
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
2. திருஅருட்பா
இராமலிங்க சுவாமிகளின் பாடல்களுக்குட் திரு அருட்பா என்று பெயர். இது ஆறு திருமுறைகளாக அமைந் திருக்கின்றது. எல்லாம் தோத்திரப் பாடல்கள். சுவாமிகளின் புலமைத் திறத்தை இப்பாடல்களிலே காணலாம்.
அச்சிலே வெளிவந்திருக்கும் அருட்பாவில் 6500-க்கு மேற்பட்ட பாடல்கள் அடங்கியிருக்கின்றன. அடிகளின் பாடல்கள் பல இன்னும் அச்சில் வராமல் இருக்கின்றன என்றும் கூறுகின்றனர்.
இராமலிங்க அடிகள் கவிஞர் மட்டும் அன்று; உரைநடை ஆசிரியர்; உரையாசிரியர். உரைநடையிலே பல செய்திகளை எழுதியிருக்கின்றார். சீவகாருண்ய விளக்கம், மனுமுறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூல்கள் பலராலும் பாராட்டப்படுகின்றன; அவைகளிலே, சிறந்த கருத்துக்கள் பலவற்றைக் காணலாம்.
வள்ளலார்க்கு இசைத்தமிழ் உணர்ச்சியும் உண்டு. இதை அவர் பாடியிருக்கும் இசைப் பாடல்களால் அறியலாம். கீர்த்தனை போன்ற பாடல்களும், அருட்பாவிலே காணப்படுகின்றன.
வள்ளலார் சிறந்த மருத்துவராகவும் விளங்கினார். மக்கள் உடலை நோயின்றி வைத்துக்கொள்வது எப்படி என்பதற்கான வழிகளை உரைநடையிலே எழுதியிருக்கின்றார். நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல் என்ற தலைப்பிலே அவர் எழுதியிருக்கும் உரைநடை குறிப்படத்தகக்கது. அதில் அவருடைய மருத்துவ நூல் அறிவைக் காணலாம்.
இராமலிங்க அடிகள் ஆழ்ந்த சிவபக்தி உள்ளவர்; ஆயினும் அவர் உள்ளத்திலே பிற மத வெறுப்போ, பிற தெய்வ நிந்தனையே குடியேறவேயில்லை. சிவபெருமானைப் பற்றி, முருகனைப் பற்றி, விநாயகரைப் பற்றி, வடிவுடை மாணிக்கம், பெரியநாயகி அம்மை முதலிய சக்தி வடிவங்களைப் பற்றி அவர் பாடியிருக்கும் பாடல்கள் படிப்போர் உள்ளத்தை உருக்குவன.
இலக்குமி, கலைமகள், திருவெவ்வளுர் வீரராகவப் பெருமாள், இராமபிரான், திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் இவர்களைப்பற்றி அவர் பாடியிருக்கும் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன.
அருட்பாப் பாடல்கள்; இனிய பாடல்கள்; எளிய பாடல்கள்; பலருக்கும் பொருள் விளங்கும் பாடல்கள். இவைகள் மட்டும் அல்ல; பல சிறந்த முற்போக்கான கருத்துக்கள் இப்பாடல்களிலே காணப்படுகின்றன; சிறந்த அறிவுரைகளும் அமைந் திருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டிலே பிறந்த தமிழ்ப் பாடல்களிலே இராமலிங்க அடிகளின் பாடல்களுக்கு இணையாக எதையும் சொல்ல முடியாது.
தெய்வ மணிமாலை என்பது ஐந்தாம் திருமுறையில் உள்ளது; 31 பாடல்களைக் கொண்டது; சென்னைக் கந்தசாமிக் கோவிலில் குடிகொண்டிருக்கும் முருகனைப்பற்றிப் பாடியது. அதில் ஒரு பாடல்:
ஒருமையுடன் நினது திரு மலர்அடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்;
உள் ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்;
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும்; பொய்மை
பேசாது இருக்க வேண்டும்;
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்; உனை
மறவாது இருக்க வேண்டும்;
மதிவேண்டும்; நின்கருணை நிதி வேண்டும்; நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்;
தருமம்மிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்த வேளே!
தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!
நல்லவர் நட்பு வேண்டும்; வஞ்சகர் உறவு கூடாது; எப்பொழுதும் இறைவனைப் பற்றியே பேச வேண்டும்; பொய் பேசக் கூடாது; பெண்ணாசை கூடாது; இறைவனை மறத்தல் கூடாது; நல்லலறிவு வேண்டும். இறைவன் கருணை வேண்டும்; நோயின்றி நல்லுடம்புடன் இவ்வுலகில் வாழ வேண்டும் என்ற கருத்துக்களை இப்பாடலிலே காணலாம். சிறந்த கருத்துக்களை எளிய நடையிலே கூறியிருக்கும் இதுபோன்ற பாடலை வேறு எங்கும் காணமுடியாது.
ஸ்ரீ ராமநாமத் திருப்பதிகம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் ஆறாம் திருமுறையில் காணப்படுகின்றன. அதில் ஒரு பாடல்:
அறம்பழுக்கும் தருவே! என் குருவே! என்தன்
ஆருயிருக்கு ஒரு துணையே! அரசே! பூவை
நிறம்பழுக்க அழகு ஒழுகும் வடிவக் குன்றே
நெடும்கடலுக்கு அணையளித்த நிலையே! வெய்ய
மறம்பழுக்கும் இலங்கை ராவணணைப் பண்டு ஓர்
வாளியினால் பணிகொண்ட மணியே! வாய்மைத்
றம்பழுக்கும் சீராமா! வள்ளலே நின்
திருவருளே அன்றிமற்றோர் செயல் இலேனே.
இராமனைப் போற்றும் இப்பாடலிலே அமைந்திருக்கும் சிறந்த கருத்து குறிப்பிடத்தக்கது. இராமனை அறத்தின் வடிவம், உண்மையின் உருவம் என்று குறிப்பிடுகின்றார். அறம் பழுக்கும் தருவே! வாய்மைத் திறம்பழுக்கும் சீராமா என்ற தொடர்கள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. கொடிய பாவத்தின் உருவமே இராவணன் என்று குறிப்பிடுகின்றார். வெய்ய மறம்பழுக்கும் இலங்கை ராவணனை என்ற தொடர் இவ் வுண்மையை உணர்த்தும்.
இராமனைப் பற்றியும், இராவணனைப் பற்றியும் கம்பன் கொண்ட கருத்தை இச்செய்யுளிலே காணலாம். அறம் வெல்லும்; பாவம் தோற்கும் என்ற இராமாயணத்தின் மூலக் கருத்தையும் இப்பாடலிலே காணலாம்.
திருஅருட்பாவில், முதல் ஐந்து திருமுறைகளைக் காட்டிலும் ஆறாம் திருமுறையிலே அரும்பொருள்கள் பல அடங்கியிருக் கின்றன. மூடநம்பிக்கைகள், சாதிபேதம், மதவெறி, அரசியல் கொடுமை, ஏழைகளைத் துன்புறுத்தும் வஞ்சகர்கள் வாழ்வு இவைகளையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கும் பாடல்கள் நிரம்பியிருக்கின்றன.
மனிதன் படிப்படியாக அறிவியேல சிறந்து வளர்ந்து வருகிறான். நல்லவர்கள்., உண்மையைக் காண வேண்டும் என்ற உணர்ச்சியுள்ளவர்கள், வயதேற வயதேற அறிவு வளர்ச்சி பெறுவது இயற்கை. இந்த உண்மையை இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அருட்பாவை முதலிலிருந்து இறுதிவரையிலும் படிப்போர் இவ்வுண்மையை உணர்ந்துகொள்ளலாம்.
இன்று இராமலிங்க அடிகளைக் கொண்டாடுவோர் பலர்; ஆயினும் அவர் கருத்தைப் பின்பற்றி நடப்போர் சிலராவது உண்டா என்பது சந்தேகந்தான். சுரண்டலைக் கண்டிக்கும் இராமலிங்க அடிகளை, சுரண்டுவோர்கள் தங்களுக்கு மறைவிடமாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். மூடநம்பிக்கையாளர்கள், சாதிபேதம் பாராட்டுவோர், பிறருக்குத் தீமை செய்ய அஞ்சாதவர்கள் இவர்களெல்லாம் கூட இராமலிங்க அடிகளைத் தங்களை மறைக்கும் திரைச்சீலையாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர்.
இராமலிங்க அடிகள் உலகம் திருந்த வேண்டும் என்று எண்ணினார்; உலக மக்கள் ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டி ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணினார்; மனிதர்க்கு மனிதர் கொடுமை செய்யும் மிருகத்தனம் உலகை விட்டு ஒழிய வேண்டும் என்று நினைத்தார். அவர்தம் எண்ணங்கள் முழு வதையும் இனிய பாடல்களிலே பாடி வைத்திருக்கின்றார்.
அருட்பாவைப் படிப்போர், பாடல்களின் கருத்தறிந்து படிக்கவேண்டும். கருத்தறிந்து பாடவேண்டும். சிறப்பாக, ஆறாம் திருமுறையிலே அவர் பாடியிருக்கும் செய்யுட்களின் சிறந்த கொள்கைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இராமலிங் கரிடம் அன்புள்ளவர்கள் இப்பணியைச் செய்ய வேண்டும்.
திருவருட்பாவில் உள்ள கொள்கைகள்-கருத்துக்கள்-இராமலிங்க சுவாமிகளின் எண்ணம்-மக்களிடம் பரவுமானால் சிறந்த பயன் உண்டு. மக்களிடம் உள்ள அறியாமை ஒழியும். அன்பின்மை ஒழியும்; அனைவரும் உண்மை நெறியை உணர்ந்து ஒன்று கலந்து வாழ்வார்கள். இது உண்மை; உறுதியும் ஆகும்.



