில் நடுவில் உள்ள பொருள் கிடைத்தால், இரு பக்கத்திலும் உள்ள அறமும் இன்பமும் கிடைக்கும் என்பது இதன் கருத்து.
ஆகவே, மக்கள் எல்லோருக்கும் எல்லாச் செல்வமும் கிடைக்க வேண்டும். எல்லாச் செல்வமும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமானால் இப்பொழுது சமுதாயத்தில் உள்ள மூன்று வர்க்கமும் ஒரு வர்க்கமாக வேண்டும் இந்த மூன்று வர்க்கமும் ஒன்றுபடவேண்டும் என்றே விரும்பினார் வள்ளலார்.



